::தேர்தல்கள்

::தேர்தல்கள்

இலங்கைத் தேர்தல்கள் பற்றிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

வேட்டும் வோட்டும்! : ஈழமாறன்

Mahinda_and_Fonsekaகேட்டவன் ஒருவன்
கேட்டுக் கொண்டதால் – பார்த்துப் பாராமல்
வேட்டு வைத்தவன் ஒருவன் – வைத்துவிட்டு
தமிழன் ஓரமாய் இருப்பதாயின் இருக்கட்டும்
அன்றி உரிமை கேட்கின்
உரிவோம் கோவணத்தையும் – என்று
அமெரிக்கா சென்று அறிக்கை விட்டவன் ஒருவன்
அந்த அறிக்கை தவறென்று
மறுக்க மறுத்தவன் ஒருவன்.

அள்ளிக் கொண்டுபோய் துலைவார்
முள்ளிவாய்க்காலில் வைத்து
கொள்ளி வைத்தது போக
முள்ளுவேலிக்குள் அடைத்து வைத்து
வெள்ளத்துக்கு ஒதுங்க
வீடில்லாமல்
பிள்ளைக்கு கொடுக்க மருந்துமில்லாமல்
கூனிக் குறுகி எம்மினம் டெங்குக்
காச்சலில் செத்து மடிகையில்
நாடுகடந்த தமிழீழம் அமைக்க
ஒரு கூட்டம்
போடச் சொன்னவனுக்கு போடுவதா – இல்லை
போட்டுத் தள்ளினவனுக்குப் போடுவதா
ஏன்று வியன்னா சென்று
விவாதம் செய்தனர்
முகாமில் அப்போது டெங்கு பிடித்து
செத்தவர் தொகை நாற்பதைத் தாண்டிற்று
சம்பந்தன் ஜயாவோ
சாகாமல் இருப்பவர்கள் சாரவேண்டியது
யார் பக்கம் என்று
கரிகாலன் பாணியில் கணக்கு விடுகிறார்.

வன்னி மன்னன் வெள்ளைக் கொடியுடன்
பிணமாய் கிடக்க
குரு திசை மாறியது
திரு சம்பந்தன் ஜயாவுக்கு.
பெடறல் தொடங்கி தமிழீழமாகி – பின்
வடக்கு கிழக்காகி
அதுவும் இப்ப இல்லையென்றான பின்னே
சம்பந்தம் ஜயா
தமிழ் மக்களின் பிரச்சனைக்கு
சம்பந்தம் பேசுறார்.
பதின் மூன்றோ கூடவோ இல்லைக் குறையவோ
என்றெல்லாம் போய்
வட்டமேசை போட்டு வடையும் தேனீரும்
பானமும் பருகிய கூட்டணிக் கூட்டத்தின்
மிஞ்சிய ஆடு – வன்னி
நரி செத்தபின் சிங்கமாய் மாறி
கோரிககை ஏட்டுடன்
கூட்டடமைப்பின் புறோக்கறாய்
தமிழர் மானத்தை விபச்சாரம் செய்ய
ஏறிறார் பொன்சேகா வீட்டுப் படி
இறங்கிறார் மகிந்த கூற்றுப்படி.
ஜரோப்பவிலோ வட்டுக்கொட்டை
மன்னிக்க கோட்டை தீர்மானத்துக்கு
வாக்கு போட வரிசைல் புலன்பெயர் மாக்கள்.

தமிழருக்காய் இணைய மறுத்தது ஒரு புலி
புள்ளையானைப் போட்டுத் தள்ள
அமைச்சராய் ஆனது இன்னொரு புலி
அறிக்கை வந்தது.
மகிந்த வெல்வதற்கு நான் அம்மானோடும்
இணைவேன்
அம்மணமாயும் அலைவேன் என்று.
கிழக்கின் உதயம் குலுங்கி குலுங்கி அழுதது.

வன்னிப்போரில் விழுவது மாடாய் இருந்தாலும்
மனுசனாய் இருந்தாலும்
சுடுவதை நிறுத்தாதே என்று
கட்டளை போட்டவனும்
சுட்டதை நிறுவியவனும்
வாக்குக் கேட்டு வருவது யாரியடம்?
புலி சுட்டு புருசனை இளந்தவள்
கெலிசுட்டு தனையனை தொலைத்தவள்
பிறந்திரு நாட்களில் தலை வெடித்து
பிணமாய்ப் போன தன்
பிஞ்சுக் குழந்தையின் இரத்தம் காயாது
தினம் வெம்பி அழுபவள்
முறிந்த கால் இன்னும்
ரணமாய்க் கொதிக்க
பிணமாய் கிடப்பவள்
சுpதைந்த மார்பிலிருந்து
சீழ் வடிய கதறித் தவிப்பவள்
பட்ட காயங்கள் தீர சிறு கட்டு
மருந்துகூட இல்லாத
அப்பாவி மக்கள் இவர்கள்
ஈனரே எப்படிக் கேப்பீர் வாக்கு
ஏப்படிப் பாப்பீர் அவர் முகம்.

நாசமாய் போவார்
துலைவார் கூட்டமெல்லாம்
தலைமை எனச்சொல்லி
வாக்குக் கேட்டு வந்தால் – ஒரு பிடி மண்ணள்ளி
துலைவாரே நீவிரெல்லாம்
நாசமாய் போக என்று சபித்துவிடுங்கள்
அதைவிட உங்களிடம் வேறென்ன
வலு மிஞ்சியிருக்கிறது.

தமிழ் மக்களுடன் சம்பந்தமாகுமா சம்பந்தரின் சாணக்கியம்!- ரி சோதிலிங்கம்.

Sambanthan_Rஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு சம்பந்தரும், புலிகளின் ஆதரவாளர்களும் தமிழ் மக்களை மீண்டும் முள்ளிவாய்க்காலுக்கே அழைத்துச் செல்கின்றனர் போலுள்ளது. இந்தத் தேர்தலில் பங்கு பற்றுவதா? வேட்பாளரை நிறுத்துவதா? இந்த தேர்தலில் முன்னிற்கும் வேட்பாளர்களில் யாருக்கு தமிழர்களை வாக்களிக்கும்படி கேட்பது அல்லது தமிழர்களை ஆதரிக்க தூண்டுவது என்பதிலே இன்று வரையில் இவர்கள் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கமுடியாமல் இருப்பதன் மர்மம் என்ன?

இந்த தேர்தலில் போட்டியிடும் பல்வேறுபட்ட சக்திகள் தாம் தமது தேர்தல் வேட்பு மனுவை தாக்கல் செய்யும் போதே தாம் ஜனாதிபதியாக வரமாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளபோதும், தாம் தமது அரசியலை – தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் அபிலாசைகளுக்கான அரசியலை – உலகுக்கும் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் பகிரங்கப்படுத்தவே போட்டியிடுகின்றனர். ஆனால் அன்று ‘இந்த தேர்தலைகளை எமது பிரச்சார மேடைகளாகவே பயன்படுத்துகிறோம் ஆனால் எமது இலட்சியம் தனித் தமிழீழம்’ என்று முழங்கிய கூட்டமைப்பு சம்பந்தர் இன்று இந்த தேர்தலை தமிழ் மக்களின் சுயநிர்ணயத்திற்கான பிரச்சார மேடையாகவும் பார்க்கவில்லை, தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்பு என்ன என்பதை உலகுக்கு தெரிவிக்கக்கூட இந்த தேர்தலை பயன்படுத்த முன்வரவுமில்லை. இது ஏன்?

ரிஎன்ஏ என்ன உடன்பாடுகளை யாரிடம் ஏற்படுத்தியுள்ளது என்பதையோ; சரத் / மகிந்தா எந்த வேட்பாளர் தான் ஆட்சிக்கு வந்தபின்பு தமிழரின் அரசியல் உரிமைகளுக்கு என்ன வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்கள் என்பதையோ; அல்லது எந்த ஒரு உடன்பாடோ அல்லது வாக்குறுதிகளோ யாரிடமிருந்தும் பெறவில்லை என்பதையோ ரிஎன்ஏ ஏன் பகிரங்கமாக மக்களுக்கு வெளிப்படுத்தக் கூடாது?

ரிஎன்ஏ அல்லது மற்றைய தேர்தல் வேட்பாளர்கள் மக்களுக்கான அரசியல் தேர்வையும் ஒப்பந்தங்களையும் இரகசியமாக ஏற்படுத்துவது மக்களுக்கு ஏற்புடையதல்ல. கடந்த காலங்களில் இப்படியான இரகசிய ஒப்பந்தங்களால் ஏற்பட்ட பல விளைவுகளுக்கு புலிகளே எம்முன்னால் உள்ள நல்ல உதாரணங்களாகும். இதில் முக்கியமானது பிரேமதாஸா இரகசிய ஓப்பந்தமும் ஆயத உதவியும். இதன் பின்னணியில் புலிகள் இந்தியாவின் எதிரிகளாகினர்.

எதிர்வரும் தேர்தலில் ரிஎன்ஏ யின் முடிவு என்ன? ரிஎன்ஏயும் அதன் தலைவர் சம்பந்தனும் எப்போது தமது முடிவுகளை தமிழ் மக்களுக்கு தெரிவிப்பார்கள். ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளரை நிறுத்தும் காலம் காலாவதியாகிவிட்டது. ஆனால் இன்னும் ரிஎன்ஏ தனது நிலைப்பாடு என்ன என்று இதுவரையில் முடிவு எடுக்கவில்லை. இதற்கிடையில் ரிஎன்ஏ உறுப்பினர் சிவாஜிலிங்கம் சுயேட்சையாக ஜனாதிபதி தேர்தலில் நிற்பதாக முடிவு எடுத்துள்ளார். ரிஎன்ஏயின் அங்கத்துவ கட்சி தமிழர் காங்கிரஸ் தனியாக, இரண்டு முக்கிய தேர்தல் வேட்பாளர்களையும் ஆதரிப்பதில்லை என்ற முடிவு எடுத்துள்ளனர். இப்படியாக ரிஎன்ஏயின் உறுப்பினர்கள் பிரிந்து நின்று செயற்படுவதன் காரணம் என்ன? ரிஎன்ஏ சம்பந்தர் காரணங்களை தமிழ் மக்கள் முன் வைப்பார்களா? ஏன் மக்களுடன் பேசுகிறார்கள் இல்லை?

சம்பந்தரின் குழம்பிய நிலையே ரிஎன்ஏயின் இழுபறி நிலை எனவும் பலரும் சந்தேகிக்கின்றனர். மக்களுக்காக எடுக்கும் முடிவுகளை மக்கள் முன் வைப்பதிலும் அதில் உள்ள குறை நிறைகளை ஆராய்வதிலும் எந்த கட்சியும் எந்த மக்கள் அமைப்பும் ஏன் ஒளிவு மறைவாக செயற்ப்பட வேண்டும். ஒளிவு மறைவாக செயற்ப்படுவதும் இழுத்தடிப்பதும் தாம் ஏற்கனவே தெரிவு செய்த வேட்பாளரை கடைசி நேரத்தில் தெரிவித்து அவருக்கு வாக்களிக்கும்படி கேட்கலாம் என்ற காலம் வாங்கும் தந்திரமா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுவது தவிர்க்க முடியாததாகிறது.

இன்று ரிஎன்ஏயில் எந்தவிதமான கூட்டு முடிவும் எடுக்கப்படுவதில்லை. சம்பந்தர் சுரேஸ் மாவை போன்றோரே ஏகபோகமாக தாமே முடிவு எடுத்துவிட்டு அதை ரிஎன்ஏ யின் முடிவாக திணிப்பதாக பல ரிஎன்ஏ உறுப்பினர்கள் சொல்லும் நிலையில், சம்பந்தர் எல்லா முடிவுகளுக்கும் நான் யோசிக்கிறேன், பொறுத்திருப்போம் என்ற இழுத்தடிப்பின் பின்னணியாக இருப்பது என்ன என்பது இன்றுவரையில் புதிராகவே உள்ளது. வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவு குழுக்களின் வற்புறுத்தலாக இருக்குமென? என பலர் சந்தேகிக்கின்றனர்.

இதன் பின்னணியிலேயே சம்பந்தர் வெளிநாடுகளுக்கு அழைக்கப்பட்டார் என்றும் இதில் சுவிஸ் மாநாடு தோல்வியில் முடிவடைந்ததால் அடுத்து வியன்னாவில் சம்பந்தருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் பலரும் சந்தேகிக்கின்றனர் (இந்த மகாநாடுகள் இரகசியமாகவே ஒழுங்கு செய்யப்பட்டது.)

tna-last11.jpgஇந்த மாநாட்டில் ரிஎன்ஏ ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை நிறுத்துவதில்லை என்றும் ஏதோ ஒரு வேட்பாளரை ஆதரிப்பதற்கானது இரகசிய உடன்பாடு எட்டியுள்தாகவும் இதையே சம்பந்தர் ரிஎன்ஏயின் முடிவாக தெரிவிக்க வெளிநாட்டிலுள்ள புலி ஆதரவு அமைப்புக்களும் புலிகளும் சம்பந்தருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர் என்றும்; அது சரத்தையே ஆதரிப்பது என்றும்; இதனாலேயே மகிந்தாவை வீழ்த்தலாம் என்ற கருத்து ரிஎன்ஏக்கு வெளியே எடுக்கப்பட்டுள்ளதாயும் இந்த உடன்பாட்டுக்கு லண்டனுக்கு விஜயம் மெற்கொண்ட ஜேவிபி யுஎன்பி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்பாடுகளை செய்ததாகவும் பேசப்படுகிறது. ஆனால் இந்த முடிவை எப்படி ரிஎன்ஏயின் முடிவாக திணிப்பது என்பதே சம்பந்தரின் குழம்பிய நிலையென பலரும் சந்தேகிக்கின்றனர்.

புலிகளின் ஆதரவாளர்களும் அமைப்புகளும் இன்னும் தமிழ் போராட்டங்களை புலிகளின் பழிக்குப் பழிவாங்கும் அரசியல் போலவே பார்க்கிறார்கள். அதன் எதிரொலியே சம்பந்தரின் ‘பார்ப்போம்’ பாட்டு ஆகும் என பலரும் சந்தேகிக்கின்றனர்.

வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவு அமைப்புகளும் ஏற்பாட்டாளர்களும் இன்று வரையில் தாம் யார்? தமது இயக்கத்தின் நிலை என்ன? பொறுப்பு என்ன? போன்ற விமர்சனங்களை முன்வைக்காமலே இன்றும் தமது ஆதரவாளர்க்கு ‘தலைவர் உயிருடன் உள்ளார். தருணம் வரும்போது வெளிவருவார்’ என்றெல்லாம் புலுடாவிடும் இவர்கள், புலிகளுக்காக மக்களிடம் இருந்து பெறப்பட்ட பெருந்தொகை சொத்துகளுக்கு நடந்தது என்ன? என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இன்று இந்த தேர்தலை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி தமக்கு ஒரு அரசியல் சாயம் பூச ஆரம்பித்துள்ளனர்.

சரத் / மகிந்தா இந்த இரண்டு வேட்பாளர்களும் தமிழர்களின் கடந்த 30 வருட போராட்டங்களினால் தமிழ் மக்கள் அடைந்த வேதனைகள், துன்பங்களை பகிர்ந்து கொண்டவர்கள் அல்லர். மாறாக இவர்களே தமிழர்களின் துன்பியல்களுக்கு பிரபாகரன் – புலிகளுக்கு அடுத்தபடியாக காரணமானவர்களாகும். இந்த இரு வேட்பாளர்களுமே தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை கூட இன்று வரையில் பகிரங்கமாக தெரிவிக்காதவர்கள். இவ்விரு வேட்பாளர்களுமே தமிழர்களில் 30 ஆயிரம்பேர் வரையில் முள்ளிவாய்காலில் கொலை செய்தவர்கள். தமிழ் மக்களை பார்த்து இவர்களில் ஒருவருக்குத் தன்னும் வாக்களியுங்கள் என்று எந்த முகத்துடன் ரிஎன்ஏ அல்லது தமிழ் அரசியல்வாதிகள் கேட்க முடியும்

மரண சாசனம் கூட பெற முடியாத மக்கள் இன்று வரையில் தமது மரணித்த உறவுகளின் ஆண்டுத்திவசம் யாருக்கு எங்கே என்று அங்கலாய்த்துக் கொண்டு துன்பங்களில் இருப்பவர்களைப் பார்த்து உங்கள் உறவுகளை கொலை செய்தவர்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்க முடியுமா? இதை தமிழ் மக்களின் தலைவர்களால் எந்த சுயமரியாதையுடன் கேட்க முடியும்?

சர்வதேசம் இவர்கள் மீது போர்க் குற்றம் சுமத்தும் நிலையில் உள்ள சூழ்நிலையில், எந்த மக்கள் மீது போர்க்குற்றம் செய்தார்களோ அந்த மக்களை பார்த்து இந்த போர்க்குற்றவாளிக்கு வாக்களியுங்கள் என்று ரிஎன்ஏ சம்பந்தர் கேட்பாரா? எப்படி கேட்க முடியும்.

இன்று புலிகளின் பல முன்னணியாளர்கள் மக்கள் என்பதை கனவிலும் கூட நினைப்பதில்லை. புலிகள் அழிக்கப்பட்டு 6 மாதங்களில் இம் முன்னணியாளர்கள் தாம் தமது சொத்துக்கள் தமது சமூக அந்தஸ்துக்கள் என்பவற்றிலே அதிக கவனம் செலுத்துவதை அவதானிக்க முடியும்.

காலத்திற்குக் காலம் தமிழர் போராட்டங்களை சுதந்திரக் கட்சியும் யுஎன்பியும் மாறி மாறி தாம் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஏதோ ஒருவகையில் ஒருபடியாவது கீழே இழுத்து விழுத்தியே வந்துள்ளனர். இதன் ஒட்டுமொத்த வீழ்த்தலே மே மாத கடைசி யுத்தமும் இதை மகிந்தா கெட்டித்தனமாக தனது வெற்றியாக்கியதுமாகும்.

புலிகளின் பழிக்குப்பழி அல்லது ஆயுதக் கவர்ச்சியால்தான் தமது போராட்டப் பாதையை தவற விட்டவர்கள் என்பதை இன்றும் புலி ஆதரவாளர்கள் புரிந்ததாகத் தெரியவில்லை. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் ரஜீவ் காந்தி கொலையும் இதனால் புலிகளுக்கு உண்டான அழிவுமாகும்.

இவ்விரு பிரதான வேட்பாளர்களும் மீண்டும் தமிழர்க்கு எதிரான செயற்பாட்டுக்காகவே இன்று புலி ஆதவாளர்களினதும் ரிஎன்ஏ தமிழர் ஆதரவினையும் பெற்றுவிட அங்கலாய்க்கின்றனர் என்பதை ரிஎன்ஏ சம்பந்தரும் புலி ஆதரவாளர்களும் மறந்து செயற்படக் கூடாது. ரிஎன்ஏ இன்றுவரை இத்தேர்தலில் தமிழர்கள் சார்பாக தமது நிலைப்பாடு என்ன என்று எதையும் ஏன் முன்வைக்கவில்லை? ரிஎன்ஏ யினர் ஏன் தமிழர்கள் சார்பாக தமது பிரதிநிதியை நிறுத்தி தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்பு என்ன என்பதை சிங்கள மக்களுக்கும் உலகுக்கும் தெரிவிக்கவில்லை? தெரிவிக்க முயற்ச்சி செய்யவில்லை? இதன்மூலம் சிங்கள மக்களின் மிககுறைந்த அங்கீகாரத்தையாவது பெற்றிருக்க முடியாதா? இத்தேர்தல் காலத்தில் ரிஎன்ஏ ஏன் இந்த சந்தர்ப்பத்தை தமிழரின் சுயாட்சிப் போராட்டத்திற்கான பிரச்சாரமாக பயன்படுத்தவில்லை? மாறாக ரிஎன்ஏ யும் சம்பந்தரும் சரத் ஆதரவு நிலை எடுப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பதாக ரிஎன்ஏயின் அதிருப்தி உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். ரிஎன்ஏ யில் கிட்டத்தட்ட அரைவாசிப்பேர் சரத் மகிந்தா இரண்டு பேரையும் ஆதரிக்கக்கூடாது என்பதில் அக்கறை காட்டுவதாகவும் அதன் காரணமாகவும் சம்பந்தர் குழம்பியுள்தாகவும் அவர்கள் எமக்கு தெரிவித்தனர். அத்துடன் ரிஎன்ஏயில் அங்கம் வகிக்கும் ரெலோவினர் ரிஎன்ஏ இரண்டு வேட்பாளர்களையம் ஆதரிக்க கூடாது என்ற கருத்துடனேயே தாம் இருப்பதாக தெரிவித்தனர்.

ரிஎன்ஏ யும் இதன் சாரதி சம்பந்தரும் வேறு வெளி அழுத்தங்களுக்கு உள்ளாகின்றார்கள் என்ற சந்தேகம் கொழும்பில் உள்ள பல ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகளிடமும் உள்ளதை அறியமுடிகிறது.

இதைவிட ரிஎன்ஏயின் மும்மூர்த்திகள் என்றழைக்கப்படும் சம்பந்தர் சுரேஸ் மாவை ஆகியோர் முடிவை எடுத்துவிட்டு இம்முடிவுகளை இறுதி முடிவாக தெரிவிக்கும் இவர்களில் (இம்முறை) மாவை இந்த நிலைப்பாட்டிலிருந்து தன்னை அகற்றி தான் இந்தியாவில் சுகயீனம் காரணமாக தங்கியிருப்பதாவும் அறியப்படுகிறது. ரிஎன்ஏ யினரில் சம்பந்தர் இந்தியாவினால் கையாளப்படுகின்றார். ஆனால் கள நிலைமைகள் கட்டுக்கடங்காமல் இருப்பதனால் ஏற்படும் குழப்பமா? எனவும் பலரும் சந்தேகிக்கின்றனர்.

வெளிநாடுகளில் உள்ளவர்களில் பல முன்னாள் புலி ஆதரவு அமைப்பினர் யுஎன்பியின் கயிற்றை விழுங்கியவர்களாகவே தென்படுகின்றது. இது எதிர்காலத்தில் ரிஎன்ஏ யின் புலி ஆதரவாளர்களின் துரோகமாக பார்க்கப்படாதா? பிரபாகரன் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்ததின் காரணமே இந்த மிதவாத தலைவர்களின் துரோகங்கள் என்றுதானே?.

இன்று உள்ள நிலைமையில் ரிஎன்ஏ யும் இதன் சாரதி சம்பந்தரும் சரத்தையோ மகிந்தாவையோ ஆதரிக்க முடியாது. இவர்கள் இந்த இருவரையும் ஆதரிக்கும்படி தமிழ் மக்களை கேட்கவும் முடியாது என்பதே சாதாரண இலங்கைத் தமிழ் மக்களின் அபிப்பிராயமாகும்.

இந்த விடயத்தில் காங்கிரஸ் கட்சியினரின் முடிவு ஏற்கக் கூடியதே. தமிழ் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை இரு பிரதான வேட்பாளர்களுக்கும் வழங்காமல், தங்கள் வாக்குகளை எதிர்ப்பைத் தெரிவிக்கப் பயன்படுத்துவதே பொருத்தமானதாக அமையும் எனவும் கருத்து நிலவுகிறது. இதற்காக தமிழர்கள் தமது வாக்குகளை வேறு யாருக்கும் போடலாம் என்பதேயாகும்.

கடந்த காலங்களில் மாறி மாறி ஆட்சிக்குவந்த சு.க,  யுஎன்பியின் ஆட்சிக் காலத்திலேயே பல திட்டமிட்ட சதிகள் தமிழருக்கு எதிராக நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி ஆட்சிமுறையை ஏற்படுத்தி பாரிய தமிழ் எதிர்ப்பு நடவடிக்கைகளை செய்தவர்கள் என்பதையும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டு பாராளுமன்றில் புதிய யாப்பை உருவாக்கியவர்கள் என்பதையும், யுஎன்பி ஆட்சி காலத்திலேயே பல சாதாரண தமிழ்ர்க்கு எதிரான பல இராணுவ வெறியாட்டங்களை மேற்கொண்டவர்கள் என்பதையும் ரிஎன்ஏ மறந்துவிடக் கூடாது. யுஎன்பியினரால் கட்டியெழுப்பப்பட்ட தமிழர் எதிரப்பு கோபுரங்களையே மகிந்தா பயன்படுத்தி தனது வெற்றியாக்கினார் என்பதையும் ரிஎன்ஏ மறந்து விடக்கூடாது. (இதை பலதடவைகள் ரணில் தனது பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டுள்ளார்.)

மகிந்தாவை ஆதரித்து வெற்றி மகிந்தா பெற்றால் தமிழர்க்கு கிடைப்பது என்ன? சரத் வெற்றி பெற்றால் கிடைப்பது என்ன? என்பதே எம்முன்னால் உள்ள மிகப்பெரிய கேள்வியாகும் யாரைப் பழிவாங்குவது என்பதல்ல!

கடந்த பல வருடங்களாக தமிழர்கள் படித்தபாடம் என்ன? ரிஎன்ஏ பெற்ற அரசியல் முதிர்ச்சி என்ன? சம்பந்தர் பெற்ற அனுபவம் தான் என்ன? தமிழர்களின் தலைவர்கள் என்ற ரிஎன்ஏ தவறான முடிவுகளால் தமிழர்களை மீண்டும் முள்ளிவாய்க்காலில் போட்டுவிடாதீர்கள்.

பழிவாங்கல்கள் அல்ல அரசியல் தீர்வே தேவை!!

தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்பை அபிப்பிராயத்தை தமிழ் மக்களிடையேயான அபிப்பிராய வாக்கெடுப்பொன்றை நடாத்த தமிழ் அரசியல்வாதிகள் அரசை வலியுறுத்த வேண்டும்!!

பயங்கரவாதங்களையும் புலிகளின் அடக்குமுறைகளுக்குள்ளும் பட்டினிச் சாவுகளுக்குள்ளும் தமது வாழ்க்கைப் பாதையில் கவனமாக நடந்து வந்த மக்கள் இப்படியான சந்தர்ப்பங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை சரியாகவே படித்துள்ளனர். இந்தப் படிப்பினையை தமிழ் மக்கள் இந்த தேர்தலிலும் தமிழ் தலைவர்கள் என்பவர்களுக்கும் அரசுக்கும் வன்முறையாளர்க்கும் நிரூபிப்பர்.

சம்பந்தர் ரிஎன்ஏ சாணக்கியம் தமிழ் மக்களின் சாணக்கியமா? வரலாறு பதில் சொல்லும்!!

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும். 03 – புன்னியாமீன் –

sri-lanka.jpg(கடந்த வாரத் தொடர்ச்சி….)

1 ஆவது ஜனாதிபதித் தேர்தல்

1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 30ம் உறுப்புரையின் 2ம் பந்தியில் குடியரசின் ஜனாதிபதியை ஆறாண்டுகளைக் கொண்ட பதவிக் காலத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் 1982.10.20ம் திகதி நடைபெற்றது. இத்தேர்தலின் நியமனப்பத்திரங்கள் 1982 செப்டம்பர் 17ம் திகதி கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் காலை 8.00 மணி முதல் 11 மணிவரை தேர்தல் ஆணையாளர் திரு. சந்திரானந்த டி. சில்வா அவர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினூடாக 6 வேட்பாளர்கள் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்தனர்.

திரு. ஜே.ஆர். ஜயவர்தன  (ஐக்கிய தேசியக் கட்சி)  
திரு. ஹெக்டர் கொப்பேகடுவ  (ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி)
திரு. ரோஹன விஜயவீர   (மக்கள் விடுதலை முன்னணி)
திரு. கொல்வின் ஆர்.டி. சில்வா (லங்கா சமசமாஜக் கட்சி)
திரு. வாசுதேவ நாணயக்கார  (நவ சமசமாஜக் கட்சி)
திரு. குமார் பொன்னம்பலம்   (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்)

இத்தேர்தலில் 1) ஹேவாலயாகே கீர்த்திரத்தின 2) முதியான்சே தென்னகோன் 3) திருமதி நீனா கெதரின் ஏஞ்சலா பெரேரா விஜேசூரிய ஆகியோரும் சுயேட்சை வேட்பாளர்களாக நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்தனர். இருப்பினும் சட்ட ஏற்பாடுகளுக்கமைய இவர்களின் நியமனப் பத்திரங்கள் தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்கப்பட்டன.
1982ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது ஐக்கிய தேசியக்கட்சி,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கிடையே போட்டி நிலவியபோதிலும்கூட மக்கள் மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பு நிலையே மிகைத்திருந்தது.

காரணம்:
1) இக்கால கட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியும் முன்னாள் பிரதமருமான திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை நீக்கப்பட்டிருந்தது. இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளராக ஹெக்டர் கொப்பேகடுவ நிறுத்தப்பட்ட போதிலும் தேசிய ரீதியில் மக்கள் மத்தியில் பரிச்சயமற்றவராகவே இவர் இருந்தமை.

2) 1970-77க் கிடைப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் கடைபிடிக்கப்பட்ட சோஸலிசப் பொருளாதாரக் கொள்கையினால் நாட்டில் எதிர்நோக்கப்பட்ட பஞ்சநிலையின்போது பாதிப்புற்ற மக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மீது அதிருப்தி நிலையில் இருந்தமையும்,  1977ம் ஆண்டில் பதவிக்கு வந்த ஜே.ஆர். அரசாங்கம் இலங்கையில் முன்வைத்திருந்த திறந்த பொருளாதாரக் கொள்கையினால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட கவர்ச்சி நிலைமையும்,  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டும் பதவிக்கு வருமிடத்து 1970-1977க்கிடைப்பட்ட கால பஞ்சநிலை மீண்டும் தொடரலாம் என்ற மக்களின் பய உயர்வும்,  (1982 ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக்கட்சியினர் தமது பொருளாதாரக் கொள்கைகளை திட்டவட்டமான முறையில் முன்வைக்காமையும் ஒரு குறையாகவே கூறல் வேண்டும்)

1982-10-20ம் திகதி நடைபெற்ற 1ஆவது ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கை ரீதியாக வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த வாக்காளர் எண்ணிக்கை 8, 144, 995 ஆகும். (ஜனாதிபதித் தேர்தலின்போது இலங்கை பூராவும் ஒரு தொகுதியாகவே கருதப்படும்) இவர்களுள் 6, 602, 612 (81.06 %) வாக்காளர்கள் வாக்களித்த போதிலும்கூட,  6, 522, 147 (79.84  %) வாக்குகளே செல்லுடியான வாக்குகளாக இருந்தன. யாப்பு விதிகளுக்கிணங்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடியவர் செல்லுபடியான வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றாக வேண்டும். அதாவது இத்தேர்தலில் 3, 261, 074 வாக்குகளுக்கு மேல் பெறுபவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவர். திரு. ஜே.ஆர். ஜயவர்தன அவர்கள் 3, 450, 811 வாக்குகளை அதாவது 52.91 சதவீத வாக்குகளை பெற்றதினால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக 1983 பெப்ரவரி 04ம் திகதி மீளவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

1982 ஜனாதிபதித் தேர்தலில் 50சதவீதமான வாக்குகளை விட (3, 261, 074) மேலதிகமான 189, 737 வாக்குகளையும்,  தேர்தலில் 2ம் இடத்தைப் பெற்ற திரு. ஹெக்டர் கொப்பேகடுவையை விட 902, 373 மேலதிக வாக்குகளையும் திரு. ஜயவர்தனா அவர்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் நடைபெற்ற 1ஆவது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மாகாண ரீதியில் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  436,290   (57.71%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  276,476   (36.57%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   28,580     (3.78%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     3,022    (0.40%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    9,655    (1.28%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    2,008    (0.26%)

பதியப்பட்ட வாக்குகள்  972,196
செல்லுபடியான வாக்குகள்  756,031  (98.96%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   7,990    (1.04%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 764,021  (78.59%)

கம்பஹா மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  365,838   (52.50%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  301,808   (43.31%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   23,701   (3.40%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     534      (0.88%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    3,835   (0.55%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    1,122   (0.16%)

பதியப்பட்ட வாக்குகள்  835,265
செல்லுபடியான வாக்குகள்  696,838  (99.15 %)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,992   (0.85 %)
அளிக்கப்பட்ட வாக்குகள் 702,830  (84.14 %)

களுத்துறை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  211,592   (50.15%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  185,874   (44.06%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   14,499    (3.44%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     443   (0.11%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    8,613   (2.04%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    871   (0.20%)

பதியப்பட்ட வாக்குகள்  499,215
செல்லுபடியான வாக்குகள்  421,892  (98.93%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,548   (1.07%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 426,440  (85.42%)

கண்டி மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  289,621    (59.82%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  178,493    (36.87%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   12,493    (2.58%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     562       (0.12%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    2,256    (1.46%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    718       (0.15%)

பதியப்பட்ட வாக்குகள்  564,767
செல்லுபடியான வாக்குகள்  484,143    (98.96%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,702   (0.96%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 488,845    (86.6%)

மாத்தளை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  94,031   (58.11%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  59,299   (36.66%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   7,169    (4.43%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     253   (0.16%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    866   (0.54%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    196   (0.12%)

பதியப்பட்ட வாக்குகள்  187,276
செல்லுபடியான வாக்குகள்  161,814    (99.13 %)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,414   (0.87%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 163,228    (87.1%)

நுவரெலியா மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  109,017   (63.10%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  57,093   (33.05%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   4,069    (2.35%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     558   (0.32%)
கொல்வின் ஆர்.டி. சில்வா   (L.S.S.P)    1,201   (0.70%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    831   (0.48%)

பதியப்பட்ட வாக்குகள்  201,878
செல்லுபடியான வாக்குகள்  172,769    (98.93%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,048   (1.17%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 174,817    (86.6%)

காலி மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  211,544   (50.23%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  180,925   (42.96%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   20,962    (4.98%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     425      (0.10%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    6,301   (1.50%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    981      (0.23%)

பதியப்பட்ட வாக்குகள்  512,489
செல்லுபடியான வாக்குகள்  421,138    (98.78%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,198   (1.22%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 426,336    (83.19%)

மாத்தறை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  164,725  (49.32%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  144,587  (43.29%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   22,117  (6.63%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     474     (0.14%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    1,571  (0.47%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    509     (0.15%)

பதியப்பட்ட வாக்குகள்  399,888
செல்லுபடியான வாக்குகள்  333,983 (99.08%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,091 (0.92%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 337,074 (84.29%)

அம்பாந்தோட்டை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  90,545       (45.90%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  76,402       (38.73%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   28,835     (14.62%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     275        (0.14%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    877        (0.44%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    344        (0.17%)

பதியப்பட்ட வாக்குகள்  241,956
செல்லுபடியான வாக்குகள்  197,278    (99.09%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,804   (0.91%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 199,082    (82.28%)

யாழ்ப்பாண மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  44,780   (20.54%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  77,300   (35.46%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   3,098   (1.42%)
குமார் பொன்னம்பலம்  (T.C)   87,263   (40.03%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    3,376  (1.55%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    2,186  (1.00%)
 
பதியப்பட்ட வாக்குகள்  493,705
செல்லுபடியான வாக்குகள்  218,003    (95.36%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   10,610  (4.64%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 228,613    (46.30%)

வன்னி மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  32,834      (46.42%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  23,221      (32.83%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   2,286      (3.23%)
குமார் பொன்னம்பலம்  (T.C)   11,521      (16.29%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    584       (0.82%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    292       (0.41%)

பதியப்பட்ட வாக்குகள்  119,093
செல்லுபடியான வாக்குகள்  70,739     (96.66%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,447  (3.34%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 73,186     (61.5%)

மட்டக்களப்பு மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  48,094   (40.05%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  21,688  (18.06%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   1,287  (1.07%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     47,095 (39.22%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    1,294 (1.08%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    618  (0.52%)

பதியப்பட்ட வாக்குகள்  172,480
செல்லுபடியான வாக்குகள்  120,076 (97.66%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,876 (2.34%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 122,955 (71.29%)

திகாமடுல்லை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  90,772  (56.39%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  53,096  (32.98%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   7,679  (4.78%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     8,079 (5.02%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    967  (0.60%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    377  (0.23%)

பதியப்பட்ட வாக்குகள்  204,268
செல்லுபடியான வாக்குகள்  160,970 (98.71%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,101 (1.29%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 163,071 (79.83%)

திருகோணமலை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  45,522  (48.63%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  31,700  (33.87%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   5,395  (5.76%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     10,068 (10.76%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    635  (0.69%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    276  (0.29%)

பதியப்பட்ட வாக்குகள்  133,646
செல்லுபடியான வாக்குகள்  93,596  (98.12%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,795 (1.88%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 95,391  (71.37%)

குருனாகலை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  345,769 (55.77%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  248,479 (40.08%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   21,835 (3.52%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     509  (0.08%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    2,594 (0.42%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    792  (0.13%)

பதியப்பட்ட வாக்குகள்  717,505
செல்லுபடியான வாக்குகள்  619,978 (99.13%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   5,431 (0.87%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 625,409 (87.16%)

புத்தளம் மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  128,877 (59.12%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  80,006  (36.70%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   7,001  (3.22%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     817  (0.37%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    1,040 (0.48%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    239  (0.11%)

பதியப்பட்ட வாக்குகள்  267,675
செல்லுபடியான வாக்குகள்  217,980 (99.09%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,995 (0.91%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 219,975 (82.18%)

அனுராதபுர மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  117,873 (49.84%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  102,973 (43.54%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   13,911 (5.88%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     222  (0.09%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    1,148 (0.48%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    396  (0.17%)

பதியப்பட்ட வாக்குகள்  278,594
செல்லுபடியான வாக்குகள்  236,523 (99.04%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,294 (0.96%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 238,817 (85.72%)

பொலநறுவை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  59,414  (56.24%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  37,243  (35.26%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   8,138  (7.70%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     228  (0.22%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    451  (0.43%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    141  (0.13%)

பதியப்பட்ட வாக்குகள்  127,624
செல்லுபடியான வாக்குகள்  105,615 (99.00%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,064 (1.00%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 106,679 (83.59%)

பதுளை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  141,062 (58.62%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  88,642  (36.84%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   7,713  (3.20%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     625  (0.26%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    2,115 (0.89%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    463  (0.19%)

பதியப்பட்ட வாக்குகள்  280,187
செல்லுபடியான வாக்குகள்  240,620 (98.85%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   2,802 (1.15%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 243,422 (86.88%)

மொனராகலை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  51,264  (49.38%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  44,115  (42.49%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   7,171  (6.91%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     163  (0.16%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    882  (0.84%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    226  (0.22%)

பதியப்பட்ட வாக்குகள்  126,558
செல்லுபடியான வாக்குகள்  103,821 (98.53%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   1,553 (1.47%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 105,374 (83.26%)

இரத்தினபுரி மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  175,903 (50.90%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  152,506 (44.13%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   11,283 (3.26%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     422  (0.12%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    1,996 (0.58%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    3,494 (1.01%)

பதியப்பட்ட வாக்குகள்  402,202
செல்லுபடியான வாக்குகள்  345,604 (99.02%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   3,407 (0.98%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 349,011 (86.8%)

கேகாலை மாவட்டம்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  195,444 (57.02%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  126,538 (36.92%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   13,706 (4.00%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     376  (0.11%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    6,184 (1.80%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    514  (0.15%)

பதியப்பட்ட வாக்குகள்  406,548
செல்லுபடியான வாக்குகள்  342,762 (98.69%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   4,537 (1.31%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 347,299 (85.4%)

முதலாவது ஜனாதிபதித் தேர்தல் 1982; இறுதித் தேர்தல் முடிவுகள்

ஜே.ஆர். ஜயவர்தன   (U.N.P)  3,450,811 (52.91%)
ஹெக்டர் கொப்பேகடுவ  (S.L.F.P)  2,548,438 (39.07%)
ரோஹன விஜயவீர   (J.V.P)   273,428 (4.19%)
குமார் பொன்னம்பலம்  (T.C)     173, 934 (2.67%)
கொல்வின் ஆர்.டி. சில்வா  (L.S.S.P)    58,531 (0.90%)
வாசுதேவ நாணயக்கார  (N.S.S.P)    17,005 (0.26%)
பதியப்பட்ட வாக்குகள்  8, 144,995
செல்லுபடியான வாக்குகள்  6, 522,147 (98.78%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   80,470 (1.22%)
அளிக்கப்பட்ட வாக்குகள் 6,602,617 (81.06%)

இம்முடிவின்படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளின் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)

3,261,074

குறைந்த பட்ச வாக்குகளை விட ஜே. ஆர். ஜயவர்தனா அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்

189,737

இரண்டாம் இடத்தைப் பெற்ற திரு ஹெக்டர் கொப்பேகடுவ அவர்களைவிட திரு ஜே. ஆர் அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்

902,373

தொடரும்……..

இலங்கைத் தமிழரது எதிர்காலம்: ரவி சுந்தரலிங்கம்

mahinda1.jpgsarath2.jpgsivaji.jpgபாகம் 7
சுயஅறிவே தற்பாதுகாப்பு, தெளிவாக்கமே அதன் வழி.

உள்ளடக்கம்
•கடந்த ஆறு கட்டுரைகளின் சாரம்:
மாதிரிவடிவத்தின் அவசியம்
•தமிழ் பேசுவோரும் மூன்று தேர்தல்களும்: வாக்குகளும், வாக்குரிமைகளும்,
வட்டுக்கோட்டை, நாடுகடந்த தமிழீழ, ஜனாதிபதித் தேர்தல்கள்.

கடந்த ஆறுமாதங்களில் “இலங்கைத் தமிழரது எதிர்காலம்” என்ற தலைப்புடன் ஆறு பாகங்களில் {வன்னியன் பிரபாகரன்: புலிகளின் ஆட்சிக் காலம் (20ஆனி 2009, பாகம் 1), நேற்றைய போராட்டம் நாளைய போராட்டம் (20 ஆடி 2009, பாகம் 2), பழசுகள் புதியவை தரா (16 ஆவணி 2009, பாகம் 3), எங்கிருந்து, யாரைப்பற்றி, எக்காலத்தில் (25 ஆவணி 2009, பாகம் 4), ஜனநாயகமயப்படுத்தல் (10 புரட்டாசி 2009, பாகம் 5), தேர்தலும் வாக்களிப்பும் (12 மார்கழி 2009, பாகம் 6) எனும்} உப-தலையங்களுடன், எமது சில ஆய்விலான கருத்துக்களையும் அவற்றினை நாம் வந்தடைவதற்கான சித்தாந்த நிலைப்பாடுகளையும் அவற்றைத் தாங்கி நிற்கும் மாதிரி வடிவங்கள் பற்றியும் சில விளக்கங்களை தேசம்-இணையத்தள வாசகர் சிலருடன் பகிர்ந்திருந்தோம்.

இவை எமது ஆய்வு-ஸ்தாபனத்தின் கருத்துகாளாக அல்லது முன்மொழிவுகளாக தந்திருந்தோமே அன்றி, மக்களை வழி நடத்திச் செல்வது போன்ற தோரணையிலோ அல்லது ஏதாவது ஒரு கட்சியின் நிலைப்பாடுகளாகவோ முன்வைக்கப் படவில்லை என்பதில் நாம் மிகத் தெளிவாக இருப்பது போல, கரிசனமான வாசகர்களும் தெளிவாக இருக்க வேண்டும் என்பதில் எமக்கு அக்கறை.

இதற்கு முதற் காரணம், ஆய்வுக்-கருத்துச் சொல்வதற்கும் (considered opinion) நிலைப்பாடுகளைச் முன்வைப்பதற்கும் (advocacy) உள்ள வேறுபாடுகளை, அதற்கான பொறுப்புகளை, உணர்ந்தவர்களாக நாம் இருக்க வேண்டும் என்பது எமக்கு நாம் கொடுத்துள்ள வரையறுப்பாகும். மேலும், கட்சிகள் அற்றவர்கள் என்பதிலும் பார்க்க, தற்காலத்தில் கட்சிகளுக்கு அப்பாற்பட்டே எமது மக்களது பிரச்சனைகளை ஒழுங்காக ஆராய முடியும் என நாம் கொண்டுள்ள முடிவு இரண்டாவது காரணமாகும்.

‘சொல்லிச் செய்ய வைப்பதற்கும்’ ‘புரிந்து கருமம் ஆற்றுவதற்கும்’ இடையே பாரிய வேறுபாடுகளை நாம் யாவரும் அநுபவத்தால் அறிந்துள்ளோம். இவற்றினை புரிந்து கொள்வதற்கான வளர்ச்சி தமிழ் பேசும் சமுதாயங்களது பெரும் திரளானவரிடம் சுயஇயல்பாகிக் கொண்டுள்ளது என்பதும் எமது அவதானிப்பு. ஆதலால், ‘உரையாடல்’ அல்லது ‘ஆய்வு’ ரீதிகளில் சில தகவல்களை முன்வைக்கும்போது, அவற்றின் உள்ளார்த்தங்களையும் தமது தேவைகளின் நியாயப்படுத்தல்களையும் தொடர்புபடுத்தி, தமது முடிவுகளை சுயமாகவே வந்தடையும் இயல்பின் வளர்ச்சியை தூண்டியபடி இருப்பதே, எமது முதற் கடமையென நாம் கருதுகின்றோம்.

ஆனால், இவ்வாறு வளர்ச்சி காணும் அவர்களது இயல்புகளை, நிலத்தில் அவர்களது இருப்பை, தம் உடமைகள் மீதான தன்நம்பிக்கையை, உடைத்திட பேரினவாதிகளும் அவர்களது ஊடுருவிகளும் நடத்தும் சதிகள் ஒரு புறமாகவும், குழப்பமான நிலைமைகளுள் தாண்டு முடிவுகளை எடுக்கும் சுயஇயல்புகளை இழந்து சிலவேளைகளில் தம்மை அறியாதே பேரினவாதிகளது மறைமுகத் திட்டங்களுக்கு சாதகமாகிடும் ‘தலைவர்களது’ நிலைமைகளும் உள்ளன என்பதை நாம் அறியாமல் இல்லை. இவற்றின் எடுத்துக்காட்டலாக, புனைபெயர்களின் பின் ஒளிந்திருந்து ஏதோ நகைச்சுவை நாயகர்களாகவும் அல்லது பலதையும் புரிந்த பொதுப்-புத்திவாதிகளாகவும் காட்டி ஏற்கனவே குழம்பியுள்ள ஏரியை குட்டையாக்கிடும் சிலரது முயற்சிகளிலும் கண்டு கொள்ளலாம். இவர்களது ஊடுருவல் மிகவும் ஆழமானதால் நாம் வெறும் எச்சரிக்கையாக இருந்திடுவது மட்டும் ஒவ்வாது.

எமது தனிப்பட்ட சுயமுற்சியாலான நிலைப்பாடுகளையும் முடிவுகளையும் எடுத்துக்கொள்ளும் தெளிவைப் பெற்றுக் கொள்வதே என்றும் இவற்றிற்கான தகுந்த பதில் நடவடிக்கை என நாம் கருதுகிறோம். இதன்பேரிலும்தான் நாம் கூறுபவற்றைக்கூட வெறும் கருத்தாக, தங்களது சிந்தனைப்போக்கில் ஒரு உந்தலாக மட்டுமே, கருதிக் கொள்ளவேண்டும் என்கிறோம்.

“யாரையும் நம்பிடுதலாகாது” எனும்போது “சுயமான முடிவுகளைக் கொள்ளுங்கள்” என்கிறோமே அன்றி “எம்மை மட்டும் நம்பிடுங்கள்” என்று கூப்பாடு போடும் பேதைகளோ அதற்கான தேவைகள் கொண்டவரோ நாம் இல்லை.

இவை ஒருபுறமிருக்க, எமது ஆறு பாகங்களின் முக்கிய உள்ளடக்கம் பற்றிய தெளிவு காத்திரமான வாசகர்களிடம் ஆழமானதாக இருக்க வேண்டும் என்பதும் எமது அவா. எனவே, இன்று இடம்பெறும் சிறீலங்காவின் ஜனாதிபதித் தேர்தலுடன் ஈடுபடுத்தி அவற்றினை மீளாக்கம் செய்திடவேண்டியது எமது கடமை ஆகிறது. இவற்றினை காத்திரமான வாசர்கள், குழப்பவாதிகளிடமிருந்து எழுந்த சில விடயங்களுடாக அணுகுவதே பொருத்தமானது.

எம்மைப் பொறுத்தவரை வெறுமனே அன்றாட விடயங்களுக்கு running commentry சொல்வதற்கும் அன்றாட விடயங்களைக் கொண்டு கருத்துச் சொல்பதற்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. எனவே, நடந்தவையை விட்டு இனிமேல் நடக்கப் போபவை குறித்து எம்மால் இதுவரை முன்வைக்கப் பட்டவையில் அதிமுக்கியமான விடயம் என்றால் அது மாதிரி வடிவம் பற்றியதாகும் என்கிறோம்.

அதாவது, ஆய்வு தேடல் என்பவற்கு எப்போதும் ஒரு மாதிரி வடிவம் (modal) அவசியம் என்ற எமது கருத்தாகும்.

மக்களது சமூக-அரசியல் விடயங்களில், மாதிரி வடிவம் எனும்போது அவர்களது,

(i) பிரச்சனைகளையும் அவர்கள் கைவசம் உள்ளவற்றையும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்தறிய உதவும் கருவிகள், tools of investigation,
(ii) பிரச்சனைகள், basic problems
(iii) உறவுகளை பிறிதுபடுத்தும் அல்லது சுற்றாருடன் ஒன்றுபடுத்தும் காரணிகள், defining variables,
(iv) தொகுதியின் வரைவு, definition of the set/group
(v) தொகுதியுள் இருக்கும் உபதொகுதிகள், definition of subsets/subgroups
(vi) சுற்றாடலுடனும் தன்னுள்ளேயும் கொண்டுள்ள இயங்கியல் உறவுகள், dynamics within and outside the set/group,
என்பவற்றை உள்ளடக்கியவை என்கிறோம்.

இவ்வகையில், இலங்கையில் இடம்பெற்றுவரும் அடிப்படைப் பிரச்சனைகள்பற்றி:

(i) ஆய்வதற்கான தகுந்த கருவி சமூக-பொருளாதாரத்தை அவற்றின் செயற்பாடுகளை தெளிவாக்கும் தத்துவார்த்த சிந்தனைகள் எனவும், அதுவே தர்க்கீகம் என்றும் தேர்ச்சி செய்கிறோம்.

(ii) இலங்கைவாழ் சகல மக்களது பிரச்சனைகளுள் அவர்களின் சமூக-பொருளாதார வளர்ச்சியின் பின்தங்கலை பிரதானமானதாகவும், அதனுள்ளே கொழும்பையும் அதனை அண்டிய பிரதேசத்திற்கும் எஞ்சியவற்றிக்கும் உள்ள பாரிய ஏற்றத்தாழ்வை அதனடி தொடரும் இரண்டாவதாகவும் காண்கிறோம்.

இப்பாகுபாட்டினை வறண்ட-ஈரவலய பிரதேச வேறுபாடுகளின் தேர்ச்சி எடுத்துக் காட்டுவதாகவும் அவதானிக்கின்றோம்.

இவ்வகையில் பிரதேச சமூக-பொருளாதார-ஜனநாயகங்களை மட்டுப்படுத்தும் போக்கிற்கு சிங்களப் பேரினவாதமும் அதற்கு மறுத்தால் போலான தமிழ் தேசியவாதமும் தாங்கிச் செல்பனவாகவும், நடைமுறையில் அவற்றினை ஊர்ஜிதம் செய்பனவாகவும் காண்கிறோம்.

(iii) இப்பிரச்சனைகளின் அடிக் காரணிகளாக வேலைவாய்ப்பு (gainful employment), ஊதியத்-தொழில் (waged-labour), தகுந்த வாழ்க்கைத் தாராதரம் (basic standard of living), சனத் தொகை (population growth) என்பவைற்றை யாரும்தான் கணிப்பார்கள்.

ஆனால், தேசியவாதச் சக்திகளோ சமூக-பொருளாதார வளர்ச்சியின் பற்றாக்குறையை இலங்கையின் அடித்தளப் பிரச்சனையாக ஏற்றுக் கொள்ளாத நிலையில், வளங்கள் குறித்த சர்ச்சைகளே (problem of resources) அடித்தளக் காரணிகள் என அவற்றினால் உருவாக்கப் பட்டுள்ளன.

எனவே பேரினவாதிகளும் தேசியவாதிகளும் அவ்வளங்களை மட்டும் தமதாக்கிடுவதால் தமது மக்களது பிரச்சனைகள் போய்விடும் என்ற போலி வாதத்துடனான போட்டியில் ஈடுபட்டுள்ளதை நாம் அவதானிக்கிறோம். பொருளாதார வளர்ச்சி பிரதேசங்களை, குறிப்பாக வறண்ட பிரதேசங்களை வந்தடையும்வரை இந்நிலைமை தொடரப்போகும் விடயம் என்பதோ மறுக்கப்பட முடியாத விடயம்.

