மலையகமெங்கும் பெருமழை; பல இடங்களில் மண்சரிவுகள் – வீடுகள் சேதம்; அபாய எச்சரிக்கை

images.jpgகடந்த சில தினங்களாகத் தொடராகப் பெய்துவரும் மழை காரணமாக மலையகத்தின் பல பிரதேசங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர்கள் நேற்று தெரிவித்தனர்.

அதே நேரம் பெல்மடுல்ல பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு இடங்களில் அமைந்திருக்கும் 17 வீடுகள் மண்சரிவு அச்சுறுத்தலையும் எதிர்நோக்கியுள்ளன. இதேவேளை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நுவரெலியா மற்றும் கேகாலை மாவட்டங்களிலுள்ள நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நேற்று மூன்றாவது நாளாகவும் 24 மணி நேர மண் சரிவு அபாய முன்னெச்சரிக்கையை விடுத்தது.

அடுத்து வரும் சில தினங்களுக்கு மேல் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும். மலையகத்தின் மேற்கு பகுதியில் கடும் காற்றும் வீச முடியும் என்று வானிலை அவதான நிலையம் நேற்று அறிவித்தது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இரத்தினபுரி மாவட்ட இணைப்பாளர் லெப்டினன்ட் கேர்னல் பிரியந்த அபேரட்ன குறிப்பிடுகையில், இரத்தினபுரி ரத்கங்கை வீதியில் கலபொடச் சந்தியில் நூறு மீற்றர் தூரத்திற்கு நேற்று அதிகாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளவென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் இன்று (3ம் திகதி) வருகை தரவுள்ளனர்.

இதேநேரம் பெல்மடுல்ல பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கொடகமவில் ஐந்து வீடுகளும் இஹலபோபிட்டிய, மெதவத்தையில் 12 வீடுகளும் மண்சரிவு அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளன. இதனால் அவ்வீடுகளில் வசித்தவர்கள் தற்காலிகமாக நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர் என்றார்.

நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் இரந்த ஹேமவர்தன கூறுகையில், நானுஓயா, சமர்செட் தோட்டத்தில் நேற்றுக் காலையில் திடீரென ஏற்பட்ட மண் சரிவில் வீடொன்று பெரிதும் சேதமடைந்துள்ளது. அவ்வீட்டில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கண்டி – நுவரெலியா வீதியில் டன்ஸிடென் என்ற இடத்தில் நேற்று அதிகாலையில் மண்மேடொன்று பாதையில் விழுந்துள்ளது. அங்கிருந்த பொலிஸ் சோதனைச் சாவடியும் சேதமடைந்துள்ளது. இருப்பினும், உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை என்றார்.

மலையகப் பிரதேசங்களில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் நுவரெலியா மாவட்டத்திலுள்ள அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவிலும் கேகாலை மாவட்டத்திலுள்ள யட்டியந்தோட்டை, புளத்ஹோபிட்டிய, தெரணியாகல ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளிலும் மண் சரிவு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் அதனால் 24 மணி நேர முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண் சரிவு ஆய்வு மற்றும் சேவைகள் பிரிவுத் தலைவர் ஆர். எம். எஸ். பண்டார கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *