அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

கிளிநொச்சி நகரில் அபிவிருத்தி திட்டங்கள் நேற்று ஆரம்பித்து வைப்பு

kili.jpgநாமல் ராஜபக்ஷ தலைமையிலான புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் கிளிநொச்சி நகரில் பல அபிவிருத்தி திட்டங்களை நேற்று ஆரம்பித்து வைத்தனர். அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிரதியமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் கிளிநொச்சி விஜயம் செய்தனர்.

கிளிநொச்சி நகரிலிருந்து மூன்று புதிய பஸ் சேவைகள் நேற்று ஆரம்பமாகின. மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட இராமநாதபுரம், விஸ்வமடு, ஸ்கந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு இப்பஸ்சேவைகள் ஆரம்பமாகின. தற்போது சேவையிலுள்ள கிளிநொச்சி- பூநரிக்கு இடையிலான பஸ்சேவைக்கு மேலதிகமாக மற்றுமொரு பஸ் சேவையும் ஆரம்பமானது.

இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நன்னீர் மீன்பிடித்துறையை ஏற்படுத்துவதற்கென அக்கராயன்குளம் மற்றும் ஏனைய குளத்திற்கும் மீன் குஞ்சுகளை விடும் நிகழ்வும் இடம்பெற்றது. நாமல் ராஜபக்ஷ எம்.பி. அக்கராயன் குளத்தில் 2 இலட்சம் மீன் குஞ்சுகளை விட்டார்.

கிளிநொச்சி நகரில் இரண்டு ச.தொ.ச. கிளைகள் திறக்கப்பட்டன. 109 ஆவது கிளை கிளிநொச்சி நகரில் தண்ணீர் தாங்கிக்கு அண்மித்த பகுதியில் திறந்துவைக்கப்பட்டது. கிளிநொச்சியில் இலங்கை மின்சார சபையின் பாவனையாளர் சேவை அலுவலகத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் நடைபெற்றது. அத்துடன் கிளிநொச்சி கச்சேரி வளாகத்தில் புதிய தொழிற்பயிற்சி நிலையமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகம் திறக்கப்பட்டதுடன் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 94 விளையாட்டுக் கழகங்களுக்கும் விளையாட்டு உப கரணங்கள் வழங்கும் வைபவமும் நடைபெற்றது.

அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிரதியமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, துமிந்த திஸாநாயக்க, புதிய எம்.பிக்களான நாமல் ராஜபக்ஷ, திலும் அமுனுகம, உதித லொக்குபண்டார, லொஹான் ரத்வத்த, சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, வடமாகாண ஆளுநர் மேர்ஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி, கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதிகேதீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

4 பாடசாலை அதிபர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

மேல்மாகாணப் பாடசாலைகளில் முதலாம் வகுப்புக்கு பிள்ளைகளைச் சேர்ப்பதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல்வேறு முறைப்பாடுகள் தொடர்பாக இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் நான்கு பாடசாலைகளின் அதிபர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மேல் மாகாணத்தின் சுபசன் நிமிதெர பாடசாலை தொடர்பாடல் வேலைத்திட்டம் தொடர்பாக விளக்கமளிக்குமுகமாக முதலமைச்சில் புதன்கிழமை (16) இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலைகளுக்கு முதலாம் வகுப்புக்கு பிள்ளைகளைச் சேர்ப்பதில் இவ்வருடத்தில் (2010) இடம்பெற்றதாக கூறப்படும் 17 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் விசாரணைகள் முடிவுற்ற நிலையில் நான்கு அதிபர்கள் தற்காலிக வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அழகியற் கல்வி ஆசிரியர்களாக 3174 பட்டதாரிகளை சேர்க்க முடிவு

teachers.jpgபாடசா லைகளில் அழகியற் கல்வியைக் கற்பிப்பதற்காக பட்டதாரி ஆசிரியர்களை சேர்த்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்து ள்ளது. கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த யோசனைக்கு அமைவாக மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் 3174 ஆசிரியர்களை சேர்த்துக்கொள்ள அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்குமுகமாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (17) முற்பகல் நடைபெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனை அறிவித்தார்.

இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அன்னை சித்தர் ராஜ்குமார் குருஜீ இன்று இலங்கை வருகிறார்

இந்தியாவின் பெரம்பலூர் பிரம்மரிஷிமலை புலிப்பாணி அன்னை சித்தர் ஸ்ரீலஸ்ரீ எஸ். இராஜ்குமார் குருஜீ இன்று வெள்ளிக்கிழமை இலங்கை வருகிறார். சிலோன் சித்தர்கள் சபை ஸ்ரீலஸ்ரீ புண்ணியரத்னம் சித்தரின் அழைப்பையேற்று இலங்கை வரும் இராஜ்குமார் குருஜி உலகமக்கள் சேமத்திற்காகவும், எதிர்கால நன்மை கருதியும் மகா யாகங்களை நடத்தவுள்ளார்.

இலங்கை வரும் ஸ்ரீலஸ்ரீ எஸ். இராஜ்குமார் குருஜீ நாளையும், நாளை மறுதினமும் மட்டக்களப்பில் மாபெரும் யாகங்களை நடத்தி அன்னதானம் வழங்கவுள்ளார்.

நாளை சனிக்கிழமை திருமண்டபத்தடியிலு ள்ள கன்னன்குடா 210 சித்தர்கள் பீடத்தில் காலை 10.00 மணிக்கு மகாயாகம் நடை பெறும். நாளை மறுதினம் (20) ஞாயிறுக்கிழமை களுவாஞ்சிக்குடியிலுள்ள ஸ்ரீயோகஞானபீடத்தில் காலை 10.30 மணிக்கு மகாயாகம் நடைபெறும்.

தேசிய வெற்றி விழாவை முன்னிட்டு இலங்கையில் நாளை அரசாங்க விடுமுறை!

kahiliya.jpgஇலங்கையில் பயங்கரவாதத்தைத் தோற்கடித்த இராணுவ வெற்றியைக் கொண்டாடும் முகமாக நாளை பொதுவிடுமுறைத் தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது
 
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்தார்.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதைக்  கொண்டாடுவதற்காக நாளைய தினம் விசேட ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்புக்கு வந்து உடனடியாகவே முல்லைத்தீவு சென்றார் பாஸ்கோ

lio.jpgஇலங்கைக்கு வருகை தந்துள்ள ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் நாயகம் லின் பாஸ்கோ நேற்று முல்லைத்தீவுப் பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.முல்லைத்தீவுக்கான பாஸ்கோவின் விஜயமானது “பரிசீலனைக்கான பயணம்” என்று வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை நேரில் கண்டறிவதற்காகவே பாஸ்கோ வருகை தந்திருப்பதாக ஏஜென்சி செய்திகள் தெரிவித்தன.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அரச அதிகாரிகள், தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் உட்பட எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், ஊடகத்துறையினர், சிவில் சமூக குழுக்கள் ஆகியோரை லின் பாஸ்கோ சந்திக்கவுள்ளார்.

நேற்று புதன்கிழமை கொழும்புக்கு வருகை தந்தவுடன் முல்லைத்தீவுக்குப் பயணமாவதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை பாஸ்கோ சந்தித்துள்ளார். இன்று வியாழக்கிழமை மாலை 6.30, 7.30 மணியளவில் ஐ.நா. தகவல் நிலையத்திலுள்ள மாநாட்டு மண்டபத்தில் அவர் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார்.

வடமாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தலா 200 மில்.நிதி – மேம்பாட்டுத் திட்டத்திற்கு உலக வங்கி உதவும்

canrasri.jpgவட மாகாணத்தின் உள்ளூராட்சி சேவைகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தலா 200 மில்லியன் ரூபா வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். வட மாகாணத்தில் உள்ள 34 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இந் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு உள்ளூர் சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (NELSIP)  ஊடாக அரசாங்கம் இந்த நிதியை வழங்கவுள்ளது. இத்திட்டத்திற்கு உலக வங்கி கடன் உதவி வழங்கவுள்ளது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

ஆளுநர் தலைமையில் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தின் தேசிய திட்ட இணைப்பாளராகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் வியானி குணதிலக்கவும், வட மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் பிரான்ஸிஸ் ஜோன்ஸன் உட்பட உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்கள் நியமிக்கப்ப ட்டுள்ளனர்.

2010 முதல் 2013 வரையான நான்கு ஆண்டு காலப்பகுதிக்குள் இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பிரான்ஸிஸ் ஜோன்ஸன் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக வழங்கப்படும் உள்ளூராட்சி சேவைகளை மேம்படுத்தும் வகையிலேயே இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நூறு வீத மக்களின் பூரண பங்களிப்புக்களின் மூலமே இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம், அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேவைப் படும் வசதிகள், நடவடிக்கை உடனடியாக செய்து கொடுக்கப்படும்.

ஆண்டிறுதி கணக்கறிக்கை, கணக்காய்வு மற்றும் மக்களின் பங்களிப்பு என்பவற்றைச் சரியான முறையில் காண்பிக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கே இந்த நிதி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தைத் துரிதப் படுத்தும் வகையில் எதிர்வரும் 21ம் திகதி வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தலைமையில் வரோதய நகரிலுள்ள விவசாய திணைக்கள கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

பாலைவனமாதலையும் வரட்சியையும் தடுக்கும் தினம் இன்று

11111.jpgஇம்முறை மண்ணை வளப்படுத்தி, எல்லா இடங்களிலும் உயிர்களை வளப்படுத்துவோம் எனும் தொனிப் பொருளில் உலகெங்கும் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

பாலைவனமாதல் தொடர்பான உண்மை நிலவரத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்தி நிலங்கள் தரமிழத்தல் மற்றும் வரட்சி காரணமாக உயிர்ப்பல்வகைமைக்கு ஏற்படும் இழப்பைத் தடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை இத்தினம் அடிப்படையாகக் கொண்டது.

ஏனெனில் வளமான மண் இருந்தால் மட்டுமே உயிர்கள் நிலைக்க முடியும். ஒவ்வொரு தனிநபரும் மண்ணை எங்ஙனம் பயன்படுத்துகிறார் என்பதிலேயே மண்ணின் ஆரோக்கியம் தங்கியிருக்கிறது.

நாம் உண்ணும் உணவின் அளவையும் தரத்தையும் கூட நாம் மண்ணில் மேற்கொள்ளும் செயற்பாடுகளே தீர்மானிக்கின்றன. அவற்றின் அடிப்படையிலேயே, சூழல்தொகுதி எமக்கு வழங்கும் சேவைகளும் அமைந்து விடுகின்றன.

நெடுங்கேணி, நொச்சிமோட்டை பகுதிகளில் பிரதேச செயலகங்கள் – நாளை உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு

வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி மற்றும் நொச்சிமோட்டை பகுதிகளில் 19 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரதேச செயலகங்கள் நாளை 18ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வுகளில் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, ஜோன் செனவிரத்ன ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்டு திறந்து வைக்கவுள்ளனர். நெடுங்கேணி பிரதேச செயலகம் 9 இலட்சம் ரூபா செலவிலும், நொச்சி மோட்டை ‘சேவா பியச’ நிலையம் 10 இலட்சம் ரூபா செலவிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியை பொது நிர்வாக அமைச்சு வழங்கியுள்ளது. அத்துடன் வவுனியாவில் சமுர்த்தி சங்க காரியாலயமொன்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவிடம் வெளிப்படைத் தன்மை அவசியம் சர்வதேசம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது – யசூசி அகாசி

acasi.jpgஜனாதிபதி யால் நியமிக்கப்பட்டிருக்கும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும் பரந்துபட்டதாகவும் இருக்க வேண்டுமென இலங்கைக்கான ஜப்பானின் சிறப்பு தூதுவர் யசூசி அகாசி தெரிவித்தார். உத்தியோகபூர்வ விஜயமாக 20 ஆவது தடவையாக இலங்கை வந்துள்ள யசூசி அகாசி நேற்று புதன்கிழமை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை அமைச்சில் சந்தித்து பேசியதன் பின்னர் அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இது தொடர்பாக அகாசி மேலும் கருத்து வெளியிடுகையில்;

