யுத்த சூழ்நிலையில் யாழ்.குடாநாட்டு மாணவர்கள் கணினி தொடர்பான கல்வியில் பின்தங்கியுள்ளனர்

யுத்த சூழ்நிலை காரணமாக யாழ்.குடாநாட்டில் கணினி தொடர்பான கல்வியில் மாணவர்கள் பின்தங்கியிருப்பதை அவதானிக்க முடிகிறது. இந்நிலையைக் கருத்திற் கொண்டு கடந்த இருபது வருடங்களாக கொழும்பு மற்றும் கண்டியில் இயங்கிவரும் தகவல் தொழில்நுட்பநிறுவனம் தற்போது யாழ்ப்பாணத்திலும் தனது கிளையைத் திறக்க முடிவு செய்துள்ளது. இவ்வாறு அந்நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் அல்பிரட் பெரேரா தெரிவித்தார். தமது கிளை நிறுவனத்தை யாழ்ப்பாணத்தில் திறப்பது தொடர்பாக அண்மையில் யாழ்ப்பாணம் பிள்ளையார் விடுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், கணினி விரிவுரையாளர்கள், பாடசாலை அதிபர்கள், மதத்தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில் பேராசிரியர் அல்பிரட் பெரேரா தொடர்ந்து பேசுகையில்; கல்வியே வாழ்க்கையின் மூலதனம். உலகமயமாக்கலில் கணினி கல்வி நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகிறது. இந்நிலையில், நாம் அனைவரும் கணினி கற்கைநெறியில் உயர்வான பட்டங்களைப் பெறுவதன் மூலமே உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சிறப்பான தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். யுத்த சூழ்நிலைகளால் யாழ்.குடாநாட்டில் கணினிக் கல்வி பின்தங்கி இருப்பதை நாம் அவதானிக்க முடிகிறது.

நாம் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம், பாடசாலைகள், தனியார் கல்விநிறுவனங்கள், வணிகர் கழகங்கள், தொழிற்கூடங்கள் எனச் சகலவற்றின் பிரமுகர்களையும் சந்தித்தோம்.நாம் சந்தித்த அனைவரும் எமது நிறுவனக்கிளையை ஆரம்பிப்பதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியதுடன், யாழ்ப்பாண இளைஞர், யுவதிகளின் கல்வி மேம்பாட்டுக்கும் அவர்கள் கொழும்பு சென்று உயர்கல்வியைப் பெறுவதற்காக அனுபவிக்கும் கஷ்டங்களைப் போக்கவும் இம் முயற்சி எமது மாணவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமெனவும் கூறினார்.

எமது நிறுவனம் இங்கு திறக்கும் கிளையில் இப்பிரதேச வளவாளர்களைக் கொண்டு கல்வியை வழங்கவே விரும்புகின்றது. தேவையேற்படும் போது கொழும்பு வளவாளர்களும் விரிவுரையை வழங்குவர். ஆரம்பத்தில் பதினைந்து பேர் அடங்கிய மாணவர் குழு இருக்குமானால் கற்கைநெறியை ஆரம்பிக்கக் கூடியதாக இருக்கும். மாணவர்களுக்கான நூலகவசதி, பொழுதுபோக்கு அம்சங்கள், கற்றல் சாதனங்களை வழங்கமுடியும். எமது நிறுவனம் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த வெஸ்மினிஸ்ரர் பல்கலைக்கழகப் பாடவிதானத்துக்கேற்ப இலங்கையில் பட்டக் கற்கை நெறிகளை வழங்கிவருகின்றது. 1990 ஆம் ஆண்டு முதல் வெள்ளவத்தையில் இராமகிருஷ்ணா வீதியில் அமைந்துள்ள வளாகத்தில் பல்கலைக்கழகத்துக்குரிய சகல பௌதிகவளங்களுடன் நாம் செயல்பட்டு வருகின்றோம். எமது நிறுவனம் இரு தசாப்தமாக பிரித்தானிய பட்டங்களை வழங்கிவரும் கல்விக்கூடமாகும். எமது நிறுவனத்தில் இருந்து ஏறத்தாள 1800 கணினிப்பட்டதாரிகள் வெளியேறியுள்ளனர். இவர்கள் உலகின் பல பாகங்களிலும் திறமையுடன் பணியாற்றி வருவது எமக்குப் பெருமைதரும் விடயமாகும்.

சிறப்புக்கணினிமாணிப்பட்டம், முதுமாணிப்பட்டம், கலாநிதிப்பட்டங்களை இக்கல்வி நிறுவனத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.கற்கை நெறிக்கான காலம் முழுநேரம் நான்காண்டுகளாகவும் பகுதிநேரக் கற்கைநெறி ஐந்தாண்டுகளாகும் வெஸ்மினிஸ்டர் பல்கலைக்கழகத்தின் பாடவிதானங்களுக்கு அமைவான முறையில் கற்கைநெறி நடைபெற்று பரீட்சை நடைபெறுகிறது. மாணவர்கள் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் ஆங்கிலத்திலும் கணிதத்திலும் திறமைசித்தியும் உயர்தரப்பரீட்சையில் குறைந்தது மூன்று பாடங்களில் சித்தி பெற்றிருந்தால் கற்கைநெறிகளில் இணைந்து கொள்ளலாம்.

முதுமாணிப் பட்டக்கற்கை நெறி இரண்டு ஆண்டுகளைக் கொண்டது.இக் கற்கைநெறி ஆழமான ஆய்வுகளை மையமாகக்கொண்டது. முதுமாணி கற்கைநெறியைப் பூர்த்தி செய்பவர்கள் கலாநிதிப்பட்டத்திற்கான முயற்சியிலும் ஈடுபடலாம். அனைவரும் கல்வியில் உயர்வானவர்களாக அறிவுசார் பொருளாதார இலக்கை நோக்கிச்செல்வது அவசியம். அதற்கு எமது நிறுவனம் யாழ்.பிரதேசத்தில் சேவையாற்றுமென்றார்.

முன்னாள் பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் கருத்துரைக்கையில்: கல்வியை வழங்கும் தனியார் நிறுவனங்கள் எமது பிரதேசத்தில் தமது கிளையை ஆரம்பிக்கவிருப்பது பாராட்டுக்குரியது. பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்கள் பெரும் பணச்செலவுடன் தலைநகரில் பட்டக்கற்கை நெறிகளைக் கற்கச் செல்கின்றனர். பாதுகாப்பு அச்சுறுத்தல், பெரும் பணச்செலவுடன் அவர்கள் அங்கு தங்கி கற்க வேண்டியுள்ளது. இன்றைய சூழ்நிலையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தமது கிளையை யாழ்ப்பணத்தில் அமைப்பதற்கு முன்வந்திருப்பதைப் பாராட்டுகின்றேன். திறமைமிக்க மாணவர்கள் பட்டக் கற்கைநெறிகளை எமது பிரதேசத்தில் கற்று உயர்வடைவது காலத்தின் தேவையாகும். உங்கள் முயற்சிக்கு நாம் உதவியாக இருப்போம் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *