‘தெற்கின் தோழன்’ என்ற தொனிப்பொருளில் வவுனியா தாண்டிக்குளம் நோக்கி நேற்றுக்காலை 6.10க்கு புறப்பட்ட யாழ் தேவி ரயில் பகல் 12.00 மணியளவில் தாண்டிக்குளம் ரயில் நிலையத்தை சென்றடைந்தது. 20 வருடங்களுக்குப் பின்னர் முதல் முறையாக தாண்டிக் குளம் வரை யாழ் தேவி ரயில் சென்றுள்ளது.
தாண்டிக்குளத்திலிருந்து காங்கேசன்துறை வரை ரயில் பாதையை அபிவிருத்தி செய் வதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக நிதி சேகரிப்பு நிகழ்வும் நேற்று தாண்டிக் குளம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. போக்குவ ரத்து அமைச்சர் டலஸ் அழ கப்பெரும 1000 ரூபா பெறு மதியான முதலாவது யாழ் – கொழும்பு ரயில் பயண சீட்டை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜ பக்ஷவுக்கு வழங்கினார்.
கொழும்பில் நேற்றுக் காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக மத வழிபாடுகள் நடைபெற்றன. அமைச்சர் டலஸ், லசந்த அழகியவன்ன, திஸ்ஸ கரலியத்த ஆகியோர் ரயிலிலேயே பயணம் செய்தனர்.
நேற்றுக்காலை சுமார் 12.00 மணியளவில் தாண்டிக்குளம் ரயில் நிலையத்தை அண்மித்த போது பாதையின் இரு மருங்கிலும் பாடசாலை மாணவர்கள் தேசியக் கொடியை அசைத்தவாறு ரயிலை வரவேற்றனர். முதல் தடவையாக ரயில் இப்பகுதிக்குள் வருவதால் மக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
ரயில் வவுனியாவை சென்றடைந்த போது வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டிபிரேமலால் திஸாநாயக்க உட்பட பலரும் ரயில் பயணத்தில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தாண்டிக்குளம் ரயில் நிலையத்தில் விசேட கூட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர்களான டலஸ் அழகப் பெரும, லசந்த அழகியவன்ன, சுசந்த புஞ்சிநிலமே, திஸ்ஸ கரலியத்த, டக்ளஸ் தேவானந்தா, விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), பிரதி அமைச்சர் லயனல் பிரேமசிறி உட்பட பலரும் கலந்து கொண்டனர். நேற்றைய நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் கலந்துகொண்டார்.
போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும கொழும்பு – யாழ் பயணச் சீட்டொன்றையும் கிஷோர் எம். பிக்கு வழங்கினார்.
கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான பயணச் சீட்டு 1000 ரூபா பெறுமதியானதுடன் கெளரவ வகுப்பு என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
வவுனியா ரயில் நிலையத்தில் வைத்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமவை வரவேற்ற போது கிஷோர் எம். பியும் வரவேற்றார். அங்கிருந்து தாண்டிக்குளம் வரையிலும் ரயிலிலேயே அமைச்சர்களுடன் சென்றனர்.
இதனையடுத்து ஓமந்தைக்கு வந்த அமைச்சர்கள் குழுவினர் ஓமந்தை ரயில் நிலையத்திற்கான அடிக்கல்லையும் நாட்டினர். ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள் ரயில் நிலையத்திற்கான அடிக்கல்லை நட்டதுடன், ரயில் நிலையத்திலேயே மனிதாபிமான கரும பீடம் ஒன்றையும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
நேற்று மாலை 3.00 மணிக்கு யாழ்தேவி ரயில் மீண்டும் கொழும்பு நோக்கி புறப்பட்டது. தேசியக் கொடிகளாலும் மலர் மாலைகளினாலும் யாழ் தேவி ரயில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அமைச்சர்கள், அமைச் சின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், ரயில்வே பாதுகா ப்பு பிரிவினர், ஊடகவியலாளர்கள், மட்டு, வவுனியா இளைஞர் சேவைகள் மன்ற இளைஞர்கள் உட்பட சுமார் 300 பேர் இந்த ரயிலில் பயணம் செய்தனர்.