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றி ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருப்பதையிட்டு நாம் சந்தோஷமடைகிறோம். இது மிகவும் முக்கியமானதும் கடினமானதுமான இலக்காகும். எனினும் நாடு முழுவதும் முழுமையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான உறுதியான இலக்கை கொண்டிருக்க வேண்டும்.

நல்லிணக்க நடவடிக்கைகளில் எதிர்காலத்தில் சிலசமயங்களில் ஐ.நா.பங்களிப்புச் செய்யக்கூடும். இது பற்றி நானும் அமைச்சரும் கலந்து பேசினோம். இன நெருக்கடி, நல்லிணக்கம் பற்றி உலகளாவிய ரீதியில் பல அனுபவங்களும், வரலாறுகளும் இருக்கின்றன. நல்லியக்கம் பற்றிய நடவடிக்கைகளில் தென்னாபிரிக்கா, கிழக்கு தீமோர் மற்றும் பல ஆபிரிக்க நாடுகள் உதாரணங்களாக இருக்கின்றன. எனவே, இவ் விடயத்தில் இலங்கை ஏனைய நாடுகளின் இந்த அனுபவங்களில் இருந்தான பலனை பெற்று தமக்குரிய நோக்கத்தை நோக்கிச் செல்ல வேண்டும். இதில் ஐ.நா.போன்ற சர்வதேச அமைப்புகளின் அறிவுரைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

நல்லிணக்க விவகாரத்தில் இலங்கைக்கும் ஐ.நா.போன்ற சர்வதேச அமைப்புகளுக்கும் இடையிலான சாத்தியமான ஒத்துழைப்புகள் பற்றி பேசினோம். எனினும் இது தொடர்பாக மேலதிக விபரங்களை இப்போதே கூற முடியாது. ஏனெனில் இந்த உறவு எதிர்காலத்தில் எப்படி விஸ்தரிக்கப்பட வேண்டுமென்பது பற்றிச் சொல்ல முடியாது. அதை இலங்கை அரசாங்கம் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

அதேநேரம், இவ் விடயத்தில் இப்படித் தான் நடந்து கொள்ள வேண்டுமென ஏனைய அரசாங்கங்களும், அமைப்புகளும் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கவும் முடியாது. இலங்கை அதன் தன்மைக்கேற்றவாறு செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றார். இதேவேளை, இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுகள் பற்றி ஜப்பானின் நிலைப்பாடு என்னவென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அகாசி; உரிய நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மையானதாகவும் பரந்துபட்டதாகவும் ஸ்தாபிக்கப்பட வேண்டுமென நாம் நினைக்கிறோம். எவ்வாறிருப்பினும் இலங்கை அரசாங்கம் அதன் முன்முயற்சியாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருப்பதையிட்டு நாம் சந்தோஷமடைகிறோம். அந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பற்றி நாம் உன்னிப்பாக அவதானிக்கிறோம்.

இந்த ஆணைக்குழுவின் மூலம் முன்னெடுக்கப்படப்போகும் விடயங்கள் பற்றி அமைச்சர் பீரிஸ் எனக்கு விளக்கமளித்தார். அது அவ்வாறு நடக்குமென நாம் நம்புகிறோம். அது மட்டுமல்லாது இந்த ஆணைக்குழுவானது விரிவான பரிமானமுள்ள நடவடிக்கை. இதை போர் குற்றச்சாட்டு பற்றிய விடயத்துடன் மட்டும் குறுக்கிவிட நாம் விரும்பவில்லை என்று கூறினார்.