அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

சட்ட விதிகளுக்கு முரணாக இயங்கிய மருந்தகங்கள் பல கண்டுபிடிப்பு

சட்ட விதிமுறைகளுக்கு முரணாக இயங்கி வந்த மருந்து விற்பனை நிலையங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்து ஒழுங்காக்கல் அதிகார சபை தெரிவித்துள்ளது.  நவீன சந்தைத் தொகுதிகள் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் உட்பட மொத்தம் 15 நிலையங்களில் மேற் கொள்ளப்பட்ட தேடுதலிலேயே 14 விற்பனை நிலையங்கள் சட்ட விதிகளுக்கு முரணாக இயங்கிவந்தமை தெரிய வந்துள்ளதாக தேசிய மருந்து ஒழுங்காக்கல் அதிகார சபையின் தலைவர் பி.வி.எஸ்.எச். பெனரகம தெரிவித்துள்ளார்.

பொரலஸ்கமுவ, கொகுவல ஆகிய இடங்களில் மேற் கொள்ளப்பட்ட இத் தேடுதலில் சிரேஷ்ட மருந்து தயாரிப்பாளர் உணவுப் பரிசோதகர் மருந்துக்கலவை உத்தியோகத்தர் உள்ளடங்கலாக இரு குழுக்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டன.

இத்தேடுதலின் போது 15 விற்பனை நிலையங்களில் ஒரு மருந்தகம் மாத்திரம் ஒழுங்கு விதிகளுக்கமைவாக உரிய பதிவுகள் மற்றும் அனுமதிப்பத்திரம் என்பவற்றைக் கொண்டிருந்ததாக டாக்டர் பெனரகம தெரிவித்தார்.

உரிய தகைமைகளைக் கொண்டிராத ஊழியர்களை மருந்து விற்பனையில் ஈடுபடுத்தியமை மருந்துக்கம்பனிகளால் வைத்தியர்களுக்கு மருந்தின் மாதிரிகள் இலவசமாக அனுப்பிவைக்கப்பட்டிருந்தமை ,காலாவதியான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டமை , வைத்தியரின் மருந்து அறிக்கை இல்லாது மருந்துகளை விற்பனை செய்தமை போன்ற முறை கேடுகள் தேடுதலின் போது தெரிய வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் 1980 ஆம் ஆண்டின் அழகு சாதனங்கள் மற்றும் மருந்துகள் சட்டத்தின் கீழ் இந்த நிலையங்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான தேடுதல் பணிகளை நாடுமுழுவதும் மேற் கொள்வதற்கு அதிகார சபை எதிர் பார்க்கின்றது. ஆனால். இப்பணியை முன்னெடுப்பதற்கான ஊழியர் பற்றாக்குறையினை அதிகாரசபை எதிர் நோக்குவதாக பெனரகம மேலும் குறிப்பிட்டார்.

எனினும் இவ்வாறான முறை கேடுகள் தொடர்பாக தினந்தோறும் நூற்றுக் கணக்கான முறைபாடுகள் பொதுமக்களிடமிருந்து எமக்குக் கிடைத்து வருவதால் தற்போதுள்ள ஊழிய வளத்தைக் கொண்டு நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தேடுதல்களை முன்னெடுப்பதற்கு தாம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து 20 லொறிகளில் 260 மெ.தொ.உணவு பொருட்கள் கொழும்பு வருகை

a9-food.jpg
யாழ்ப்பாணத்திலிருந்து 260 மெற்றிக் தொன் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக் கொண்டு 20 லொறிகள் இன்று கொழும்பு புறப்படுமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஷ் தெரிவித்தார். வெங்காயம், பீற்றூட், கடுவாடு, இறால் உட்பட அத்தியாவசிய உற்பத்திப் பொருட்கள் இந்த லொறிகளில் ஏற்றப்படுவதாக அவர் கூறினார்.

ஏ-9 வீதியினூடாகவே இந்த லொறிகள் பயணம் செய்யும். வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ், 20 லொறிகளில் யாழ்ப்பாணத்திற்கு உணவுப் பொருட்கள் வியாழனன்று கொண்டு செல்லப்பட்டன. அதே லொறிகளிலேயே கொழும்புக்கு பொருட்கள் அனுப்பப்படுகின்றன. யாழ். குடா வர்த்தகர்களுக்கென கொண்டு செல்லப்பட்ட மேற்படி பொருட்களை விடவும் பெருமளவு பொருட்கள் கொழும்புக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.

தனியாருக்கு அத்தியாவசிய பொருட்கள் பெருமளவில் வந்து சேர்ந்துள்ளமையினால் விலைகளில் பாரிய மாற்றம் ஏற்படுமென யாழ். வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் யாழ். நகரம் கோப்பாய், மிருசுவில், கொடிகாமம், கைதடி ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 5400 பேர் வந்துள்ளனர். இவர்கள் அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

கட்டட நிர்மாணங்களுக்கு கடல் மணலை உபயோகிக்கும் திட்டம் ரூ. 2850 மில். செலவில் சுத்திகரிப்பு நிலையம்

கட்டட நிர்மாணங்களுக்கென ஆற்று மணலுக்கு பதிலாக கடல் மணலை உபயோகப்படுத்துவதற்கு ஏதுவாக ஹங்கேரி அரசு 2850 மில்லியன் ரூபா செலவில் புதிய மணல் சுத்திகரிப்பு நிலையமொன்றை இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளது. கடல் மணலை சுத்திகரிப்பு செய்து கட்டட நிர்மாணப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடிய பாரிய வேலைத்திட்டம் களுத்துறையில் அமையவுள்ளது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

ஆற்றுமணல் அகழ்வினால் சூழல் மாசடைகிறது என்ற காரணத்தினால் ஆற்றுமணல் அகழ்வு தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மணலின் விலை அதிகரித்துள்ளது. எனினும் தொடர்ந்தும் கட்டட நிர்மாணப் பணிகளுக்கான மணலின் கேள்வியும் அதிகரித்துள்ளது.

இதனை போக்கும் வகையிலேயே ஹங்கேரி அரசின் உதவியுடன் கடல் மணல் சுத்திகரிப்புக்கான பாரிய தொழிற்சாலை அமையவுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட வேலைகளும் முடிவடைந்துள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

திருமலையில் பேக்கரிகளைத் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி

foods.jpg
திருகோணமலை நகர பிரதேசத்தில் மூடப்பட்டுள்ள பேக்கரிகளை 27 முதல் மீண்டும் திறப்பதற்கு நிபந்தனைகளுடன் நகர சபை அனுமதி அளித்துள்ளது. நகர சபை மண்டபத்தில் பேக்கரி உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நகர சபைத் தலைவர் எஸ்.கௌரி முகுந்தன் தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பேக்கரிகளில் தயாரிக்கப்பட்ட உணவு நஞ்சான சம்பவத்தையடுத்து, அவை சீல் வைக்கப்பட்டன. குறிப்பிட்ட இரண்டு பேக்கரிகளைத் தவிர ஏனையவற்றைத் திறப்பதற்கே நேற்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அனுமதியளிக்கப்பட்ட பேக்கரி உரிமையாளர்களிடம் மறு அறிவித்தல் வரை மரக்கறி பனிஸ், முட்டை பனிஸ்,சீனி சம்பல் பனிஸ் போன்ற தயாரிப்புகளை தவிர்த்துக் கொள்ளுமாறு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் பேக்கரிகளில் தயாரிக்கப்பட்ட உணவு நஞ்சானதன் காரணமாக மரணமடைந்ததாக சந்தேகிக்கப்படும் 62 வயது மீனவரின் உடலின் சில பகுதிகளை கொழும்பிலுள்ள பிரதம சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்க இருப்பதாக திருகோணமலை சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் காமினி குமாரதுங்க தெரிவித்தார்.

