அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

“வட இலங்கை முகாம் அகதிகளை மீளக் குடியேற்ற கால அட்டவணை வேண்டும்”

rg-camp.jpgஇலங்கை யின் வடக்கே அரசாங்கத்தினால் நடத்தப்படுகின்ற முகாம்களில் உள்ள தமிழ் அகதிகளை, அங்கிருந்து விடுவிப்பதற்கு ஒரு கால அட்டவணையை அறிவிக்குமாறு தமிழர்களின் முக்கியஸ்தர்கள் குழு ஒன்று இலங்கை அரசாங்கத்தை கேட்டிருக்கிறது.

தம்மை சுற்றவரவுள்ள முட்கம்பி வேலிகளை விட்டு வெளியே வர தமிழ் மக்கள் மிகவும் ஏக்கத்துடன் இருப்பதாகவும், அவர்களை விடுவிப்பதற்கான ஒரு கால எல்லையை அறிவிப்பது, காலவரையற்று அங்கே முகாம்களில் தடுத்து வைக்கப்படுவோம் என்ற அச்சத்தை அவர்களது மனதில் இருந்து அகற்றும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான இறுதிக்கட்டப் போரினால் இடம்பெயர்ந்த சுமார் மூன்று லட்சம் தமிழர்கள் இந்த முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் முன்னர் உறுதி கூறப்பட்டதற்கு இணங்க, இவ்வருட இறுதிக்குள் முகாம்களில் இருந்து வெளியே அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொய்யான தகவல்களை கூறி சட்டவிரோத செயற்பாடுகள்

பொய்யான தகவல்களை கூறி சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பாக விபரங்கள் தெரியும் பட்சத்தில் உடனடியாக பொலிஸ் தலைமையக த்திற்கு அறியத்தருமாறு பொலிஸ் திணைக்களம் வேண்டுகோள் விடுக்கின்றது.

அமைச்சர்களின் உறவினர்கள் என்று பொய்யான தகவல்களை கூறிக்கொண்டு சட்டவிரோத மண் அகழ்வு, மரம் வெட்டுதல், மாணிக்கக்கல் அகழ்வு மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை நடவடிக்கைகளில் நாடளாவிய ரீதியில் சிலர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் இவ்வாறு சட்டவிரோதமாக நடந்துகொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கட்டுப்படுத்துமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கமைய பொலிஸ் தலைமையகம் இந்த வேண்டுகோளை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மக்களின் நலனை கருத்திற் கொண்டு பொலிஸ் தலைமையகத்திற்கு தகவல்களை வழங்குபவர்களின் விபரங்கள் மிகவும் இரகசியமாக வைத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மலையகமெங்கும் பெருமழை; பல இடங்களில் மண்சரிவுகள் – வீடுகள் சேதம்; அபாய எச்சரிக்கை

images.jpgகடந்த சில தினங்களாகத் தொடராகப் பெய்துவரும் மழை காரணமாக மலையகத்தின் பல பிரதேசங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர்கள் நேற்று தெரிவித்தனர்.

அதே நேரம் பெல்மடுல்ல பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு இடங்களில் அமைந்திருக்கும் 17 வீடுகள் மண்சரிவு அச்சுறுத்தலையும் எதிர்நோக்கியுள்ளன. இதேவேளை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நுவரெலியா மற்றும் கேகாலை மாவட்டங்களிலுள்ள நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நேற்று மூன்றாவது நாளாகவும் 24 மணி நேர மண் சரிவு அபாய முன்னெச்சரிக்கையை விடுத்தது.

அடுத்து வரும் சில தினங்களுக்கு மேல் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும். மலையகத்தின் மேற்கு பகுதியில் கடும் காற்றும் வீச முடியும் என்று வானிலை அவதான நிலையம் நேற்று அறிவித்தது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இரத்தினபுரி மாவட்ட இணைப்பாளர் லெப்டினன்ட் கேர்னல் பிரியந்த அபேரட்ன குறிப்பிடுகையில், இரத்தினபுரி ரத்கங்கை வீதியில் கலபொடச் சந்தியில் நூறு மீற்றர் தூரத்திற்கு நேற்று அதிகாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளவென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் இன்று (3ம் திகதி) வருகை தரவுள்ளனர்.

இதேநேரம் பெல்மடுல்ல பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கொடகமவில் ஐந்து வீடுகளும் இஹலபோபிட்டிய, மெதவத்தையில் 12 வீடுகளும் மண்சரிவு அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளன. இதனால் அவ்வீடுகளில் வசித்தவர்கள் தற்காலிகமாக நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர் என்றார்.

நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் இரந்த ஹேமவர்தன கூறுகையில், நானுஓயா, சமர்செட் தோட்டத்தில் நேற்றுக் காலையில் திடீரென ஏற்பட்ட மண் சரிவில் வீடொன்று பெரிதும் சேதமடைந்துள்ளது. அவ்வீட்டில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கண்டி – நுவரெலியா வீதியில் டன்ஸிடென் என்ற இடத்தில் நேற்று அதிகாலையில் மண்மேடொன்று பாதையில் விழுந்துள்ளது. அங்கிருந்த பொலிஸ் சோதனைச் சாவடியும் சேதமடைந்துள்ளது. இருப்பினும், உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை என்றார்.

மலையகப் பிரதேசங்களில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் நுவரெலியா மாவட்டத்திலுள்ள அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவிலும் கேகாலை மாவட்டத்திலுள்ள யட்டியந்தோட்டை, புளத்ஹோபிட்டிய, தெரணியாகல ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளிலும் மண் சரிவு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் அதனால் 24 மணி நேர முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண் சரிவு ஆய்வு மற்றும் சேவைகள் பிரிவுத் தலைவர் ஆர். எம். எஸ். பண்டார கூறினார்.

ஓரினச்சேர்க்கை தவறில்லை; இந்தியாவில் பரபரப்பு தீர்ப்பு

ஓரினச் சேரக்கையாளர்கள் செக்ஸ் உறவு வைத்துக்கொள்வதில் எந்தவித சட்டவிரோதமும் இல்லை என்று டில்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் ஓரினச் சேர்க்கை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓரினச் சேர்க்கையை தடைசெய்ய வழி வகுக்கும் ஐ.பி.சி 377வது பிரிவையும் டில்லி உயர் நீதிமன்றம் செல்லாது என்று கூறி விட்டது.

இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை நிதிபதிகள் அஜித் பிரகாஷ் முரளிதர் ஆகியோர் பிறப்பித்தனர். இது குறித்து நீதிபதிகள் தங்களது தீர்ப்பின் போது கூறுகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது விதிக்கு புறம்பாக உள்ளது இந்த 377 வது சட்டப் பிரிவு.

ஒவ்வொரு குடிமகளும் தனது விருப்பப்படி வாழ அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு வகை செய்கிறது. ஆனால் அதை தடுக்கும் வகையில் 377 வது சட்டப் பிரிவு உள்ளது. எனவே இது செல்லாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ஐ. பி. சி. 377 இங்கிலாந்து ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டதாகும். இந்த சட்டப் பிரிவின்படி இயற்கைக்குப் புறம்பான செக்ஸ் உறவு கொள்வது கிரிமினல் குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தசட்டப் பிரிவை நீக்கக் கோரி சமீப காலமாக கோரிக்கைகள் வலுத்து வந்தன. சமீபத்தில் டெல்லி சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஓரினச் சேர்க்கையாளர்கள், அரவாணிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட பேரணிகளும் நடந்தன. இந்த சமயத்தில் இப்படி ஒரு தீர்ப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வணங்கா மண் கப்பல் சென்னைக்குள் வர அனுமதி

vanangaamancaptainali.jpgவணங்கா மண் கப்பல் சென்னைக்குள் வர அனுமதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ள தமிழர்களுக்கு ஐரோப்பிய வாழ் புலம் பெயர்ந்த தமிழர்கள் நிவாரணப் பொருட்களைத் திரட்டி வணங்கா மண் கப்பல் மூலம் அனுப்பி வைத்தனர்.

இந்தக் கப்பலை கைப்பற்றி தீவிர சோதனை செய்த இலங்கை அரசு அதில் ஆயுதங்கள் ஏதும் இல்லை என உறுதி செய்தது. ஆனால் அதில் உள்ள நிவாரணப் பொருட்களை ஏற்க மறுத்து வெளியேற்றியது. அதனையடுத்துக் கப்பல் சென்னை கடற்பகுதிக்கு வெளியே முகாமிட்டிருந்தது. இந்நிலையில் இன்று வணக்காமண் கப்பலை உள்ளே வர சென்னை துறைமுகம் அனுமதி அளித்துள்ளது.

