அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

3000 தற்காலிக ஊழியர்களுக்கு இன்று நிரந்தர நியமனம்

nimal-siripala.jpgஅரசாங்க சுகாதாரத்துறையில் பணிபுரியும் மூவாயிரம் தற்காலிக ஊழியர்களுக்கு இன்று 12ம் திகதி நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவிருக்கின்றன.

சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் கொழும்பு, மருதானை, எல்பிஸ்டன் திரையரங்கில் நடைபெறும் வைபவத்தின் போது இந்த நிரந்தர நியமனக் கடிதங்கள் வழகப்படவிருக்கின்றன.

வன்னி அகதிகளுக்காக மேலதிக பஸ்கள்

bus.jpgவன்னிப் பகுதிகளில் இருந்து வவுனியாவுக்கு வருகின்ற மக்களின் நலன் கருதி வவுனியா இ.போ.ச.டிப்போவுக்கு போக்குவரத்து அமைச்சு ஐந்து பஸ்களை வழங்க இணங்கியுள்ளது. ஏற்கனவே வவுனியா டிப்போவுக்கு ஐந்து பஸ்கள் கிடைத்துள்ளன எனவும் டிப்போ முகாமையாளர் தெரிவித்தார்.

இந்த பஸ்கள் வன்னியில் இருந்து வருகின்ற மக்களை ஏற்றிவருவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன் தற்காலிக இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள வன்னிப் பகுதி அகதிகளை இந்த பஸ்கள் மூலம் செட்டிகுளத்துக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த பஸ்கள் இரவு பகலாக வன்னிப் பகுதி அகதிகளின் சேவைக்காகவே பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

வன்னிப்பகுதியிலிருந்து வவுனியா வருபவர்கள் தொகை மேலும் அதிகரிக்கும் நிலை -அமைச்சர் ரிசாட் பதியுதீன்

civilians_arrive.jpgவன்னிப் பகுதிகளில் இருந்து வவுனியாவுக்கு வருகின்ற அகதிகளின் தொகை தினமும் அதிகரித்துக்கொண்டிருப்பதால் அடுத்த சில தினங்களில் மேலும் இத்தொகை அதிகரிக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்துள்ள மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களில் சுகாதார நிலைமைகள் மிக மோசமாகியுள்ளன எனவும் புகார்கள் வந்துள்ளன.

இடம்பெயர்ந்து வருகின்ற வன்னிப்பகுதி மக்களுக்கு சேவையாற்ற டாக்டர்கள் முன்வரவேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு விசேட மருத்துவ சிகிச்சை தேவைப்படுகின்றன எனவும் அமைச்சர் கூறினார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களின் குடிநீர் உணவு சுகாதார விடயங்களில் உரிய கவனம் செலுத்தப்படவேண்டும் எனவும் அவர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். இதனால் பலருக்கு பல நோய்கள் ஏற்பட்டுள்ளதாக தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த அகதிகளின் உடல் நலன்களை கருத்திற்கொண்டு மேலதிக டாக்டர்களை உடனடியாக வவுனியாவுக்கு அனுப்பிவைக்குமாறு அமைச்சர் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா நகரில் உள்ள ஏனைய பாடசாலைகளில் இருபது தற்காலிக மலசல கூடங்கள் அமைத்துக்கொள்ளுமாறும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

102 வன்முறைச் சம்பவங்கள் பதிவு

election_.jpgவடமேல் மாகாணத்திலும் மத்திய மாகாணத்திலும் தேர்தல் தொடர்பான 102 வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக வணிக உரிமைகளைப்பாதுகாக்கும் புத்தி ஜீவிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த ஒன்றியம் கடந்த 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையும் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வடமேல் மாகாணத்தில் 50 முறைப்பாடுகளும் மத்திய மாகாணத்தில் 52 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன என ஒன்றியம் தெரிவித்துள்ளது.

வெற்றிக்கு களங்கம் ஏற்படுத்துவோர் மீது ஒழுக்காற்று விசாரணைக்கு – ஜனாதிபதி மஹிந்த பணிப்பு

dalas_alahapperuma.jpgவிருப்பு வாக்கிற்காக மோதிக்கொள்ளும் ஐ. ம. சு. முன்னணி வேட்பாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு சுதந்திரக் கட்சி செயலாளருக்கு ஜனாதிபதி பணித்துள்ளார். ஐ. ம. சு. முன்னணிக்கு கிடைக்க உள்ள வெற்றிக்குக் களங்கம் ஏற்படும் வகை யில் செயற்படும் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டளஸ் அழஹப்பெரும தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டளஸ் அழஹப்பெரும, இரு மாகாணங்களிலும் எமக்குக் கிடைக்கவுள்ள பாரிய தேர்தல் வெற்றிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயற்படாதிருக்குமாறு கட்சி ஆதரவாளர்களை கோருகிறோம். கெளரவமான வெற்றி யையே நாம் விரும்புகிறோம். கெளரவமற்ற முறையில் அதிகாரம் கிடைப்பதை நாம் விரும்பவில்லை என்றார்.

வன்னியிலிருந்து நேற்றுடன் ஐ.சி.ஆர்.சி.யும் வெளியேறியது

red-cr.jpgவன்னி யிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் (ஐ.சி.ஆர்.சி.) பணியாளர்களும் செவ்வாய்க்கிழமையுடன் வெளியேறியுள்ளனர்.  வன்னியில் யுத்த நடவடிக்கைகளால் படுகாயமடைந்த நிலையிலிருக்கும் 250 பேர் நேற்று மாலை முல்லைத்தீவு மாத்தளன் கடலிலிருந்து ஐ.சி.ஆர்.சி.யால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கப்பல் மூலம் திருகோணமலைக்கு அனுப்பப்பட்டனர்.