கலாமுக்கு ஹோவர் மெடல்: அமெரிக்கா வழங்குகிறது

அமெரிக்காவில் உள்ள 5 என்ஜினீயர்கள் அமைப்புகள் சேர்ந்து ஒரு கமிட்டியை அமைத்து உள்ளன. அந்த அமைப்பின் சார்பில் உலக அளவில் சிறந்த மனிதாபிமான சேவை, தன்னலமற்ற பணி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் என்ஜினீயர்களுக்கு, ஆண்டு தோறும் ‘ஹோவர் மெடல்” வழங்கி வருகிறது.

இதில் 2008-ம் ஆண்டுக்கான ஹோவர் மெடலுக்கு, இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாக, நியூயார்க் நகரில் அறிவிக்கப்பட்டது. இந்த விருதை பெறும் முதல் இந்தியர் இவரே. விருது வழங்கும் விழா, ஏப்ரல் 28-ந் தேதி நடைபெறுகிறது.

ஐ. ம. சு. மு வேட்பாளர் இராஜரட்னத்தின் அலுவலகம் மீது தாக்குதல்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் கலாநிதி ரி. சீ. ராஜரட்னத்தின் அலுவலகம் இனந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலதிக பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாக வேட்பாளர் ராஜரட்னம் நேற்று தெரிவித்தார். பம்பலப்பிட்டி சாகர வீதியிலமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.

தனக்கு அநாமதேய தொலைபேசி அழைப்புகள் கொடுத்த பெண் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் நாரஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக கூறிய அவர் தொடர்ந்தும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். 25 இரவு சுமார் 10 மணிக்கும் 11 மணிக்கும் இடையே சிலர் வந்து அலுவலகம் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர். பாதுகாப்பு கடமையிலீடுபட்டிருந்த அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் இச் சம்பவம் தொடர்பாக உரிய இடத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறினார்.

ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கும் இது தொடர்பாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் ரி சி. ராஜரட்னம் தெரிவித்தார். தொடர்ச்சியாக தனக்குள்ள அச்சுறுத்தல் காரணமாக தனது மகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் டாக்டர் ரி. சி. ராஜரட்னம் மேலும் தெரிவித்தார்.பொதுசன ஐக்கிய முன்னணி சார்பில் கொழும்பில் போட்டியிடும் குறிப்பாக அரசின் சார்பில் போட்டியிடும் தமிழ் உறுப்பினர் தான் என்பதால் அதனை பொறுக்காத சிலரே இவ்வாறு நடந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

காதல் தகராறு பெண் பொலிஸை சுட்ட கான்ஸ்டபிள் சுட்டுக்கொலை

pisto.jpgகொழும்பு,  நாரஹேன்பிட்டியிலுள்ள பொலிஸ் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூட்டை நடத்திய கான்ஸ்டபிள் ஒருவர் விஷேட அதிரடிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது;

பொலிஸ் ஆஸ்பத்திரியின் மூன்றாம் மாடியிலுள்ள பெண்கள் வார்ட்டினுள் ரி56 ரக துப்பாக்கியுடன் நுழைந்த கான்ஸ்டபிள் ஒருவர், முதலில் அங்கு பாதுகாப்புக் கடமையிலிருந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். ஆயுதத்துடன் வந்த இவர் தன்னை இலக்கு வைப்பதை அவதானித்த அந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் அவர் துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கிடையில் மூன்றாவது மாடி ஜன்னல் ஊடாக 2 ஆவது மாடிக்கு குதித்துள்ளார்.

