ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற அபிவிருத்திக்கும் நல்லிணக்கத்துக்குமான சர்வ கட்சிக் கூட்டம் மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அலரி மாளிகையில் இன்று முற்பகல் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளும் பங்கேற்றமை நாட்டின் தேசிய பிரச்சினைக்கு நல்லிணக்கத்துடன் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் தலைமையில் ஐ.தே.க.வும் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் உட்பட ஏனைய சகல கட்சிகளும் இன்றைய கூட்டத்தில் பங்குபற்றியமை விசேட அம்சமாகும். வடக்கில் யுத்தத்தினால் சேதமுற்ற பிரதேசங்களை மறுசீரமைத்தல் மற்றும் இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீளக்குடியமர்த்தல் போன்ற விடயங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற சகல கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒரே குரலில் வலியுறுத்தினர்.
எந்தக் கட்சிக்கும் இப்போது மரண அச்சுறுத்தல் இல்லாத காரணத்தினால் அனைவரும் மனம் திறந்து பேசி தமது உண்மையான நிலைப்பாட்டை முன்வைத்தனர். அத்துடன் ஜனாதிபதி முன்னெடுக்கும் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக அனைத்துக் கட்சிகளும் ஜனாதிபதிக்கு உறுதியளித்தன என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.