இவர்கள் சென்ற கப்பலில், வன்னியில் எஞ்சியிருந்த ஐ.சி.ஆர்.சி.யின் வெளிநாட்டுப் பணியாளர்களும் வெளியேறியுள்ளனர். தற்போது முல்லைத்தீவில் இயங்கும் ஐ.சி.ஆர்.சி. அலுவலகத்தை அங்குள்ள உள்ளூர் பணியாளர்களே இயக்குகின்றனர்.

எனினும்,  நேற்று முன்தினம் முல்லைத்தீவிலிருந்து வெளியேறிய ஐ.சி.ஆர்.சி.யின் வெளிநாட்டு பணியாளர்கள் மீண்டும் அங்கு திரும்பும் சாத்தியமில்லையென்றே தெரிவிக்கப்படுகிறது.  முல்லைத்தீவிலிருந்து ஐ.சி.ஆர்.சி.யின் வெளிநாட்டுப் பணியாளர்கள் முழுமையாக வெளியேறியதன் மூலம் தற்போது வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் எந்தவொரு சர்வதேச தொண்டர் அமைப்புகளினதும் வெளிநாட்டுப்பணியாளர்களும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த வருட நடுப்பகுதியில் வன்னியிலிருந்து அனைத்து சர்வதேச தொண்டர் அமைப்புகளும் வெளியேறிவிட வேண்டுமென்று இலங்கை அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் ஐ.சி.ஆர்.சி. மட்டும் அங்கு செயற்பட்டு வந்தது.  தற்போது ஐ.சி.ஆர்.சி.யும் அங்கிருந்து வெளியேறியுள்ளது.

வன்னியில் காயமடைந்த 240 பொது மக்களுக்கு திருமலை ஆஸ்பத்திரியில் உடனடி சிகிச்சை!

ship-10022009.jpgவன்னியில் நடைபெற்றுவரும் மோதல்களில் காயமடைந்த 240 பேரை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கடல்மார்க்கமாக திருகோணமலைத் துறைமுகத்துக்கு அழைத்து வந்துள்ளது. திருகோணமலை ஆஸ்பத்திரியில் இவர்களுக்கு உடனடி சிகிச்சைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனக பெரேராவின் கொலை தொடர்பான சந்தேக நபர் கைது

janaka.jpgஅநுராத புரத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் இராணுவத்தின் மேஜர் ஜெனரல் ஜனக பெரேராவின் கொலை தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை பொலிசார் சியாம்பலாகஸ்கட பகுதியில் வைத்து நேற்று அதிகாலை 5.15 மணியளவில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் மாங்குளத்தைச் சேர்ந்த அபுசாலி ஜாபிர் என்பவர் எனப் பொலிசார் தெரிவித்துள்ளனர். இவரே அநுராதபுரத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார் எனப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2008ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ம் திகதி புதிய அலுவலகம் ஒன்றுக்கான திறப்பு விழா வைபங்கள் இடம்பெற்றிருந்த வேளையிலேயே இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது. இதில் ஜனக பெரேரா மற்றும் அவரது மனைவி உட்பட 23பேர் கொல்லபட்டது இங்கு நினைவுகூரத்தக்கதாகும்.

புலிகளின் லெப்.கேணல் செந்தோழன் மரணம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒளிப்பட ஆவணப்படுத்தலை சிறப்பாக செய்து வந்த லெப். கேணல் செந்தோழன் மரண மடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.  ஒளிப்படக் கலைப் போராளியும் பாடலாசிரியருமான லெப். கேணல் செந்தோழன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒளிப்பட ஆவணப்படுத்தலை சிறப்பாக செய்து வந்தவர். அத்துடன், தமிழீழ எழுச்சி இசைப் பாடல்களையும் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒளிக்கலையிலும் இசைப்பாடல்களிலும் போர்க்கலையிலும் திறம்பட தன்பணியை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு லெப்.கேணல் செந்தோழன் வழங்கியுள்ளார்.

இதேவேளை, தமிழீழ இசைப் பாடகர் இசையரசன் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அறுபதுக்கும் அதிகமான இசைப் பாடல்களைப் பாடியுள்ள இவர், தமிழீழ எழுச்சிப் பாடகர் சாந்தனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“இந்தியா தவறினால் ஐ.நா.வை நாடுவோம்’

srikantha.jpgஇலங்கையில் யுத்தத்தை நிறுத்த இந்தியா தலையிட வேண்டுமென யாழ்.மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.என்.ஸ்ரீகாந்தா வலியுறுத்தியுள்ளார்.

கோயம்புத்தூரில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இதனைத் தெரிவித்த அவர், இலங்கையில் சண்டையை நிறுத்த இந்தியா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.மத்திய அரசு இதனை மேற்கொள்ளத் தவறினால் ஐ.நா.மற்றும் வெளிநாடுகளை நாடி யுத்தத்தை நிறுத்துமாறு கோருவதைத் தவிர எமக்கு வேறு தெரிவு இல்லை என்றும் ஸ்ரீகாந்தா கூறியுள்ளார்.

ஏ.என்.ஐ.செய்திச் சேவை இதனைத் தெரிவித்தது.