ஏ9 பாதை தற்போது படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதால் விரைவில் அவ்வீதியூடாக தெற்கில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படுமென பெருந்தெருக்கள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க தெரிவித்தார். தெஹியோவிட்டவில் இருந்து தெரணியகலைக்குச் செல்லும் வீதியை 11 கோடி ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட பின்னர் அதனை திறந்து வைத்துப் பேசும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.தொடர்ந்து பேசிய அமைச்சர்;
இந்த நாட்டில் அதிவேக பாதைகளின் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து செயல்படுத்திவருவது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசே, அதன்படி வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையுமான ஏ9 வீதியை அதிவேக பாதையாக அபிவிருத்தி செய்யப்பட்டு சில மாதங்களில் அந்த வேலை பூர்த்தியானதும் தெற்கில் இருந்து வடக்கே பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படும். இந்த வீதி திறக்கப்பட்டு போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டதும் வடக்கே தெற்கு உறவுகள் அபிவிருத்தியடையும்.
இதன் மூலம் வடபகுதி மக்களின் தென்பகுதி பிரயாணக் கஷ்டம் நீக்கப்பட்டுவிடும். வடபகுதிக்கும் பொருட்களை இலகுவாக தரைமார்க்கமாக எடுத்துச் செல்லவும் முடியும். வடபகுதி உற்பத்தி பொருட்களையும் தெற்கே எடுத்துவருவதற்கும் வழி ஏற்படுகிறது. பல வருடங்களாக இந்த வீதி மூடப்பட்டிருந்ததால் வடபகுதி மக்கள் கஷ்டப்பட்டனர்.
நாட்டில் 2,500 பாலங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதற்கு பிரிட்டிஷ் அரசு நிதி உதவி அளித்துள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில்தான் நாட்டில் அபிவிருத்தி வேலைகள் நடைபெறுகின்றன. ஒருபுறம் யுத்தம் நடைபெறுகின்ற போதிலும் மறுபுறம் அபிவிருத்தி வேலைகளும் எதுவித தடையுமின்றி நடைபெறுகின்றன என்றார்.