அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லமுற்பட 55 இலங்கையர் இந்தோனேஷியாவில் கைது

சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்லமுயன்ற 55 இலங்கையர்கள் இந்தோனேசியாவின் மேற்குக் கடல் பகுதியில் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தோனேஷியாவின் வக்கு மாகாண கரைப்பகுதியான ஆச்சேயிலிருந்து 2 கிலோமீற்றர் தூரத்தில் சேதமடைந்த மரப்படகொன்றில் இவ் 55 பேரையும் மீனவர்கள் பார்த்துள்ளனர்.

மீட்கப்பட்ட 55 பேரும் இரு கிலோமீற்றர்கள் நீந்தி வந்தமையால் சோர்வடைந்து காணப்படுவதாக தெரிவித்த ஆசே நகன் ரயா பொலிஸ் தலைமை அதிகாரி அரிச பியான்டோ இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு தொழில்வாய்ப்புக்காக அவர்கள் செல்வதற்கு முயற்சி செய்துள்ளதாகவும் தெரிவித்தர்.

இக்குழுவினர் இலங்கையை விட்டு மே மாதம் 2 ம் திகதி புறப்பட்டுள்ளனர். மே 8இல் மலேசியாவில் தங்கியுள்ளனர். கைதான 55 பேரும் சுமார் 25-30 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.தங்களுடன் வந்த சிலர் காணாமல் போய்விட்டதாக இந்த இலங்கையர்கள் பொலிஸாருக்கு தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பதில் பாதுகாப்பு அமைச்சர்

maithripalasirisena.jpgபதில் பாதுகாப்பு அமைச்சராக விவசாய அபிவிருத்தி மற்றும் கமநலசேவைகள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக அவரது அமைச்சு அறிவித்துள்ளது.

ஜேர்தானுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  நாட்டுக்கு திரும்பிவரும் வரையில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பதில் பாதுகாப்பு அமைச்சராக கடமைபுரிவாரெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

முதலாம் தரத்துக்கான மாணவர் அனுமதியில் மாற்றம்

susilpremjayanth.jpgஅடுத்த வருடம் முதல் அரசாங்கப்பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் முறையில் மாற்றம் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அனுமதித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தையும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவே சமர்பித்திருந்தார்.

கடந்த வருட புது மாணவர் அனுமதியின் போது பாடசாலைக்கு அருகில் உள்ளவர்களுக்கு அநீதி இழைக்கபட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளதையடுத்தே இந்த மாற்றம் கொண்டுவரப்படுகின்றது. அதன்படி விண்ணப்பிக்கும் பாடசாலைக்கு அருகில் உள்ள மாணவர்களுக்கு 50 புள்ளிகள் பழைய மாணவரின் பிள்ளை என்றால் 25 புள்ளிகள் சகோதரர்கள் கற்கிறார்கள் என்றால்  15 புள்ளிகள் மற்றும் இடமாற்றம் பெற்ற அல்லது வெளிநாடு சென்று திரும்பிய அரச ஊழியர்கள்மற்றும் கல்வித்துறையைச் சார்ந்தவர்களின் பிள்ளைகள் என்றால் 10 புள்ளிகளும் வழங்கப்படவுள்ளன.

700 கட்டடங்கள் இடிக்கப்படுவதைத் தடுக்க மாற்று நடவடிக்கை

பேஸ்லைன் வீதியின் மூன்றாம் கட்ட நிர்மானப் பணிகளுக்காக 700 கட்டடங்களை அகற்றவேண்டியுள்ளதால்; அதனைத்தவிர்ப்பதற்கு மாற்று நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

மாற்று நடவடிக்கையாக கொழும்பு ஹொரனை வீதி அடங்கலாக  ஹைலெவல் வீதியில் கிருலப்பனை முதல் காலி வீதியின் இரத்மலானை வரையிலான பகுதி மறுசீரமைக்கப்படவுள்ளது. இதேவேளை இத்திட்டத்துக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகள் மீள ஒப்படைக்கப்படவுள்ளன.

பிரதமர் ரத்ணசிறி – கென்ய ஜனாதிபதி பேச்சுவார்த்தை

premier_with_unkn.jpgகென்யா வுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரத்ணசிறி விக்ரமநாயக்க அந்நாட்டு ஜனாதிபதி எம்வய் கிபகியைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கென்ய ஜனாதிபதியின் அழைப்பையேற்று அங்கு சென்றுள்ள பிரதமருக்கும் கென்ய ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு அந்நாட்டின் தலைநகரான நைரோபியிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்றது.

இரு தலைவர்களுக்குமிடையிலான இச்சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஐந்து நாடுகளைக் கொண்ட கிழக்கு ஆபிரிக்க சமூகத்தில் கென்யா மிக முக்கியமான ஒரு நாடாகும். பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள இலங்கையும் கென்யாவும் 1970ஆம் ஆண்டிலிருந்தே இராஜதந்திர உறவுகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தேசியப்பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம்

susilpremjayanth.jpgதேசியப் பாடசாலைகளில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடங்களை நிறப்புவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

அதன்படி 86 தேசிய பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமிக்கப்படவுள்ளனர். தேசிய கல்விச் சேவைகள் ஆணைக்குழுவின் விதி முறைகளுக்கு ஏற்பவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

வாழைச்சேனையில் த.ம.வி.பு. உறுப்பினர் சுட்டுக்கொலை

gun.jpgவாழைச் சேனை பிரதேசத்தில் இன்று காலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவர் ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மதன் எனப்படும் சண்முகநாதன் வசந்தன் (வயது 29) என இந்நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கருங்காலிச் சோலையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்த வேளை, எதிர்கொண்ட இனந்தெரியாத ஆயுததாரிகளினால் இவர் சுடப்பட்டார்.

ஐ.நா. தூதுவர் வி.ஜே.நம்பியார் மீண்டும் இலங்கை செல்கிறார்: மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க பான் கீ மூன் முயற்சி

model-of-united-nations.jpgஇலங்கையில் மக்கள் இரத்தம் சிந்துவதை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக ஐ.நா. தலைமைச் செயலர் பான் கீ மூன் தனது மூத்த அலுவலர் ஒருவரை இலங்கைக்கு அனுப்பியுள்ளார். தலைமைச் செயலர் அலுவலகத்தின் தலைமை அதிகாரியான விஜய் நம்பியார் மீண்டும் இலங்கை செல்கிறார்.

மோதலில் சிக்குண்டுள்ள பொதுமக்களின் நிலைமை குறித்து அச்சங்கள் அதிகரித்துவரும் நிலையில், மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இலங்கை அரசுடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.

ஒரு மாதம் முன்னர், நம்பியார் அவர்கள் இலங்கை வந்து ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களை சந்தித்து திரும்பிய பின்னர், யுத்தப் பிரதேசத்திற்குள் ஐ.நா.செயலணிக் குழு செல்ல இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் அது நடக்கவில்லை என பீபீஸி இணையம் தெரிவித்துள்ளது

முகத்தில் கரியைப் பூசிய தேர்தல் – கருணாநிதி

karunanithi.jpgதேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சி வன்முறையில் ஈடுபடப் போகிறது என்றும், பெரிய கலவரம் ஏற்படப் போகிறது என்றும் தமிழ்நாடே ஸ்தம்பிக்கப் போகிறது என்றும் சிலர் பிரசாரம் செய்தார்கள். தமிழ்நாடே ரத்தக் களறியாகப் போகிறது என்று பிரசாரம் செய்தவர்களின் முகத்தில் கரி பூசும் அளவிற்கு தேர்தல் அமைதியாக நடைபெற்றுள்ளது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி .இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை
:
மக்களவை தேர்தல் ஒன்றிரண்டு சிறு சம்பவங்களை தவிர அமைதியாக நடந்து முடிந்துள்ளது என்று தேர்தல் ஆணையமே அறிவித்துள்ளது. 68 சதவிகிதம் வாக்குப் பதிவுகள் நடந்துள்ளது. வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு என்று ஒரு சில இடங்களில் செய்திகள் வந்த போதிலும், சிறிது நேரத்திற்குள் சரி செய்யப்பட்டு விட்டது. அந்த சிறு கோளாறுகள்கூட தேர்தல் ஆணையத்தின் பொறுப்பே தவிர, அதற்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை.

ஆனால் சில நாட்களாக தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சி வன்முறையில் ஈடுபடப் போகிறது என்றும், பெரிய கலவரம் ஏற்படப் போகிறது என்றும் தமிழ்நாடே ஸ்தம்பிக்கப் போகிறது என்றும் சிலர் பிரசாரம் செய்தார்கள். தமிழ்நாடே ரத்தக் களறியாகப் போகிறது என்று பிரசாரம் செய்தவர்களின் முகத்தில் கரி பூசும் அளவிற்கு தேர்தல் அமைதியாக நடைபெற்றுள்ளது.

வவுனியா முகாம்களில் தற்போது தொற்றுநோய் பரவல் இல்லை- அரசாங்க அதிபர்

chals_.jpgவவுனியாவில் உள்ள முகாம்களிலும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள நிவாரண கிராமங்களிலும், உள் நாட்டில் இடம்பெயர்ந்த இரண்டு லட்சம் பேர் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போதுமான வசதிகளின்றி இருப்பதாகவும், மக்கள் மத்தியில் தொற்றுநோய்கள் பரவுவதாக வரும் செய்திகள் குறித்து வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ல்ஸ் அவர்களிடம் கேட்டபோது, ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகு தொற்று நோய் எதுவும் பரவவில்லை என்றார் என பீபீஸி இணையம் தெரிவித்துள்ளது

ஆனால் அதற்கு முன் கடும் வெயில் காரணமாக கொப்பளிப்பான் எனப்படும் சிக்கன் பாக்ஸ் நோய் பரவியதாகவும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். உணவு வழங்கும் இடங்களில் ஏற்பட்ட நெரிசலில் சிறுவர்கள் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்துக் கேட்டபோது, அது பற்றி தனக்கு அறிக்கை கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.