(iv) வறண்ட பிரதேச மக்கள், புவியியற் காரணிகளாலும் இனவாதத்தாலும் பிறிதுபடுத்தப்பட்டு, பிரதேசக் காரணிகளை தமக்கே உரிய தேசியவாதங்கள் தேசியமயமான-இடதுசாரி வாதங்களுடாகப் பிரதிபலித்து, அவற்றின் பேரில் தமது உடமைகளை ஊர்ஜிதம் செய்து கொள்ள எடுத்த முயற்சிகள் இன்றுவரை தோல்விகளையே கண்டுள்ளன.

இவற்றுள் இலங்கை முழுவதையுமே கைப்பற்றுவது அல்லது அதனைத் துண்டாடுவது என்ற வழிமுறைகளால், தமது சமுதாயங்களுக்கு கைவசம் இல்லாத சமூக-பொருளாதார ஜனநாயகப் பலத்தை இராணுவ ரீதியில் ஈடுசெய்யலாம் என்ற முயற்சிகளே இதுவரை இடம்பெற்றன என்பதையும் நாம் அவதானிக்கின்றோம்.

எனவே மக்கள் எனும்போது ஒரே சமூக-பொருளாதார நிலைப்பாட்டுள் அமைந்துள்ள இவர்கள் அனைவரையும் ஒரே கண்ணுடன் பார்க்க வேண்டியதும் ஒன்றாகக் கணிக்க வேண்டியதும், சித்தாந்த ரீதியிலும் மனிதாபிமான ரீதியிலும், மேலும், தமிழ் பேசும் மக்கள் பேரில் கேந்திர ரீதியிலும் அவசியமானதாகிறது.

இவ்வகையில், வடண்ட பிரதேச மக்கள் யாவருமே சமூக-பொருளாதார அரசியல்-அதிகார ரீதிகளில் ஒரு தொகுதியாகக் கருதப்பட வேண்டியவர்கள் என்கிறோம்.

(v) தமிழ் பேசும் சமுதாயங்களே பிறம்பான அடையாளங்களைத் தேடும்போது, ஈழவர் போன்ற பொதுமைப்படுத்தும் முயற்சிகளோ தோல்வி கண்டுள்ளபோது, சிங்களம் பேசும் சமுதாயங்களையும் உட்படுத்தும் சமூகக் கருத்துக்கள் பகற் கனவே என சிலர் கூறுவது நியாயமானதாகப் பட்டாலும், அது தர்க்கீகம் அற்ற முரட்டுவாதமேயன்றி வேறல்ல.

முதலாவதாக, இவ் வாதங்கள் நாம் காணும் மக்கள் தொகுதியின் உபதொகுதிகளை வரைவு செய்ய உதவுகின்றனவேயன்றி பெரும் தொகுதியின் வரைவை நிராகரிப்பவை அல்ல.

இலங்கைவாழ் தமிழ் சமுதாயங்கள் யாவும் சிறீலங்கா அரச அமைப்பினால் பொதுப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பதால் அவர்களை ஒரு தொகுதியாகக் காண்பது தவறல்ல. அவர்களை இவ்வாறு ஒரு தொகுதியாகக் கண்டபின் அவர்களிடையே உள்ள வேறுபாடுகளைக் கொண்டு பிரித்துப் பார்ப்பதும் தவறல்ல. எனவே, ஒரு பெரும் தொகுதியுள் வேறுபாடுகள் இல்லை என்பதற்கல்ல. வலுக்கட்டாயமாக ஒற்றுமையை உருவாக்க முற்பட்ட புலிகளின் முயற்சியின் எதிர் விளைவுகளையும் கண்டவர் நாம்.

தமிழீழப் போராட்டம் இராணுவரீதியில் தோல்வி கண்டதிலிருந்து “சிங்கள மக்களுடன் சேர்ந்ததே எமது வாழ்வு” என்பதை தமிழ்தேசியவாதிகளும் ஏன் தமிழீழவாதிகளும்தான் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனை நடைமுறையில் எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்பதுதான் அவர்களது பிரச்சனை என்பது எமது நிலைப்பாட்டிலிருந்து வேறுபாடுகள் கொண்டதில்லை. தோல்வியின் பின்னடியில் இவ்வாறான மனோநிலை ஏற்படுமாயின், எவ்வாறான சமூக-மனோவியல் ரீதியில் எமது கருத்தை நிர்ணையம் செய்வது என்பது பலத்த கேள்வியே என்பதை நாம் அறியாமலும் இல்லை.

சிறீலங்காவின் அரசமைப்பு சிறுபான்மை இனத்தவரது ஜனநாயக உடமைகளை நிராகரிக்கிறது என்பதில் ஐயமில்லை. அது முற்றாக மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதிலும் ஐயம் இருக்க முடியாது. தமிழ் பேசும் சமூகங்கள் சிங்கள அரசின் அப்புறப்படுத்தலால் ஒருமைப்படுத்தப் படுபவர்கள் என்பதால் அவர்கள் ஒரு தேசத்தவர் என்றிட முடியாது.

அதுபோலவே, எமது பொதுமைப்படுத்தப்பட்ட மக்கள் கூட்டத்திடையே தமிழ்பேசும் சமுதாயங்களோ மற்றைய சமூகங்களோ தமது உடமைப் பிரச்சனைகளைக் கைவிடவோ அடகு வைத்திடவோ வேண்டியதில்லை என்கிறோம்.

எனவே, வறண்ட பிரதேச மக்களிடையே சிங்களம் பேசும் தமிழ் பேசும் சமூகங்கள் இரண்டாகவும், அவ்விரு சமூகங்களிடையே உள்ள சாதி சமய பிரதேச ரீதியிலான வேறுபட்ட சமுதாயங்கள் உபசமூகக்-குழுக்களாகவும் ஏற்கப்பட வேண்டியவை என்கிறோம்.

(vi) இயங்கியல் உறவுகள் என எவற்றை நாம் பார்ப்பது?

எமது இதுபற்றிய வரைவாக சமூக-பொருளாதார வளர்ச்சியில் தாக்கம் விளைவிக்கும் சகல சமுதாய சக்திகளும் இயங்கில் உறவு தருபவை என்பதை முன்வைக்கிறோம். கடந்த 30 வருட இன ரீதியிலான உள்நாட்டு யுத்த காலத்தில் தமிழ் பேசும் சமூகங்களிடையே உற்பத்தி, அதன் உறவுகள் என்பவை பாரிய மாற்றம் கண்டுள்ளன என்பது எமது அவதானிப்பு.

தமிழரிடையே, தேசியவாதம் சக்தியாக (energy) அமைய, புலிகள் அதன் அதிஉயர் இயங்கியல் விசை (force) ஆனார்கள்.
இவற்றினால் தம்முள்ளேயும் வெளியோருடனும் உள்ள சமூக உறவுகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதும் அவதானிப்பு.

தேசியவாதம் என்ற சக்தியால் வறண்ட பிரதேசங்களில் வாழும் எந்தச் சமுதாயங்களும் பலனடையாது போகினும் அவற்றின் விசைகளால் தாக்கம் காணத சமுதாயங்கள் எங்கும் இல்லை. அமைப்புகள் தேசியவாதங்களின் விசைகளாக இருப்பது இன்று இரு இனங்களிடையேயும் மட்டுக் கண்டுள்ளது போன்ற காட்சி இருந்தாலும் இலங்கைத் தீவில் சமூக-பொருளாதார முன்னேற்றத்தைக் குறிக்கும் மாற்றுச் சக்திகள் இன்னமும் நிலை கொள்ளவில்லை என்பதும் குறிப்பிட வேண்டியது. எனவே, மாற்றுச் சக்திகளுக்கான சுற்றாடல் உருவாகும்வரை தேசியவாதங்களே பின்/முன்னேற்ற மாற்றங்களை கொண்டு செல்வனவாக அமையும் என்கிறோம்.

தமிழ் பேசும் சமுதாயங்களும் தேர்தல்களும்

இலங்கையில் தேர்தல்கள் என்பவை தமிழ் பேசுவோரைப் பொறுத்தவரை அவர்களது உடமைப் பிரச்சனைகளுடனேயே எப்போதும் தொடர்புபட்டவை. ஆயினும், ஆரம்ப காலத்தில் தமிழ் பேசும் மக்களாக பல தொகுதிகளில் பிரதிநிதிகள் ஆனபோது, மூன்றாம் உலகநாட்டு நியதிகளுள்ளே மக்கள் இருந்த போதிலும், ஓரளவு தன்உணர்வுடன் தமது தேவைகள் நிமிர்த்தமும் வாக்களிக்கும் நிலையில் மக்கள் இருந்தனர். தமிழ் பேசும் பிரதிநிதிகளது தொகை அரசாங்கத்தை நிர்ணயம் செய்யக் கூடியதாகவும் அச் சிறுகாலம் இருந்தமையும் அந்நிலைக்கு உதவியாக அமைந்தது.

எனவே, தமிழ் பேசுவோர் தமது அரசாங்கங்களை நிர்ணயம் செய்யும் நிலைமைக்கு முடிவு கட்ட வேண்டிய அவசியமும், மலையகத்தவரை நாடற்றவர் ஆக்குவதற்கு, பேரினவாதிகளின் முக்கியமானதொரு காரணமாகிற்று. அதன் பின்னர் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் மக்களது வாக்குகள் முற்றாக அவர்களது ‘உரிமைகள்’ என்ற ஒரேஒரு நிலைப்பாட்டைக் குறித்த கணிதப் பரீட்சையுமாகிற்று.

இந்த ‘உரிமைகள்’ கொழும்பு அதிகாரத்திலும் அதனைச் சார்ந்த அரசியல் வாழ்வினிலும் பங்கு கோருபவையாக இருந்தனயே அன்றி, தமிழ் பேசும் மக்களது உடமைகள் பற்றியதாகவோ, பிரதேச சமூக-ஜனநாயகம் குறித்தவையாகவோ அவற்றை பெறுவதற்கான தீர்மானங்களுடனோ ஒருபோதும் இருந்ததில்லை. இல்லாவிடில் டட்லி-செல்வா உடன்பாடுவரை பூர்வீகப் பிரதேசம் பற்றிய கோரிக்கை எப்படி எழும்பாது இருந்திருக்கும்?

தேர்தல் 1: வட்டுக்கோட்டைக் கோட்டைத் தீர்மான வாக்கெடுப்பு

தீர்மானம் என்ற வகையில் வட்டுக்கோட்டை விடயம் முன்னேற்றமாகினும், அத்தீர்மானங்களை நடைமுறைப்படுத்த என்ன திட்டங்கள்தான் அங்கே முன்வைக்கப்பட்டன? என்றால் வெறும் ஏமாற்றமே எஞ்சும். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பின்னர் இடம்பெற்ற தேர்தலை வெகுசன வாக்கெடுப்பாக பிரதிபலித்த த.வி.கூட்டணியினர், தேர்தலின் பின்னர் அத்தீர்தானங்களுக்கு மிகவும் குறைவான மாவட்டசபைத் தீர்வினை ஏற்கத் தயாராக இருந்தமை வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு எப்படியான முடிவை தந்தது என்பது முக்கியமான கேள்வியே.

எனவே, அக்காலத்து அரசியல் சூழலில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை எடை போடுவோமாயின் அது வெற்றுக் கோஷம் என்பதையும் கட்சிகளுடன் இரகசியப் பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கு உதவியாக bargaining position தரும் மிரட்டலாக முன்வைக்கப்பட்டது என்பதையும் அறிவோம்.

ஆனால், வட்டுக்கோட்டைத் தீர்மானங்கள் பற்றிய ஆய்வோ அதுபற்றிய விமர்சனமோ இங்கே அவசியமற்றவை.

ஏனெனில், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பின் இடம்பெற்ற தேர்தல் வெகுசன வாக்கெடுப்போ இல்லையோ, அத்தேர்தலுடன் த.வி.கூட்டணியினர் அதனைக் கைவிட்டதால் அதன் அதிகாரம் அற்றுப்போனதோ இல்லையோ, விடுதலைப் புலிகளது MOU ஏற்பாடு அவற்றிலும் மேலானவை என்பதும், சர்வதேசிய ரீதியில் அங்கீகாரம் பெற்றதும் வட்டுக்கோட்டைத் தீர்மானங்களை நடைமுறையில் மேலோங்கியவை (superceeded) என்ற விடயமே முக்கியமானது.
வட்டுக்கோட்டைத் தீர்மானங்கள் வெறும் தீர்மானங்களேயன்றி, தேர்தலின் பின்னர் வெற்றி பெற்றவர்களால் கைவிடப்பட்டவை என்பதுமன்றி, MOU போல சிறீலங்கா அரசுடனான சர்வதேசிய ரீதியிலான உடன்பாடல்ல.

எனவே வட்டுக்கோட்டைத் தீர்மானம்பற்றிய வாக்கெடுப்பு, தமிழ் பேசும் மக்கள் அனைவரது தீர்வுக்கான வழியல்ல என்ற அதிமுக்கிய விடயத்தை மனக்கண்ணிலிருந்து அப்புறப்படுத்தி, வெறும் தமிழர்களது தீர்வாகப் கொண்டாலும் தமிழர்களை பின்னோக்கி இழுத்துச் செல்லும் செயலாகவே இருக்கிறது.

தேர்தல் 2: நாடு கடந்த தமிழீழ வாக்கெடுப்பு

தமிழீழத்திற்கு யார் வாக்களிப்பது என்பது சர்ச்சையான விடயம். (வாக்குரிமை பற்றிய எமது சில கருத்துகள் பின் தரப்பட்டுள்ளன.)

வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கென பாராளுமன்றம் ஒன்றினை உருவாக்குவதில் தப்பில்லை. இங்கிலாந்தில் வாழும் இஸ்லாமியரும் தமக்கென ஒரு பாராளுமன்றத்தை நடத்துகிறார்கள். அதற்கு அதிகாரம் இல்லை என்றபோதிலும், பிரித்தானியா வாழ் இஸ்லாமியருடைய பிரச்சனைகளைப் பிரதிபலிக்கவாவது அது உதவும் எனவாதிடலாம்.

ஆனால், அது ஈராக்கிய அல்லது அவ்கனிஸ்தானிய அல்லது பாலஸ்தீனிய இஸ்லாமிய பாராளுமன்றம் என்று தன்னை அழைக்கவில்லை. அதன் பிரதிநிதிகள் பிரித்தானிய இஸ்லாமியரது வெளிவிவகார விடயமாகவே தமது ஈராக்கிய, மற்றும் ‘சகோதரர்களது’ பிரச்சனைகளை அணுகுகிறார்கள். எனவே, தமிழீழம் என்ற அடையாளத்துடன் இலங்கைத் தமிழர்களையா, புகலிகளையா, இல்லை அனைவரையுமே அது பிரதிநிதித்துவம் செய்யுமா? என்பது ஒரு கேள்வி. இவ்வாறான முரண்பாடுகள் பல ஒருபுறம்.

அதனைவிட, அது ஒரு வெளியேற்றப்பட்டவரின் அரசாங்கமாக (government in exile) இயங்குவதாயின் ‘வன்னி அரசின்’ அதிகாரங்களை பராமரித்த உறவுகளை ஏற்கனவே உருவாக்கி இருந்திருக்க வேண்டும். இல்லாவிடில், எந்த வழக்கில் (presedent) இப்பாரளுமன்றம் இலங்கைத் தமிழரது உடமைகளின் பொறுப்பாளர்களாக முடியும்? என்பது அடுத்த கேள்வி. (இவை தொடர்பான விளக்கங்களும் சில பின்னே.)

இதற்கு இஸ்லாமிய தமிழ் பேசும் சமுதாயங்களது பங்கு இல்லாத தறுவாயில் தமிழீழம் என்பது முன்னர் போல புலிகளது ISGA பிரேரணைத் திட்டங்களுள் அமைந்தது போலாகுமா? இல்லாவிடில் அவர்களது உடமைப் பிரச்சனைகளை எவ்வாறு பிரதிபலிக்கப் போகிறது? என்பவையும் முக்கிய கேள்விகளாகின்றன.

இந்தப் பாராளுமன்றம் தமிழ் பேசும் சமுதாயங்கள் யாவுமே சிங்கள அரசினால் பொதுமைப்படுத்தி ஒடுக்கப்படுகின்றன என்பதை எவ்வாறு கையாளும்? ஏற்கனவே உள்ள மாகாண சபைகளுடன் எவ்வாறான உறவுகளை ஏற்படுத்தப் போகிறது? என்பவையும் பிரதான கேள்விகளாகும். இவற்றுடன், இப்பாராளுமன்ற ஏற்பாட்டால், இலங்கைத் தமிழரது இனத்தீர்வுக்கான நிலைப்பாடுகளை முன்னெடுக்க எவ்வகையில் உதவப்போகிறது என்பதே முக்கிய கேள்வியாகும்.

எனவே, முரண்பாடுகள் குழப்பங்கள் விளக்கமற்ற நிலையுள் நாடுகடந்த தமிழீழ வாக்கெடுப்பு புலிகளது பழைய ஆதரவாளர்களால், தமது சித்தாந்தத்திற்கு, சிதைந்து இறந்து போய்கொண்டுள்ள அதன் உடலுக்கு, உயிர்வாய்வு கொடுத்து வாழ்வு கொடுப்பதற்கான முயற்சி என்பதிலும், தத்தமது அரசியல் வாழ்வுகளுக்கு புகலிடம் தேடும் இன்னுமொரு போலி நடத்தை என்ற விசமமான கருத்துகள் நியாயமாகப் படுவதில் வியப்பில்லை.

வாக்குரிமை/வாக்கெடுப்பு

இவற்றிக்கெல்லாம் முக்கியமான விடயம், வாக்களிக்கும் உரிமை யாருக்கு என்பதாகும். 05/09 வரை புலம் பெயர்ந்தவர்களது கருத்துக்கள் எவையாகினும் அவை செல்லாதவை என்றும், நிலத்தில் இடம்பெறுவதே முக்கியமானது என்ற யாதார்த்த வாதங்களே எமது அரசியலை ஆட்கொண்டிருந்தது. அதனை புலிகளது ஆதரவாளர்கள் முன்வைத்திருந்தாலும் அதற்கென்ற தத்துவார்த்தம் இருந்தது.

புலிகளோ, புலிப்-புகலிகளைக்கூட தமது அதிகார அமைப்பு வடிவத்தில் பார்வையாளராகக்கூட அநுமதித்து இருக்கவில்லை. அப்படியான அமைப்பு வடிவம் அவர்களது வன்னி அரசகாலத்தில் இருந்திருந்தால், அது வன்முறையால் ஒழிக்கப்பட்டபோது அதன் வெளிநாட்டு அங்கம் முழுப் பொறுப்புகளையும் பெற்றுக் கொள்வதற்கான உரிமை கொண்டது என்று வாதிடுவதற்கு சாதகமாக இருந்திருக்கும்.

அவ்வாறு வன்னி அரசின் அங்கமென இல்லாது போகினும், காலாகாலத்தில் தாம் எடுத்த முடிவுகளை புகலிகளிடம் வாக்கெடுப்பிற்கு விட்டிருந்தால், அது நடைமுறை ரீதியிலாவது ஒரு அதிகார வழக்கை (presedent) உருவாக்க உதவி இருக்கும். அவ்வழக்கைக் கொண்டு வன்னி அரசு இல்லாத தறுவாயில், புகலிகள் வாக்களிப்பை அதிகாரபூர்வமான விடயமாக பிரதிபலிக்க முயன்றிருக்கலாம்.

புகலிகள் தம் இச்சையில் தமது பூர்வீகப் பிரதேசங்களிலிருந்து வெளியேறி இருந்தாலும், அங்கே கடந்த 30 வருடங்களாக உக்கிர போர் நடந்தது என்பதும், சிங்கள அரசின் கொலைகார ஒடுக்குமுறைகளுடன் தமிழ் அமைப்புகளது அராஜாங்கப் போக்கும் ஒத்தாசையாக, மக்கள் விரோத நிலைமையே நிலவியது என்பது உண்மை. எனவே, எவ்வாறான தனிப்பட்ட காரணத்தைக் கொண்டு மனிதர் வெளியேறியிருந்தாலும் ‘போர்’ என்ற நிலமையே அவர்களது வெளியேற்றப் போகிற்கு அடிப்படைக் காரணி என்பது மறுக்க முடியாதது. ஆகவே, புகலிகளை வெளியேறியவர்களாகக் கொள்ளாது, வெளியேற்றப் பட்டவர்களாக கணிப்பதும், அவர்களுக்கு இலங்கைத் தீவில் ஜனநாயக உடமைகள் உண்டெனக் கருதுவதும் சர்வதேசிய வழக்கில் தவறான வாதமல்ல. இவ்வகையில் புகலிகளுக்கு வாக்குரிமை உண்டு என்பது தவறல்ல.

ஆனால், அவர்கள் வெளிநாட்டுப் பிரஜைகளாக மாறியபின், பலகாலம் தமது வாழ்க்கையை இருத்தியபின், நிரந்தரமாக நாடு திரும்பும் நோக்கம் அற்றபின், அந்த உரிமையை எவ்வாறான மனோநிலையிலிருந்து, நாட்டில் இருப்பவரது வாக்குரிமைகளுக்கும் மேலாக நியாயப்படுத்த முடியும் என்பது தனிப்பட்ட மனிதர்கள் தம்மைக் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வியாகும். இவ்வகையில், இலங்கையில் வாழும் எமது சகோதரங்களது வாக்குகளின் பெறுமதியும், பங்கும், உரிமையும் இவ்வாறான புகலிகளிடம் மட்டுமே இடம்பெறும் வாக்கெடுப்புகளில் என்ன? என்பது வேறு ஒரு பிரச்சனை ஆகிறது.

இந்நிலையை மன ரீதியிலாவது சீர்செய்திட, தமிழ் பேசுவோரது அரசியற் கட்சிகள், குறைந்தபட்சம் TNAயினர் இவ்வாக்கெடுப்புகள் பற்றி ஆதரித்து கருத்துக்களைக் கூறினால் இவற்றினை நிலத்தில் வாழ்பவர்களிடமும் உலகத்திடமும் நியாயப்படுத்த ஒருவேளே உதவலாம்.

இந்நிலை இல்லாதபோது, புகலிகள் தமிழர்களது இலட்சியங்கள் குறித்தும், இலங்கையில் வாழ்பவர்கள் தமது அன்றாட வாழ்க்கை குறித்தும், வேறுபட்ட வாக்கெடுப்புகளில் ஈடுபடும்போது எது முக்கியம் என்ற கேள்வி எழுவதும், புகலிகளது முயற்சிகள் விரையமாகப் போவதும் எதிர்பார்க்க வேண்டியதே.

ஆனால், இம்முயற்சிகளின் விரையங்களிலும் பார்க்க, நடைமுறையில் சட்டபூர்வமாக நியாயப்படுத்தக்கூடிய MOU பற்றி சாரரம்சங்கள் கவனமற்று கழித்து வைக்கப்பட்டு விரையமாக்கப்படுவதே பாரிய நஸ்டமாகும்.

தேர்தல் 3: சிறீலங்காவின் ஜனாதிபதி

புலிகளது இராணுவம் மிகைப்படுத்திக் காட்டப்பட்டதால் அது தோல்விகண்டபோது பலருக்கு பலத்த அதிரடி போன்ற ஏமாற்றம். அதனால், அத் தோல்வியின் பின்னணியை உற்று நோக்காது விட்டுவிடுகிறார்கள் பலர். எமக்கோ அத் தோல்வியின் தாக்கத்திலும் பார்க்க அதனை நோக்கிய முடிவுகளே முக்கியமானவையாகும். அவையே எமது மக்களது மட்டுமின்றி இலங்கைத் தீவில் வாழும் சகலரதும் அண்மித்த எதிர்காலத்தை சுட்டிக் காட்டுவனவாகும்.

புலிகள் தமது ஆயுதங்களை வெளியாரின் பொது ஸ்தாபனம் ஒன்றிடம் கையளிக்க வேண்டும் என நாம் எப்போதோ கூறியிருந்தோம். அதற்கு தமிழ் பேசும் மக்களது எதிர்காலத் தலைமை பற்றி நாம் கொண்டிருந்த அக்கறையே அடிப்படைக் காரணமாகும். நாமோ புலிகளை தமிழரது சமுதாயங்களது தலைவர்களாகக்கூட ஏற்றிருக்கவில்லை என்பது யாவரும் அறிந்ததே. ஆனால், வலுக்கட்டாயமாக அத்தலைமைப் பீடத்தை கைப்பற்றிக் கொண்ட புலிகள் மற்றைய அரசியல் தலைமைகளை எல்லாம் அழித்தொழிப்பதால் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டலாம் என்பதுடன் வெளியார் ஊடுருவலையும் தடுத்திடலாம் என நினைத்துக் காரியமாற்றினர்.

எஞ்சியோர், சிறீலங்காவசம் தள்ளப்பட்டனர், சிறீலங்கா வசமானமையால் தலைமைத்துவத்திற்கான சுயஇயல்பையும் தகமையையும் இழந்தனர். தமிழ் பேசும் இஸ்லாமிய சமுதாயத் தலைவர்களது நிலைமைகள் சற்று வேறுபட்டாலும் அவர்களும்தான் புலிகள் எதிர்ப்பு அரசியல் நடத்த வேண்டியவர்களாகவும் சிறீலங்கா சார்படைய வேண்டியவர்களும் ஆனார்கள்.

இந்நிலையில் புலிகள் அழிவது, neutron குண்டு வெடிக்கும்போது உயிர்கள்போக கட்டிடங்கள் தப்பிடும் நிலைபோல, வடகிழக்கு அரசியலில் மக்கள் சடப் பொருட்களாகிட, தலையில்லாத பாரிய வெற்றிடம் உருவாகும் என்பது நாம் புரிந்து கொண்ட விடயம். எனவே, இவ்விடத்தில் புலிகளை அழிப்பது தமிழர்களது அரசியல் தலைமையை முற்றாக நிராகரிப்பது என்பதற்கு ஒப்பானது என்பது உண்மை. அதனைத் தவிர்திருக்க முடியுமா? என்பது பாரிய, இன்றோ வெறும் ஆய்வுக்கான கேள்வி. ஆனால், தமிழ் பேசும் சமுதாயங்கள், குறிப்பாக தமிழர்கள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டை தாமாக தமது பலத்துடன் எடுத்துக் கொள்ளும் நிலமையை அற்றுப் போகச் செய்வதற்கான முடிவே இது என்பது மட்டும் தெளிவு.

இந்நிலையை உருவாக்கிடும் முடிவை, சிறீலங்கா எப்போதோ எடுத்திருக்க முடியும், ஆனால் நடை முறைப்படுத்த முடியவில்லை என்பது சரித்திரப் பாடம்.

புலிகள் வெளிக்காட்டிக் கொண்டதிலும் பலவீனமானவர்கள், இராணுவ தளபாடங்களது கொள்வனவு உள்வரவுகளை தம் இச்சைப்படி செய்ய முடியாது போனவர்கள், மக்களது உலகநாடுகளது ஆதரவுகளை இழந்து கொண்டு போனவர்கள், மாறாக அவர்களுடன் நிற்பதாகக் காட்டிக் கொண்ட நோர்வே தொடக்கம் தென் ஆபிரிக்காவரை சகல நாடுகளும் ஆயுதங்களை சிறீலங்காவிற்கு வழங்கின, என்பவை ‘புலிகளது அதிகாரத்தை முற்றுக்குக் கொண்டு வருவது’ என்ற முடிவு சர்வதேசிய அரசுகளிடம் இருந்தன என்பதற்கு அத்தாட்சி. இருந்தும் இவையாவும், நாம் இறுதியில் கண்ட இலகுடன், புலிகள் இராணுவத்தை முறியடித்துவிடும் நிலையை உருக்கின என்பதற்கில்லை.

அதற்கு (1) மக்களுக்கு என்னதான் அநியாயம் நடந்தாலும் முகம்பார்ப்பதில்லை (2) எவ்வாறான ஆயுதங்களைப் பாவித்தாலென்ன புலிகள் ஒழிந்தால் சரி என்ற அரசியல் முடிவுகளும், அவற்றிலும் மேலாக, (3) புலிகளது நடமாட்டங்களை விண்ணிலிருந்து கண்டு சிறீலங்காவை தயார்ப்படுத்தும் நிலமையைத் தந்தமை இராணுவ ரீதியில் அதிமுக்கிய முடிவாகும்.

இலங்கையின் இனப் பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு இல்லை வாய்பாட்டாக சொல்லிக் கொண்டிருந்த இந்தியா சரி, மேற்கத்திய நாடுகள் சரி, தென் ஆபிரிக்கா போன்ற மூன்றாம் உலக நாடுகள் சரி, ஏன் சிறீலங்கா பக்கமாகின? ஏன் ஆயுத உதவிகள் வழங்கின? ஏன் multiple barrel rocket launchers போன்ற ஆயுதங்களை புலிகளுக்கு கேடயமாக கட்டி வைக்கப்பட்டிருந்த மக்கள் மீது பிரயோகித்த போதும் வெறும் வார்த்தைகளுடன் தம்மை நிறுத்திக் கொண்டன?

இவற்றிக்கெல்லாம் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். புலிகள் பயங்கரவாதிகள் அல்-குவேடாவுடன் கூட தொடர்பு கொண்டவர்கள், இந்தியாவிற்கு எதிரானவர்கள், பிரிவினைவாதிகள், என பலவிதமான நிலைமைகள் இருக்கக் கூடும்.
ஆனால், 2008 வரை பேச்சு வார்த்தைகளை புலிகளுடன் பிரத்தியேகமாக, மிக இரகசியமாக நடத்தியவர்கள், மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் சிறீலங்காவினது கட்டுக்கு அப்பாலிருந்து சுய இயல்புடன் முடிவுகள் எடுக்கக் கூடிய காலத்தை வாங்கித் தர முயலாதவர்கள், இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வே இல்லை என அடித்துச் சொன்னவர்கள், சடுதியாக மனம் மாறும்போது காரணங்கள் என்ன என ஆராய்வது எம்மை நாமே ஏமாற்றும் செயலாகும்.

இதனிலும், எம்பால் விளைவுகள் என்ன என்பதே எமக்கு முக்கியமான விடயம். இதற்கு ஒரேஒரு பதில்: தலைமைத்துவம் இழந்த தமிழர்களும் தமிழ் பேசும் மக்களும் என்ற நிலையே என்பதுதான். இந்நிலையை உணர்ந்தவர்கள் தமக்குத் தாமே ஆறுதல் காணச் சொல்வது, “புலிகளை அழிக்க அநுமதி கொடுக்கமுதல் வெளிநாட்டுச் சக்திகளுக்கும் சிறீலங்கா அதிகார வர்கங்களுக்கும் இடையே ஏதோ ஒரு deal இருக்க வேண்டும்” என்பதே.

இதில் ஒரு logic இருக்கும் போதிலும், அப்படியான ஒரு dealதனை காரியம் முடிந்தபின் சிறீலங்கா சரி வெளிச்சக்திகள் சரி ஏன் நிறைவேற்ற வேண்டும்? என்பதே எமது கேள்வி.

இவற்றைப் பின்னணியாகக் கொண்டே 27 தை, 2010 நடைபெறவுள்ள சிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலை நாம் கணிப்பிடுகிறோம்.

பிரதான வேட்பாளர்கள்
தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரை ராஜபக்ஷாவும் பொன்சேகாவும் ஒரே சோழன் செடியில் பிறந்த இரு பொத்திகள்.
இலங்கை சிங்கள மக்களது சொத்து என்பதில் அசைவிலா நம்பிக்கை கொண்டவர்கள். அதன்பின்னர், தமிழ் பேசுவோரை எவ்வாறான கரிசனக் கண்ணுடன் அணுகுகிறார்கள் என்பதில் வேறுபடுகிறார்கள் என்பதால் நாமும் குதூகலமடைய வேண்டும் என கருதுபவர்கள் தம்மை ஏமாற்றும் தன்நம்பிக்கை அற்றவர்கள்.

இவர்களே முள்ளிவாய்காலில் என்ன தமிழரது இரத்தக் களரிக்கு முற்றாகப் (புலிகளது பங்கு வேறு) பொறுப்பானவர்கள். ஒரே கரையில் நின்று சிங்கள அரசுக்கு எதிரான தமிழர்களது போராட்டத்தை முறியடித்தவர்கள்.

இவர்களிடையே தமிழ் பேசுவோர் குறித்து வேறுபாடுகாண விளைவது ஒரு பாறாங் கல்லின் வெடிப்பிடையே நாக்கால் நீராவியைத் தேடுவது போலாகும். இந்த எமது அநுபவங்களைவிட இவர்கள்பற்றி வேறேதாவது நல்ல விடயங்கள் மறைந்து கிடக்கின்றனவா?

ஒருவேளை, ஜனாதிபதி ஆட்சி முறையை (ஆறு மாதத்தில்) மாற்றி அமைப்பது என்ற பொன்சேகாவின் வாக்குறுதி கண்ணை ஈர்க்கக் கூடும். ஆனால், கடந்த தேர்தலின் முன்னர் ராஜபக்ஷா ஜேவிபி அமைப்புடன் எழுத்தில் கொண்ட ஏற்பாடும்தான் இதனை வாக்குறுதியாகத் தந்திருந்தது. எனவே, தேர்தலின் முன்னர் தரும் வாக்குறுதிகள் எல்லாம் நடப்பவை என்பதற்கல்ல.

மேலும், மூன்றில் இரண்டு பாராளுமன்ற அதிகாரமின்றி இதனைச் சாதிக்க, அதாவது அரச சாசனத்தை மாற்றிட, வெகுசன வாக்கெடுப்பு அவசியம். பொன்சேகாவோ பாராளுமன்ற அரசியற் காலச்சாரம் அறியாதவர், கட்சித் தளம் இல்லாதவர். இவ் இரண்டு வழியுமோ, வெற்றியை நிச்சயமாகத் தரும் என்று கூற முடியாது. எனவே, ஆறு மாதத்தில் ஜனாதிபதி ஆட்சிமுறையையே மாற்றுவதாக யாரும் கூறுவதை எவ்வாறு கணிப்பது என்பது கேள்வியே. ஆறு மாதத்தில் இது குறித்த வெகுஜன வாக்கெடுப்பை நடத்துவேன் என்று கூறுவதே சாத்தியமான வாக்குறுதியாகும். எனவே, இது தொடர்பாக இவ்விரு வேட்பாளர்களுக்கும் இடையே வேறுபாடு காண்பவர்கள் இரகசிய தகவல்களைப் பெற்றவர்களாகவே இருக்க முடியும்.

இவற்றைத் தாண்டிய ஜனநாயகவாதம் கொண்டு வேறுபாடுகள் காண்பவர்களும் உண்டு. ராஜபக்ஷா சிறீலங்காவிற்கு ‘பரம்பரை’ ஆட்சிமுறையை கொண்டு வந்துள்ளார் அதனை மாற்றிட பொன்சேகா உதவுவார் என்பது இவர்களது சொத்தி வாதம்.

மூன்றாம் உலக நாடுகளில் ஆளும் வர்க்கங்கள் சில குடும்பங்களையே சார்ந்திருக்கும் என்பது புதிய விடயமல்ல. பண்டாரநாயக்காகளும் ஜெயவர்த்தன செனிவரத்னா குடும்பங்கள் தொடர்புகள் கொண்டவை என்பதும் அவர்களது கூட்டத்தினரே சிறீலங்காவை சுதந்திர காலம் தொட்டு ஆண்டுவருகிறார்கள் என்பதும் புதிய கதையல்ல. ராஜபக்ஸா குடும்பம் ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் அரசேறியமைதான் சற்று வேறுபட்ட விடயம். ஆனால், குடியானவர்-ஜனநாயகத்தில் (feudal-democracy) ஆழும் குடும்பத்தை (clan) மாற்றிவிடுவதால் மக்களது விடயங்களில் பாரிய மாற்றம் ஏற்படக் கூடும் எனக் கூறும் புரட்சிவாதிகளைப் பார்த்து என்ன சொல்வது என்பது புரியாத விடயம். இதனை இவர்கள் ஏதோ கணித-விஞ்ஞான ஆய்வு போல சூத்திரங்கள் பீடிகைகளுடன் சொல்லும்போது எமக்குள்ளே நாம் தாண்டு போவதைத் தவிர வேறு வழிதான் ஏது?

சிறீலங்காவின் அரசியலிலை வன்முறை பலாத்காரமாகச் சூழ்ந்ததில் இருந்து தமிழர்களது போலவே சிங்களவரிடையேயும் சில சமூக-மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்கலாம். வன்முறைச் சூழல் மத்திய வர்க்கங்களை நாலு திக்கும் ஓடவைப்பது என்பதை நாம் அறிவோம். தமது வசதியான, உயிருக்கு உத்தரவாதமான சூழுல்களில் இருந்தபடி வன்முறையை ஆதரிப்பது அவர்களது பொழுதுபோக்கான அரசியல் என்பதையும் நாம் உணர்ந்துள்ளோம். இதே நிலைமையையே சிங்களச் சமுதாயங்களும் சந்தித்துள்ளதையும், அதனால் கரையோரச் சிங்களச் சமுதாயங்கள் அரசியல் அதிகாரம்பெற முனைவதையும் நாம் அவதானிக்கலாம்.

இதனை ஒரு நிலையான ஸ்தாபனமாக உருவாக்கப்பட்டுள்ள இராணுவதினூடாகவும், ராஜபக்ஷா குடும்பத்தினரை பராமரிப்பதூடாகவும், ஜேவிபி ஜேஏச்யு போன்ற அமைப்புகளுடாகவும் அரசியலாக்கம் செய்ய முயல்வதையும் நாம் காண்கிறோம். இவ்வழியில், இவர்களுக்கும் சிங்கள பண்டைய தலைக்-குடும்பங்கள் சார்ந்த சமுதாயங்களுக்கும் அரசியற் போட்டி உருவாகுவது எதிர்பார்க்க வேண்டியதே.

சரி, பொன்சேகாவின் தளம் எது? அவர் பழைய தலைக் குடும்பங்களது அபிலாசைகளைப் பிரதிபலிக்க வேண்டிய வர்க்க உந்தல்கள் ஒரு புறமாகவும், நம்பத்தகுந்த தேசிய-ஸ்தாபனமாக உருவாகி வரும் அரசபடையின் அபிலாசைகளது சார்பாக மறுபுறமாகவும் அவரது தளம் சற்றே பரவலானது. இன்று பல மாகாணங்களது ஆளுனர்கள் (governers), அரச-ஸ்தாபனங்களது தலைவர்கள், மேலும் பல விதமான சமுதாயப் பொறுப்பாளர்கள் அரச படையைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். மேலும், இராணுவமயப் படுத்தப்பட்டுள்ள இலங்கைச் சமுதாயங்களிடையே கட்சிகளது குண்டர் படைகளைத் தவிர, அரசியற் பலத்தைக் கொண்டதும் தன்னிச்சையில் கொலைகளைச் செய்யக் கூடியதும் இராணுவம்தான். இவற்றைவிட, இரத்தத்தால் தொடுத்த clanக்கும், இராணுவ-அமைப்பு விசுவாசத்தால் தொடுத்த clanக்கும் மூன்றாம் நாடுகளின் குடியானவர்-ஜனநாயகத்தில் என்னதான் வேற்றுமைகள் என்பது எமது கேள்வி.

நாம் தொடக்கத்திலே ஞாபகப்படுத்தியது போல அவர் இவர் என்றெல்லாம் அலையாது, ஒரு மாதிரி வடிவத்துளிருந்து இந்தச் circusதனைப் அவதானிப்பவர்க்கு அதன் முடிவுகள் என்வாகும் என்பது புதிருமல்ல, புதினமுமல்ல.

எம்மைப் பொறுத்தவரை, தமிழ் பேசுவோர்களதும் உழைக்கும் வர்க்கங்களுக்கும் இவ்விருவராலும் வேறுபட்ட பயன்கள் கிட்டும் என பெரிதுபடுத்திப் பார்ப்பது கானல்நீர் கதையாகும். தமிழ் பேசுவோரைப் பொறுத்தவரை ஜனதிபதி அரசோ, பாராளுமன்ற அரசோ, அரசியல் பலமற்ற அவர்களது நிலையை மாற்றப் போவதில்லை. எனவே, இந்தப் “பாரிய ஜனநாயக விவாதத்தில்” எமக்கும் கருத்துண்டு என்பதற்காக ஏதாவது பங்கு பெறலாம் என நினைப்பது பகற்கனவே.

ஆனால், புலிகளது சரித்திரத்தின் எச்ச சொச்சங்களுக்கு முடிச்சுகள் போடவேண்டிய கருமங்கள் உண்டென அவர்களுடன் அரசியற் காலம் கழித்தவர்கள் சிந்திக்கலாம்.

இன்று வாக்குரிமை அற்று, அன்று இலங்கை பிரஜா உரிமை பறிக்கப்பட்ட மலையகத்தவர் போல இலட்சக் கணக்கில் உள்ள தமிழர்களது பிரச்சனையும், பொதுப்பணி செய்யப் புறப்பட்டு போராளிகளாகி, இன்று அரச தடுப்பு முகாங்களில் அனாதரவாக மனோவியல் தாக்கங்களுடன் வாடும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் பிரச்சனையும் தம்மால் உதவக்கூடியவை என இவர்கள் கருதலாம்.

எனவே, இவைபற்றிய dealகளை தலைவர்களெனக் கூறியபடி யார் செய்தாலும் வரவேற்கப்பட வேண்டும் என்ற வாதம் எமக்கு எட்டாமல் இல்லை. ஆனால், தடுப்பு முகாங்களிலிருந்து இதுவரை மக்கள் விடுவிக்கப்பட்டமைக்கு எதாவது dealகளா, அல்லது வெளியாரின் தலையீடுகளா காரணம்? என்ற கேள்வியே பதில் சொல்கின்றது. காகமிருக்க விழும் பழத்தை நாம் பறித்துத் தந்தோம் என்று சொல்வதால் எதுவித பயனும் மக்களுக்கு இல்லை. ஆகவேதான் அர்த்தமற்ற பிரத்தியேக இரகசிய dealகள் பற்றி எப்போதுமே எமக்கு ஐயப்பாடே எழுகின்றன.

இதனைவிட, இவற்றினைத் தொடர்ந்து இனப்பிரச்சனைக்கும் தீர்வு பெற்றுத்தருவோம் என்ற dealகளைப் பற்றி யாராவது கதைப்பார்களேயாயின் அதற்கு வெளியார் தரும் தெம்பு இருப்பதாகவும், இல்லாவிடில் வெறும் பிதற்றல் என்றுமே நாம் கருத வேண்டும். இவற்றைவிட, வியாபார வர்த்தக வர்க்கத்தினர் அல்லது கட்சி நலம் தனியார் உயிர் நலம் என தனிப்பட்ட ரீதிகளில் ஏதாவது dealகள் போடுவதையே நாம் ஆச்சரியமின்றி எதிர்பார்க்க முடியும்.

தமிழர்களது வாக்குகள்

இந்தத் தேர்தலில் தமிழர்கள் எப்படி வாக்களிக்க வேண்டும்? என்பது பலராலும் எழுப்பப்படும் கேள்வியே. எம்மைப் பொறுத்தவரை,

1.அவர்களில் பலர் வாக்குரிமையற்று, தடுப்பு முகாங்களுள் இருக்கும்போது வாக்களிப்பு என்பதே போலியான விடயம்.
2.அரசியல் பலத்தையும் அதை நிரப்ப உருவான இராணுவப் பலத்தையும் இழந்து நிற்கும் அவர்கள் வாக்குப் பலத்தால் எதையும் பெறலாம் என்று கருதுவதும் போலியான விடயம்.
3.இரு வேட்பாளர்களிடையே ஏதாவது வேறுபாடுகள் உள்ளன எனக் கருதுவது பகற் கனவான விடயம்.
4.அரசமைப்பையே மாற்றி அமைக்காது, அதன் உயர் பீடத்தின் வகையை மாற்றிடுவதால் தமிழருக்கோ, தமிழ் பேசும் சமுதாயங்களுக்கோ அல்லது ஒட்டு மொத்தமாக உழைக்கும் மக்களுக்கோ பயன் கிட்டும் என்று கூறுவது மக்கள் விரோதமான விடயம்.
5. தமிழரது வாக்குகளைப் பயன்படுத்தி பெரும்பான்மையோரது அரசாங்கத்தை நிர்ணையம் செய்ய முற்படுவது, இனப் பிரச்சனையின் தீர்வுக்கு எதிர்காலத்தில் குந்தகம் தரும் என்பதால், தவறான விடயம்.
6. தமிழரை அவர் அல்லது இவருக்கு வாக்களியுங்கள் என தலைமைத்துவத்தையே அற்று இருப்பவர்கள், வழிகாட்ட முனைவது மக்களது ஜனநாயகத் தன்மைக்கு குரோதமான விடயம்.

இவற்றின் அடிப்படையிலேயே, TELO தலைவர்களில் ஒருவரும் அண்மையில் சிறீலங்கா மீண்டவருமான திரு. சிவாஜிலிங்கத்தின் தேர்தற்களப் பிரவேசத்தை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். “யாருமே துணிவில்லாத போது தமிழரது பிரச்சனைகளை நாம் பேசுகிறோம்” என்பது மனோவியல் ரீதியில் இதமானதாக சிலருக்கு இருந்தாலும் அதன் விளைவுகள் என்னவாகும்? என்ற கேள்வியும் அவர்களுடன் கூடவே இருக்க வேண்டும்.

பிரதேச ஜனநாயகம் வேண்டிப் போராடும் நாம் மத்திய அரச அதிகாரப் போட்டியில் ஈடுபடுவது மூடத்தனம் என்பதிலும் பார்க்க, அதிலிருந்து நேரடிப் பலனை எதிர்பார்ப்பது போலியானது என்பதைத் தெரிந்து கொண்டே அதில் ஈடுபடுவது மாற்றாரது வேடிக்கைக்கும், சூட்சுமங்களுக்குமாகவே இருக்கும் எனச் சந்தேகப்பது தவிர்க்க முடியாதே போய்விடுகிறது.

தமது அரசியல் அபிலாசைகளுக்கு தடங்கலாக இருந்தமையாலேயே முதலில் மலையகத்தவரையும், பின்னர் தமிழ் பேசுவோரையும் சிங்களத் தேசியவாதிகளும், குறிப்பாக பேரினவாதிகளும் கவனிக்க வேண்டியதானது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஸ்கொத்லாந்து தேசத்தின் சுயநிர்ணைய உரிமையை கோரியபடி பிரித்தானியாவின் மத்திய அரசில் அவர்களது அதிகாரம் என்ன? என்றவாறான West Lothian வாதத்தை புரிந்தவர்களுக்கு நாம் கூறுவதின் நாசூக்கான கருத்துகள் புலனாகும்.

பெரும்பான்மைத்துவத்தை பாவித்து சிறுபான்மையினரது உடமைகளை, உரிமைகளை, மறுப்பதும் சிறுபான்மையினரின் குறைவான வாக்குகளால் பெரும்பான்மையினரின் அரசை நிர்ணயம் செய்வதும் ஜனநாயகத்திற்கு ஒவ்வாத செயல்களாகும். இதற்கு அதிகாரப் பரவலாக்கம் தரும் பிரதேச-ஜனநாயகமே பதிலன்றி பிரதேசவாதத்துடன் பொதுத் தேர்தலில்களில் தலையீடு செய்வது பொருத்தமானதல்ல.

எனவே தமிழ் பேசும் மக்கள் யாவரும், தலைமைத்துவம் என்பதை இழந்துவிட்ட கட்சிகளது அடிப்படைத் தீர்வுகளை நோக்கி அமையாத dealகளைப்பற்றிச் சிந்தியாது, தத்தமது நலன்களைக் கருதி சுயமாகவே தமது வாக்குகளை பிரயோகிப்பதா இல்லையா என்ற முடிவுகளுக்கு வர வேண்டும், அவர்களை வரவிட வேண்டும் என்பதே எமது ஒரேஒரு வேண்டுதல்.

அப்படியானால் சிவாஜிலிங்கத்தின் வேட்புமனு என்னாவது, தமிழ் பேசுவோரது உரிமைகள் பற்றி தவறான விடயமா?

சிறுபான்மையோரது உரிமைகளை முன்வைத்து பொதுத் தேர்தல்களில் போட்டிடுவது பற்றிய எமது விளக்கங்கள் சில மேலே தந்தோம், இங்கே சரி/பிழை என்பதல்ல எமது விவாதம்: விளைவுகள் என்ன என்பதே அவற்றை நிச்சயம் செய்பவை.

வெளியாரின் தலையீடுகள் இராது போகின், பொன்சேகாவோ மகிந்தாவோ தன்பாட்டிலேயே இனப்பிரச்சனைக்கு உடமைகளின் நீதியுடன் தீர்வுகளை வைக்கும் நிலைமைகளுள் இருக்கப்போவதில்லை. பேரினவாதிகளதும், தேசியவாதிகளதும் வர்க்க நோக்குக்காக அவர்கள் மனத்தால் விரும்பினாலும் நடத்தையில் அநுமதிக்கப் போவதில்லை.

அரசியற் பலமோ அதனைத் தரும் பொருளாதாரப் பலமோ இல்லாதமையாலேயே பிரதேசங்களில் ஆயுதக் கிளர்ச்சிகள் உருவாகுகின்றன. இன்று புலிகளது அழிப்புடன் அந்த இராணுவப்பலத்தை மட்டுமின்றி அவர்கள் உறுஞ்சிக் கைவசம் வைத்திருந்த தலைமைத்துவம், தன்நம்பிக்கை என பல பலங்களையும் தமிழ்மக்கள் இழந்து நிற்கிறார்கள். இவர்களை வழிநடத்திச் சென்ற தேசியவாதமோ இன்று நிலைகுலைந்து கிடக்கிறது.

இன்று அவர்களுக்கு மிக்க அவசியமான விடயங்கள்:
1.தனிமனிதர் குடும்பங்களது மீள் இணைப்பு,
2.நிலத்தில் இருப்பு,
3.வாழ்க்கைச் சுமூகம்,
4.அதற்கான பொருளாதார, பாதுகாப்பு காத்திரங்கள்,
5.மனோவியல், பொருளாதார, உயிர் இழப்புகள் குறித்த நஸ்டஈடுகள்,
6.இவற்றை உள்ளடக்கும் அரசில் நிலைப்பாடுகள் செயற் திட்டங்கள்,
என்பவையும், மேலாக
7.இவற்றைப் தரக்கூடிய ஒருமைப்பட்ட தலைமைத்துவமுமே.

ஒருமைப்பட்ட தலைமைத்துவம் என்றதும் ஒன்றுபட்ட அரசியல் அமைப்போ, ஒற்றுமையான அணியோ அல்ல. தமிழ் பேசும் மக்களது தலைவர்கள் என்பவரிடையே, குறைந்தபட்ச புரிந்துணர்வுணர்வினை ஏற்படுத்திக் கொள்வதையே தற்காலத்தில் தலைமைத்துவத்தை ஏற்படுத்துவதற்கான முதலாவது செயற்திட்டமாகக் கருதுகிறோம். இதனை ஒரு அமைப்பு மற்றதன் மீது திணிப்பதாலோ, பலத்தால் தம்வசம் இழுக்கலாம் என்ற நினைப்பாலோ, துரோகி-தியாகிப் பட்டங்களை மற்றவர்க்கு தகுந்தவண்ணம் சாதிக்க முடியாது.

இன்று தேசியவாதிகளாக வெளிநாடுகளில் வாழ்பவர்களும், வடகிழக்கில் தேசியவாதிகளாக புலிகளடியில் மடிந்து கிடந்தவர்களும் தமிழரது தலைமைத்துவம் இல்லாத நிலையை அறியாதவர்கள் அல்லர். இவர்கள் ஒருவரை ஒருவர் தேடாதே கண்டு கொள்வதும் புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதும் நியாயமானதே.

தமது தயவில் தமது பணத்தில் அரசியல் நடத்தும் தமிழ் அமைப்புகளுடன் இனப் பிரச்சனையின் தீர்வுக்கு ஒப்பந்தம் போடவேண்டிய அவசியமோ, அவர்களை தொடர்ந்தும் பராமரிக்க வேண்டிய நிர்ப்பந்தமோ சிறீலங்கா அரசுக்கு இல்லாத காலம் நெருங்கியபடி உள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவந்த வெளியாரது விருப்பும் அவ்வழியே என்பதும் முற்கூறக் கூடியது. எனவே, கைது செய்யப்பட்ட சரணடைந்த புலித் தலைவர்கள் உட்பட்ட அரசியற் தளம் ஒன்றினை அனுமதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமாயின் ஆச்சரியமில்லை.

