வடக்கில் வசந்தம்; தெற்கில் டெங்கு அரசு மீது ஐ.தே.க.குற்றச்சாட்டு

நாட்டில் பயங்கரவாதம் போல் டெங்கு பாரிய பிரச்சினையாகியுள்ள நிலையில் இதனை தடுப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லையென ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.  எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குற்றச்சாட்டினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்;

நாட்டில் வடக்கில் வசந்தம் இடம்பெறுகின்ற அதேநேரம், தெற்கில் டெங்கு நோய் பரவுகின்றது. அதாவது இன்று டெங்கு பிரச்சினை பயங்கரவாதம் போன்று பெரிய பிரச்சினையாக நாடு பூராவுமுள்ளது. இந்நிலையில் இதனை தடுப்பதற்கு அரசாங்கம் தக்க நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இவ்வருடத்தில் முதல் ஐந்து மாதத்தில் 90 பேர் பலியாகி 7,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பயங்கரமான சூழ்நிலையாகும். கேகாலை மாவட்டத்தில் அதிகளவானவர்கள் இறந்துள்ளனர். இதேவேளை, ஏனைய மாவட்டங்களிலும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காததால் டெங்கினால் பலி கொள்ளப்பட்டுள்ளனர்.

எமது சுகாதார அமைச்சர் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவராகவுள்ள நிலையில் நாட்டில் டெங்கினால் பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவரது தலைமைத்துவத்துக்கே அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. டெங்கினை ஒழிப்பதற்கு சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் உருவாக்கப்பட்டுள்ள போதும் இது எந்தளவு சாத்தியப்படுமென்பது கேள்விக்குறியாகவுள்ளது. இவர்கள் சகல மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும்.

இதேவேளை, டெங்கிற்குரிய சிகிச்சையளிப்பதற்கு வைத்தியசாலைகளில் மருந்துகள் போதியளவு இல்லை. அத்துடன் இதற்கு சிகிச்சையளிப்பதற்கான அடிப்படை வசதியில்லை. இத்தகைய கஷ்டமான நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்து இந்த அரசாங்கம் செயற்படுகின்றது. 2006 ஆம் ஆண்டு ஆரம்பித்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பிரிவு இன்று எதுவித மருத்துவ வசதியுமின்றி செயற்படுகின்றது.

அங்கு 60 மாணவர்கள் கல்வி கற்கவேண்டிய நிலையில் 176 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உரிய வசதிகளை அம்மணவர்கள் பெறமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் இவர்களது பட்டத்தின் மீதே அச்சம் கொள்ளவேண்டியுள்ளது. எனவே எமது கட்சி ஆரம்பித்த இலவசக் கல்வியை பாதுகாக்க அரசாங்கம் முற்படவேண்டுமென்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *