அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

லலித் கொத்தலாவலவிற்கு விளக்கமறியல்:கல்கிஸ்ஸை நீதிமன்றம் உத்தரவு

lalith.gifகோல்டன் கீ நிதி மோசடி தொடர்பில் செலிங்கோ நிறுவன உரிமையாளர் லலித் கொத்தலாவலவை விளக்க மறியலில் வைக்குமாறு கல்கிசை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளதுடன் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலி கொத்தலாவலவையும் கைது செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் கோல்டன் கீ வாடிக்கையாளர்களின் 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதியை எதிர்வரும் 10 நாட்களுக்குள் செலுத்துமாறும் இறுதி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. செலிங்கோ நிறுவனத்தின் உரிமையாளர் லலித் கொத்தலாவலக்கு கோல்டன் கீ கடன் நிறுவன பணிப்பாளர் மேற்கொண்டதாக கூறப்படும் மோசடி குற்றச்சாட்டு, உரிமையாளர் என்ற அடிப்படையில் லலித் கொத்தலாவலயின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.

மேல் மாகாண சபைக்கு ஏப்ரல் 25ல் தேர்தல்; 38 கட்சிகள், 23 சுயேச்சைகள் போட்டி; 2378 வேட்பாளர்கள் களத்தில்

sri-lanka-election-01.jpgமேல் மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறுமென தேர்தல் திணைக்களம் நேற்று அறிவித்தது. 102 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் 2378 பேர் போட்டியிடுகின்றனர்.

இம்முறை தேர்தலில் 38 கட்சிகளும் 23 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐ. தே. க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், புதிய இடதுசாரி முன்னணி, சோசலிச சமத்துவக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி அடங்லாக 17 கட்சிகளும் 13 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐ. தே. க. முஸ்லிம் காங்கிரஸ் அடங்கலான 11 கட்சிகளும் 4 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட உள்ளன.

களுத்துறை மாவட்டத்தில் ஐ. ம. சு. முன்னணி, ஐ. தே. க., முஸ்லிம் காங்கிரஸ் அடங்கலான 10 கட்சிகளும் 6 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட உள்ளன. 07 கட்சிகள் 6 சுயேச்சை குழு நிராகரிப்பு கொழும்பு மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளும் 07 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்தன. கொழும்பு பதில் தெரிவத்தாட்சி அதிகாரி ஆர். எம். ஏ. எல். ரத்னாயக்க முன்னிலையில் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

இதன்போது இரண்டு கட்சிகளினதும் 3 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஈழவர் ஜனநாயக முன்னணி, ஐக்கிய இலங்கை ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளினதும் எம். அன்பழகன், பி. பன்னீர்ச் செல்வன், விஜே குணவர்த்தன தலைமையிலான சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகளும் 6 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்தன. இதில் 3 அரசியல் கட்சிகளினதும் 2 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி, ஐக்கிய இலங்கை ஜனநாயகக் கட்சி, ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி ஆகிய கட்சிகளினது வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டதாக கம்பஹா உதவித் தேர்தல் ஆணையாளர் மொஹமட் தெரிவித்தார்.

களுத்துறை மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளும் 7 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்தன. இதிலே 2 அரசியல் கட்சிகளதும் ஒரு சுயேச்சைக் குழுவினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பூமிபுத்ர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய கட்சிகளின் வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.

இம்முறை தேர்தலில் ஐ. ம. சு. முன்னணியில் இ. தொ. கா., மலையக மக்கள் முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி, ஐ. தே. க. (ஜனநாயகக் குழு), கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, மக்கள் கட்சி அடங்கலான பல கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.

கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளராக சுனில் ஜெயமினியும் கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளராக பிரசன்ன ரணதுங்கவும் களுத்துறை மாவட்ட முதன்மை வேட்பாளராக ரெஜினோல்ட் கூரேயும் போட்டியிடுகின்றனர். ஐ. தே. க. முதன்மை வேட்பாளராக லக்ஷ்மன் அபே குணவர்த்தன போட்டியிடுவதோடு ஜே. வி. பி. முதன்மை வேட்பாளராக துமிந்த தாககமுவவும் முஸ்லிம் காங்கிரஸ் முதன்மை வேட்பாளராக அப்துல் ஹையும் போட்டியிடுகின்றனர். இது தவிர, ஐ. ம. சு. முன்னணி பட்டியலில் அஜ்மல் மெளஜுட், எம். எச். மன்ஸில், நவுஸர் பெளசி, வசந்தா ரோஹினி தேவி, கே. ரி. குருசாமி, செல்லசாமி திருக்கேஷ்வரன், முத்து சங்கரலிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஐ. தே. க. சார்பாக 5 முஸ்லிம்களும் 2 தமிழர்களும் போட்டியிடுகின்றனர். சாஹுல் ஹமீட், எம். எஸ். எம். பைரூஸ், அப்துர் ரஹுமான் முஹம்மது முயீஸ், ஏ. ஜே. எம். முஸம்மில், துஆன் ஆமித், கிருஷாந்தா யோகதாஸ், குமர குருபரன் ஆகியவர்களே போட்டியிடுபவர்களாவர்.களுத்துறை மாவட்டத்தில் எம். எம். எம். அம்ஜாத், அம்ராஸ் மஜீத், தங்கராஜா ஜயராஜ் ஆகிய சிறுபான்மையினரும் கம்பஹா மாவட்டத்தில் சலீம் முஹம்மது சதாவுல்லா, கே. புஷ்பராஜ் ஆகியோர் ஐ. ம. சு. முன்னணியில் போட்டியிடுகின்றனர்.

களுத்துறை மாவட்ட ஐ. தே. க. முதன்மை வேட்பாளராக கித்சிறி கஹடபிடியவும், ஜே. வி. பி. முதன்மை வேட்பாளராக டாக்டர் நன் ஜெயதிஸ்ஸவும், மு. கா. சார்பாக எம். அஸ்லமும் போட்டியிடுகின்றனர்.

கம்பஹா மாவட்ட ஐ. தே. க. முதன்மை வேட்பாளராக மாதிவலயும் ஜே. வி. பி. சார்பாக வருணா தீப்தி ராஜபக்ஷவும் மு. கா. சார்பாக சாபி ரஹீமும் போட்டியிடுகின்றனர்.

முதலமைச்சர் வேட்பாளர்

ஐ. ம. சு. முன்னணி சார்பாக இம்முறை முதலமைச்சர் வேட்பாளர் எவரும் நிறுத்தப்படவில்லை. கட்சி இது குறித்து பின்னர் முடிவு செய்யும் என அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் கூறினார். ஐ. தே. க. வும் இம்முறை முதலமைச்சர் வேட்பாளர் எவரையும் அறிவிக்கவில்லை. கூடுதல் விருப்பு வாக்கு பெறுபவர் முதலமைச்சராக நிய மிக்கப்படுவாரென ஐ. தே. க. கூறியது.

வவுனியா-யாழ்ப்பாணம் வீதி புனரமைக்கப்பட்டு விரைவில் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் ஏக்கநாயக்க

bus.jpgஏ9 பாதை தற்போது படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதால் விரைவில் அவ்வீதியூடாக தெற்கில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படுமென பெருந்தெருக்கள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க தெரிவித்தார். தெஹியோவிட்டவில் இருந்து தெரணியகலைக்குச் செல்லும் வீதியை 11 கோடி ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட பின்னர் அதனை திறந்து வைத்துப் பேசும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.தொடர்ந்து பேசிய அமைச்சர்;

இந்த நாட்டில் அதிவேக பாதைகளின் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து செயல்படுத்திவருவது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசே, அதன்படி வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையுமான ஏ9 வீதியை அதிவேக பாதையாக அபிவிருத்தி செய்யப்பட்டு சில மாதங்களில் அந்த வேலை பூர்த்தியானதும் தெற்கில் இருந்து வடக்கே பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படும். இந்த வீதி திறக்கப்பட்டு போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டதும் வடக்கே தெற்கு உறவுகள் அபிவிருத்தியடையும்.

இதன் மூலம் வடபகுதி மக்களின் தென்பகுதி பிரயாணக் கஷ்டம் நீக்கப்பட்டுவிடும். வடபகுதிக்கும் பொருட்களை இலகுவாக தரைமார்க்கமாக எடுத்துச் செல்லவும் முடியும். வடபகுதி உற்பத்தி பொருட்களையும் தெற்கே எடுத்துவருவதற்கும் வழி ஏற்படுகிறது. பல வருடங்களாக இந்த வீதி மூடப்பட்டிருந்ததால் வடபகுதி மக்கள் கஷ்டப்பட்டனர்.

நாட்டில் 2,500 பாலங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதற்கு பிரிட்டிஷ் அரசு நிதி உதவி அளித்துள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில்தான் நாட்டில் அபிவிருத்தி வேலைகள் நடைபெறுகின்றன. ஒருபுறம் யுத்தம் நடைபெறுகின்ற போதிலும் மறுபுறம் அபிவிருத்தி வேலைகளும் எதுவித தடையுமின்றி நடைபெறுகின்றன என்றார்.

திசைமாறிய 40 குடும்ப உறவுகள் ஒன்றிணைவு. வவுனியா நிவாரண கிராமத்தில் நிகழ்வு.

