அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இனப்பகைமைகளை வளர்க்கும் செய்திகள் வெளியிடுவதை தவிருங்கள் ஊடகத் தலைவர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை

he_speech_ranaviru_.jpgஇனங் களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகை யில் ஊடகங்கள் செய்திகளை வெளியிடவேண்டுமென்றும் பகைமையையும், குரோதத்தையும் வளர்க்கும் விதத்தில் செயற்பட கூடாதெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் உரிமையாளர்கள் மற்றும் பிரதம ஆசிரியர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

சமூகத்தில் தேவையற்ற பிளவுகளைத் தோற்றுவிக்கும் வகையில் எதனையும் எழுதவோ, ஒலிபரப்பவோ வேண்டாமென்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறிய ஒரு சம்பவம் கூட ஆத்திரத்தைத் தூண்டும் வகையில் வெளிப்படுத்தப்பட்டால் அதனால் பாரதூர விளைவுகள் ஏற்படும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதனால் நிதானமாக செய்திகளை வெளியிட வேண்டு மென்று கேட்டுக்கொண்டார்.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி கிராம ங்களுக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளைத் தெரிந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். அதே நேரம், மீள்குடியேற்றப் பணிகளைத் துரிதப்படுத்தவென 180 நாள் வேலைத் திட்டமொன்றை அரசாங்கம் நடை முறைப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.

இலங்கை தமிழரின் கின்னஸ் சாதனை படத்துக்கு தணிக்கை குழு அனுமதி மறுப்பு

meera-jasmine.jpgஇலங்கை யைச் சேர்ந்தவரும் கனடாவில் வசிப்பவரும் பல கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரருமான சுரேஷ் ஜோகிம் கின்னஸ் சாதனைக்காக 12 நாளில் எடுத்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டது.

58 கின்னஸ் சாதனை படைத்துள்ள சுரேஷ் ஜோகிம், தனது அடுத்த சாதனையாக 12 நாளில் தமிழ் படம் எடுத்து முடித்து திரையிடும் பணியில் ஈடுபட்டார். “சிவப்பு மழை’ என்ற அப்படத்தில் சுரேஷ் ஜோகிம், மீரா ஜாஸ்மின், சுமன், விவேக் உள்ளிட்டோர் நடித்தனர். வி. கிருஷ்ணமூர்த்தி டைரக்ஷன். விஸ்வநாதன், இந்திரஜித், ஜமாலுதீன் ஒளிப்பதிவு. தேவா இசை. கடந்த மாதம் 23 ஆம் திகதி தொடங்கி 12 நாளில் படத்தை முடித்தனர். தணிக்கைக்காக புதன்கிழமை படம் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள், படத்தில் இடம்பெறும் இலங்கை தமிழர் பிரச்சினை காட்சிக்கு ஆட்சேபம் தெரிவித்ததுடன் சான்றிதழ் தர மறுத்தனர்.

இதுகுறித்து டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி படத்தில் காட்சி இடம்பெற்றுள்ளது. அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து, மறுதணிக்கை குழுவினருக்கு படம் திரையிடப்படுகிறது. அப்போது, இலங்கை பிரச்சினை பற்றிய காட்சிக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. பிறகு சான்றிதழ் வழங்குவது குறித்து அதிகாரிகள் முடிவு எடுப்பார்கள்’ என்றார்.

யாழ்.மாநகரசபைத் தேர்தலில் பெண்கள் போட்டியிட வேண்டும்

பெண்களுக்கான அரசியல் களத்தை வலுப்படுத்துவதற்காக யாழ்.மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கும் பெண்களை முன்வருமாறு மகளிர் அபிவிருத்தி நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

யாழ்.மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிக மிகக் குறைவாகவே உள்ளது. பொருளாதார, சமூக மேம்பாடு என்று பல துறைகளிலும் தமது திறமையை வெளிப்படுத்தும் பெண்கள் அரசியலிலும் ஈடுபாடு காட்டி தமது அரசியல் நிபுணத்துவத்தினூடாக மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும் சேவையை வலுவூட்டுவது அவசியம்.

இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பெண்கள் மிக இலகுவாக 59 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டனர். எமது பிரதேசத்திலும் அரசியல் ஆர்வம் கொண்ட பெண்கள் இத் தேர்தல் களத்தில் பங்குபற்றி எமது அரசியல் ஈடுபாட்டை வெளிப்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு ஈடுபடுபவர்களுக்குத் தேவையான அறிவூட்டல்கள், ஆலோசனைகளை வழங்க மகளிர் அபிவிருத்தி நிலையம் தயாராகவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் எமது நிலையத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.

முசலி பிரதேச செயலகப் பிரிவில் இரண்டாம் கட்ட மீள் குடியேற்றம் – பசில் எம்.பி தலைமையில் 9ஆம் திகதி வைபவம்

basil.jpgவடக்கின் வசந்தம்’ அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மன்னார், முசலி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஏழு கிராம சேவகர் பிரிவுகளில் இரண்டாம் கட்டமாக 561 குடும்ப ங்கள் எதிர்வரும் 9ஆம் திகதி மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் கீழ் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி.யின் தலைமையில் மீள்குடியேற்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளன என வடக்கு கிழக்கு அபிவிருத்தி பணிகளுக்கான ஜனாதிபதி செயலக இணைப்பாளர் சந்திரா பர்னாண்டோ தெரிவித்தார்.

மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் மீள் குடியேற்ற நிகழ்வில் கலந்துகொள்வார்.

மன்னார் முசலி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மருதமடு, பூநொச்சிகுளம், பண்டார வெளி, கூலான்குளம், சின்னபுலச்சி பொட் கேணி, அரிப்பு மேற்கு, அரிப்பு கிழக்கு பகுதிகளில் 561 குடும்பங்களைச் சேர்ந்த 2120 பேர் மீளக் குடியமர்த்தப்படுகின்றனர்.

இப்பகுதியில் கிராமசேவகர் அலுவலகம், பாடசாலைகள், கூட்டுறவு கடைகள், தபாலகம், டிஸ்பென்சரி, கிராமிய ஆஸ்பத்திரி, போக்குவரத்து அனைத்தும் அன்றைய தினமே வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மருதமடு பகுதியில் 63 குடும்பங்களும், பூநொச்சிகுளம் பகுதியில் 16 குடும்பங்களும், உட்பட 7 கிராம சேவகர் பிரிவுகளிலும் ஒரே தினத்தில் மீள்குடியேற்றம் செய்யப்படும். மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கு முன்னதாக இம் மக்கள் தமது சொந்த இடங்களை சென்று பார்வையிட்டு மீளக் குடியேற வசதிகள் உள்ளனவா என்று உறுதி செய்துகொண்டனர்.

வடக்கில் வசந்தம்; தெற்கில் டெங்கு அரசு மீது ஐ.தே.க.குற்றச்சாட்டு

நாட்டில் பயங்கரவாதம் போல் டெங்கு பாரிய பிரச்சினையாகியுள்ள நிலையில் இதனை தடுப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லையென ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.  எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குற்றச்சாட்டினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்;

நாட்டில் வடக்கில் வசந்தம் இடம்பெறுகின்ற அதேநேரம், தெற்கில் டெங்கு நோய் பரவுகின்றது. அதாவது இன்று டெங்கு பிரச்சினை பயங்கரவாதம் போன்று பெரிய பிரச்சினையாக நாடு பூராவுமுள்ளது. இந்நிலையில் இதனை தடுப்பதற்கு அரசாங்கம் தக்க நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இவ்வருடத்தில் முதல் ஐந்து மாதத்தில் 90 பேர் பலியாகி 7,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பயங்கரமான சூழ்நிலையாகும். கேகாலை மாவட்டத்தில் அதிகளவானவர்கள் இறந்துள்ளனர். இதேவேளை, ஏனைய மாவட்டங்களிலும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காததால் டெங்கினால் பலி கொள்ளப்பட்டுள்ளனர்.

எமது சுகாதார அமைச்சர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவராகவுள்ள நிலையில் நாட்டில் டெங்கினால் பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவரது தலைமைத்துவத்துக்கே அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. டெங்கினை ஒழிப்பதற்கு சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் உருவாக்கப்பட்டுள்ள போதும் இது எந்தளவு சாத்தியப்படுமென்பது கேள்விக்குறியாகவுள்ளது. இவர்கள் சகல மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும்.

இதேவேளை, டெங்கிற்குரிய சிகிச்சையளிப்பதற்கு வைத்தியசாலைகளில் மருந்துகள் போதியளவு இல்லை. அத்துடன் இதற்கு சிகிச்சையளிப்பதற்கான அடிப்படை வசதியில்லை. இத்தகைய கஷ்டமான நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்து இந்த அரசாங்கம் செயற்படுகின்றது. 2006 ஆம் ஆண்டு ஆரம்பித்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பிரிவு இன்று எதுவித மருத்துவ வசதியுமின்றி செயற்படுகின்றது.

அங்கு 60 மாணவர்கள் கல்வி கற்கவேண்டிய நிலையில் 176 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உரிய வசதிகளை அம்மணவர்கள் பெறமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் இவர்களது பட்டத்தின் மீதே அச்சம் கொள்ளவேண்டியுள்ளது. எனவே எமது கட்சி ஆரம்பித்த இலவசக் கல்வியை பாதுகாக்க அரசாங்கம் முற்படவேண்டுமென்றார்.

இன்று புனித பொசன் தினம்: மிஹிந்தலையில் ஆலோக பூஜை

poson_s.jpgஇன்று புனித பொசன் தினமாகும். மஹிந்த தேரர் இலங்கையில் பெளத்த மதத்தை அறிமுகப்படுத்திய நிகழ்வு இன்றைய தினத்திலேயே இடம்பெற்றது.

இதனை நினைவுகூரும் பொசன் பண்டிகையை முன் னிட்டு லேக் ஹவுஸ் நிறுவ னம், மிஹிந்தலையில் 47வது தடவையாகவும் ஆலோக பூஜை (மின்னொளி ஏற்றல் பூசை) நடத்துகின்றது.

இந்தப் பூஜை நேற்று சனிக்கிழமை ஆறாந் திகதி முதல் திங்கட்கிழமை எட்டாந் திகதி வரை நடை பெறுகின்றது. இன்றைய தினம் இந்து ஆலயங்களில் வைகாசிப் பெளர்ணமி விசேடபூஜைகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன உறவில் முன்னேற்றம் அவசியம் – ஒபாமா

obamaspeech.gifஇஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் தேக்கமான உறவுநிலையை முறிப்பது மிக முக்கியமான விஷயம் என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் நிகோலா சர்கோசியுடன் பேச்சுக்கள் நடத்திய பின்னர் பேசிய அவர், இருநாடு தீர்வு அடிப்படையில் தீவிரமான பேச்சுக்கள் இந்த ஆண்டின் இறுதியில் இடம்பெறும் என தான் நம்புவதாக கூறினார். மேலும் இரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சிக்கு தானும் பிரான்ஸ் அதிபரும் எதிர்ப்பதாகவும் அவர் கூறினார். இரான் தனக்கு அப்படியெல்லாம் எந்த ஒரு திட்டமும் கிடையாது என கூறி வருகிறது.

பஹ்ரேனுக்கு செல்வதற்கு ‘ஸ்பொன்சர்’ தேவையில்லை – ஒகஸ்ட் மாதம் முதல் அமுல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்று பஹ்ரேன் செல்லும் இலங்கையர்களுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நேரடியாக அவர்களுக்கே விசா வழங்கும் நடைமுறையை பஹ்ரேன் அரசு நடைமுறைப் படுத்தவுள்ளது.

இதுவரை காலமும் பஹ்ரேன் செல்லும் இலங்கையரை அந்நாட்டில் பொறுப்பேற்பதாக உத்தரவாதமளிக்கும் (ஸ்பொன்சர்) நபர் ஊடாகவே விசா வழங்கப்பட்டு வந்தது.

இனிமேல் அந்த நடைமுறை பின்பற்றப்படாமல் இலங்கையிலிருந்து செல்லும் நபரை பஹ்ரேன் அரசே பொறு ப்பேற்கும் வகையில் அனுசரணையாளர் அல்லது உத்தர வாதமளிக்கும் நபரின் பெயரில் விசா வழங்கப்படமாட் டாது.

இந்த நடைமுறையினால் இலங்கையிலிருந்து செல்லும் நபர் சுதந்திரமாக தொழில்புரிய முடியும். தான் வெளியே செல்வதாயினும் உத்தரவாதமளிக்கும் நபரின் அனுமதி பெற்றே வெளியே செல்ல வேண்டும் என்ற நிலையும் இனிமேல் ஏற்படமாட்டாது. தொழில் புரியும் இடங்களிலும் அவருக்குரிய உரிமையும் கிடைக்க வழிவகை ஏற்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார். பஹ்ரேன் போன்று சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் போன்ற நாடுகளும் இவ்வாறான விசாக்களை விரைவில் வழங்கவுள்ளது.

