வன்னி யிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் (ஐ.சி.ஆர்.சி.) பணியாளர்களும் செவ்வாய்க்கிழமையுடன் வெளியேறியுள்ளனர். வன்னியில் யுத்த நடவடிக்கைகளால் படுகாயமடைந்த நிலையிலிருக்கும் 250 பேர் நேற்று மாலை முல்லைத்தீவு மாத்தளன் கடலிலிருந்து ஐ.சி.ஆர்.சி.யால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கப்பல் மூலம் திருகோணமலைக்கு அனுப்பப்பட்டனர்.
இவர்கள் சென்ற கப்பலில், வன்னியில் எஞ்சியிருந்த ஐ.சி.ஆர்.சி.யின் வெளிநாட்டுப் பணியாளர்களும் வெளியேறியுள்ளனர். தற்போது முல்லைத்தீவில் இயங்கும் ஐ.சி.ஆர்.சி. அலுவலகத்தை அங்குள்ள உள்ளூர் பணியாளர்களே இயக்குகின்றனர்.
எனினும், நேற்று முன்தினம் முல்லைத்தீவிலிருந்து வெளியேறிய ஐ.சி.ஆர்.சி.யின் வெளிநாட்டு பணியாளர்கள் மீண்டும் அங்கு திரும்பும் சாத்தியமில்லையென்றே தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவிலிருந்து ஐ.சி.ஆர்.சி.யின் வெளிநாட்டுப் பணியாளர்கள் முழுமையாக வெளியேறியதன் மூலம் தற்போது வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் எந்தவொரு சர்வதேச தொண்டர் அமைப்புகளினதும் வெளிநாட்டுப்பணியாளர்களும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த வருட நடுப்பகுதியில் வன்னியிலிருந்து அனைத்து சர்வதேச தொண்டர் அமைப்புகளும் வெளியேறிவிட வேண்டுமென்று இலங்கை அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் ஐ.சி.ஆர்.சி. மட்டும் அங்கு செயற்பட்டு வந்தது. தற்போது ஐ.சி.ஆர்.சி.யும் அங்கிருந்து வெளியேறியுள்ளது.