Wanni_Warபுலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்து வெவ்வேறு இடங்களில் பிரிந்து தங்கியிருந்த 40 குடும்பங்களின் அங்கத்தவர்கள் ஒன்றிணைக்கப் பட்டுள்ளனர்.பல்வேறு வழிகள் ஊடாகத் தப்பிவந்தபோது, வெவ்வேறான நலன்புரி நிலையங்களில் தங்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியிருந்தவர்களே இவ்வாறு ஒன்று சேர்ந்துள்ளதாக மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஒன்றிணைந்த இந்த 40 குடும்பங்களும் தற்போது வவுனியா- செட்டிக்குளம் மனிக் பாமில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கதிர்காமர் நிவாரணக் கிராமத்தில் தங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். செட்டிக்குளம் மற்றும் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 13 நலன்புரி நிலையங்களிலிருந்த போது, இந்தக் குடும்ப அங்கத்தவர்கள் கண்டறியப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

மோதல் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களுள் மனிக்பாம் கதிர்காமர் நிவாரண கிராமத்தில் 2825 பேரும், அருவித்தோட்டம் வித்தியாலயத்தில் 582 பேரும் செட்டிக்குளம் வித்தியாலயத்தில் 1965 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம், பம்மைமடு, காமினி வித்தியாலயம், பூந்தோட்டம், கல்வியியற் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, கோவில் குளம் இந்து வித்தியாலயம், வவுனியா மத்திய மகா வித்தியாலயம், சைவப்பிரகாச பாட சாலை ஆகிய நலன்புரி நிலையங்களில் 26809 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் 13 நலன்புரி நிலையங்களில் 32, 181 பேர் தங்கியுள்ளதாகக் கூறிய அமைச்சர் பதியுதீன், கிழக்கு மாகாணத்தில் மீள் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டதைப் போன்று வடக்கிலும் துரிதமாக மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இவர்கள் தொடர்ந்தும் நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்படமாட்டார்கள் என்றும், விரைவில் அவர்களின் சொந்தக் கிராமத்தில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தாய், தந்தையரின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் சந்திரிகா நடந்துகொள்ள வேண்டும் – அமைச்சர் அதாவுட

athauda-senavi.jpgதாய், தந்தையரின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நடந்துகொள்ள வேண்டுமென தொழில் அமைச்சர் அதாவுட செனவிரத்ன தெரிவித்துள்ளார். மாவனல்ல பகுதியில் நடைபெற்ற வைபமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் வேளையில் சந்திரிகாவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கை குறித்து சர்வதேச மட்டத்தில் பாதகமான விமர்சனங்களை முன்வைத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் காணப்படும் தனிப்பட்ட கோபம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சிரேஷ்ட அரசியல் தலைவர்களாகப் போற்றப்படும் பண்டார நாயக்கா மற்றும் சிறிமாவோ அம்மையாரின் புதல்வி என்ற ரீதியில் சந்திரிகா பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவிலிருந்து மேலும் 400 நோயாளர்களை திருமலை அழைத்துவர ஏற்பாடு

trico.gifமுல்லைத் தீவில் புலிகள் இயக்கத்தினரின் பிடியில் சிக்குண்டுள்ள மேலும் 400 நோயாளர்களை நாளை சனிக்கிழமை திருகோணமலைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் மருத்துவ சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் விமல் ஜயந்த நேற்று தெரிவித்தார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியோடு கப்பல் மார்க்கமாக இவர்களை அழைத்து வரவிருப்பதாகவும் அவர் கூறினார். முல்லைத்தீவில் புலிகள் இயக்கத்தினரின் பிடியில் சிக்கி இருந்த 1996 நோயாளர்கள் ஐ. சி. ஆர். சி. யின் உதவியோடு ஏற்கனவே திருமலைக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு அழைத்து வரப்படும் நோயாளர்களும், காயப்பட்டவர்களும் திருமலை, ஆஸ்பத்திரிக்கு மேலதிகமாக கந்தளாய், பொலன்னறுவை, மன்னார், வவுனியா ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து வந்து சேர்ந்துள்ள பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சேவையை வழங்கவென மன்னார், வவுனியா, செட்டிக்குளம், திருமலை, கந்தளாய் ஆகிய ஆஸ்பத்திரிகளில் பணியாற்றவென 35 டாக்டர்களும், 120 தாதியரும், 15 மருத்துவ நிபுணர்களும் மேலதிகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு வவுனியாவில்அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொருநிவாரணக் கிராமத்திற்கும் ஒரு பொது சுகாதார பரிசோதகரும், ஒரு மருத்துவ மாதுவும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுக் கூறினார்.