சர்வ கட்சிக் கூட்டம் வெற்றிகரமாய் அமைந்தது – அநுர பிரியதர்ஷன யாப்பா பெருமிதம்

anura_priyadarshana_yapa.jpgஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற அபிவிருத்திக்கும் நல்லிணக்கத்துக்குமான சர்வ கட்சிக் கூட்டம் மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அலரி மாளிகையில் இன்று முற்பகல் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளும் பங்கேற்றமை நாட்டின் தேசிய பிரச்சினைக்கு நல்லிணக்கத்துடன் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தலைமையில் ஐ.தே.க.வும் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் உட்பட ஏனைய சகல கட்சிகளும் இன்றைய கூட்டத்தில் பங்குபற்றியமை விசேட அம்சமாகும். வடக்கில் யுத்தத்தினால் சேதமுற்ற பிரதேசங்களை மறுசீரமைத்தல் மற்றும் இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீளக்குடியமர்த்தல் போன்ற விடயங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற சகல கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒரே குரலில் வலியுறுத்தினர்.

எந்தக் கட்சிக்கும் இப்போது மரண அச்சுறுத்தல் இல்லாத காரணத்தினால் அனைவரும் மனம் திறந்து பேசி தமது உண்மையான நிலைப்பாட்டை முன்வைத்தனர். அத்துடன் ஜனாதிபதி முன்னெடுக்கும் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக அனைத்துக் கட்சிகளும் ஜனாதிபதிக்கு உறுதியளித்தன என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

பிரிட்டிஷ் தூதரகத்தின் மூன்று பணியாளர்களை விடுவித்ததாக இரான் அறிவிப்பு

iraq-br.jpgஇரான் தலைநகர் தெஹ்ரானில் இருக்கும் பிரிட்டிஷ் தூதரகத்தில் பணியாற்றிய இரானைச் சேர்ந்த ஊழியர்கள் மூன்று பேர் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டின் அரசு சார்பு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேர்தலுக்குப் பிறகு நடந்த வன்முறையில் இவர்களுக்கு பங்கு இருந்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இவர்களுடன் கைது செய்யப்பட்ட மற்றுமொரு பிரிட்டிஷ் தூதரக பணியாளர் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வார முற்பகுதியில் மற்ற ஐந்து இரானிய பணியாளர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர்

உல்லாசப் பயணத்துறை அமைச்சராக நந்தன பதவிப் பிரமாணம்

நாடாளு மன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்க உல்லாசப் பயணத்துறை அமைச்சராகப் அமைச்சராக இன்று மகிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

‘சற் ஸ்கோர்’ புள்ளி இன்று வெளியாகும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

‘சற் ஸ்கோர்’ புள்ளி இன்று வியாழக்கிழமை வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2008ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்கள் மேற்படி அனுமதி கோரி விண்ணப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்படுகின்றது.

உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால தலைமையில் இன்று பிற்பகல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் ‘சற் ஸ்கோர்’ புள்ளி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது

கிழக்கில் சட்டவிரோத ஆயுதக் கையளிப்பு – சனிக்கிழமை பிற்பகல் வரை நீடிப்பு

கிழக்கு மாகாணத்திலுள்ள ஆயுதக் குழுக்களிடமுள்ள சட்டவிரோத ஆயுதங்களை கையளிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இரண்டு நாட்களால் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்காக வழங்கப்பட்டிருந்த இரண்டு வார கால அவகாசம் இன்றுடன் பூர்த்தி அடைகின்ற போதும்; மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிப்பதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதன்படி ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் நான்காம் திகதி சனிக்கிழமை மூன்று மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதம் முறியடிக்கப்பட்ட பின்னர் நாட்டு மக்கள் மத்தியில் சுமுக நிலையை ஏற்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் சுமார் 18 ஆயுதக் குழுக்கள் உள்ளதாகவும் அக்குழுக்களிடம் 400 க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆயுதங்கள் உள்தாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளதென அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆயுதங்களை ஒப்படைக்க மறுக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க பொலிஸார் உத்தேசித்துள்ளனர். சிலரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்தே இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டதாக கிழக்கு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிடுகின்றார். ஆயுதங்களைப் பொறுப்பேற்கவென பொலிஸ், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படை அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.