இவ்வாறு, அரசியல் வரம்புகளும் உறவுகளும் மீளாக்கத்திற்கு உள்ளான நிலையில், யாருமே தலைமைத்துவமும் தரும் பலங்கள் அற்று, வெளியாரின் தலையீட்டிலேயே தமிழரதும், தமிழ் பேசுவோரது எதிர்காலமே தங்கி உள்ள நிலையில், TELO அமைப்பினரே TNAனைப் பிளவுபடுத்தினார்கள், தமிழரது உடமைகளை தட்டில் வைத்து மகிந்தாவிற்கோ பொன்சேகாவிற்கோ கப்பமாக வழங்கினார்கள் என்ற போலியான வெற்றுப் பழியை தோளில் சுமந்திட வேண்டிய அவசியம் TELOவிற்கோ, ஏன் இரகசிய dealகள் போடும் வேறு எந்த அமைப்புகளுக்கோ ஏன் என்பது புரியவில்லை.

இராணுவத் தீர்வை நடத்தி முடித்த வெளியார் அரசுடன் தமிழ் பேசும் சமுதாயங்களுக்கும் உள்ள சர்ச்சையை தெரியாதவர்கள் அல்லர், இந்த ஜனாதிபதித் தேர்தலூடாக யாராவது மீணடும் சுட்டிக்காட்டுவர் என்று எதிர்பார்த்ததும் இல்லை. எனவே அதற்கான பொறுப்புகளையும் அவற்றின் சுமைகளையும் தலைமைத்துவம் ஒன்று உருவாகும்வரை அவர்களிடம் விட்டுவிடுவதே சமயோகிதம்.

எனவே, சிவாஜிலிங்கத்தின் தேர்தற் பிரவேசத்தை மீள் பரிசீலித்தால், அது அவசரக் குடுக்கைத் தனத்தால், தம்முடன் உள்ள மற்றைய அமைப்புகளுடன் கூட ஆலோசிக்காது, உட் போட்டிகளாலும் தவறான அரசியற் கணிப்புகளாலும் ஆலோசனைகளாலும் எடுக்கப்பட்ட முடிவு என்பது தெளிவு. எனவே, தகுந்த தருணத்தில் ஏதாவது அர்த்தமில்லா dealகளைச் சாட்டுச் சொல்லியபடி அவரது தேர்தல் மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதே TELO சார்பிலும் தமிழ் பேசும் சமுதாயங்கள் சார்பிலும் செய்யக் கூடிய தகுந்த முடிவாகும்.

நன்றி.
ரவி சுந்தரலிங்கம்
28 மார்கழி. 2009

இரா சம்பந்தரின் அரசியல் ஆளுமைக்கு மற்றுமொரு நெருக்கடி. தமிழ் கொங்கிரஸ் தேர்தலை பகிஸ்கரிக்க முடிவு!!!

gajendrakumar_ponnampalamதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுக்கட்சியான தமிழ் கொங்கிரஸ் ஜனாதிபதித் தேர்தலைப் பகிஸ்கரிப்பதாக முடிவெடுத்தள்ளது. இந்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுக் குழு யாழ்ப்பாணத்தில் டிசம்பர் 27ல் வெளியிட்டு இருந்தது. அக்கட்சியின் தலைவர் அப்பாப்பிள்ளை விநாயகமூர்த்தி அதனைத் தெரிவித்தார். கட்சியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொண்டு வந்த பிரேரணையை ஏற்று அக்கட்சி இம்முடிவுக்கு வந்துள்ளது.

டிசம்பர் முற்பகுதியில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் விக்கிரமபாகு கருணாரட்னாவை ஆதரிப்பதற்கு ஆதரவு தெரிவித்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்தால் தேர்தலைப் பகிஸ்கரிக்கும் முடிவை எடுப்பதாகவும் அங்கு தெரிவித்து இருந்தார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினதும் கட்சியினதும் முடிவு ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கத்திற்கு சாதகமாகவே அமைந்து உள்ளது. எம்கெ சிவாஜிலிங்கம் வாக்குகளைப் போடுபவர்கள் தமக்கு வாக்களின்னாவிட்டாலும் பிரதான வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இரா சம்பந்தன் மாவை சேனாதிராஜா சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டு சரத் பொன்சேகா பக்கம் சாய்கையில் தமிழ் கொங்கிரஸின் முடிவு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள மற்றுமொரு பிளவு இரா சம்பந்தனின் அரசியல் சாணக்கியத்தை கேள்விக்கு உட்படுத்தி உள்ளது. அத்துடன் ஏற்கனவே திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இரா சம்பந்தனின் திருகோணமலை மாவட்ட நகரசபை உறுப்பினர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

புலிகளின் துப்பாக்கி முனையில் இணைக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலின் சந்தர்ப்பவாதத்தினாலும் இரா சம்பந்தனின் அரசியல் ஆளுமையின் பலவீனத்தாலும் பிளவுபடுகின்றது.

ஊடகங்களின் ஊகங்கள் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? : பி எம் புன்னியாமீன்

Commissioner of Elections Dayananda Dissanayakeஇலங்கையில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான 6ஆவது ஜனாதிபதித் தேர்தல் 2010 ஜனவரி 26ஆந் திகதி நடைபெறவுள்ளது. இந்த ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 22 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இருந்தபோதிலும்கூட,  பிரதான வேட்பாளர்கள் இருவரே மக்கள் முன் சோபிக்கின்றனர். ஒருவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரும்,  தற்போதைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸ அடுத்தவர் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா. இவர்கள் இருவரும் தவிர ஏனைய 20 வேட்பாளர்களும் அளிக்கப்படும் மொத்த வாக்குகளில் 5%  வாக்குகளையாவது பெறுவார்களா என்பது சந்தேகத்திக்கிடமானதே.

இலங்கையில் காணப்படக்கூடிய அனைத்து அச்சு ஊடகங்களும், இலத்திரனியல் ஊடகங்களும் மேற்குறிப்பிட்ட இரண்டு வேட்பாளர்களை பிரதானப்படுத்தியே தமது செய்திகளுக்கும், கட்டுரைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. எந்தவொரு ஊடகமாவது ஏனைய 20 வேட்பாளர்களுள் ஒருவருக்காவது முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவ்வாறு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் அது பிரதான வேட்பாளர்களை மையப்படுத்திய முக்கியத்துவமாகவே அமைந்திருக்கும். மறுபுறமாக இத்தேர்தலில் போட்டியிடும் ஏனைய 20 வேட்பாளர்களுள் சிலர் பிரதான வேட்பாளர்களுக்கு சார்பாளர்களாக போட்டியிடுவதும் இங்கு அவதானிக்கத்தக்க விடயமாகும். எனவேதான் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட தினத்தன்று தேர்தல் ஆணையாளரின் உரையில் “ஒவ்வொரு வேட்பாளர்களும் தமக்காகவே பிரசாரம் செய்ய வேண்டு”மென்பதை வலியுறுத்தியிருந்தார். இருப்பினும்,  இந்த வேட்பாளர்கள் சிலர் மறைமுகமாக பிரதான வேட்பாளர்களுக்கு சார்பான நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதை அறியமுடிகின்றது.

இன்று இலங்கையில் அச்சு ஊடகங்களை எடுத்து நோக்கும்போது 100க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் நாளிதழ்களாகவும்,  வார இதழ்களாகவும் மக்கள் மத்தியில் மிகவும் நெருக்கமடைந்துள்ளன. தமிழ்மொழியுடன் ஒப்பிட்டு நோக்கும்போது சிங்கள மொழியில் இதன் தாக்கம் மிகமிக அதிகம். குறிப்பாக 1994ஆம் ஆண்டு தேர்தல் முடிவில் சிங்கள ஊடகங்களின் பங்களிப்பு விசாலமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததை பல ஆய்வுகள் தெளிவுபடுத்தியிருந்தன. இலங்கையில் சிங்கள மொழி மூலமாக லங்காதீப, திவயின,  லக்பிம,  தினமின போன்ற பிரதான தேசிய தினசரிப் பத்திரிகைகளும் ராவய,  இருதின,  சிலுமின, சத்தின,  மவ்பிம,  ரிவிர, லங்கா போன்ற வாரப் பத்திரிகைகளும் தமிழ்மொழி மூலமாக தினகரன்,  தினக்குரல், சுடரொளி, வீரகேசரி போன்ற தேசிய நாளிதழ்களும்,  நவமணி போன்ற வாரப் பத்திரிகைகளும் ஆங்கில மொழி மூலம் டெய்லி நிவுஸ்,  த. ஐலன்ட், டெயிலி மிரர் போன்ற பிரதான தேசிய தினசரிப் பத்திரிகைகளும் சன்டே ஒப்ஸேவர், சன்டே டைம்ஸ், சன்டே லீடர்  போன்ற வாரப் பத்திரிகைகளும் காணப்படுகின்றன. இந்த பத்திரிகைகளில் அனேகமானவை தாம் நடுநிலைமைப் போக்குடன் ஜனாதிபதி தேர்தலில் செயல்படுகின்றோம் என்று கூறிக் கொண்டாலும்கூட,  உண்மையான நடுநிலைமைப் போக்கினை அவதானிக்க முடிகின்றதா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. குறிப்பாக மேற்குறிப்பிட்ட பத்திரிகைகளில் சில பத்திரிகைகள் அரசாங்கப் பத்திரிகைகளாகும். பெரும்பாலான பத்திரிகைகள் தனியாருக்கு சொந்தமானவையாகும்.   ஏதோவொரு வகையில் பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்~வுக்கு அல்லது சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவு சேர்க்கும் பத்திரிகைகளாகவே இவைகள் காணப்படுகின்றன. அதேபோல வானொலியை எடுத்துக் கொண்டாலும் இன்று 70க்கு மேற்பட்ட வானொலி சேவைகள் மும்மொழியிலும் உள்ளன. இவைகள் செய்திகளை ஒலிபரப்புபவை. 15க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிச் சேவைகள் இருக்கின்றன. 100க்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் இருக்கின்றன. இவைகளிலும் சில அரசாங்க வானொலி, தொலைக்காட்சிகளாகவும் அதிகமானவை தனியாருக்கு சொந்தமான வானொலி, தொலைக்காட்சிகளாகவும் இருக்கின்றன.

இவ்விடத்தில் தனியார் ஊடகங்களை எடுத்து நோக்குமிடத்து அவை தத்தமது உரிமையாளர்களின் கொள்கைகளுக்கிணங்க நிகழ்ச்சித்திட்டங்களை வகுத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இங்கு சில ஊடகங்கள் ஐக்கிய தேசியக்கட்சியினால் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் அல்லது மக்கள் விடுதலை முன்னணியினால் நேரடியாக நடத்தப்பட்டு வருபவை. அல்லது பிரதான கட்சியான முக்கியஸ்தர்களினால் மறைமுகமாக வழிநடத்தப்படுபவை. எனவே எவ்வளவு தான் நடுநிலைமைப் போக்கு எனக் காட்டினாலும்கூட அவற்றின் சார்பு நிலை ஏதோவொரு பக்கம் சரிந்திருப்பதை பொதுப்படையாகக் காணமுடிகின்றது. எனவே அரசாங்க ஊடகங்களில் மாத்திரமல்லாமல் தனியார் ஊடகங்களிலும் பக்க சார்பு நிலையிருப்பதை எடுத்துக் கொள்ளலாம். இலங்கையில் இலத்திரனியல் ஊடகங்களை ஒப்புநோக்குமிடத்து அரசாங்க ஊடகங்களைவிட தனியார் ஊடகங்களில் மக்கள் மயமாக்கல் மிகைத்துக் காட்டப்பட்டுள்ளது. இந்த ஊடகங்கள் மக்கள் ஈர்க்கத்தக்க வகையில் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை உள்வாங்கியிருப்பதினால் இத்தகைய பிரபல்யம் தவிர்க்க முடியாது ஆகிவிடுகின்றது. மேலும் தனியார் ஊடகங்கள் சர்வதேச ஊடகப் பின்னலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இணைந்திருப்பதினால் சர்வதேச சக்திகளுக்கும் உட்பட்டேவிடுகின்றன.

இத்தகைய பின்னணியை வைத்துக் கொண்டே இலங்கை ஊடகங்களை நோக்க வேண்டியுள்ளது.

1956ஆம் ஆண்டு முதல் இலங்கையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் ஆழமாக ஆராயுமிடத்தும்,  பல ஆய்வு அறிக்கைகளிலிருந்தும் பின்வரும் முடிவு வெளிப்படுகின்றது. அதாவது,  இலங்கையிலுள்ள வாக்காளர்களுள் சுமார் 30 தொடக்கம் 32 சதவீதத்தினர் யார் போட்டியிட்டாலும் ஐ.தே.கட்சியின் ஆதரவாளர்கள். அதேபோல 20 தொடக்கம் 23 சதவீதத்தினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள். நிச்சயமாக இந்த வீதத்தினரின் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கும்,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமே செல்லக்கூடியவை. இதனைக் கிராமிய மட்டத்தில் பின்வருமாறு எளிமையாகச் சொல்வார்கள் “என் உடலில் ஓடுவது பச்சை இரத்தம்,  என் உடலில் ஓடுவது நீல இரத்தம்.” என்று. இந்த அளவிற்கு அந்த நிலை வலுவடைந்துள்ளது.

இவ்வாறே கட்சியுடன் ஐக்கியமானவர்களின் வாக்கு எத்தகைய நிலையிலும் அக்கட்சியையே சார்ந்திருக்கும். இதில் எத்தகைய மாற்றங்களும் ஏற்பட இடமில்லை. ஆனால் அரசாங்கத்தை கவிழ்ப்பதோ அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தீர்மானிப்பதோ சுமார் 40 தொடக்கம் 50 வரையிலான இடைப்பட்ட வாக்காளர்களே. பொதுவாக இவை மிதக்கும் வாக்குகள் எனக் கொள்ளப்படுகின்றன. ஒரு பாராளுமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வரக்கூடிய அரசாங்கத்தின் கொள்கைகளிலோ அன்றேல் ஒரு ஜனாதிபதித் தேர்தலில் தெரிவு செய்யப்படக் கூடிய ஜனாதிபதியின் கொள்கைகளையோ விளங்கி வாக்களிக்கக்கூடிய இந்த மிதக்கும் வாக்காளர்கள் உள்ளனர். எனவே,  போட்டியிடும் பிரதானக் கட்சிகள் போட்டியின் பிரதான வேட்பாளர்களின் கொள்கையாக்கங்களை விளக்க வேண்டியர்களாக இத்தகைய மிதக்கும் வாக்கினரே உள்ளனர். எனவே இவர்கள் தான் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தி.

தேர்தல் காலத்தில் ஊடகங்களின் பணியென்றுக் கூறும்போது இந்த மிதக்கும் வாக்காளர்களின் மனோநிலையைத் தீர்மானிக்கக்கூடியதாக அமைதல் வேண்டும். ஜனாதிபதித் தேர்தலுக்கான நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட தினத்தன்று ‘வாக்காளரின் மூளையை மழுங்கடிக்கும் விதத்தில் ஊடகங்கள் செயற்படக்கூடாது” என  தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க வேண்டுகோள் விடுத்ததை இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாக இருக்கும்.

அந்நிகழ்வில் தேர்தல் ஆணையாளர் “சட்டத்தின் பிரகாரம் அரச ஊடகங்களை மட்டும் கட்டுப்படுத்தும் அதிகாரங்களே தனக்கிருப்பதாகவும் இன்று பெருமளவில் தனியார் ஊடகங்கள் காணப்படுவதாகவும் அவற்றில் சில ஊடகங்கள் வாக்காளர்களின் அறிவுத் திறனை மழுங்கடிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் கவலை தெரிவித்தார். அரச ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும் ஏனைய ஊடக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கவும் தான் சட்டத்தின் பிரகாரம் கட்டுப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனிப்பட்ட பெயர் குறிப்பிடாமல் பொதுப்படையான நிலையில் இலங்கையில் அச்சு,  இலத்திரனியல் ஊடகங்களை ஒப்புநோக்கும்போது தற்போதைய நிலையை பிரதான வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் கரிபூசிக்கொள்ளும் நிகழ்வுகளை மிகைப்படுத்தி பிரசுரிப்பதையும்,  ஒலி / ஒளிபரப்புவதையுமே காணமுடிகின்றது. ஆனால், ஒருவருக்கொருவர் குறைகூறும் செய்திகளை மக்கள் கவரும் வகையில் வெளியிட்டு வாசகர்களை கவர விளையும் அதேநேரத்தில் பிரதான வேட்பாளர்களை கொள்கையாக்கங்கள் குறித்து இவைகள் முக்கியத்துவப்படுத்த மறந்துவிடுகின்றன.

பிரதான வேட்பாளர்களில் ஒருவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ தான் பதவிக்கு வரும் பட்சத்தில் தனது கொள்கையாக மஹிந்த சிந்தனை 02 அமைந்திருக்கும் என்றும் மஹிந்த சிந்தனை 02 தற்போதைய செயற்பாட்டின் தொடர்ச்சியாக அமையும் என்றும் குறிப்பிடுகின்றார். ஆனால்,  இதுவரை தாம் பதவிக்கு வரும் ஆறாண்டுகளைக் கொண்ட காலத்தில் தனது பொருளாதாரத் திட்டம் என்ன? தற்போதைய இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு எத்தகைய தீர்வுகள் மேற்கொள்ளப்படப் போகின்றன? என்ற விளக்கங்கள் சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட்டதாக தோன்றவில்லை.

அதேபோல பிரதான எதிர்க்கட்சிப் பொது வேட்பாளராக சரத்பொன்சேக்காவின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக எத்தகைய உறுதிப்பாடுகளையும் வெளிப்படுத்தியதாகக் காணமுடியவில்லை. இது தொடர்பாக அவரிடம் நிலையான கொள்கைகள் இருப்பதாக தோன்றவுமில்லை. தான் பதவிக்கு வருமிடத்து நடைமுறைப்படுத்தவுள்ளதாக 10 அம்சங்கள் கொண்ட திட்டமொன்றினை 2009 டிசம்பர் 18ஆம் திகதி கண்டியில் வைத்து அவர் வெளியிட்டார். ஆனால்,  ஐக்கியத் தேசியக் கட்சியோ அன்றேல் சரத்பொன்சேக்காவை வேட்பாளராக அமர்த்தியிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியோ சரத்பொன்சேக்காவின் ஆறாண்டு பதவிக்காலத்துக்கான நிலையான திட்டமொன்றை வெளிப்படுத்த தவறி வருகின்றது. தான் பதவிக்கு வருமிடத்து ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவி இல்லாமலாக்கப்படும் என்றும் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புச் சொல்லும் மந்திரிசபை ஆட்சிமுறை மீண்டும் அமைக்கப்படும் என்றும் இதில் பிரதம மந்திரி நிறைவேற்று அதிகாரமிக்கவராக காணப்படுவார் என்றும் கூறப்பட்டு வருகின்றது.

1994ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தல்களிலும் நாம் கேட்கும் முக்கியமான வாக்குறுதி தான் பதவிக்கு வந்ததும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்துவிடுவோம் என்பதாகும். ஆனால், அது நடைமுறைக்கு சாத்தியமற்றது. அதிகாரத்தில் வரக்கூடிய எவரும் தனது அதிகாரத்தை இலகுவாக விட்டுக் கொடுத்ததற்கான வரலாறு உலகளாவிய ரீதியிலே உதாரணப்படுத்துவது கடினம். இத்தகைய நிலையில் ஒரு இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சரத்பொன்சேகா தனக்கு அதிகாரம் கிடைக்குமிடத்து அவ்வதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் கோருவதைப் போல இலகுவில் விட்டுக் கொடுத்துவிடுவாரா எனும் கேள்வியும் எழுகின்றது. தற்போதைய அரசியல் நிலைகளின் பிரகாரம் ஒரு பிரதான கட்சியற்ற பொன்சேகாவால் மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தை எவ்வாறு பெற முடியும் என்பது மிதக்கும் வாக்காளர்களிடையே சந்தேகங்களை ஏற்படுத்தி வருகின்றன.

எனவே,  இலங்கையில் காணப்படக்கூடிய அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியான மிதக்கும் வாக்காளர்களின் மனத்தெளிவுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஊடகங்களின் செயற்பாடுகள் அமைந்தால் மாத்திரமே ஊடக தர்மம் நிலைப்படுத்தப்பட்டதாக இருக்கும். மேலே ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல ஐக்கியத் தேசியக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரின் நிலையான வாக்காளர்களை வைத்து ஊடகங்கள் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குமிடத்து அதனால் பலன் ஏற்படப் போவதில்லை. ஏனென்றால்ää இரண்டு பிரதான வேட்பாளர்களையும் மையப்படுத்தி நடைபெறும் பொதுக்கூட்டங்கள் கட்சியின் நிலையான ஆதரவாளர்களைக் கொண்டே நிரம்புகின்றன.

மிதக்கும் வாக்காளரின் நிலை தேர்தல் நடைபெறும் வரை வெளிப்பட மாட்டாது. மிதக்கும் வாக்காளர்கள் பெரும்பாலானோர் படிப்பறிவுள்ளோர். எனவே, படிப்பறிவோருக்கும் விளக்கமளிக்கக்கூடிய விதத்தில் இத்தகைய ஊடகங்களின் பங்களிப்பு இடம்பெறுதல் அவசியமானதாகும். இலங்கைத் தேர்தல்களில் ஊடகங்களின் பங்களிப்பு என்று கூறும்போது நிலையான கட்சி ஆதரவாளர்களின் காட்சிப்படுத்தலைவிட மிதக்கும் வாக்காளர்களின் மனோநிலையில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பே தீர்மான சக்தியாக அமையும். இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள இத்தருணத்தில் பிரதம வேட்பாளர்கள் தமது நிலையான திட்டத்தை தெளிவுபடுத்த வேண்டிய நிலையிலும்ää யதார்த்தத்தைத் தெளிவுபடுத்த வேண்டிய நிலையிலும் உள்ளனர். இந்த தன்மையை 2010 ஜனவரி 26ஆந் திகதி தேர்தல் முடிவினை தீர்மானிக்கும் சக்தியாக அமையும். 

 ஊடகங்கள் பற்றிய மேலதிக வாசிப்பிற்கு:

ஊடகம் என்பது ஜனநாயகத்தின் உயிர் நாடியாகக் கொள்ளலாம். கருத்துக்களைத் தெரிவிக்கும் அதேநேரம்,  கருத்துக்களைத் தெரிந்து கொள்ளும் உரிமை ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. இந்த அடிப்படையில் கருத்துக்களைத் தெரிவிக்கவும் கருத்துக்களைத் தெரிந்து கொள்ளவும் ஊடகங்களின் பங்களிப்பு மிகவும் விசாலமானது. எனவே ஊடகமானது சுதந்திரமாகவும் நடு நிலைமையுடனும் செயற்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஊடகச் சுதந்திரம் என்பது ஊடகங்கள் மிரட்டலும் தணிக்கையும் இல்லாமல் தகவலை வெளியிடுவதற்கான சுதந்திரத்தைக் குறிக்கும். சட்டமன்றம்,  நிர்வாகம்,  நீதிமன்றம், ஊடகம் ஆகியவை மக்களாட்சியின் நான்கு தூண்களாக கருதப்படுகின்றன. அதன் நீட்சியாக சுதந்திர ஊடகம் சமூகத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. அதே நேரம் நடு நிலைமை எனும் போது பக்க சார்பற்ற பொது நிலையை பொருள் படுத்துகின்றது.

ஒரு சம்பவம் அல்லது செய்தியை சம்பவ இடத்திற்குச் சென்று உண்மைகளை ஆய்ந்து அல்லது சம்பவம் அல்லது செய்தியை சான்றுகளுடன் உறுதிப்படுத்திக்கொண்டு அதை ஆதாரப்பூர்வமாக வெளியிடுவதே ஊடகத் தர்மமாகும். உலகில் வாழும் மக்கள் அனைவரும் அன்றாட நிகழ்வுகள் அனைத்துத் தகவல்களையும் செய்தித்தாள்,  வானொலி,  தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்கள் வாயிலாகவே அறிந்துக்கொள்கின்றனர். எனவே மக்களுக்கு உண்மைகளை ஆதாரப்பூர்வமாக அறியத் தரவேண்டிய தார்மீகப் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. அதன் பொறுப்பை சரிவரச் செய்வதே ஊடகத் தர்மமாகும். அவ்வாறான நிலை காணப்படின் மாத்திரமே ஜனநாயக பண்பினை வெளிப்படுத்துவதாக அமையும்.

19ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் அச்சு ஊடகங்கள் வளர்ச்சியடையலாயிற்று. இக்காலகட்டங்களில் அச்சு ஊடகங்களில் கருத்துக்களைத் தெரிவிப்போரும்,  அச்சு ஊடகங்களினூடாக கருத்துக்களை அறிந்து கொள்ளவிளைவோரும் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்பட்டனர். குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் நிலவிய வாசிப்பறிவின்மை காரணமாக அச்சு ஊடகங்களினூடாக கருத்துக்களைத் தெரிந்து கொள்ளும் நிலை மிகமிக குறுகிய வட்டத்துக்குள் மாத்திரமே முடக்கப்பட்டிருந்தது.

20ஆம் நூற்றாண்டில் ஊடகத்துறையின் வளர்ச்சியானது ஓர் உயரிய நிலையை அடைகின்றது. அச்சு ஊடகத்துடன் வானொலியின் அறிமுகமும், அதைத் தொடர்ந்து 20ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் மேற்குலக நாடுகளில் தொலைக்காட்சியின் அறிமுகமும் கருத்துப் பரிமாற்றத்துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. இக்கட்டத்தில் மேற்குலக நாடுகளில் மாத்திரமல்லாமல் தற்போதைய மூன்றாம் உலக நாடுகளிலும் வானொலிப் பாவனை அதிகரித்தது. இங்கெல்லாம் ஆரம்பத்தில் அரசாங்கத்தினாலேயே வானொலி ஒலிபரப்புகள் ஏற்படுத்தப்பட்டதுடன், கட்டுப்படுத்தவும்பட்டன. இலங்கையைப் பொறுத்தவரை “இலங்கை வானொலி” வானொலித் துறையில் முன்னோடியாக திகழ்கின்றது.

வானொலியின் பரவலான அறிமுகத்துடன் தகவல்களை “ஒலி” வடிவில் மக்களால் கேட்டுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு உருவானதினால் வானொலியைக் கேட்பதற்கு வாசிப்பறிவற்றநிலை தடையாக அமையவில்லை. தகவல்களையும், செய்திகளையும் வழங்குவதுடன் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளாது பொழுதுபோக்கு அம்சமாக இசையினையும் இது தன்னகத்தே உள்வாங்கிக் கொண்டதினால் படிப்படியாக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்தன. இலங்கை 1948ஆம் ஆண்டு சுதந்திரமடைந்ததன் பின்பு “இலங்கையில் வானொலி” பிரதான ஊடகமாக மாறியதுடன், பாமர மக்களிடையேயும் பாவனைப்படுத்தப்படும் நிலை உருவெடுத்தது.

