நல்லிணக்க ஆணைக்குழுவிடம் வெளிப்படைத் தன்மை அவசியம் சர்வதேசம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது – யசூசி அகாசி

acasi.jpgஜனாதிபதி யால் நியமிக்கப்பட்டிருக்கும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும் பரந்துபட்டதாகவும் இருக்க வேண்டுமென இலங்கைக்கான ஜப்பானின் சிறப்பு தூதுவர் யசூசி அகாசி தெரிவித்தார். உத்தியோகபூர்வ விஜயமாக 20 ஆவது தடவையாக இலங்கை வந்துள்ள யசூசி அகாசி நேற்று புதன்கிழமை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை அமைச்சில் சந்தித்து பேசியதன் பின்னர் அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இது தொடர்பாக அகாசி மேலும் கருத்து வெளியிடுகையில்;

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றி ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருப்பதையிட்டு நாம் சந்தோஷமடைகிறோம். இது மிகவும் முக்கியமானதும் கடினமானதுமான இலக்காகும். எனினும் நாடு முழுவதும் முழுமையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான உறுதியான இலக்கை கொண்டிருக்க வேண்டும்.

நல்லிணக்க நடவடிக்கைகளில் எதிர்காலத்தில் சிலசமயங்களில் ஐ.நா.பங்களிப்புச் செய்யக்கூடும். இது பற்றி நானும் அமைச்சரும் கலந்து பேசினோம். இன நெருக்கடி, நல்லிணக்கம் பற்றி உலகளாவிய ரீதியில் பல அனுபவங்களும், வரலாறுகளும் இருக்கின்றன. நல்லியக்கம் பற்றிய நடவடிக்கைகளில் தென்னாபிரிக்கா, கிழக்கு தீமோர் மற்றும் பல ஆபிரிக்க நாடுகள் உதாரணங்களாக இருக்கின்றன. எனவே, இவ் விடயத்தில் இலங்கை ஏனைய நாடுகளின் இந்த அனுபவங்களில் இருந்தான பலனை பெற்று தமக்குரிய நோக்கத்தை நோக்கிச் செல்ல வேண்டும். இதில் ஐ.நா.போன்ற சர்வதேச அமைப்புகளின் அறிவுரைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

நல்லிணக்க விவகாரத்தில் இலங்கைக்கும் ஐ.நா.போன்ற சர்வதேச அமைப்புகளுக்கும் இடையிலான சாத்தியமான ஒத்துழைப்புகள் பற்றி பேசினோம். எனினும் இது தொடர்பாக மேலதிக விபரங்களை இப்போதே கூற முடியாது. ஏனெனில் இந்த உறவு எதிர்காலத்தில் எப்படி விஸ்தரிக்கப்பட வேண்டுமென்பது பற்றிச் சொல்ல முடியாது. அதை இலங்கை அரசாங்கம் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

அதேநேரம், இவ் விடயத்தில் இப்படித் தான் நடந்து கொள்ள வேண்டுமென ஏனைய அரசாங்கங்களும், அமைப்புகளும் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கவும் முடியாது. இலங்கை அதன் தன்மைக்கேற்றவாறு செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றார். இதேவேளை, இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுகள் பற்றி ஜப்பானின் நிலைப்பாடு என்னவென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அகாசி; உரிய நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மையானதாகவும் பரந்துபட்டதாகவும் ஸ்தாபிக்கப்பட வேண்டுமென நாம் நினைக்கிறோம். எவ்வாறிருப்பினும் இலங்கை அரசாங்கம் அதன் முன்முயற்சியாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருப்பதையிட்டு நாம் சந்தோஷமடைகிறோம். அந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பற்றி நாம் உன்னிப்பாக அவதானிக்கிறோம்.

இந்த ஆணைக்குழுவின் மூலம் முன்னெடுக்கப்படப்போகும் விடயங்கள் பற்றி அமைச்சர் பீரிஸ் எனக்கு விளக்கமளித்தார். அது அவ்வாறு நடக்குமென நாம் நம்புகிறோம். அது மட்டுமல்லாது இந்த ஆணைக்குழுவானது விரிவான பரிமானமுள்ள நடவடிக்கை. இதை போர் குற்றச்சாட்டு பற்றிய விடயத்துடன் மட்டும் குறுக்கிவிட நாம் விரும்பவில்லை என்று கூறினார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *