அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இலங்கை – இந்தோனேசியா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தீர்மானம்

sri-indo.jpgஇலங்கையும் இந்தோனேசியாவும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவதற்கு தீர்மானித்திருப்பதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்று தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தோனேசியாவின் வெளிவிவகார அமைச்சர் ஹஸன் விராஜீடாவுக்கும் அமைச்சர் போகொல்லாகமவுக்கு மிடையில் நேற்று அமைச்சில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இப்பேச்சுவார்த்தையின் போது இருநாடுகளுக்குமிடை யிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கை கைச்சாத்திடுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாக, செய்தியாளர் மாநாடுடில் அமைச்சர் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது இந்தோனேசியாவின் சார்பாக அமைச்சர் ஹஸன் விராஜீடா வன்யிலிருந்து இடம்பெயர்ந்து ள்ளவர்களுக்காக 500 டொன் அரிசி, இரண்டு டொன் மருந்துப் பொருட்கள் மற்றும் குழந்தைக ளுக்கான உணவுப் பொருட்களை அமைச்சர் போகொல்லாகமவிடம் கையளித்தார்.

இதேவேளை இன்று (30) இலங்கை, இந்தோனேசிய நாடுகளுக்கிடையில் விசா தவிர்ப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருப்பதனையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அமைச்சர் தொடர்ந்தும் கூறுகையில், இரு நாடுகளுக்கிடையில் பல வருடங்களாக நெருங்கிய உறவு காணப்படுகிறது. சர்வதேச ரீதியான மாநாடுகளில் இலங்கை பங்குபற்றிய வேளைகளில் இந்தோனேசியா எமக்கு முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது.

இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கு மிடையிலான பொருளாதார, கலாசார மற்றும் விவசாய ரீதியான உறவுகளை மேம்படுத்துவதற்காக ஆணைக்குழுவொ ன்றை ஸ்தாபிப்பது தொடர்பாகவும் இருநாடுகளுக்குமிடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது குறித்தும் நாம் கலந்துரையாடியுள்ளோம்.

அத்துடன் பயங்கரவாதம் ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு வகையாக உருவெடு க்கிறது. அதற்கு முகம் கொடுக்க தேவையான விதத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தமொன்றை விரைவில் கைச்சாத்திடவுள்ளோம் என்றார்.

இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர் ஹஸன் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையும் இந்தோனேசியாவைப் போன்று அபிவிருத்தியடைந்து வரும் ஒரு நாடாகும். எமது நாடு சுதந்திரம் பெறும் தறுவாயில் இலங்கை எமக்கு மிகவும் நெருங்கிய உதவிகளை முன்னெடுத்துள்ளது.

அதேபோல் இலங்கையின் இறைமையை பாதுகாப்பதற்கு இந்தோனேசியா என்றும் ஒத்துழைப்பு நல்கும். இலங்கையில் உருவாகியுள்ள பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எமது நாடு என்றும் ஆதரவு வழங்காது.

இலங்கையின் படைவீரர்கள் மோதல் களில் வெற்றியீட்டி வருவதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம், எனக் குறிப்பிட்டார். இந்தோனேசிய ஜனாதிபதி இவ்வருடம் இலங்கை வருவாரென தான் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் போகொல்லாகம குறிப்பிட்டார்.

ராஜாங்கனை கிராமம்: புலிகளின் தாக்குதல் முயற்சி முறியடிப்பு

வில்பத்து, ராஜாங்கனை 18ம் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு புலிகள் மேற்கொண்ட முயற்சி முறிய டிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர் நேற்று தெரிவித்தார்.

ஆயுதம் தாங்கிய புலிகள் குழுவொன்று நேற்று அதிகாலை கிராமத்தினுள் புகுந்து தாக்குதல் நடத்த முயன்றதாகவும் பொலிஸாரும், சிவிலி பாதுகாப்புப் படையினரும் இணைந்து மேற் கொண்ட தாக்குதலையடுத்து அவர்கள் தப்பிச் சொன்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிகாலை கிராமத்தினுள் புகுந்த புலிகள் ரி-56 ரக துப்பாக்கியினால் கிராமத்தை நோக்கி சுட்டுள்ளதோடு உடனடியாக செயற்பட்ட பொலிஸாரும் சிவில் பாதுகாப்பு படையினரும் புலிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர். இதனையடுத்து புலிகள் காட்டுப் பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

வில்பத்து பகுதிக்கு மேலதிக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அனுப்ப்பட்டு காட்டுப் பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டு வருவதோடு கிராமங்களின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார். தேடுதலின் போது வெற்றுரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் வெலிகந்த மற்றும் சேருநுவர பகுதிகளுக்குள் புகுந்த புலிகள் பல பொதுமக்களை சுட்டுக்கொலை செய்தமை தெரித்ததே.

கிழக்கு மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கப்படக் கூடாதென கூறுவது தமிழ் பேசும் மக்களுக்கு செய்யும் பெரும் துரோகம் – இரா.துரைரெத்தினம்

thurairetnam.jpgகிழக்கு மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கப்படக்கூடாதென அமைச்சர் வி. முரளிதரன் கூறுவது தமிழ் பேசும் மக்களுக்குச் செய்யும் பெரும் துரோகமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில்;

இலங்கையும் இந்தியாவும் செய்துகொண்ட ஒப்பந்தம் ஊடாகவே தமிழ் மக்களுக்காக இம்மாகாணசபை உருவாக்கப்பட்டது. விரும்பியோ, விரும்பாமலோ நிர்ப்பந்தம் காரணமாக வடக்கு, கிழக்கு பிரிந்து கிழக்கு மாகாணசபை உருவாகியுள்ளது. மாகாண சபைக்கு அதிகாரம் பெறுவதற்காக சகல தமிழ் கட்சிகளும் சகல தமிழ் மக்களும் பிரதிநிதிகளும் குறிப்பாக அமைச்சர் முரளிதரனும் அதிகார பரவலாக்கலுக்காக அயராது உழைக்கவேண்டும்.

நெருக்கடிமிக்க இந்தக்காலகட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் நலன் சார்ந்த அனைத்து கட்சிகளும் தங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளை மறந்து கூட்டுச் சேர்ந்து அதிகார பரவலுக்கான தீர்வுத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அயராது உழைக்கவேண்டும்.

அதிகாரப் பரவலாக்கலுக்குரிய செயற்பாடுகள் தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பேசப்பட்டுக்கொண்டு இருக்கும் இவ்வேளையில், 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் பேசும் மக்களுக்காக போராடியவர் என்று தன்னை தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அமைச்சர் முரளிதரன், கிழக்கு மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கப்படக் கூடாதெனக்கூறுவது கிழக்கு மாகாணத்தில் 7,000 மக்களுக்கு மேல் படுகொலை செய்தமை 2,000 பெண்களுக்கு மேலாவர்களை விதவைகளாக்கியதற்கும் 3,000 த்திற்கு மேற்பட்ட பாடசாலை மாணர்களின் கல்வியை தொடராமல் இடை நிறுத்தியதிற்கும் ஜனநாயகம் அற்ற சூழலை உருவாக்கியமைக்கும் சான்று பகிர்கிறது.

30 வருடங்களுக்கு மேலாக ஒட்டுமொத்தமான தமிழ் பேசும் மக்கள் அனைத்தையும் இழந்த இந்த நிலையில் அமைச்சர் முரளிதரனின் இக் கூற்று அனைத்து தமிழ் மக்களுக்கும் செய்யும் மன்னிக்க முடியாத துரோகமாகும். எனவே இப்படியான அறிக்கைகளை விடுவதைத் தவிர்த்து தமிழ் பேசும் மக்களுக்கான அதிகாரபரவலாக்கலை வென்றெடுப்பதற்கு ஐக்கியப்படுமாறு கேட்டுள்ளார்.

வருகை விஸா துஷ்பிரயோகம் 400 வெளிநாட்டவர்கள் கைது; நாடு கடத்தல்

இலங்கையின் குடிவரவு- குடியகழ்வு சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நானூறு (400) வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார்கள்.

2006ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரையான காலப் பகுதியிலும், இந்த ஆண்டின் முற்பகுதியிலும் இவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தின் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

79 நாடுகளைச் சேர்ந்த உல்லாசப் பயணிகளுக்கு ஒரு மாதம் தங்குவதற்கான வருகை விஸாவுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கி இருந்தது. இவர்கள் விமான நிலையத்தில் வந்திறங்கியதும் இலங்கையில் முப்பது நாட்கள் தங்கி இருப்பதற்கான விஸா வழங்கப்பட்டு வந்தது. அவர்களுடைய தேவையைப் பொறுத்து மேலும் இரண்டு மாதங்கள் விஸா நீடித்துக் கொடுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. என்றாலும் இவர்கள் அதனை துஷ்பிரயோகம் செய்து நாட்டில் சட்ட விரோதமாக தங்கி இருப்பது தெரிய வந்ததையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

இவர்கள் உல்லாச ஹோட்டல்கள், நகைக்கடைகள், கட்டிட நிர்மாணத்துறை, தொழில் நுட்பத்துறை, மசாஜ் நிலையங்கள், கெசினோ கிளப்கள் உட்பட பல இடங்களில் சட்ட விரோதமாகத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதை விடவும் சிலர் போதைப் பொருள் வியாபாரம், வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புதல், விபசாரத்தில் ஈடுபடுதல் உட்பட மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

ஏ9 ஊடாக பொருள் கொண்டு செல்ல தனியார் துறையினருக்கும் அனுமதி

a9-food.jpgயாழ்ப் பாணத்தில் உணவு பொருட்களின் விலைகளை சாதாரணமட்டத்திற்கு கொண்டுவர நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களையும், ஏனைய பொருட்களையும் சாதாரண விலை மட்டத்திற்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைய கொழும்பிலுள்ள தனியார் வர்த்தகத் துறையினர் யாழ்ப்பாணத்திற்குத் தாராளமாகச் சென்று வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான அமைதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி கொழும்பிலுள்ள தனியார் வர்த்தகத் துறையினரை விசேட பேச்சுவார்த்தையொன்றுக்கு வருமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அழைப்பு விடுத்துள்ளார். இந்தச் சந்திப்பு நாளை (31) செவ்வாய்க்கிழமை கொழும்பு உலக வர்த்தக மையக் கட்டடத்தில் நடைபெறும்.

புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்து உற்பத்தி பொருட்களும் தட்டுப்பாடின்றி குடாநாட்டில் கிடைப்பதற்கு வழி செய்யும் வகையில் தனியார் வர்த்தகருடனான இந்தச் சந்திப்பை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தனது அலுவலகத்தில் நடத்தவுள்ளார்.

அபான்ஸ், லிவர் பிரதர்ஸ், ஆர்பிகோ, மலிபன், மஞ்சி, ரைகம் கொகாகோலா, லயன் புரூவதி, எலிபண்ட் ஹவுஸ் போன்ற நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக கூறிய அவர், யாழ். குடாநாட்டுக்கு புதிய ஆடைகள் கொண்டுசெல்ல விரும்பும் தனியார் புடவைக் கடை உரிமையாளர்கள் இருப்பின் தம்முடன் தொடர்புகொள்ளுமாறும், செவ்வாய்க்கிழமை நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ். குடாநாட்டு மக்கள் சித்திரைப் புதுவருட கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கு ஏதுவாக அடுத்த புதன்கிழமையன்று ஏ-9 பாதையூடாக பொருட்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். புத்தாண்டையிட்டு 100 லொறிகளில் பொருட்கள் எடுத்துச் செல்லப்படவுள்ளன. ஏ-9 ஊடாக பொருட்களை எடுத்துச்செல்ல தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களையும், புடவை உள்ளிட்ட பொருட்களையும் குடாநாட்டுக்குக் கொண்டுசெல்ல விரும்பும் தனியார் வர்த்தகர்கள் தன்னுடன் உடனடியாக தொடர்புகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

ஹட்டன் மகளிர் தின நிகழ்வில் அமைச்சர் சந்திரசேகரன்

“உலக மாதர்கள் சகல துறைகளிலும் ஓரம் கட்டப்பட்டு விட்டார்கள். அவர்கள் தங்களுக்கு ஏற்படும் பல்வேறு இம்சைகளை வெளிக்காட்டுவதற்கு மிகவும் அஞ்சியுள்ளனர். அவர்களை பாதுகாப்பது அனைவரினதும் கடமை என அமைச்சர் பி. சந்திரசேகரன் தெரிவித்தார். அட்டன் பிரின்ஸ் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற மலையக மகளிர் தின விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் பி. சந்திரசேகரன் தொடர்ந்து கூறியதாவது, பெண்கள் தலைமைத்துவத்தை ஏற்பதற்கு மிகவும் தகுதியுள்ளவர்களாவர். அவர்கள் மத்தியில் திறமைகள் நிறையவுள்ளன. அவையாவும் இலைமறை காய்களாகவே உள்ளன.

சதாகாலமும் அவர்களை ஆண்களுக்கும் அதிகாரவர்க்கத்துக்கும் அடிமைகள் என்று நினைப்பது தவறு, இன்று சகலரும், சகலதுறைகளிலும் பங்கு கொள்ள விரும்புகின்றனர். அவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். ஐ. நா. அறிக்கை படி 80% பெண்கள் அகதிகளாகவே உள்ளனர்.பெண்கள் சமுதாயத்திலிருந்தும், சமூகத்திலிருந்தும் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்லர். அவர்கள் தலைதூக்கமுடியாமல், வழி தெரியாமல் அவதியுறுகின்றனர்.

40 வயது சென்ற ஒரு பெண் தொழிலாளி தான் 60 வயது தோற்றமுள்ளவராக காட்சி அளிக்கின்றார். காரணம், குடும்பத்தில் கஷ்டம், சரியான வருமானமில்லை, உணவு இல்லை வேலைவாய்ப்பு இல்லை சமூகத்தில் முன்னேற முடியாமல் ஆண்வர்க்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தோட்டமாதர்கள், வீட்டில் மாத்திரமன்றி வேலைத் தளங்களிலும் பொது இடங்களிலும் இம்சைக்குட்படுத்த ப்படுகின்றனர். குறைந்த கூலியைப் பெற்று, கூடுதலான வேலை செய்துள்ளவர்கள் பெண்களேயாகும். அவர்கள் மத்தியில் கல்வி அறிவுண்டு ஆற்றலும் உண்டு.

தோட்ட கமிட்டிகளில் அவர்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். அதேபோன்று பிரதேச சபை, மாகாண சபை, நகர சபை, பாராளுமன்றத்தில் அவர்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படல் வேண்டும். தோட்டக் கமிட்டிகளில் 10 ஆண்கள் பிரதிநிதித்துவத்துக்கு, 3பெண்கள் இருக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவேண்டும். இதில் மகளிர் பங்கு அதிகமாக இருக்க வேண்டும். தொழிலாளர்களின் மே தினத்தைப் போன்று மகளிர் தினத்தன்று சம்பளத்துடனான விடுமுறை வழங்கப்படல் வேண்டும் என்றார்.

பாக்தாத் வட்டகையில் பாதுகாப்பு படைகள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன

iraq.jpgஇராக்கின் ஃபதில் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று உள்ளூர் சுனி பிரிவு வன்மைவாதத் தலைவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதில் குறைந்தது மூவராவது உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, ஃபதில் மாவட்டத்துக்குச் செல்லும் சகல பிரதான பாதைகள் அனைத்தையும் தலைநகர் பாக்தாத்தில் உள்ள பாதுகாப்பு படைகள் கைப்பற்றிக் கட்டுப்படுத்தியுள்ளன.

சுனி பிரிவு போராளிகள் தமது போராட்டத்தைக் கைவிட வேண்டும்; இல்லாவிட்டால் அவர்கள் பயங்கரவாதிகளாகவே கருதப்படுவார்கள் என்கிற எச்சரிக்கைகளை அமெரிக்க வீரர்களின் ஆதரவுடன் இயங்கிவரும் இராக்கிய துருப்புகள் வெளியிட்டிருக்கிறார்கள்.

சுனி பிரிவு வன்மைவாதத் தலைவர் இராக்கிய மற்றும் அமெரிக்க போர்வீரர்களினால் கைதுசெய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சுனி பிரிவு தலைவரின் ஆதரவாளர்களுக்கும் போர்வீரர்களுக்கும் இடையில் மோதல்கள் வெடித்துக்கிளம்பின. இராக்கிய போர்வீரர்கள் ஐவர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட சுனி பிரிவு மனிதர் அல்கைதாவுடன் முன்னர் இயங்கிவந்த எழுச்சி இயக்கம் என்ற குழுவைச் சேர்ந்தவர். பின்னர் அதிலிருந்து அவர் கட்சித் தாவியிருந்தார் என்று கூறப்படுகிறது.

“மூன்று மாத காலங்களுக்குள் பால் உற்பத்தி 23 வீத வளர்ச்சி”

இவ் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் பால் உற்பத்தியில் 23 வீதம் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் ரொஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையினால் பால் உற்பத்தி தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வந்த பிரசார நடவடிக்கையின் பயனாகவே இந்த இலக்கை அடையக் கூடியதாகவிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2007 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இரண்டு வருடங்களுக்குள் 150 பால் விற்பனை நிலையங்களை திறப்பதனை சவாலாக ஏற்றுக்கொண்டோம். ஆனால் ஒரு வருடமும் மூன்று மாதங்களுக்கு உள்ளாகவே சவாலை வெற்றி கண்டுவிட்டோம். இது பால் உற்பத்தியாளர்களதும் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் வரலாற்றில் ஏற்பட்டுள்ளதுமான பெரும் வெற்றியாகும் என்றும் சபையின் தலைவர் கூறினார். ஹுனுபிட்டியவில் கடந்த 24ம் திகதி 150 வது பால் விற்பனை நிலையம் திறந்த வைக்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கம் பஹா மாவட்டத்தில் கடந்த 24 ஆம் திகதி மாத்திரம் 09 பால்விற்பனை நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாணசபை ஊடாக 500 பேருக்கு பட்டதாரி நியமனம் வழங்குவதற்கு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நடவடிக்கை

karuna1.jpgஅமைச்சர் பதியேற்று பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வரும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கிழக்கு மாகணத்திலுள்ள 500 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கிழக்கு மாகாணசபையுடாக பட்டதாரி நியமனம் வழங்குவதற்க்கான சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு பாதுகாப்பு வலயத்தில் மக்களின் அவலங்கள் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் அறிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு அமைச்சினால் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்கள் எதிர்நோக்குகின்ற அவலநிலை குறித்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் து.வரதராஜா அறிக்கையொன்றை விடுத்திருக்கிறார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

பாதுகாப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு அமைச்சால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பிரதேசங்களான முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம், பொக்கணை, புதுமாத்தளன் போன்ற கிராமத்தில் அதாவது 25 சதுர பரப்பளவில் கிட்டத்தட்ட 300,000 மக்கள் செறிவாக வசித்து வருகின்றனர். மக்கள் வசித்துவரும் பகுதியில் இருந்து இராணுவத்தினர் 750M-2 ஓட் தூரத்திலே இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். இராணுவத்தினரின் எறிகணை, பல்குழல், தடைசெய்யப்பட்ட கொத்துக்குண்டு, பொஸ்பரஸ்குண்டு என்பன மக்கள் மீது செறிவாக வீசப்பட்டு வருகின்றமையால் நாள்தோறும் சராசரியாக 30-50 வரையான மக்கள் இறந்தும் 75-150 வரையான மக்கள் காயமடைந்தும் வருகின்றனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் 523 பேர் காயமடைந்து வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

சுகாதாரம்

2008 ஆம் ஆண்டு 4ஆம் காலாண்டுக்குரிய மருந்துப்பொருட்கள், 2009 ஆம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டுக்கான மருந்துப்பொருட்கள் ஆகியவை எமக்கு வவுனியாவில் கிடைக்கப்பெற்றும் அதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெறாததன் காரணமாகவும் ஏ9 பாதை மூடப்பட்டதன் காரணமாகவும் இந்த மருந்துப்பொருட்கள் எமது மாவட்டத்திற்கு வந்துசேரவில்லை. சர்வதேச செஞ்சிலுவைச்சங்க கப்பல் மூலம் திருகோணமலை ஊடாக இங்கு கொண்டுவரக்கூடிய நிலைமை இருந்தும் அனுப்பிவைக்கப்படவில்லை. பலமுறை தொலைபேசி ஊடாகவும், கடிதம் மூலமும் மருந்துகள் கோரப்பட்டும் மூன்று தடவைகள் சொற்ப மருந்துகளே அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில் முக்கிய மருந்துகளான மயக்க மருந்துகள், இரத்தப்பை, கிருமிகொல்லி மருந்துகள் (Oral, Antibiotic) சிறுவர்களிற்கான சிறப் வகை மருந்துகள், ஜீவனி போன்றன முற்றாக முடிந்துள்ளன.

நீர் சுகாதாரம்

தற்போதைய மிகச் சிறிய நிலப்பரப்பில் (கடற்கரை, வயல், சேற்று நிலம்) மிகச் செறிவான மக்கள் வாழ்ந்து வரும் இச்சூழலில் இங்குள்ள மக்கள் தறப்பாளினால் ஆன வீடுகளினை நெருக்கமாக அமைத்து அதற்குள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களிற்கான போதியளவான மலசலகூடம், போதியளவான நீர்வசதி இல்லாதுள்ளமையால் இங்குள்ள மக்களிற்கு அதிகளவான தொற்று நோய்கள் ஏற்பட ஏதுவாகவுள்ளது. அத்துடன், மலசல கூடங்கள், நீர் வசதிகளினை அதிகளவில் நிறைவேற்றுவதற்கு போதியளவான இடசவதியில்லாதுள்ளதுடன் அவ்வாறான வசதிகளினை ஏற்படுத்துவதற்கு போதியளவான மூலப் பொருட்கள் பெற்றுக் கொள்வதற்கான உதவிகளினைப் பெறுவதற்கான அரச சார்பற்ற நிறுவனங்களும் இங்கு இல்லாதுள்ளமையும் பாரியதொரு பிரச்சினையாகவுள்ளது.

கற்பவதிகள்

இங்குள்ள கற்பவதிகளிற்கான எந்தவிதமான போஷாக்கான உணவுகளும் (மரக்கறி வகைகள், இறைச்சி, முட்டை, பால், பால்மா வகைகள், பழவகைகள்) என்பன கிடைக்கப் பெறாமையால் இங்குள்ள கற்பவதிகளிற்கு குருதிச் சோகை நோய் பெரும்பாலும் அவதானிக்கப்படுவதோடு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விரைவில் நோய்வாய்ப்படும் நிலை உருவாகியுள்ளது. இதில் கற்பவதிகள் ஷெல்தாக்குதல் பயணத்தில் பெரும்பாலான நேரம் பதுங்குக் குழிக்குள் அவசரமாக செல்வதனால் அவர்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாவதும் விழுந்து அடிக்கடி வைத்தியசாலைக்கு வருவதும் அதிகரித்துள்ளது. அதனால், கருச்சிதைவும் அதிகம் இடம்பெறுகின்றது. கடந்த இரண்டு வாரத்திற்கு மட்டும் எறிகணைத் தாக்குதலினால் 20 கற்பவதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இதில் 08 கற்பவதிகள் சிகிச்சை பயனளிக்காமல் இறந்துள்ளனர். நான்கு சிசுக்கள் கருப்பைக்குள்ளேயே காயமடைந்து இறந்த நிலையில் வெளியே எடுக்கப்பட்டனர். அத்துடன், 05 கற்பவதிகள் ஷெல் தாக்குதலில் அந்த இடத்திலேயே கொல்லப்பட்ட இறந்த உடல்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டன.

குழந்தைகள்

தினந்தோறும் 20-50 வரையான குழந்தைகள் காயமடைகின்றனர். 10-15 வரையான குழந்தைகள் ஷெல் தாக்குதல்களினால் இறக்கின்றனர். அத்துடன் தினமும் ஒரு குழந்தையாவது நோய்வாய்ப்பட்டு மருந்து பற்றாக்குறை காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் இறக்கின்றது. கடந்த 26.03.2009 ஆம் திகதி வைத்தியசாலையில் சிறுவர் விடுதிக்கு அண்மையில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதால் விடுதியில் தங்கியிருந்த அனைவரும் விடுதியினை விட்டு ஓடி வீடு சென்று மறுநாளே திரும்பி வந்தனர். மருந்து சீராகக் கொடுக்கப்படாததன் காரணமாக இரு குழந்தைகள் இறந்து விட்டனர்.

பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு போதிய உணவு இல்லாததன் காரணத்தால் பால் கொடுக்க முடியாதுள்ளதாகக் கூறுகின்றனர். பதிலாக கொடுப்பதற்கு எஸ்.எம்.ஏ. லக்டோஜன் பால்மா வகைகள் இல்லாதுள்ளமையால் பிள்ளைகள் பெரிதும் நலிவுற்றுக் காணப்படுகின்றார்கள். அத்துடன் ஷெல் தாக்குதலில் தாய்மாரை இழந்த குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பால்மா இல்லை. இதுதவிர குடும்ப அங்கத்தவர்கள் காயமடைவதையும் இறப்பதையும் பார்த்த சிறுவர்கள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். பெற்றோரை இழந்த குழந்தைகள் பாதுகாப்பான வேறு இடம் இல்லாத காரணத்தினால் அவர்கள் அநாதைகளாக திரிவதும் அவதானிக்கப்படுகின்றது.

உணவு

இங்கு வாழ்கின்ற அனைத்து மக்களும் கச்சேரியால் வழங்கப்படுகின்ற நிவாரணத்திலேயே தங்கியுள்ளனர். 3 இலட்சம் மக்களுக்குத் தேவைப்படும் அளவிலும் பார்க்க மிகவும் குறைவான அளவிலேயே உணவு அனுப்பப்படுகின்றது. அதிலும் அரிசி ஒரு தடவை மட்டுமே வந்தது. இங்குள்ள மக்களில் 70% மான மக்கள் மரக்கறி உண்டு இரண்டு மாதங்களாகி விட்டது. மூன்று மாதங்களாக சுகாதாரத் திணைக்களத்தினூடாக வந்து சேர வேண்டிய திரிபோசா, சோளன் சோயா மாவும் வரவில்லை.