1926ஆம் ஆண்டில் தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்டது. தொலைக்காட்சி என்பது ஒரு கம்பியில்லா தொலைத்தொடர்பு சாதனம் ஆகும். ஒளி,  ஒலியை ஒன்றாக இணைத்து ஒளிபரப்பப்படுகிறது. பின்னர் இதைத் தொலைக்காட்சி சாதனம் ஊடாக நாம் பார்க்கவும்,  கேட்கவும் கூடிய விதத்தில் தொகுத்துத் தருகின்றன. இது கண்களால் காணக்கூடிய ஒளியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்ணைக் கொண்ட மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்குகிறது. ஆனால்,  தொலைக்காட்சிப் பாவனை 20ஆம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை பரவலாக்கம் அடையவில்லை. இதன் தாக்கம் வானொலியை விட பயன்மிக்கதாக இருந்தது. 20ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் மேற்குலக நாடுகளில் தொலைக்காட்சியின் பாவனை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் அதிகரிக்கலாயிற்று.

மூன்றாம் உலக நாடுகளில் தொலைக்காட்சியின் அறிமுகம் 20ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டங்களிலே ஏற்படுத்தப்பட்டன. அநேகமான மூன்றாம் உலக நாடுகளில் தொலைக் காட்சியின் அறிமுகத்தை அந்நாடுகளின் அரசாங்கங்களே ஏற்படுத்தின. இலங்கையில் 1978ஆம் ஆண்டு சுயாதீனத் தொலைக்காட்சிச் சேவை முதல் தொலைக்காட்சிச் சேவையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ரூபவாஹினி தேசிய ரீதியில் தனது ஒளிபரப்பினை ஆரம்பித்தது. தற்போது இலங்கையில் 15க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிச் சேவைகள் காணப்படுகின்றன. இவைகளுள் அநேகமானவை தனியாருக்குச் சொந்தமானவை. தொலைக்காட்சியிலும் தகவல்கள், செய்திகளை அறிவதுடன், பொழுதுபோக்கு அம்சங்களும் மிகைத்திருப்பதினால் வானொலிப் பாவனையைவிட 20ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தொலைக்காட்சிப் பாவனை கூடிய செல்வாக்கினை செலுத்த ஆரம்பித்தது.

20ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டங்களில் வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களுடன் இன்னும் பலவிதமான தொடர்பாடல் ஊடகங்கள் மக்கள் முன் அறிமுகமாகின. குறிப்பாக மேற்குறிப்பிடப்பட்ட சேவைகள் பல வடிவங்களில் நவீனத்துவப்படுத்தப்பட்டதுடன்,  இணையத்தின் அறிமுகத்துடன் இணையத்தளங்களும் ஒரு முக்கியமான கருத்துப் பரிமாற்ற ஊடகமாக மாறலாயிற்று. இந்த இணைய ஊடகங்கள் 21ஆம் நூற்றாண்டின் முதலாம் தசாப்தம் நிறைவடையும் இக்காலகட்டத்தில் மேற்குலக நாடுகளில் வளர்ச்சி கண்ட அளவிற்கு மூன்றாம் உலக நாடுகளில் வளர்ச்சி காணாவிடினும்கூட தற்போதைய நிலையில் அவைகளும் வேகமாக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்து கொண்டே வருகின்றன.

எனவே, ஆரம்ப காலகட்டங்களை விட மிலேனியத்தில் வாழும் எமக்கு ஊடகங்களின் தாக்கம் பல வழிகளிலும் மிகைத்ததாகவே உள்ளன. இன்றைய நிலையில் மேற்கத்திய நாடுகளில் மாத்திமல்லாமல் வளர்முக நாடுகளிலும்கூட ஊடகங்கள் பாரிய தாக்கங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது மறுப்பதற்கு இயலாது. எனவேதான் ஜனநாயக விழுமியங்களை மக்கள் முன் வைப்பதில் ஊடகங்களின் பங்களிப்பு பிரதான இடத்தைப் பெறுகின்றன எனலாம்.

இன்றைய காலகட்டத்தில் பத்திரிகை,  வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையம் போன்ற ஊடகங்களை எடுத்து நோக்குமிடத்து ஒன்றில் அவை அரசாங்க ஊடகமாக இருப்பின் அதிகார வர்க்கத்தின் தாக்கங்கள் காணப்படலாம். அன்றேல் தனியார் ஊடகமாக இருப்பின் அந்த ஊடகத்துக்குச் சொந்தமான உரிமையாளர் அல்லது அந்த ஊடகத்துக்கு நிதியுதவியை வழங்கும் தனிப்பட்டவர் அல்லது குழுவினரின் செல்வாக்குக்கு உட்பட்டதாக இருக்கலாம். மறுபுறமாக தனியார் ஊடகங்கள் வர்த்தக நோக்கத்துடன் செயற்படுவதனால் செய்திகளையோ,  தகவல்களையோ தான் முந்தி ஒலி / ஒளிபரப்ப வேண்டும் என்ற நோக்கில் அவசரத்தன்மையுடன் ஒலி / ஒளிபரப்புவதுடன் சிலநேரங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்களும் முக்கியத்துவப்படுத்தப்பட்டு விடுகின்றன. இத்தகைய நிலைகளினால் ஊடக தர்மம் செயலிழந்து வருவதை பல சந்தர்ப்பங்களிலும் அவதானிக்க முடிகிறது.

உதாரணமாக மேற்குல நாடுகளின் ஊடகங்களை எடுத்து நோக்குமிடத்து அந்த ஊடகங்கள் அபிவிருத்தியடைந்த நாடுகளின் கருத்துக்களை திணிப்பதில் கூடிய அக்கறை காட்டி வருகின்றன. அதுமாத்திரமல்ல மூன்றாம் உலக நாடுகளிலும் முதலாளித்துவம் சார்ந்த தனது மேலைத்தேய பண்புகளை நியாயப்படுத்தி அவற்றை ஏதோ ஒரு வகையில் திணிக்க உடந்தையாக இருந்து கொண்டிருக்கின்றன. இதனை மேலும் தெளிவுபடுத்துவதாயின் அமெரிக்கவாதத்தின் ஏகாதிபத்தியத்தை உலகில் நிலைநிறுத்தி உலகில் உயர்ந்த நிர்வாகமும், சட்டவாக்கமும்,  நீதித்துறையும் அமெரிக்காவிடமே உள்ளது என்பதை எடுத்துக் காட்டவே சர்வதேச ஊடகங்கள் முனைகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலகத்தை உள்ளங் கைக்குள் சுருக்கிவிட்ட இந்த சக்திகளால் இவற்றை இலகுவாக கையாள முடிகின்றன.

இதே பின்னணியில் தான் 3ஆம் உலக ஊடகங்களும் இன்று மாறிவிட்டன. குறிப்பாக 3ஆம் உலக நாடுகளின் ஊடகங்களும் அதிகார வர்க்கத்தின் முகவர்களாக அன்றேல் அதிகாரத்துக்காகப் போராடுபவர்களின் முகவர்களாக மாறிவிட்டன. இதனால் ஜனநாயகம் எனும் போது அதிகார வர்த்தக்திற்குரிய ஒரு முகப்பூச்சாகவே உள்ளதே அன்றி உண்மை நிலையினை பிரதிபலிப்பதாக பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இருப்பதில்லை.

புலி ஆதரவாளர்கள் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக கனடாவில் பொதுக் கூட்டம் : த ஜெயபாலன்

Nadarajah_Muralitharan‘நடைபெற இருக்கும் சிறிலங்காவின் ஜனாதிபதிக்கான தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் மகிந்த ராஜபக்சவை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகின்றது’ என்று ஏற்பாட்டாளர்களில் ஒருவரான நடராஜா முரளீதரன் தேசம்நெற்க்கு தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் நாட்டின் பொறுப்பாளராக அறியப்பட்ட நடராஜா முரளீதரன் நீண்டகாலமாக கனடாவில் வாழந்து வருகின்றார். கலை இலக்கியச் சந்திப்புக்களை ஏற்பாடு செய்து வரும் இவர் தற்போது வெளிப்படையான அரசியல் நடவடிக்கையிலும் தன்னை வெளிப்படுத்தி வருகின்றார்.மகிந்த ராஜபக்சவை நிராகரிக்க வேண்டும் என்று கோருவதன் மூலம் மறைமுகமாக எதிர்க் கட்சி கூட்டின் வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்றோம் எனத் தெரிவித்தா நடராஜா முரளீதரன் இதுவொரு தந்திரோபாய அரசியல் நகர்வே அல்லாமல் சரத்பொன்சோகாவின் கொள்கைகளுடன் உடன்படுவதல்ல எனத் தெரிவித்தார்.

ஜனவரி மூன்றில் இப்பொதுக்கூட்டம் ரொறன்ரோவில் நடாத்த ஏற்பாடாகி உள்ளது.

பின்வரும் நான்கு காரணங்களுக்காக மகிந்த ராஜபக்சவை நிராகரிக்கின்ற முடிவைத் தாங்கள் எடுத்துள்ளதாக நடராஜா முரளீதரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
1. மகிந்த ராஜபக்சவின் இனவாதத் தலைமையைப் பலவீனப்படுத்துவது. பொன் சேகாவிற்று வாக்களிப்பதன் மூலம் சிங்கள இனவாதத் தலைமைகளைப் பிரித்தாள முடியும்.
2. சர்வதேச அமைப்புகளால் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிப்பது அக்குற்றச்சாட்டுக்களை பலவீனப்படுத்தும்.
3. நடந்து முடிந்த யுத்தத்தை நடாத்தியது மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசியல் தலைமையே. இராணுவம் ஒரு கருவி மட்டுமே. அதனால் சரத் பொன்சேகா முதல் குற்றவாளியல்ல.
4. தமிழ் பிழைப்புவாதக் குழுக்கள் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் போது அதே அரசியல் தலைமையை ஆதரிக்க முடியாது.

போன்ற காரணங்களுக்காக இந்த அரசியல் சதுரங்கத்தில் தந்திரோபாய அடிப்படையில் தாங்கள் சரத் பொன்சேகாவுக்கு மறைமுகமான ஆதரவை வழங்குவதாக நடராஜா முரளீதரன் தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட நான்கு காரணங்களுடன் கடந்த காலத்தில் தங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலோடு இணங்கிச் செயற்பட்ட, அவர்களின் போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்ட, தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையைக் கோரிநிற்கின்ற வேட்பாளர்கள் எம் கெ சிவாஜிலிங்கம், விக்கிரமபாகு கருணாரட்ண போன்றவர்களை ஏன் ஆதரிக்கவில்லை எனக் கேட்ட போது, அவர்களைத் தங்களது ‘நட்பு சக்திகள்’ எனக் குறிப்பிட்ட நடராஜா முரளீதரன் இத்தேர்தலில் மகிந்த ராஜபக்ச அல்லது சரத்பொன்சேகாவே ஜனதிபதியாக வரப் போகின்றார் என்றும் இதில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாக வந்துவிட அனுமதிக்க இயலாது என்றும் தெரிவித்தார்.

2005 தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்த முடிவை தான் அப்போதே விமர்சித்து எழுதியதாகக் குறிப்பிட்ட நடராஜா முரளீதரன் அந்தத் தவறை மீண்டும் செய்யக் கூடாது எனத் தெரிவித்தார்.

நடராஜா முரளீதரன் இக்கருத்தை வெளியிடுவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்னதாக பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா சம்பந்தன் ‘இலங்கையில் 2005 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பில் விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும் இன்றைய அழிவுகளுக்கும் காரணம்” எனக் குற்றம்சாட்டி இருந்தார்.

தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று காலத்திற்குக் காலம் தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமைகளை வழங்கியவர்கள் அரசியல் ராஜதந்திரம் தந்திரோபாயம் என்ற பதங்களுக்குள் ஒழிந்து கொண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பின் அணிவகுத்து நின்றதே வரலாறு. தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் எழுப்பியவர்களைப் பலப்படுத்தவோ அணிசேரவோ தமிழ் அரசியல் தலைமைகள் அன்றும் முன்வரவில்லை. இன்றும் முன்வரவில்லை. எறிந்தவரை நோக்கியே திரும்பி வருகின்ற பூமராங் போலவே தமிழ் அரசியல் தலைமைகளின் அரசியல் முடிவுகள் கடந்த 60 வருடங்களாக உள்ளது. இப்பொழுது இந்த பூமராங் விளையாட்டில் இரா சம்பந்தனும் நடராஜா முரளீதரனும் களம் இறங்கி உள்ளனர்.

தமிழ் மக்கள் வாக்குகள் யாருக்கு?: குலன்

Sivajilingam_M_Kஎதிர்வரும் தை மாதம் இலங்கைக்கான ஜனாதிபதித் தேர்தலில் சிவாஜிலிங்கம் நிற்கதான் வேண்டுமா? இதனால் ஏற்படும் நன்மை தீமைகள் என்ன? என்னவிதமான எதிர்வுகளை நாம் எதிர்பார்க்கலாம்? சிவாஜிலிங்கம் நிற்பதனால் அரசியல் உலகிற்கு நாம் காட்டும் கணக்கு என்ன? எதை மக்கள் விரும்புகிறார்கள்? என்பது போன்ற தகவல்களை என் அறிவுக்கு எட்டிய வரையில் தேசம்வாசக வட்டங்களுக்குச் சமர்ப்பிக்கலாம் என்று எண்ணுகிறேன்.

தமிழர் தேசிய கூட்டமைப்பு (த.தே.கூ-ரிஎன்ஏ) தனது பிரதிநிதி ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தாத பட்சத்தில் தான் சுயேட்சையாகத் தேர்தலில் நிற்பேன் என்று கொடுத்தவாக்கைக் காப்பாற்ற சிவாஜிலிங்கம் (சிவாஜி) தேர்தலில் நிற்கிறார். அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குகளைக் காப்பாற்றுவது என்பது ஒரு பெரியவிடயம். சிவாஜியின் கூற்றுப்படி நிச்சயமாக ஒரு தமிழன் தேர்தலில் நிற்கவேண்டுமா? ஏன்? வெற்றி பெறமுடியாத தேர்தலில் நிற்பதால் என்ன பலன்?

தேர்தல் வெறும் வெற்றிக்காகவும் ஜனாதிபதியாவதற்கும் நடத்தப்படும் ஒன்றல்ல. மக்களின் கருத்தையும், நிலைப்பாட்டையும், தேவைகளையும், அபிலாசைகளையும், உரிமைகளையும் வெளிக்கொணரும் உண்மை ஊடகமே தேர்தல். த.தே.கூட்டணியினர் கடைசி நிமிடம்வரை அரசியல் நிலைப்பாடு எதுவுமின்றி சரியான தெளிவான முடிவின்றி நின்ற வேளைதான் சிவாஜி தன்முடிவை எடுத்தார். இதுகூட எமக்கு ஒரு சரியான பதிலைச் சொல்கிறது. த.தே.கூ யிடம் இன்னும் சரியான அரசியல் போக்கும், தெளிவும் இல்லை என்பது தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது. இத்தேர்தலில் நிற்பதாலும், மறுப்பதாலும் எற்படும் நன்மை தீமைகளை தமிழ்மக்களுக்கத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை தமிழர்களின் பெருங்கூட்டமைப்பான த.தே.கூட்டமைப்புக்கு உண்டு. இதை இவர்கள் சரியாகச் செய்யவில்லை. மாறாக வன்னியில் எம்மக்களை கொன்று குவித்து இரத்தம் தோய்ந்த கைகளுடன் நிற்கும் மகிந்த, சரத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கிறார்கள். பேச்சுவார்த்தையைப் பிழை எனக்கூறவில்லை. இது இராஜதந்திர நடவடிக்கைகளின் முன்னெடுப்பாக இருந்தாலும் மக்கள், மனம், மானம், எதிர்காலம், உணர்வென்றும் பலவிடயங்கள் இருப்பதை மறந்து விட்டார்கள்.

மனுத்தாக்கல் முடிந்து தேர்தல் பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்ட நிலையிலும், இன்னும் த.தே.கூ தன்முடிவு என்ன? நிலைப்பாடு என்ன? மக்கள் என்ன செய்ய வேண்டும்? தாம் யாரை ஆதரிக்கப் போகிறோம்? தேர்தலை நிராகரிக்கப் போகிறோமா? என்ற எந்த வினாக்களுக்கும் பதில் இல்லாமாலேயே நிற்கிறார்கள். இப்படியான நொண்டிக் குதிரைகளை நம்பி தமிழ்மக்கள் எப்படி அரசியல் ஆற்றைக் கடப்பது?

30 000 தமிழ்மக்களின் ஆண்டுத்திவசம் முடியுமுன்னரே உதிரம் தோய்ந்த முகங்களுடனும், வெட்டி வீழ்திய வாள்களுடனும் வோட்டுக் கேட்டு வந்து நிற்கும் இருபெரும் சிங்களக் கட்சிகளுக்கு எந்த மனத்துடன், எந்த முகத்துடன் வோட்டுப் போடமுடியும்? தமிழ்மக்கள் வேட்டுப் போட்டால் அவர்கள் செய்த கொலைகளை, சர்வதேச போர்குற்றங்களை தமிழர்கள் சேர்ந்து மூடிமறைக்கிறீர்கள் என்று ஆகாதா? தமிழர்களுக்கென்று ஒரு அரசியல் தேவையில்லை, சிங்களப் பேரினவாத்திற்கு தலைவணங்கி, தலைகுனிந்து, வெட்டுவாள்களுக்கு இரையாகத் தயார் என்று சொல்லாதா? இப்பெருங் கட்சிகளை விட்டால் வேறு எந்தக்கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பது? விக்கிரமபாகுவின் நவசமாசக்கட்சிக்கு வாக்களிக்கலாம் என்கிறீர்களா? அதுவும் வெற்றி பெறமுடியாத கட்சியல்லவா?

தமிழர்களைத் தீவீரவாதிகளாக, திராவிடராக துவேசிக்கும் தெற்கில் தனித்து நின்று தமிழ்மக்களின் தனியுரிமை, தேசியம், சுயநிர்ணயம், மனிதம் என்பவற்றைப் பற்றிப் பேசியவர் போராடியவர் விக்கிரமபாகு. இவருக்கு தமிழர்களின் வாக்குக்கள் போவதால் எந்த ஒரு பெருமாற்றத்தையோ திடமான செய்தியையோ யாருக்கும் சமர்பிக்காது. சில தமிழ் சிங்கள வாக்குகளால் திடமான ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலை தென்படும். இதனால் சிவாஜி நிற்பதால் புலம்பெயர் தமிழர்களுக்கும், அரசியல் அரங்கிற்கும் தமிழர்களின் செய்தியை வெளிக்கொணர உதவும். அங்குள்ள தமிழ்மக்களின் தீர்ப்புத்தான் எம்மரின் தீர்பாக இருக்கவேண்டுமே அன்றி புலம்பெயந்தவர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் ஈழம்வாழ் தமிழ்மக்களின் தீர்வாக இருக்கமுடியாது. இருப்பினும் புலத்துப் பொழுதுபோக்குகள் தேர்தல் விஞ்ஞாபனங்களை உருவாக்கி விளையாடுகிறது. புலி சிதைந்து பூனையாகி பின் பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்குச் சீவன் போகும் நிலைதான் இன்று இருக்கிறது.

சிவாஜி தேர்தலில் நிற்பதால் த.தே.கூட்டணியினரும் தமிழ் மக்களும் மகிழ்ச்சியடைய வேண்டியவர்களே. இன்நிலையில் த.தே.கூ தன் நடுநிலையைப் பேணி நாளை வெற்றிபெறும் ஜனாதிபதியுடன் இராஜதந்திரத் தொடர்புகளைப் பேணி தமிழ்மக்களின் உரிமைகளை, அபிலாசைகளை வென்றெடுக்க இன்று சிவாஜி தேர்தலில் நின்று களம் ஒன்று திறந்தது சிறந்ததே. இதை ஏன் த.தே.கூ விளங்கிக் கொள்கிறார்கள் இல்லை. சிவாஜியின் தேர்தல் நிலைப்பாடு இரண்டு பெரும் சிங்களக் கட்சிகளுக்கும் ஈபிடிபி, கருணா, பிள்ளையான் போன்றோருக்கும் பெரும் பிரச்சனை ஏற்படுத்தியுள்ளது. காரணங்கள் பின்வருமாறு:

தமிழர்களின் வாக்குகளுக்காகவே ஈபிடிபி, கருணா, பிள்ளையானை மகிந்த வைத்திருக்கிறார். தமிழரின் வாக்குக்கள் பிரிக்கப்பட்டோ அன்றேல் மொத்தமாக சிவாஜிக்குப் போடப்பட்டாலோ மகிந்தவின் செல்வாக்கை மேற்கூறியவர்கள் இழப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழர்களின் வாக்குகள் சிதறுண்டு போவதால் 50வீதத்தை ஒரு தனிக்கட்சி எதுவும் பெறாமல் போகும். வோட்டுப்போட்டோர் தொகை அதிகரித்திருக்கும் ஆனால் வோட்டுகள் சிதறிப்போயிருக்கும் 50விதத்தை எப்படித் தேடிப்பொறுக்குவது. இன்னுமொரு காரணம் 22 கட்சிகள் தேர்தலில் நிற்பதால் சிங்கள வாக்குகளும் சிதறுண்டு போகும். அங்கேயும் எப்படி 50வீதத்தைத் தேடுவது? சிவாஜியின் எண்ணம் எதுவாக இருந்தாலும் தேர்தலைக் குழப்பி, கலக்கி விட்டிருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. சிவாஜி தான் இன்றை தேர்தல் கீரோ. இவர் ஜனாதிபதியாகப் போவதில்லை என்பது திண்ணம். ஆனால் அரசியல் உலகிற்கும், புலம்பெயர் தமிழர்களுக்கும், பிராந்திய வல்லாதிக்கங்களுக்கும், சர்வதேசத்துக்கும் சுட்டிக் காட்டப்போகும் சமிஞ்ஞைகள் பல. சுருங்கக் கூறின் ஒரு தேர்தல் கலகக்காரனும், பலிக்கடாவும் ஜனாதிபதித் தேர்தலில் நின்ற தமிழனும் சிவாஜி ஆகும்.

வெள்ளைக்காரன் நாட்டைவிட்டு போனதின் பின்பு தமிழர்களின் தலைகளை உருட்டியே இலங்கையில் தேர்தல் வெற்றிகள் இருந்தன. தமிழ்ஒழிப்பு, சிங்கள சிறீ அமைப்பு, பிராந்தியக் குடியேற்றங்கள், கலகங்கள், கலவரங்கள், போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம், சமாதானத்துக்காகப் போர் இப்படியெல்லாம் தமிழர்கள் தலைகளை உருட்டித்தான் சிங்களப்பேரினவாத அரசியல்கட்சிகள் தேர்தலில் தன்தலையை நிமிர்த்தின. இந்தத் தேர்தல் அதைவிட மோசமான ஒன்றே. இம்முறை தாமாகவே தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு, மார்புதட்டிப் பெருமைகொண்டு எம்மக்களிடமே வந்த போடு வோட்டு என்று கேட்பதுதான் வேதனைக்குரியது. உன்தாயை, உன்சகோதரனை நான்தான் கொன்றேன் எனக்கு வோட்டுப் போடு என்று கேட்கிறார்கள் போடப்போகிறீர்களா? இவர்களை எப்படி நம்பப் போகிறீர்கள்? எம்மைப் போட்டி போட்டுக் கொன்று பெருமை கொண்டவர்களுக்கு போய் போடுவோமா வோட்டு அல்லது வேட்டு?

வன்னியில் அகற்றப்படாத பிரேதங்கள் இன்றும் மணத்துக் கொண்டுதான் இருக்கின்றன. அகதியாய் அடைக்கப்பட்டவர்கள் இன்னும் தம்மனத்தை உடைத்துக் கொண்டு வெளியில் வரவில்லை. சரத், மகிந்த இருவரின் கைகளில் இருக்கும் உங்கள் உறவுகளின் உதிரங்கள் உலகின் கண்ணில் காட்டப்படமுன் மறைத்து, குற்றவாளிகளை மன்னித்து, எறிவதை எடுத்து நக்கி நீங்களே உங்கள் உறவுகளின் உதிரத்தைக் களுவப்போகிறீர்களா?

இன்று சிவாஜி தேர்தலில் நிற்பதால் எமக்குக் கிடைக்கும் சமிஞ்ஞைகளும், அறிந்து கொள்ளக்கூடிய உண்மைகளும்:
1.த.தே.கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு தெளிவாகத் தெரிகிறது. அரசில் தெளிவும், எதிர்காலத் திட்டமும், தீர்க்க தசிசனமும், முடிவெடுக்கும் திறனும் அவர்களிடம் இன்னும் இல்லை என்பது. எதிர்கால அரசியற்பயணம் அவர்களுக்குப் பயமாகவே இருக்கிறது.
2.சிங்களக் கட்சிகளுக்கு எம்மக்கள் பழக்கப்படாது வைத்திருப்பதற்கும் ஒரு வழிசமைக்கப்பட்டிருக்கிறது.
3.சிவாஜி தானே பலிக்காடா ஆவதனால் த.தே.கூட்டமைப்பு தன்னை தமிழர்களின் பிரதிநிதியாகவும் நடுநிலை வாதியாகவும் காட்டிக்கொள்வதூடு நாளை வெற்றிபெறும் ஜனாதிபதியுடன் பகைமை உணர்வின்றி இராஜதந்திர உறவுகளை தமிழர்களுக்காகப் பேணலாம்
4.தமிழர்களின் வோட்டுக்கள் எம்மக்களைக் கொன்ற உதிரம் தோய்ந்த கைகளுக்குப் போகாமல் காக்கலாம்.
5.சிவாஜிக்கு விழும் வோட்டுகளை வைத்து இன்று தமிழ்மக்களின் மனோநிலை, எதிர்கால எண்ணம், வாக்களிக்காத வாக்களிக்க முடியாதவர்கள் நிலை, போர்குற்றவாளிகளை எப்படித் தமிழ் மக்கள் பார்க்கிறார்கள் என்ற சமிஞ்சைகளை நாம் பெறலாம்.
6.தமிழீழம் வேண்டுமா? வேண்டாமா என்று சாட்டுக்கு வோட்டுக்கேட்டு திரியும் புலம்பெயர் அரசியல் பொழுது போக்காளர்களுக்கும் பதில்கள் இங்கே கிடைக்கும். அங்கே வாழும் மக்களின் மனங்களைகளை ஊகிப்பதற்காவது இத்தேர்தல் உதவும். (அங்கே உள்ள மக்களின் தேவையை அறியாமல் இங்கே தேர்தல் வைப்பது அங்கே பசிப்பவனுக்கு இங்கே நாம் சாப்பிடுவது போன்றது. இதனால்தானோ என்னவோ புலத்தில் ஆடடித்துக் கூடிக் குடிக்கிறார்கள். இவர்கள்தான் அன்று பிரபாகரனை மேதகுவாக்கிய மேன்மையாளர்கள். அவதாரமாகக் கருதிய அரைகுறைகள். சூரியதேவன் என்று வர்ணித்த வக்கிரகங்கள்.)
7.சிவாஜி, விக்கிரமபாகுவுடன் இணைந்த தேர்தலில் நிற்பது நாம் சிங்கள மக்களுடன், அரசில்வாதிகளுடனும் இணைந்து ஒருஐக்கிய இலங்கைக்குள்ளும் செயற்படமுடியும் என்ற சமிஞ்ஞையை தெளிவாகக்காட்டுகிறது. இது உடனடியான சரியான விளைவுகளைத் தராவிட்டாலும் எதிர்காலத்தில் சிங்கள மக்களையும், அரசியல்வாதிகளையும் சிந்திக்கத் தூண்டும். நாளை தோன்ற இருக்கும் வர்க்கப்போராட்டத்திற்கு தமிழர், சிங்களவர் இருசாராரும் கைகோர்த்து நின்று போராடத் தூண்டும். (இப்படியான இணைவுப்போரைப் புலிகள் நிச்சயமாகச் செய்திருக்கவேண்டும். செய்யவில்லையே!!! செய்திருந்தால் உலகமயமாதில் தமிழீழக் கோரிக்கை உடைக்கப்படாது வர்க்கப் போராட்டமாய் இலங்கை முழுதும் வியாபித்திருந்திருக்கும்.)
8.சிவாஜி, விக்கிரமபாகுவை ஆதரிப்பதால் தமிழர்களின் சிலவாக்குகள் சிதறிப்போனாலாலும் கொடுக்கப்படும் சமிஞ்ஞைகள் தெளிவாத்தானே உறுதியாகவுமல்லவா இருக்கப் போகிறது.
9.வாக்குக்கள் சிதறுவதனூடாக நிச்சய வெற்றி உறுதியற்று விடும். இரண்டாம் தெரிவுச் சுற்றில் சிறுபான்மை இன, மத வாக்குக்களே ஜனாதிபதியைத் தீர்மானிக்கப் போகிறது. இங்கே சிவாஜியின் பங்கு மிக மிகப்பெரியதே.
10.மக்களின் பாவங்களைச் சுமந்த யேசுபோல், தான் கறுப்பாடாகி தமிழ்மக்களை நிர்கதியாக விட்டுப்போன புலிகளுக்குத் தோள்கொடுத்து குச்சு விளக்கொன்றைக் கொண்டு வந்திருக்கிறார் சிவாஜி.
11.இருபெரும் சிங்களக்கட்சிகளுக்கு தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டிய தேவையின்றி, போர்க்குற்றங்களை மன்னித்தோம் என்ற சமிஞ்ஞைகளின்றி, தமிழ்மக்களின் கருத்துக்களைத் தெளிவாக வைப்பதற்கு சிவாஜி களம் தந்திருக்கிறார்.
12.எமது அபிப்பிராயங்களை, அபிலாசைகளை சிங்களஅரசியல் சார்ந்துதான் செய்யவேண்டும் என்று இன்றை நிலையை சிவாஜி உடைத்திருக்கிறார்.
13.தமிழ்மக்கள் சிங்களத்தமிழ் அரசியல்வாதிகளால் மட்டுமல்ல போராட்டம் என்ற போர்வையில் இயக்கங்களாலும் ஏமாற்றப்பட்டே வந்திருக்கிறார்கள். இனியாவது சிந்தித்து சுயமாக முடிவெடுத்து இந்த அரசியல் களத்தில் ஊடகங்களின் உண்மை நிலை அறிந்து இம்முறையாவது சிவாஜி திறந்து வைத்த களத்தில் களமாடுவார்களா? சிவாஜிக்குத்தான் வோட்டுப் போடுங்கள் என்று கூறவில்லை. அங்குள்ள மக்களின் சரியான களமாடல் புலத்துத் தமிழர்களுக்கும், சர்வதேசத்துக்கும் சிங்களமக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சரியான செய்தியைச் செல்லும்.
14.தேர்தலைப் பகிஸ்கரித்திருக்கலாம் என்கிறீர்களா? பகிஸ்கரிப்பதனால் மகிந்த, சரத்துக்கு ஒருபெரும் தலையிடி குறைந்துவிடும். கட்சியில் இன்று தொங்கும் தமிழ்குழுக்களின் மதிப்பும் மங்கிவிடும். ஆனால் தேர்தலைப் பகிஸ்கரிப்பதனால் தமிழர்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியம் சிங்களக்கட்சிகளுக்கு இருக்காது போய்விடும். சிங்கள மக்களின் வோட்டுக்களில் அவர்கள் தங்கியிருப்பதால் தேர்தலின் முன்னும் பின்னும் தமிழர்களின் குரல்களுக்குச் செவிமடுக்க வேண்டிய தேவை அற்றுவிடும். தமிழர்கள் பகிஸ்கரிப்பதனால் வோட்டுக்கள் எந்தப்பக்கமும் போய் எதிரியைப் பலப்படுத்தாது என்பதை சிங்கள இருபெருங்கட்சிகளும் உணர்ந்திருக்கும். அதனால் வெற்றியை நிர்ணயிப்பவர்கள் தனிச்சிங்களவர்களாகவே இருப்பார்கள். ஆதலால் தமது கவனத்தையும், ஜனாதிபதியான பின் தம் நன்றிக்கடனையும் சிங்கள மக்களுக்கே செய்வார்கள். தமிழர்கள் தேவையற்றவர்களாக எதிரிகளாவே தொடர்ந்து பார்க்கப்படுவார்கள். இன்றைய நிலையில் பேரினவாதக்கட்சிகளின் கவனம் தமிழர்களின் வோட்டுகளில் இருக்கிறது. முக்கியமாக யாழில் மகிந்தவிற்கு டக்லஸ் ஊடாக விழும் வாக்குக்கள் சிவாஜியால் தடுக்கப்படப் போகிறது. இது சிவாஜியின் உயிருக்கு உலைப்பாகவும் இருக்கலாம்.
15.அன்றைய போர், இன்றைய தேர்தல் பலாற்காரம் எல்லாம் மக்களுக்கு என்ன சொல்கிறது வெற்றிக்கு வழி பலாற்காரமே என்று. ஆதனால் மக்கள் தொடர்ந்து பலாற்காரத்தின் பாதையிலேயே பிரச்சனைகளுக்கு முடிவு காண முயல்வர். இது மனோவியல் உண்மை. இதன் தொடர்ச்சியான வளர்ச்சி இன்னுமொரு ஆயுதப் போராட்டமாக உருப்பெறும். 72ல் செகுவேரா, 76ல் நாங்கள். செகுவேராவின் ஆயுதப்போராட்டம் 70தின் கடைசிப்பகுதியில் முற்றாக முறியடிக்கப்பட்ட போதும் அந்த ஆயுதங்களை குறுகிய காலத்தில் நாம் எடுத்தோமல்லவா. இதைத் தவிர்க்க சரியான அரசியல் அடித்தளத்தை நிறுவுவது சிங்களவரசின் கடமையாகும்.
16.சிவாஜியின் கொள்கைகளோ, கோட்பாடுகளோ, கடந்தகால அரசியலோ சரி என்று நான் கருதவில்லை. சுயேட்சையாக ஒரு வேட்பாளர் நிற்பது தவறும் இல்லை என்கிறேன். சிவாஜி நிற்பதனால் வோட்டுப் போடுவர்கள் தொகை கூடப்போகிறது. சிங்களப் பெருங் கட்சிகளுக்கு விழும் வோட்டுக்கள் பிரியப்போகிறது. இதனால் 50வீதம் சாத்தியமற்று விடப்போகிறது. இப்போ இவ்விரு பேரினவாதக்கட்சிகளும் தமிழர்களைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்க முடியுமா?
17.சிவாஜி கடந்தகாலத்தில் என்ன அரசியலைக் கொண்டிருந்தார் என்பதை விட இன்றைய அரசியல் சூழ்நிலைதான் களத்தைத் தீர்மானிக்கிறது, தீர்மானிக்க வேண்டும்.
18.சிவாஜிக்கு விழப்போகும் வோட்டுக்கள் எமக்கு பல விடயங்களைச் சொல்லும்.

•தமிழ்மக்கள் போர் வெறியர்களை மன்னித்தார்களா?
•சிங்களப் பேரினவாத அரசியலுக்குப் பயந்து பணிகிறார்களா? விரும்பித்தான் இணைகிறார்களா?
•இராமன் ஆண்டாலும் சரி இராவணன் ஆண்டாலும் சரி என்று இருக்கப் போகிறார்களா?
•புலிகளின் போக்கை தொடர்ந்தும் ஆதரிக்கிறார்களா?
•தேசியமா? தமிழ்தேசியமா? தமிழர்களின் தெரிவு?
•எதிர்காலத்தில் தமிழர்களின் பாதை எப்படி வகுக்கப்படவேண்டும் என்பதற்கான ஆரம்பம்
•வட்டுக்கோட்டை தமிழ்ஈழமா இல்லையா என்ற புலம்பெயர் தமிழர்களுக்கான பதில்…
•பலபிரதமரைக் கொண்ட சுழற்சிமுறை ஜனாதிபதியாட்சி முறையை மக்கள் அறிவதற்கான வாய்ப்பு

பலகேள்விகளுக்கு விடை இத்தேர்தலில் இருக்கிறது. இதில் சிவாஜி பலிக்கடாவாகி ஒருகளம் திறக்கப்பட்டிருக்கிறதே தவிர தேர்தலின் பதில் என்ன என்பது தான் எமது எதிர்பார்ப்பு. ஈழத்துச் செய்திகளின்படி வன்னிமக்கள் மனங்களில் போரின் கொடுமையும், கடுமையும் இன்னும் விடவில்லை. தேர்தல் அவர்களுக்கு வந்தாலும் சரி, விட்டாலும் சரி என்ற நிலை. தேர்தலுக்கு வோட்டுப்போடப் போவதற்கே நல்ல உடுப்பில்லா நிலை. சில பின்தங்கிய தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் அரசு சில உதவிகளை டக்லஸ் மூலம் செய்வதால் அவர்கள் மகிந்தவுக்கு வோட்டுப் போடுவார்கள் என்று தெரியவருகிறது. யாழ்பாணம் வெளிநாட்டுப்பணங்களின் களியாட்ட கூடமாய் ஆகிவிட்டபடியால் சாப்பிடமட்டும் வாய்திறக்கும் நிலையில் சிலர். கூத்தடிக்கும் நிலையில் பலர். வன்னிமக்கள் அழிவைப்பற்றி யாழ்மக்கள் ஆதங்கப்படுவதாகத் தெரியவில்லை. தமிழ்பகுதிகளில் மகிந்தவுக்கும் பலம் இருப்பது போன்று தெரிகிறது. சரத்தும், சிவாஜிலிங்கமும் அதிகசக்தியை அங்கே பயன்படுத்த வேண்டியிருக்கும். மட்டக்களப்பு துப்பாக்கி அமைச்சர்களால் வாய் பூட்டப்பட்டு இருக்கிறது. அங்கும் அடாவடி வாக்குகள் மகிந்தவின் பக்கமே இருப்பதற்கான சந்தர்பமே அதிகமுண்டு. சரத் தன்பலத்தை தென்பகுதியில் இருந்தே பெறவேண்டியிருப்பதால் சரத் ஜனாதிபதியாக வந்தாலும் தம்மினத்துக்கு மட்டுமே நன்றியுள்ளவராக இருக்கக்கூடிய நிலைதான் தென்படுகிறது. எந்தநேரமும் இன்நிலைகள் மாற்றப்படலாம். அரசியல் ஒரு சதுரங்கமே!.

என்கருத்தைச் சொல்லிவிட்டேன் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

-உங்கள் குலத்திலும் நிலத்திலும் ஒர் குலன்-

யாழ் உதயன், சுடரொளி பத்திரிகைகள் யுஎன்பி நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றன ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு – தொகுப்பு : ரி சோதிலிங்கம்

Sivajilingam_M_Kயாழ் உதயன் சுடரொளிப் பத்திரிகைகள் யுஎன்பி நிகழ்ச்சி நிரலில் இயங்குவதாக ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டி உள்ளார். லண்டன் மற்றும் தமிழகத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற் ஏற்பாடு செய்த கேள்விநேரம் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். டிசம்பர் 21ல் கிழக்கு லண்டன் குவேக்கர்ஸ் ஹவுஸில் இக்கேள்விநேரம் இடம்பெற்றது. நிகழ்வுக்கு சில மணி நேரங்களுக்கு முன் இடம்பெற்ற கடுமையான பனி மழையினால் லண்டன் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்திருந்த நிலையில் மூன்று மணிநேரம் தாமதமாக நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வின் இறுதியில் கருத்து வெளியிட்ட எம் கெ சிவாஜிலிங்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்சவுக்கோ அல்லது சரத் பொன்சேகாவுக்கொ வாக்களிப்பார்களானால் புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நாடுகடந்த தமிழீழத்திற்கான வாக்கெடுப்புகளிற்கு எவ்வித அர்த்தமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில் புலம்பெயர்ந்த ஒவ்வொரு தமிழனும் வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களை அரசாங்கத்தின் பக்கம் தள்ளிவிடாமல் அவர்களுக்கு தம்மாலான உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

லண்டன் விஜயத்தின் போது பிரிஎப் உறுப்பினர்களுடனும் கலந்துரையாடியதாகவும் அவர்களின் ஆதரவு கோரப்பட்டு உள்ளதாகவும் எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவித்தார். பிரிஎப் இதுவரை உறுதியாக எதனையும் தெரிவிக்கவில்லை. ஆனால் பிரிஎப் இல் உள்ள சிலர் தனிப்பட்ட முறையில் சிவாஜிலிங்கத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கி உள்ளதுடன் பிரிஎப் சிவாஜிலிங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். மகேந்திரன், குகன், ராசா ஆகியோர் தனிப்பட்ட முறையில் சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் நிற்பதை வரவேற்றுள்ளனர். சிவாஜிலிங்கம் சுயேட்சையாக நிற்பது என்று எடுத்த முடிவை ஒரு பேப்பர் பத்திரிகையின் பாலா வரவேற்றுக் கருத்து வெளியிட்டார்.

ஒன்றரை மணிநேரம் நடைபெற்ற கேள்விநேரத்தின் தொகுப்பு கீழே:

ரி சோதிலிங்கம்: நீங்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் போராட்ட காலங்களில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளை ஆதரித்து பல போராட்ட வடிவங்களில் புலிகளின் ஆதரவு அமைப்புக்களுடன் இணைந்து செயற்ப்பட்டவர். இன்று நீங்கள் தமிழ் தேசியத்தின் சமஸ்டிக்காகான குரலாக இந்த தேர்தலில் நிற்கிறீர்கள். புலிகளின் இவ் ஆதரவு அமைப்புக்கள் இன்று உங்களை ஆதரித்து உங்களுடன் நிற்கிறார்களா? அல்லது ஆதரவு தருவார்களா? அவர்களது நிலைப்பாடுகள் என்ன?

புலிகளின் ஆதரவாளர்களும், முன்னாள் புலிகளின் தலைவர்களும் இங்கே இருந்து கொண்டு மேற்குலகின் ஆதரவுடன் சரத்தை அதரிக்கிறார்கள் மகிந்தாவை வீழ்த்தலாம் என்று செயற்படுவதாகவும் கருத்துள்ளதுஇ மேலும் யாழ்ப்பாணத்தில் உதயன் கொழும்பில் சுடரொளி யுஎன்பியை அதரிப்பதாக அறியப்படுகிறதே. இது பற்றியும் உங்கள் கருத்து என்ன?

எம் கெ சிவாஜிலிங்கம்: புலிகளின் ஆதரவாளர்கள் என்ற ரீதியில் அவர்களிடம் நான் ஆதரவு கேட்கவில்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதும்இ நாட்டில் யாருடன் தொடர்பு வைத்துள்ளார்கள் என்பதுவும் பின்பு உலகுக்கு தெரியவரும். நான் இந்த மூன்று நாளும் என்னால் முடிந்த அளவு புலம்பெயர் நாட்டில் பேட்டிகள்இ பேச்சுக்கள் செய்கிறேன். பின்பும் இலங்கை போன பின்பும் தொலைபேசியூடாக செய்வேன்.

உதயன் சுடரொளி பத்திரிகைகள் கட்சிப் பத்திரிகைகளை மீறிய அளவில் கடுமையாக விமர்சனங்களையம் வார்த்தைப் பிரயோகங்களையும் செய்கிறார்கள். அவர்களைப் பற்றி உங்களுக்கே தெரியும். யுஎன்பியின் நிகழ்ச்சி நிரலில் இருப்பவர்கள் என்று. ஒருவேளை அடுத்தமுறை வித்தியானந்தனின் மைத்துணர் சரவணபவன் கொழும்பு மாவட்ட யுஎன்பி யில் போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு அமைச்சராக வர ஆசை. அதில் தவறு இல்லை. ஆனால் நாம் உயிருடன் இருக்கும் வரை உங்களுக்கு இடைஞ்சலாக இருப்போம் என்பதை இவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். யுஎன்பியுடன் சேர்ந்து விட்டால் சரி என்று நினைக்கிறார்கள். ரனில் அடுத்த Eexecutive President தான் என்ற கனவில் மிதக்கிறார்.

நாங்கள் அரச தரப்பில் இருக்க முடியாது, எதிர்த்தரப்பில்தான் இருக்க முடியும். எதாவது ஒரு அரசியல் தீர்வு எழும்பும் என்றால் தமிழ் மக்களுக்கு நன்மையான விடயம் என்றால் அது பற்றி பரிசீலிக்க நாம் தயார். வெளிநாடுகளின் நிகழ்ச்சி நிரவில் இருப்பவர்கள் இலங்கையில் உள்ள விடயங்களில் பல தாழ்ந்துபோன விடயங்களில் ஈடுபடுகிறார்கள். இதன் காரணமாக நாம் தமிழ் மக்களுக்கான உதவிகளை பெறுவதில் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

பாண்டியன்: எமது மக்களை அழித்த யுத்த குற்றவாளிகளுக்கு வாக்களித்தால் செய்த குற்றத்தை ஆதரித்தாகிவிடும் என்று சொல்லுகிறீர்கள். சரி மக்கள் வாக்களித்துவிட்டால் அது யுத்த குற்றவாளிகளை எமது தலைவர்களாக ஏற்றுக்கொண்டதாகி விடுமா?

எம் கெ சிவாஜிலிங்கம்: நான் சொல்வது இந்த இரண்டு வேட்பாளர்களும் இலங்கையில் எல்லா மாகாணங்களிலும் வாக்குகள் பெறுவார்கள். கிழக்கில் சிங்கள முஸ்லீம் மக்கள் ஆதரிப்பார்கள். ஆனால் வட மாகாணத்தில் மிகப்பெரும்பான்மை தமிழர்கள். இங்கே அவர்கள் வாக்களித்தால் அவர்கள் இந்த குற்றவாளிகளை மன்னித்து விட்டதாகவே கருதப்படும். அடுத்தநாள் பத்திரிகைகளில் இப்படித்தான் எழுதப்படும்.

ஆனால் நான் போட்டியிடுவதால் வடமாகாணத்தில் இவர்களில் ஒருவர் பெரும்பான்மை வாக்குகளை பெறுவது தவிர்க்கப்படும். இதற்கு நாங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும். நான் ஜனாதிபதியாக வர இந்த தேர்தலில் நிற்கவில்லையே! இந்த யுத்த குற்றவாளிகளின் மத்தியில் எமது தமிழர்களின் நிலைப்பாடு என்ன? யாரை ஆதரிப்பது என்பது தான் இங்கே உள்ள நிலைமை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு வேட்பாளரை நிறுத்தி பிரச்சாரங்களை செய்திருந்தால் நிலைமைகள் வித்தியாசமாக இருந்திருக்கும். எனக்கு முழு ஆதரவு உண்டு என்று நான் சொல்லவில்லை. தனித்த ஆதரவும் அந்த தமிழ் மக்களின் நிலைப்பாடு என்ன என்ற எண்ணத்தை கொண்டவர்களின் ஆதரவும் உண்டு. இரண்டு பேருக்கும் கிடைக்கும் வாக்குகளினை குறைப்பதே நோக்கம்.

நான் இதை விக்கிரமபாகு கருனாரத்னாவின் தேர்தல் மேடையில் பேசியுள்ளேன். வடக்கு -கிழக்கிலும் மலையகத்திலும் மேலும் பேச உள்ளேன். இலங்கை வரலாற்றிலேயே இரண்டு ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் ஒன்று சேர்ந்து மேடைகளில் பிரச்சாரம் செய்வது இதுதான் முதல் தடவையாக நடைபெறுகிறது. இரண்டு பேரும் ஒரே கருத்து கொண்டவர்கள். இந்த இரண்டு வேட்பாளருக்கும் வாக்களிக்காதீர்கள் வேறு யாருக்கும் வாக்களியுங்கள் என்பதே எமது செய்தி. நான் சொன்னேன் உங்களுக்கு விருப்பம் என்றால் அந்த புத்தபிக்கு வேட்பாளர்க்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள். இந்த இரண்டு பேருக்கும் வாக்களிக்காதீர்கள் என்று கேட்டேன்.

தயா: ஏன் நீங்கள் மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடக்கூடாது? கடந்த தேர்தலில் மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடவில்லை. திரும்பவும் மக்களை சுதந்திரமாக வாக்களிக்கவிடாமல் வாக்குகளை திசை திருப்பவே இப்படி நடக்கிறதாக எதிர்பாக்கப்படுகிறதே?

எம் கெ சிவாஜிலிங்கம்: எங்களுடைய பேச்சை மிககுறைந்த சதவிகிதத்தினரே கேட்பார்கள். பெரும்பான்மையானோர் தங்கள் இஸ்டப்படியேதான் வாக்களிப்பர். இடம்பெயர்ந்த மக்களில் 6 ஆயிரம் பேர் மட்டுமே வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். மக்கள் மனம் நொந்து போயுள்ளனர். அவர்கள் சுதந்திரமாகவே முடிவு எடுப்பவர்கள். அவர்கள் அங்கே போய் என்ன எழுதுவார்கள் என நாங்கள் போய் பார்த்தா சொல்வது. எப்பவும் போலவே அவர்கள் சுதந்திரமாகத்தான் வாக்களிப்பார்கள்.

இந்த தேர்தல் இம் முறையும் ஒரு சிக்கலை உருவாக்குகிறது. நான் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவரின் வாக்காளர் பட்டியலை தேடவே 15 நிமிடம் எடுக்கிறது என்றால் சாதாரணமானவர்களை அதுவும் கிராமசேவகர் பிரிவுகளை பலவாறு பிரித்தும் இணைத்தும் உள்ள நிலைமையில் இந்த தேர்தல் நடைபெறுகிறது. அந்த மக்கள் தமது பெயரைத் தேடிப்பிடிக்க எவ்வளவு நேரம் எடுக்கும்.

முகாம்களில் உள்ள மக்களின் தேர்தல் இடாப்பு கச்சேரியில் உள்ளது. ஏன் இந்த நிர்வாகத்தை முகாமுக்கு கொண்டுவர முடியாது?. முகாமில் உள்ள மக்கள் நல்ல உடுப்புக்கள் இல்லாமல் இருக்கிறார்கள். இந்த ஊத்தை உடுப்புடன் எப்படி கச்சேரிக்கு போவதென எனக்கு நேரடியாகவே சொல்லியும் உள்ளனர். இப்படியானவர்கள் எது எப்படியும் நடந்து விட்டுப் போகட்டும் என்றே இருந்து விடுவர். இவர்களில் பலர் தமக்கு ஏன் பதிவு என்றாகிவிடும் நிலையில் உள்ளனர்.

தயா: மக்களை கட்டாயப்படுத்தாமல் சுயமாக வாக்களிக்கவிட வேண்டும் என்றே கருதுகிறோம். மக்களை வாக்குபோடு என்று கூட சொல்லாமல் மக்களை சுதந்திரமாக விட வேண்டும் அதாவது மக்களை தமிழ் தேசியம் என்ற சிக்கலுக்குள் கொண்டுவராமல் விரும்பியபடி வாக்களிக்க விடவேண்டும். அது பற்றிய உங்கள் கருத்து என்ன?

எம் கெ சிவாஜிலிங்கம்: யார் மக்களை கட்டாயப்படுத்தியது. நாங்கள் முதலாம் இடம் மகிந்தா அல்லது சரத்தான் வரப்போகிறார்கள் என்று சொல்லுகிறோமே வேறென்ன வேணும். நாங்கள் யாரைக் கட்டாயப்படுத்தினோம். கட்டாயப்படுத்துதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்கள் தாங்களாகவே வாக்களிக்காது விட்டாலேயொழிய வேறு எதுவும் நடக்காது. கடந்த சில நாட்களாக புதிய ஜனநாயக கட்சி வாக்குகளை செல்லுபடியற்றதாக்க வேண்டும் என்று கோருகிறது. சிலர் இதை செய்யக் கூடும். ஆனால் பெரும்பான்மை மக்கள் வாக்களிப்பார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துங்கள் என்று தான் நாங்கள் கூறுகின்றோம்.

தயா: உங்கள் கூட்டமைப்பில் உள்ள ஒருவர் நீங்கள் மகிந்தாவிடம் காசை வேண்டிக்கொண்டே இந்த தேர்தலில் நிற்பதாக கூறியுள்ளார் அது பற்றி உங்கள் கருத்து என்ன?

Sivajilingam_M_Kஎம் கெ சிவாஜிலிங்கம்: இந்த செய்தி வீரகேசரி ‘e’ பேப்பரில் வந்திருந்தது. பின்னர் இச் செய்தி எடுக்கப்பட்டு விட்டது. செய்தியை வீரகேசரி பத்திரிகையில் வெளியிடவில்லை. ஆனால் தமிழ்வின் இதை பிரசுரித்திருந்தது. அதேபோல 12ம் திகதி வலம்புரியிலும் முன்பக்கத்தில் தலைப்பு செய்தியாக பிரசுரிக்கப்பட்டடிருந்தது. தலையங்கம் “அரசாங்கத்திற்கு எதிராக விழும் வாக்குகளை தடுப்பதற்காக சிவாஜிலிங்கம் தேர்தலில் நிற்கிறார் சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு.”
யாழ்ப்பாணத்திலிருந்து அன்று இரவே நான் இந்த குற்றச்சாட்டிற்கான பதிலை கூறிவிட்டேன்.