படையினரிடம் சரணடைவதைத் தவிர்க்க பிரபாகரன் படகு மூலம் தப்பிக்கலாம் – பாதுகாப்புச் செயலர்

gothabaya.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் படையினரிடம் சரணடைவதைத் தவிர்த்துக் கொள்வதற்காக படகின் மூலம் தப்பிச் செல்லலாமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவ்வாறு பிரபாகரன் தப்பிச் செல்வதை முறியடிப்பதற்காக கடற்பகுதியில் கடுமையான பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோதாபய ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்;

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் ஏனைய உயர் மட்டத் தலைவர்களையும் பாதுகாப்பதற்காக 70 ஆயிரம் பொதுமக்களை புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர். விடுதலைப் புலிகளின் தலைவரும் ஏனைய அதிகாரிகளும் படகு மூலம் தப்பிக்கலாம் என்ற காரணத்தினால் கடற்படையினரின் கண்காணிப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், படகு மூலம் தப்பிச் செல்வது கடினமானதாக இருந்தாலும் அவ்வாறு தப்பிப்பதற்குச் சாத்தியம் உள்ளது. தற்போது முல்லைத்தீவிலேயுள்ள பிரபாகரன் தற்கொலை செய்து கொள்வாரா அல்லது சரணடைவாரா எனத் தெரியவில்லை.

30 வருட கால யுத்தத்தின் பின்னர் பிரபாகரன் சயனைட் உட்கொள்வார் என்று கூட நாம் நினைக்கவில்லை. நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஆட்கடத்தல் நடவடிக்கையை கூட பிரபாகரன் எதிர் பார்த்திருக்கலாம் அதுதான் சாத்தியமானதொரு தெரிவாகவும் உள்ளது. பிரபாகரனும் உயர்மட்டத் தலைவர்களில் 40 அல்லது 50 பேரும் நாட்டை விட்டு வெளியேறிய பின்னரேயே பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுவதற்கு புலிகள் அனுமதி வழங்குவரெனவும் தெரிவித்தார்.

தமிழகத்திற்கு அகதிகளாக வந்த சிங்கள காதல் ஜோடி இலங்கை தூதரிடம் ஒப்படைப்பு

tamilnadu.jpgஅகதி களோடு வந்து கைதாகி தற்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சிங்கள காதலர்களை இலங்கை தூதரிடம் ஒப்படைக்க பொலிஸார் சென்னை அழைத்து சென்றனர். தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் கடந்த 2008 டிசம்பர் 20 ஆ ம் திகதி படகில் வந்திறங்கிய வவுனியாவை சேர்ந்த அகதிகளுடன் இலங்கை கொழும்பு நகர் மகரகம பகுதியை சேர்ந்த சிங்கள இளைஞர் துஷாரா சந்தனா (வயது 30) கடுவத்தை பகுதியை சேர்ந்த பெண் தாரகா தில்கானி (வயது 17) ஆகிய இருவரும் அகதிகளாக வந்தனர்.

சிங்கள மொழி தவிர வேறு மொழி தெரியாத இருவரையும் வவுனியா கோவில் புதுக்குளத்தை சேர்ந்த வசந்தமாலா (49 வயது) அழைத்து வந்ததாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்தது. காதலர்களான பாடசாலை மாணவி தாரகா தில்கானியும், வாகன சாரதியான துஷாரா சந்தனாவும் பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால் இருவரும் வவுனியா வந்து அங்கிருந்து படகில் அகதிகளாக வந்தனர்.

எவ்வித ஆவணங்களும் இல்லாமல் சட்டத்துக்கு புறம்பாக இவர்கள் இராமேஸ்வரம் வந்ததால் இருவரையும் பொலிஸார் கைதுசெய்து மதுரை சிறையில் அடைத்தனர். தற்போது இருவரும் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னை இலங்கை தூதரிடம் ஒப்படைக்க இராமேஸ்வரம் பொலிஸார் இவர்களை சென்னைக்கு அழைத்து சென்றனர்

சார்க் வலய நாடுகளின் கல்வி, உயர் கல்வி அமைச்சர்களது மாநாடு!

vishva-warnapala.jpgசார்க் வலய நாடுகளின் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர்களின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். தெற்காசிய உயர்கல்விக் கொள்கை மற்றும் நுட்பங்கள் என்ற தொனிப்பொருளிலான இந்த மாநாட்டை எதிர்வரும் மார்ச் மாதம் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடத்தவும் அதற்கென 20 மில்லியன் ரூபாவை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈராக்கில் மீண்டும் இலங்கைத் தூதரகம்!

rohitha-bogollagama.jpgஈராக்கின் தலைநகர் பக்தாத் நகரில் இலங்கைத் தூதரகத்தைத் மீண்டும் திறப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.

இலங்கைக்கும் ஈராக்குக்கும் இடையிலான இராஜதந்திர உறவு 1962 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டதுடன் 2003 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக ஈராக்குக்கான இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது.மீண்டும் தூதரகத்தைத் திறப்பதற்கு இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் டொலரை ஒதுக்கவும் அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.