போர் நிறைவடைந்துவிட்டதாக அரசு அறிவித்திருப்பதால் இடம் பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்கு நாம் முன்வந்துள்ளோம்

vanangaaman-captainali.jpg“கப்டன் அலி’ (வணங்கா மண்) நிவாரணக்கப்பல் விவகாரத்தில் இலங்கை அரசுடன் இணைந்து செயற்படவுள்ளதாக “வணங்கா மண்’ அமைப்பின் உறுப்பினரான அர்ஜுனன் எதிர்வீரசிங்கம் தெரிவித்துள்ளார். லண்டன் பி.பி.சி.செய்திச்சேவைக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்; வணங்கா மண் கப்பலில் 880 தொன் உணவுப் பொருட்களையும் மருத்துப் பொருட்களையும் அனுப்பிவைத்துள்ளோம்.

இடம்பெயர்ந்துள்ள தமிழ்மக்களுக்காக புலம்பெயர்ந்துள்ள தமிழ்மக்களால் சேகரிக்கப்பட்ட உணவு, மருத்துப்பொருட்கள் இக்கப்பலில் உள்ளன. சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைவாக அனுப்பப்பட்ட அக்கப்பலை இலங்கை கடல்வலயத்துக்கு அப்பாலுள்ள 18 மைல் தூரத்தில் வைத்து இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதேவேளை, கப்பலிலுள்ள மாலுமிகளை இலங்கை கடற்படையினர் தயவாக அணுகியுள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த தமிழ்த் தொண்டர் ஒருவரும் ஐஸ்லாந்தைச்சேர்ந்த கண்காணிப்பாளர் ஒருவரும் இக்கப்பலில் உள்ளனர்.

போர் நிறைவடைந்துவிட்டதாக அரசு அறிவித்திருப்பதால் இடம் பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்கு நாம் முன்வந்துள்ளோம்.

தமது உறவுகள் குறித்து புலம்பெயர் மக்கள் மிகுந்த கவலை கொண்டுள்ள நிலையில் இந்த நிவாரணப் பொருட்களை மக்களுக்கு விநியோகிக்க அரசு அனுமதி அளிக்குமென நாம் நம்புகின்றோம்.  அத்துடன், இவ்விடயத்தில் இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

யுத்த சூழ்நிலையில் யாழ்.குடாநாட்டு மாணவர்கள் கணினி தொடர்பான கல்வியில் பின்தங்கியுள்ளனர்

யுத்த சூழ்நிலை காரணமாக யாழ்.குடாநாட்டில் கணினி தொடர்பான கல்வியில் மாணவர்கள் பின்தங்கியிருப்பதை அவதானிக்க முடிகிறது. இந்நிலையைக் கருத்திற் கொண்டு கடந்த இருபது வருடங்களாக கொழும்பு மற்றும் கண்டியில் இயங்கிவரும் தகவல் தொழில்நுட்பநிறுவனம் தற்போது யாழ்ப்பாணத்திலும் தனது கிளையைத் திறக்க முடிவு செய்துள்ளது. இவ்வாறு அந்நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் அல்பிரட் பெரேரா தெரிவித்தார். தமது கிளை நிறுவனத்தை யாழ்ப்பாணத்தில் திறப்பது தொடர்பாக அண்மையில் யாழ்ப்பாணம் பிள்ளையார் விடுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், கணினி விரிவுரையாளர்கள், பாடசாலை அதிபர்கள், மதத்தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில் பேராசிரியர் அல்பிரட் பெரேரா தொடர்ந்து பேசுகையில்; கல்வியே வாழ்க்கையின் மூலதனம். உலகமயமாக்கலில் கணினி கல்வி நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகிறது. இந்நிலையில், நாம் அனைவரும் கணினி கற்கைநெறியில் உயர்வான பட்டங்களைப் பெறுவதன் மூலமே உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சிறப்பான தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். யுத்த சூழ்நிலைகளால் யாழ்.குடாநாட்டில் கணினிக் கல்வி பின்தங்கி இருப்பதை நாம் அவதானிக்க முடிகிறது.

நாம் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம், பாடசாலைகள், தனியார் கல்விநிறுவனங்கள், வணிகர் கழகங்கள், தொழிற்கூடங்கள் எனச் சகலவற்றின் பிரமுகர்களையும் சந்தித்தோம்.நாம் சந்தித்த அனைவரும் எமது நிறுவனக்கிளையை ஆரம்பிப்பதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியதுடன், யாழ்ப்பாண இளைஞர், யுவதிகளின் கல்வி மேம்பாட்டுக்கும் அவர்கள் கொழும்பு சென்று உயர்கல்வியைப் பெறுவதற்காக அனுபவிக்கும் கஷ்டங்களைப் போக்கவும் இம் முயற்சி எமது மாணவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமெனவும் கூறினார்.

எமது நிறுவனம் இங்கு திறக்கும் கிளையில் இப்பிரதேச வளவாளர்களைக் கொண்டு கல்வியை வழங்கவே விரும்புகின்றது. தேவையேற்படும் போது கொழும்பு வளவாளர்களும் விரிவுரையை வழங்குவர். ஆரம்பத்தில் பதினைந்து பேர் அடங்கிய மாணவர் குழு இருக்குமானால் கற்கைநெறியை ஆரம்பிக்கக் கூடியதாக இருக்கும். மாணவர்களுக்கான நூலகவசதி, பொழுதுபோக்கு அம்சங்கள், கற்றல் சாதனங்களை வழங்கமுடியும். எமது நிறுவனம் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த வெஸ்மினிஸ்ரர் பல்கலைக்கழகப் பாடவிதானத்துக்கேற்ப இலங்கையில் பட்டக் கற்கை நெறிகளை வழங்கிவருகின்றது. 1990 ஆம் ஆண்டு முதல் வெள்ளவத்தையில் இராமகிருஷ்ணா வீதியில் அமைந்துள்ள வளாகத்தில் பல்கலைக்கழகத்துக்குரிய சகல பௌதிகவளங்களுடன் நாம் செயல்பட்டு வருகின்றோம். எமது நிறுவனம் இரு தசாப்தமாக பிரித்தானிய பட்டங்களை வழங்கிவரும் கல்விக்கூடமாகும். எமது நிறுவனத்தில் இருந்து ஏறத்தாள 1800 கணினிப்பட்டதாரிகள் வெளியேறியுள்ளனர். இவர்கள் உலகின் பல பாகங்களிலும் திறமையுடன் பணியாற்றி வருவது எமக்குப் பெருமைதரும் விடயமாகும்.

சிறப்புக்கணினிமாணிப்பட்டம், முதுமாணிப்பட்டம், கலாநிதிப்பட்டங்களை இக்கல்வி நிறுவனத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.கற்கை நெறிக்கான காலம் முழுநேரம் நான்காண்டுகளாகவும் பகுதிநேரக் கற்கைநெறி ஐந்தாண்டுகளாகும் வெஸ்மினிஸ்டர் பல்கலைக்கழகத்தின் பாடவிதானங்களுக்கு அமைவான முறையில் கற்கைநெறி நடைபெற்று பரீட்சை நடைபெறுகிறது. மாணவர்கள் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் ஆங்கிலத்திலும் கணிதத்திலும் திறமைசித்தியும் உயர்தரப்பரீட்சையில் குறைந்தது மூன்று பாடங்களில் சித்தி பெற்றிருந்தால் கற்கைநெறிகளில் இணைந்து கொள்ளலாம்.

முதுமாணிப் பட்டக்கற்கை நெறி இரண்டு ஆண்டுகளைக் கொண்டது.இக் கற்கைநெறி ஆழமான ஆய்வுகளை மையமாகக்கொண்டது. முதுமாணி கற்கைநெறியைப் பூர்த்தி செய்பவர்கள் கலாநிதிப்பட்டத்திற்கான முயற்சியிலும் ஈடுபடலாம். அனைவரும் கல்வியில் உயர்வானவர்களாக அறிவுசார் பொருளாதார இலக்கை நோக்கிச்செல்வது அவசியம். அதற்கு எமது நிறுவனம் யாழ்.பிரதேசத்தில் சேவையாற்றுமென்றார்.

முன்னாள் பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் கருத்துரைக்கையில்: கல்வியை வழங்கும் தனியார் நிறுவனங்கள் எமது பிரதேசத்தில் தமது கிளையை ஆரம்பிக்கவிருப்பது பாராட்டுக்குரியது. பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்கள் பெரும் பணச்செலவுடன் தலைநகரில் பட்டக்கற்கை நெறிகளைக் கற்கச் செல்கின்றனர். பாதுகாப்பு அச்சுறுத்தல், பெரும் பணச்செலவுடன் அவர்கள் அங்கு தங்கி கற்க வேண்டியுள்ளது. இன்றைய சூழ்நிலையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தமது கிளையை யாழ்ப்பணத்தில் அமைப்பதற்கு முன்வந்திருப்பதைப் பாராட்டுகின்றேன். திறமைமிக்க மாணவர்கள் பட்டக் கற்கைநெறிகளை எமது பிரதேசத்தில் கற்று உயர்வடைவது காலத்தின் தேவையாகும். உங்கள் முயற்சிக்கு நாம் உதவியாக இருப்போம் என்றார்.