நாடு முழுவதும் புதிதாக 48 நீதிமன்றங்களை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்பொழுது நாட்டில் 250 நீதிமன்றங்கள் உள்ள போதிலும், மேலதிகமாக இவை அமைக்கப்படவுள்ளன.
நீதிமன்ற அதிகார எல்லைகள் கண்காணிப்புக் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கமைய, அமைக்கப்படும் 48 நீதிமன்றங்களில், 3 மேல் நீதிமன்றங்களும், 14 மாவட்ட நீதிமன்றங்களும், 18 நீதிவான் நீதிமன்றங்களும், 13 சுற்று நீதிமன்றங்களும் அடங்கும். வடக்கு மக்களின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காகவும் இந்நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தங்காலை, மாத்தளை, நுவரெலியாப் பகுதிகளில் இம் மேல் நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றது. மேலும், புதிதாக அமைக்கப்படவுள்ள 14 மாவட்ட நீதிமன்ற பிரதேசங்களாவன, கெப்பிட்டிகொல்லாவ, கெக்கிராவை, ஹிங்குராங்கொடை, பத்தேகம, கொடபொல, தெல்தெனிய, தம்புள்ளை, வளபபண்ணை, மகியங்கனை, ருவன்வெல்ல, மூதூர், வாழைச்சேனை, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களாகும்.
புதிதாக அமைக்கப்படவுள்ள 18 நீதிவான் நீதிமன்றங்களாவன; ஹிங்குராங்கொடை, உடுகம, தெய்யன்தர, கலகெதர, நாவுல, வளப்பண்ணை, ஆனமடுவு, பசறை, பிபிலை, சியமலாண்டுவ, மஹர, மீரிகம, ஜாஎல, பேருவலை, லாகுகல, தெஹியத்தகண்டிய, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களாகும்.
புதிதாக அமைக்கப்படவுள்ள 13 சுற்று நீதிமன்றங்களாவன; பதவியா, பகமூண, தவளம், அகுணகொளபெலஸ்ஸ, கொத்மலை, ஹங்குராங்கேத்த, ஹல்துமுல்லை, தனமல்வில, அகலவத்தை, பானம, பதியத்தலாவை, குச்சவெளி மற்றும் வேலணை பிரதேசங்களாகும்.
இது தொடர்பான நீதிமன்ற அதிகார எல்லைகள் கண்காணிப்புக் குழுவின் அறிக்கையை பிரதம நீதியரசர் சரத்.என். சில்வாவிடம் கையளிக்கும் வைபவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரதி நீதியமைச்சர் வி. புத்திரசிகாமணி, மேன்முறையீட்டு நீதிமன்றத் தகவல் சத்திய ஹெட்டிகே உட்பட நீதிபதிகள் பலரும் கலந்துகொண்டனர்.