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறியாதே. யார் உனக்குப் பின்னால் இருப்பவர்கள் என்று எனக்கு தெரியும். துணிவிருந்தால் அவர் முன்னால் வந்து என்மீது இந்த குற்றச்சாட்டை முன்வைக்கட்டும். நான் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக வழக்கு போட உள்ளதையும் குறிப்பிட்டிருந்தேன். இதைவிட 50 ஆயிரம் தமிழர்களை கொன்ற அரசாங்கத்திடம் காசுவாங்கிக் கொண்டு அரசுக்கு வாக்களி என்று நான் கேட்க முடியமா? என்பதை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

நான் எனது அறிக்கைகளை எப்பவும் துணிந்து விட்டுள்ளேன் மாசி மாதம் 10ம்திகதி தேசம் இணையத்தளத்திற்கு பேட்டி கொடுத்திருந்தேன் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காக புலிகள் மூன்றாம் தரப்பிடம் ஆயுதங்களை கையளிக்க வேண்டும் என்ற கோரியவன் நான். அதற்காக புலிகள் வன்னியிலிருந்து ஒன்றரை மணித்தியாலங்கள் என்னிடம் பேசினார்கள். அன்றும் நான் பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன்னால் நின்றேன். நான் கைது செய்ப்பட்டடேன். அன்று புலிகள் அப்படி ஆயுதங்களை கையளித்திருந்தால் இன்று நிலைமைகள் வேறுவிதமாக அமைந்திருக்கும் அல்லவா.

அந்தக் காலத்தில் வாய் மூடிக்கொண்டு எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாமலே இருந்த பல தமிழர்கள்; இன்று எனக்கு எதிராக பேசுகிறார்கள். சிவாஜிலிங்கம் என்ன செய்தார் என்று இந்த உலகுக்குத் தெரியும். சரியோ பிழையோ எனது மனச்சாட்ச்சிக்கு தெரிந்தபடி தமிழ்நாடோ டெல்லியோ போய் பின்னர் பிரித்தானியாவுக்குத் துரத்தியடிக்கப்பட்டு இப்படி நாடுநாடாய் ஓடித்திரிந்தவன் நான். இதற்கு பிறகும் என்னை மகிந்தாவிடம் காசு வாங்கியுள்ளேன் என்றால் என்ன சொல்வது.

போல் சத்தியநேசன்: 22பேர் தேர்தலில் நிற்கவுள்ளனர் இதில் எல்லோருக்கும் பத்து இருபது வாக்குகள் என்றாலும் கிடைக்கும் நீங்கள் நிற்பதால் என்ன வித்தியாசத்தை கொண்டுவர முடியும்?

எம் கெ சிவாஜிலிங்கம்: நான் தேர்தல் மனு தாக்கல்செய்த பின்பு எதிர்க்கட்சி தரப்பில் பெரிய கலக்கம் ஏற்ப்பட்டுள்ளது இது வெற்றியே.

அதைவிட டக்ளஸ் தேவானந்தா சொல்லியுள்ளார் ‘சிறீகாந்தாவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம்தான் இந்த சிவாஜிலிங்கத்தின் தேர்தல் சந்திப்பு’ என்று. இதில் சிரிப்பு என்ன என்றால் நான் மகிந்தாவுக்காக நிற்கிறேன் என்றால் மகிந்தா வெற்றி பெற்றால் நன்மை அடையப்போவது டக்ளஸ்ம் ஈபிடிபியும் தான். நான் தேர்தலில் நிற்பதை டக்ளஸாலேயே தாங்கிக்கொள்ள முடியவில்லை. சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்தில் இறங்கி வேலை செய்யப் போகிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் என்ன சொல்வது.

இதைவிட வல்வெட்டித்துறையில் 10 வருடமாக இருந்த எனது அலுவலகத்தை அமைச்சர் டக்ளஸ் பலவந்தமாக கைப்பற்றியுள்ளார். நான் அங்கு போக முடியாதுள்ளது. யாழ்ப்பாணத்திலேயே இருந்து எனது வேலைகளை கவனிக்க வேண்டியுள்ளது. இப்படி நிலைமைகள் இருக்க நான் இந்த உடுப்புடன் திரிவதில் அர்த்தமில்லை என்ற நிலைமையில் நான் போய் அரசாங்கத்திடம் காசு வாங்கித்தான் தேர்தலில் நிற்கிறேன் என்றால் என்ன சொல்வது இதை.

நான் என்ன அழுத்தத்தை கொடுக்க முடியும் என்று கேட்கிறீர்களே? நான் ஒரு லட்சம் வாக்குகளை என்றாலும் பெற்றேன் என்றால் இது அந்த இரண்டுபேருக்கும் ஒரு பயத்தை உருவாக்குமல்லவா. இது பேரம் பேசும் நிலைமையை உருவாக்கியுள்ளது. சரி சம்பந்தர் ஜயா பேரம் பேசுகிறார் என்றால் சிவாஜிலிங்கம் நின்றிருந்தால் எப்படி பேரம் பேசலாம். நிற்காமல் இருந்தால் எப்படி பேரம் பேசலாம். இது பேரம் பேசும் சக்தியை கூட்டும்.

நாங்கள் எங்கள் பிரச்சிகைகளை சொல்கிறோம். எமக்கு பிரதேச சுயாட்சி மாநிலங்கள் எமது அரசியல் தீர்வு இது பற்றி எமது கருத்துக்களை சொல்லுகிறோம். இவை எல்லாம் விவாதங்களுக்குள் எடுபடும். சும்மா 13வது திருத்தம் என்று நில்லாமல் நாம் இவ்வளவு காலமும் 1.5 லட்சம் மக்களை பலி கொடுத்துள்ளோம், 40 ஆயிரம் போராளிகள், 23 ஆயிரம் படை வீரர்கள் இவ்வளவும் இழந்தபிறகும் 13வது திருத்தம் என்றால் ஏன் நாங்கள் இந்தளவு சண்டைகள் நடந்து 2009 வரை வந்திருக்க வேண்டும். இதை 1980லேயே முடித்திருக்கலாம்தானே.

பேசாமல் இருப்பது அழுத்தம் அல்ல. பேசுவது தான் அழுத்தம். இதை நீங்கள் புரிந்து கொள்வில்லை என்றால் நான் என்ன சொல்வது.

எஸ் தவராஜா: இன்றுள்ள எமது பிரச்சினைகளுக்குள்ளே பதிலை தேடுகிறோம். எமக்கென்று 3 வழிகள் உண்டு. ஒன்று மகிந்தா மற்றது சரத் மூன்றாவது உலகநாடுகளை பாவித்து அழுத்தம் கொடுத்து அரசியல் தீர்வுகளை கொண்டு வருவது. வெளிநாடுகளில் பல லட்சக்கணக்கான மக்கள் கூடி போராட்டங்களை செய்து எந்தப் பலனும் கிடைக்கவில்லை, இந்த உலகத்தை திருப்ப முடியவில்லை.

இப்போதுள்ள வழி அரசுடன் சேர்ந்து எமது உரிமைகளை பெறுவது தான். மற்ற உண்மை என்ன என்றால் இந்த அரசு தமிழர்க்கு ஒன்றையும் செய்யாது என்பது. இவை யாவற்றையும் பார்க்கும்போது இலங்கை அரசுடன் ஒரு உடன்பாட்டை ஏற்ப்படுத்தும் தேவை உள்ளது. எனது கேள்வி என்னவென்றால் ஏன் ரிஎன்ஏ இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசுடன் ஒரு உடன்பாட்டை உருவாக்கவில்லை?

எம் கெ சிவாஜிலிங்கம்: இந்த உடன்பாட்டுக்கு வருதல் முயற்சி பண்ணுகிறோம். செய்கிறோம் எண்டு சம்பந்தர் ஜயா சொல்கிறார். இவர்களுடன் கனவான் ஒப்பந்தம் என்று சொல்லுகிறார்கள். எனது அபிப்பிராயம் என்னவென்றால் இந்த அரசுடன் இந்த அரசியல்வாதிகளுடன் கனவான் ஒப்பந்தம் செய்ய முடியாது. யாராவது ஒரு வெளிநாட்டின் உயர் ஸ்தானிகர் அலவலகத்தில் நான்கு சுவருக்குள் செய்யும் ஒப்பந்தங்களால் எந்த பிரயோசனமும் வராது. காரணம் சர்வதேச ஒப்பந்தம் இந்திய – இலங்கை ஒப்பந்தம் இதையே நடைமுறைப்படுத்த முடியாதுள்ளது. வட-கிழக்கு இணைவை ஒரு உயர்நீதிமன்ற தீர்ப்பினால் உடைத்துவிட்ட இந்த அரசிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள். இந்த வட – கிழக்கு துண்டிப்பும் இந்தியாவும் சேர்ந்து தான் செய்துள்ளது எனது கருத்து. இரு மாகாணங்களும் இணைந்தால் இவர்கள் தனிநாடு என்கிறார்கள். உடைத்து விட்டுப் பார்ப்போம் என்பது தான் இந்தியாவின் பரிசோதனை. சிலவேளை தேவை ஏற்பட்டால் திரும்பவும் இணைப்பார்கள்.

இன்றுள்ள சர்வதேச அரசியல் நிலைமைகளில் வெளிநாட்டு தூதுவர்கள் நித்திரையில்லாமல் இருக்கிறார்கள். இதுதான் எமக்கும் சந்தர்ப்பம். எங்கே எந்த தலைவர் சரி சொல்லட்டும் தமிழ் மக்களுக்கு சமஸ்டி ஆட்சி என்று வட – கிழக்கு தமிழர் தாயகம் என்பதை ஏற்றுக்கொள்ளட்டும். இதை சிங்கள மக்கள் மத்தியில் சொல்ல பயப்பிடுகிறார்கள். முன்பு சொன்னார்கள் நாட்டை துண்ணடாட பார்க்கிறார்கள் என்று. இப்ப அது எல்லாமே முடிந்து விட்டதே? ஏன் சமஸ்டி பற்றிபேசக் கூடாது? இப்ப ஒரு நாடுதானே இருக்கிறது ஏன் பிரச்சினைகளை தீர்க்கக் கூடாது?

இவர்கள் எங்களின் வாக்குகளால் வெல்ல மட்டும் வராமல் நீங்களே உங்களின் war heroகள் யார் என்று தீர்மானியுங்கள். நாங்கள் விலத்தி நின்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் உங்களால் அடிபட்டு உதைபட்டு நொந்து இருக்கிறோம். நாங்கள் உங்களைப் பார்த்து நீதான் நீதிபதி, நீதான் குற்றவாளி என்று சொல்ல முடியாது. எங்களைப் பொறுத்த வரையில் நீங்கள் இரண்டு பேரும் சண்டியர்கள். நீங்களே அடிபட்டு முடியுங்கள். சிங்கள மக்கள் தீர்மானிக்கட்டும் யார் champion என்று நாங்கள் அல்ல. இதுதான் எங்களின் நிலைப்பாடு.

பாரி: மகிந்தாவை ஆட்சி மாற்றம் செய்யவே உலக நாடுகள் சரத்தை இங்கே களம் இறக்கியுள்ளனர். மகிந்தாவை போர்க்குற்றவாளியாக்க வல்லரசுகள் முயற்ச்சிக்கிறது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

எம் கெ சிவாஜிலிங்கம்: இது சர்வதேசங்களின் விளையாட்டுக்கள் தான். அதில் நாங்களும் இழுபடுகிறோம். 50 ஆயிரம் மக்கள் சாகும்போது வராத இந்த சர்வதேசம் இன்று வருவது எண்டால் நாங்கள் ஏன் பின்னால போக வேணும் என்பதுதான் எனது கேள்வி.

புலிகளை விடுவோம் சண்டைபிடித்து சாவதே என்றவர்கள். ஆனால் மக்கள் சாகும் போது எந்த உதவிக்கும் வராத சர்வதேசம். எங்கே சர்வதேச மனிதாபிமானம். நாங்களே எங்கள் தலைவிதியை தீர்மானிக்க வேண்டும். இன்று அமெரிக்கா சொல்லும்இ இந்தியா சொல்லும்இ பிறகு புதிய ஜனாதிபதி வந்ததும் புதிய தலைவர்இ புதிய தொடர்பு என்று போய்விடுவார்கள். அடுத்த பிரச்சினை வரும்வரைக்கும் நாங்கள் இப்டியே இருக்க வேண்டியதுதானா?

ஒருவர் தோற்கடிக்க மற்றவர் எங்களை மீண்டும் பழிவாங்க விடமுடியுமா? நாம் நொந்துபோயுள்ளவர்கள் எம்மை ஒருபக்கத்தில் விடுங்க.

ரி சோதிலிங்கம்: தமிழ் மக்களின் அரசியல் தீர்வை முன்வைக்கும்படி மகிந்தா ராஜபக்சவையும் சரத் பொன்சேகாவையும் நீங்கள் நேரடியாக கேட்டுள்ளீர்களா?

எம் கெ சிவாஜிலிங்கம்: பல தடவைகள் நாட்டில் கேட்டுள்ளேன். சர்வகட்சி மாநாடு என்று 126 தடவைகள் கூட்டங்கள் நடாத்திவிட்டு எதுவுமே இல்லாமல் போனது. தேர்தலின் பின்பு பார்ப்போம் என்று சொல்வதை நம்பமுடியாது. ஜனவரி 26ம் திகதி மாலையின் பின்னர் இந்த அரசியல்தீர்வு என்ற கதை முடிந்துவிடும். முன்பு சொன்னார்கள் புலி அழிப்பில் அரசியல்தீர்வு என்று. புலி முடிந்தது எங்கே அரசியல்த்தீர்வு? அதேபோல் 26ம் திகதிக்கு பின்பும் இதே கதைதான் இருந்து பாருங்கள்.

புலிகளை அழிக்க அரசியல்தீர்வே வழி என்று பல தடவைகள் நாம் கேட்டுள்ளோம். அரசியல்தீர்வு என்பது இவர்கள் சர்வதேசத்திற்கும் இந்தியாவிற்கும் விடும் ரீல் தான்இ வேறு எதுவுமல்ல.

அண்மையில் டில்லி போய் இதைத்தான் இவர்கள் இந்தியாவிற்கு சொல்லி விட்டு வந்துள்ளனர். இந்த விடயங்களில் இரண்டு பேருமே இதைதான் செய்கிறார்கள் சரத் டில்லி போய் ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம் என்கிறார், 13வது திருத்தச்சட்ட மூலம் என்கிறார்இ இவர்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை எங்கே கிடைக்கப்போகிறது? இன்றுள்ள சூழ்நிலையில் என்ன கிடைக்கும் இந்த ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்க இவை யாவும் பேய்க்காட்டல்களே.

அப்படி இல்லை என்றால் 1970களில் சிறிமாவோ செய்தது போன்று புதிய அரசியலமைப்பை கொண்டுவரத் தயாரா? இதற்காக தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லிவிட்டு செய்யுங்கோ நாங்களும் ஆதரவு தருகிறோம். ஒரு கொன்ஸ்ரிற் ரியூசன் அசம்பிளியை உருவாக்கி சாதாரண பெரும்பான்மையுடன் பாராளுமன்றில் நிறைவேற்றி விட்டு சர்வஜன வாக்கெடுப்பை நடாத்துங்கள். பழைய குப்பைகளை கீழே போடுங்கள். புதிய யாப்பை கொண்டு வருவோம். இதை விட்டுவிட்டு பௌத்தர்களின் நாடு, அவர்களுக்கு முதலிடம் இப்படியான சேட்டைகள். இலங்கையை ஒரு செக்குலர் நாடாக்குவதே சிறந்தது. இதை நாங்கள் சிங்கள மக்களுக்கு சொல்லியுள்ளோம்.

இனப்பிரச்சனையின் நேரடி வெளிப்பாடுதான் புலி. அது இன்று இல்லாமல் போய்விட்டது. ஆனால் அதற்கான கிருமி உள்ளே இருந்து கொண்டுதான் இருக்கிறது. இது மீண்டும் எழுலாம். இதே போலத்தான் ஜேவிபி யினரை அழித்தார்கள். ஆனால் மீண்டும் ஜேவிபி எழுந்து நிற்கிறது. இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வு வைக்கப்படாவிட்டால் மீண்டும் பிரச்சினைகள் எழும். இப்ப உள்ளது ஒரு இடைவேளையே தான்.

மூன்றாவது அணியை நோக்கி : ச அரவிந்தன்

Aravinthan_S_TULFஇலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை வாழ் மக்கள் மத்தியிலும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியிலும் பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவி வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இத்தேர்தல் இலங்கை வாழ் சிறுபான்மை சமூகத்தைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானதும் காத்திரமானதுமான ஒரு தேர்தலாகவே அமைந்துள்ளது. காரணம் கடந்த மூன்று தசாப்த காலமாக இலங்கையில் நிலவிவந்த அரசியல் சூழல்கள் முற்றிலும் மாறுபட்ட நிலையில் இத்தேர்தலை நடாத்தத் திட்டமிடப் பட்டிருப்பதுவே.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதற்கொண்டு ஆட்சிக்கு வந்த பச்சை மற்றும் நீலக்கட்சிகள் தத்தமது சுயநல அரசியலுக்காக இனவாதத்தைப் பேசிப்பேசி ஆட்சியைக் கைப்பற்றி ஆட்சியமைத்ததன் விளைவுதான் இலங்கையில் வாழும் பல்வேறுபட்ட சமூகங்களுக்கிடையில் இனரீதியான பாகுபாட்டை ஏற்படுத்தியமையே நாட்டில் ஏற்பட்ட பேரவலங்களுக்குக் காரணமாக அமைந்தது. பதவிவெறி பிடித்த ஆட்சியாகையில் குரோதத்தனமான செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டது ஒரு சமூகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, இலங்கைவாழ் சகல தரப்பினருமே. இருப்பினும் கூடுதலாகப் பாதிக்கப்பட்டது சிறுபான்மைச் சமூகம்தான் என்பதை நாம் மிகுந்த தேவதனையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும்.

இது இவ்வாறிருக்க ஜனாதிபதித் தேர்தல்களில் சிறுபான்மை அரசியல்த் தலைமைகள் இதுவரை காலமும் காத்திரமான பங்கு வகித்ததாகச் சரித்திரமே கிடையாது. காரணம் இத்தேர்தலில் வெல்வதற்கான வாய்ப்பு ஒரு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கே அதிலும் ஆட்சியமைக்கக் கூடிய பச்சை அல்லது நீலக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே வாய்ப்புக்கள் அதிகம் என்பதனால் அந்தந்தக் காலங்களில் எந்தெந்தப் பக்கம் காற்று வீசுகின்றதோ அந்தந்தப் பக்கங்களில் சாய்வதை வழமையான ஒரு செயற்பாடாக சிறுபான்மை அரசியல் தலைமைகள் கடைப்பிடித்து வருகின்றனர்.

இதுவரை காலமும் நாட்டில் மக்களுக்கிடையில் ஒற்றுமையையும் நல்லுறவையும் கட்டியெழுப்புவது தொடர்பில் எந்தவொரு சக்தியும் சிந்தித்தது கிடையாது. அதுபற்றி சிந்திப்பதற்கு நாட்டில் இருந்த சூழலும் அதற்கு இடமளிக்கவில்லை. ஆனால் இனியாவது இதுதொடர்பில் சிந்தித்துச் செயற்பட வேண்டிய கடமை சிறுபான்மைத் தலைமைகளுக்கு உண்டு.

இலங்கை அரசியலில் ஒரு மூன்றாவது அரசியல் சக்தியைக் கட்டியெழுப்புவது தொடர்பில் சிந்திக்க வேண்டிய காலகட்டமிது. இலங்கையில் வாழும் சகலஇன மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு கௌரவமான அரசியல்த் தீர்வினை முன்வைக்கக் கூடிய ஒரு சக்தியை உருவாக்குவதன் மூலம் இலங்கையில் வாழும் சகலஇன மக்களும் சமத்துவத்துடனும் சமாதானத்துடனும் வாழக்கூடிய சூழுல் உருவாக வாய்ப்புண்டு.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருக்கம் முன்னணி வேட்பாளர்களில் யாரை சிறுபான்மை இன மக்கள் ஆதரிக்கப் போகின்றார்கள் என்ற கேள்விக்கு முடிவு காணவேண்டிய காலமும் தேவையும் வந்துள்ளது. இவ்விடயத்தில்தான் சிறுபான்மை இன மக்களுக்கு மிகவும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மிகவும் நிதானத்துடனும் அவதானத்துடனும் அற்ப சொற்ப சலுகைகளுக்கு முன்னுரிமை கொடுக்காது சிறுபான்மை இன மக்களுடைய நீண்டகால அரசியல் அபிலாசைகளை முன்வைத்து அதனை முன்கொண்டு செல்லக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஏற்படுத்த வேண்டும்.

என்னைப் பொறுத்த வரையில் மகிந்தாவோ அல்லது பொன்சேகாவோ சிறுபான்மை இனத்துக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு செய்த அநீதிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் எத்தனையோ இளைஞர் யுவதிகளையும் அப்பாவிப் பொதுமக்களையும் கொண்றுகுவித்து அவர்களின் உடலத்தின்மேல் மேடை போட்டு அரசியல் பேச நினைக்கின்றனர். மூன்று லட்சத்திற்கும் அதிகமானவர்கள் அகதி முகாம்களில் சொல்லொணா துயரங்களை அனுபவித்துக்கொண்டு உறவுகளைப் பிரிந்தும், இழந்தும் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். நடத்தி முடிக்கப்பட்ட கொடிய யுத்தத்தின் வடுக்களை எமது சமூகம் இன்னமும் 60, 70 ஆண்டுகளுக்கு சுமக்கப் போகின்றனர் என்பதை நாம் மறுக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது. இவற்றை எல்லாம் மறந்து நாம் எவ்வாறு இவர்கள் இருவரையும் ஆதரிக்க முடியும். இத்தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் வெல்வதற்குரிய வாய்ப்புக்கள் மகிந்தாவுக்கு அல்லது பொன்சேகாவுக்கேதான் அதிகம் உள்ளது. என்றாலும் எமது சமூகத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அநீதிகள் எல்லாவற்றுக்கும் இவ்விருவருக்கும் சமமான பங்குண்டு.

எம்மில் சிலர் சிந்திக்கக் கூடும் எய்தவன் இருக்க நாம் ஏன் அம்பை நோக வேண்டும் என. யுத்தத்திற்கான ஆணை பிறப்பிக்கப்பட்ட காலம்முதல் இந்த யுத்தத்தை வென்றே தீருவேன் எனக் கங்கணங் கட்டிக்கொண்டு நின்றது சரத் பொன்சேகாதான் என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது. அது மட்டுமல்ல இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் இலங்கை வாழ் சிறுபான்மை இன மக்கள் தொடர்பாக மிகவும் கேவலமான கருத்துக்களை வெளியிட்டு இருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அக்கருத்துக்களுக்கு எந்தவொரு சிறுபான்மை இனத் தலைவர்களும் கண்டனத்தை வெளியிடவில்லை. ஆனால் அண்ணன் ஹக்கீம் மட்டும் அதற்கான கண்டனத்தை தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு விடயமாகும்.

யுத்தம் உக்கிரமடைந்த காலங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி யுத்தப் பிரதேசங்களில் அகப்பட்டிருக்கும் மக்களைப் பாதுகாப்பதற்கு UNHCR, ICRC போன்ற நிறுவனங்களின் உதவியைப் பயன்படுத்தி அந்த மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுங்கள் என பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் அவர்கள் அதை செவிமடுக்காதது எத்தனையோ எத்தனையோ ஆயிரக்கணக்கான மக்களின் அழிவுக்குக் காரணமாக இருந்தது அரச தலைவர் மட்டுமல்ல இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவும்தான்.

இன்று சிறுபான்மை மக்கள் தொடர்பில் இருந்துவந்த கரிசனை அன்று இருந்திருந்தால், யுத்தப் பிரதேசத்தில் பொதுமக்கள் இருக்கும்வரை என்னால் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என அரச தலைவருக்கு மறுப்புத் தெரிவித்திருந்தால், எத்தனையோ அப்பாவி உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும். இவை எல்லாவற்றையும் மறந்து நாம் இவர்களை ஆதரித்தால் விலை மதிப்பற்ற உயிர்களையும் அங்கவீனர்களாக ஆக்கப்பட்டு இன்னும் பல ஆண்டுகள் யுத்தத்தின் வடுக்களைச் சுமந்துகொண்டு வாழப் போகும் எமதினிய உறவுகளுக்கு நாம் செய்யப்போகும் வரலாற்றுத் துரோகமாகும். அதுமட்டுமல்ல வடகிழக்குப் பிரதேசங்களில் காணாமல் போனவர்கள் எத்தனையோ பேர். அவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் இல்லை. கண்டதுண்டமாக வெட்டி சந்திகளில் போடப்பட்டவர்கள் எத்தனையோ பேர். குற்றங்கள் ஏதும் செய்யாது சந்தேகத்தின் பேரில் சிறைகளில் வாடுகின்ற அப்பாவிகள் எத்தனையோ. இவை எல்லாவற்றுக்கும் பொறுப்பான இந்தக் கொடூர அரசியல் சாம்ராஜ்யத்துக்கும் இந்த சாம்ராஜ்யத்துக்கு விலை போகும் சிலருக்கம் முற்றுப்புள்ளி வைப்பதற்கான முதற்படியாக இத்தேர்தலைப் பயன்படுத்த வேண்டும்.

தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பொறுத்தவரையில் இந்திய அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பரவலாக்கல் போன்றதோர் அதிகாரப் பகிர்வினை ஏற்படுத்தி இலங்கையில் வாழும் சகல தரப்பு மக்களும் சமத்துவத்துடனும் சமாதானத்துடனும் வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றோம். அதற்கான அரசியல் சூழ்நிலையை இலங்கையில் ஏற்படுத்துவதற்கான ஒத்துழைப்பினை இலங்கைவாழ் மக்கள் அனைவரும் வழங்க வேண்டும். இத்தேர்தல் தொடர்பில் நாம் நிதானமாகவும் தெளிவாகவும் ஆராய்ந்து வருகின்றோம். வெகுவிரைவில் தமிழர் விடுதலைக் கூட்டணி உத்தியோக பூர்வமான முடிவினை வெளியிடும்.

ச அரவிந்தன் (மத்திய குழு உறுப்பினர், தமிழர் விடுதலைக் கூட்டணி)