இதேநேரம், அந்த கான்ஸ்டபிள் அங்கு வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் கான்ஸ்டபிள் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். இதனால், அந்த பெண் கான்ஸ்டபிள் கையில் படுகாயமடைந்துள்ளார். இதையடுத்து, அவ்விடத்திற்கு விஷேட அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டனர். அங்கு வந்த அதிரடிப்படையினர் 3 ஆவது மாடியிலிருந்த வார்ட்டினுள் நுழைந்து அந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி அவரை அவ்விடத்திலேயே கொன்றுள்ளனர்.

ஆஸ்பத்திரியின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவரே, வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் கான்ஸ்டபிளுடனான காதல் தகராறால் இவ்வாறு நடந்துகொண்டதாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் கான்ஸ்டபிள் உடனடியாக அவசர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது : எஸ்.பி. திசாநாயக்க

spdesanayaka.jpg“இன்று உலகில் ஏற்பட்டுள்ள உலக பொருளாதார நெருக்கடியினால் பல நாடுகள் பாரிய சிக்கலை எதிர்நோக்கி வருகின்றன. நம் நாடு இன்று 3.5 சதவீத வளர்ச்சியையே கண்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 5 வருட காலத்தில், 2005 ஆம் வருடம் 4.4 சதவீத வளர்ச்சியும், 2006 இல் 4.5 சதவீத வளர்ச்சியும், 2009இல் 4.9 சதவீத வளர்ச்சியும், 2008 ஆம் ஆண்டு 4.1 சதவீத வளர்ச்சியும் ஏற்பட்டிருந்தது. 2009இல் பொருளாதார வளர்ச்சியில் பாரிய வீழ்ச்சியே ஏற்பட்டுள்ளது.”

ஐ.தே.க.நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது :

“சி. டி. ஸ்மித் எனப்படும் கொழும்பு பங்குச்சந்தை தரகர்கள் அமைப்பின் அறிக்கையின் பிரகாரம் கொழும்பு பங்கு சந்தையில் பதிவாகியிருந்த கம்பனிகளின் அதாவது வங்கிகள், வர்த்தக தாபனங்களின் இலாபம் 61 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. அதேவேளை 2007 ஆம் ஆண்டு 3341 டொலர்களாக காணப்பட்ட ஏற்றுமதிக்கான வருமானம், இன்று 1000 அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளது.

இலங்கைக்கு இரண்டாவதாக இலாபத்தை ஈட்டித்தரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பினால் பெறப்படும் அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளது. 2006 தொடக்கம் 2008 வரையில் 16 லட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புப் பெற்றிருந்தனர். அவர்களுள் 3 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்து மீண்டும் இலங்கை திரும்பியுள்ளனர்.

2502 அமெரிக்க டொலர் மட்டுமே வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் பெறப்பட்ட அந்நிய செலாவணியாக உள்ளது. அதாவது மத்திய நாடுகளில் வேலைவாய்ப்புப் பெற்றவர்களின் இலாபமாக இருந்தது . மலேசியா , தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணி 20 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.

2002- 2004 வரையான, அதாவது ஐ.தே.கவின் காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் பணவீக்கம் 4.4 சதவீதமாகவே காணப்பட்டது. அதன் பிறகு தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் பல நாணயங்கள் அச்சிடப்பட்டன. எனவே பணத்தின் சுற்றோட விகிதம் அதிகரித்து, பணத்தின் பெறுமதி குறைந்தது.

பணவீக்க வீதத்தைக் கட்டுப்படுத்தி விட்டதாக அரசு கூறுகிறது. உலகில் பல பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளன. உலக நாடுகளின் பணவீக்கத்துடன் ஒப்பிடும் போது எமது நாட்டின் பணவீக்கம் இன்னும் குறைவடையவில்லை. பணவீக்கம் குறைவடையும் போது ஏற்படும் இலாபத்தை அரசு மக்களுக்கு வழங்கவில்லை.

உலகின் பொருளாதார நெருக்கடி இலங்கையைப் பாதிக்கவில்லை எனக் கூறப்பட்டாலும் சிலவற்றில் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களான நுரைச்சோலை அனல் மின் நிலையம், அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி, கொத்மலை நீர் தேக்கத்திட்டம் போன்றவற்றின் செயற்பாடுகள் தாமதத்தை ஏற்படுத்தி உள்ளன.

விவசாயத்துறை, சுற்றுலாத்துறை போன்றவை பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளன. அவற்றை மீண்டும் கட்டியெழுப்ப சில காலங்கள் செல்லலாம். அரசு தேர்தலை நடத்தவும் மற்றும் பல அரச தேவைகளுக்காகவும் வங்கிகளிடமிருந்து அதிகளவிலான கடன்களைப் பெற்றுள்ளது . இத்தகைய செயற்பாட்டினை அரசு குறைத்துக் கொள்ள வேண்டும். வங்கி வட்டி வீதங்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும். அரசு மக்களுக்கு உண்மை நிலையை அறியத் தர வேண்டும். நாட்டில் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் பொருளியல் ஆய்வாளர்கள் உள்ளனர். அவர்களினூடாக மக்களுக்கு உண்மைத் தன்மையை அரசு வெளிப்படுத்த வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார். 

புலிகள் நடமாட்டம் குறித்து உன்னிப்பாக அவதானிக்க தாய்லாந்திடம் இலங்கை கோரிக்கை.

thai.jpgவிடுதலைப் புலிகள் கொழும்புக்கு எதிராக தாய்லாந்தை பயன்படுத்துவதனை தடுப்பதற்கு அவர்களது நடமாட்டங்களை உன்னிப்பாக அவதானிக்குமாறு இலங்கை அந்நாட்டிடம் கோரியுள்ளதாக தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தாய்லாந்து வெளிவிவகார அமைச்சரான ஹஸிட் பிரேமயாவை நேற்று வியாழக்கிழமை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம சந்தித்த போதே இந்த கோரிக்கையை விடுத்திருக்கிறார்

நடப்பாண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் அட்டவணை வெளியீடு

ipl-images.jpgதென் ஆப்ரிக்காவில் அறிவிக்கப்பட்டுள்ள நடப்பாண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) இருபது-20 கிரிக்கெட் தொடரின் துவக்கப் போட்டி ஏப்ரல் 18ஆம் தேதி துவங்கி மே 24ஆம் தேதி நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் துவக்கப் போட்டி கேப்டவுனிலும், இறுதிப்போட்டி ஜோஹன்னஸ்பர்க் நகரிலும் நடக்கிறது. அரையிறுதிப் போட்டிகள் மே 22ஆம் தேதி பிரிடோரியாவிலும், மே 23ஆம் தேதி ஜோஹன்னஸ்பர்க் நகரிலும் நடத்தப்பட உள்ளன.

இந்தாண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் மொத்தம் 59 போட்டிகள் நடக்கும் என்றும், இவை கேப்டவுன், ஜோஹன்னஸ்பெர்க், டர்பன், பிரிடோரியா, ஈஸ்ட் லண்டன், கிம்பெர்லி, ப்லோம்ஃப்ன்டெய்ன், போர்ட் எலிசபெத் ஆகிய நகரங்கள் நடத்தப்படும் என்றும் ஐ.பி.எல் வெளியிட்டுள்ள போட்டி அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் டர்பனின் கிங்ஸ்மெய்ட் மைதானத்தில் 16 போட்டிகளும், பிரிடோரியாவின் செஞ்சுரியன் மைதானத்தில் 12 போட்டிகளும், ஜோஹன்ன்ஸ்பர்க்கின் வான்டெரர்ஸ் மைதானம், கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் மைதானத்தில் தலா 8 போட்டிகளும், போர்ட் எலிசபெத் நகரின் செயின்ட் ஜார்ஜ் பார்க்கில் 7 போட்டிகளும், ஈஸ்ட் லண்டனில் 4 போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.