முல்லைத் தீவில் புலிகள் இயக்கத்தினரின் பிடியில் சிக்குண்டுள்ள மேலும் 400 நோயாளர்களை நாளை சனிக்கிழமை திருகோணமலைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் மருத்துவ சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் விமல் ஜயந்த நேற்று தெரிவித்தார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியோடு கப்பல் மார்க்கமாக இவர்களை அழைத்து வரவிருப்பதாகவும் அவர் கூறினார். முல்லைத்தீவில் புலிகள் இயக்கத்தினரின் பிடியில் சிக்கி இருந்த 1996 நோயாளர்கள் ஐ. சி. ஆர். சி. யின் உதவியோடு ஏற்கனவே திருமலைக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு அழைத்து வரப்படும் நோயாளர்களும், காயப்பட்டவர்களும் திருமலை, ஆஸ்பத்திரிக்கு மேலதிகமாக கந்தளாய், பொலன்னறுவை, மன்னார், வவுனியா ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து வந்து சேர்ந்துள்ள பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சேவையை வழங்கவென மன்னார், வவுனியா, செட்டிக்குளம், திருமலை, கந்தளாய் ஆகிய ஆஸ்பத்திரிகளில் பணியாற்றவென 35 டாக்டர்களும், 120 தாதியரும், 15 மருத்துவ நிபுணர்களும் மேலதிகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு வவுனியாவில்அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொருநிவாரணக் கிராமத்திற்கும் ஒரு பொது சுகாதார பரிசோதகரும், ஒரு மருத்துவ மாதுவும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுக் கூறினார்.