அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

பேராதனையில் மீண்டும் சட்டத்துறை கற்கைநெறி

university-of-sri.jpgபேராதனை பல்கலைக்கழகத்தில் மீண்டும் சட்டத்துறை கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  1963 இல் மூடப்பட்ட சட்டத்துறை இந்த வருடம் முதல் மீண்டும் கலைப்பீடத்தில் ஒரு திணைக்களமாக ஆரம்பிக்கப்பட்டு முதல் வருட மாணவர்களாக 48 பேர் வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்டனர்.

இந்த 48 பேரில் 40 பேர் பெண்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

மடுத் திருவிழாவுக்கு செல்லும் பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு – பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

madhu_mary.jpgமன்னார் மடுமாதாத் திருவிழாவுக்கு செல்லவிருக்கும் பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. இம்மாதம் 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை மடுமாதாத் தேவாலயத்திற்கு செல்லவிருக்கும் பக்தர்களுக்கு விசேட அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே மடுமாதாத் திருவிழாவுக்கு செல்லவிருக்கும் பக்தர்களின் பெயர் மற்றும் ஏனைய விபரங்களை முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கோரியிருக்கும் பொலிஸார்,  இதற்கான விண்ணப்பப்படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
 
அத்துடன்,  மதவாச்சி சோதனைச்சாவடியிலிருந்து,  மடுமாதாத் தேவாலயம்வரை பக்தர்கள் பயணிப்பதற்கான விசேட காலவரையறையை பொலிஸார் அறிவித்துள்ளனர். இதன்படி, இம்மாதம் 6ஆம் திகதி முதல் 11ஆம் திகதிவரை காலை 6 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரையும், 12ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரையும் மடுத் தேவாலயத்திற்கு பக்தர்கள் செல்லமுடியுமெனவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர். மடுமாதாத் திருவிழா இம்மாதம் 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,  15 ஆம் திகதி விண்ணேற்புத் திருவிழா நடைபெறுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆபாசப்பட இணையத்தளங்களை கண்காணிக்க குழுவொன்று நியமனம்

computer.jpgஆபாசப் படங்களைப் பிரசுரிக்கும் இணையத்தளங்களைக் காண்காணிப்பதற்காகக் குழுவொன்றை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு நியமித்துள்ளது. ஆபாசப் படங்களைக் கொண்ட இணையத்தளங்கள் தொடர்பாகத் தொடர்ந்து விழிப்புடன் செயற்படுவதற்குத் தொலைபேசி, இணையச் சேவைகளை வழங்கும் கம்பனிகள் இணக்கம் தெரிவித்திருப்பதாக தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு கூறியுள்ளது. அத்துடன், இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் இணையத்தளங்களைக் கட்டுப்படுத்தவும் அவை இணங்கியுள்ளன. ஏற்கனவே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட 12 இணையத்தளங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் இக்குழுவின் உறுப்பினர்கள் ஆபாசப் படங்களைக் காண்பிக்கும் இணையத்தளங்கள் தொடர்பாக விழிப்புடன் செயற்பட்டு ஆணைக்குழுவுக்குப் பரிந்துரை செய்வார்கள் என்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த காரியப்பெரும வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.

இதேவேளை, தமது பிள்ளைகள் தொடர்பாகவும் இணையத்தளத்தில் அவர்களின் செயற்பாடு குறித்தும் அதிகளவு கவனத்துடன் இருக்குமாறு பெற்றோரிடம் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

கையடக்கத் தொலைபேசிப் பாவனைக்கு தடை விதிக்கும் தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்

hand-phone.jpgபாடசா லைகளில் வகுப்பறை நேரங்களில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசியினைப் பாவிப்பதற்குத் தடை விதிக்கும் தீர்மானத்தினை மத்திய மாகாணத் தமிழ்க் கல்வி அமைச்சு உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்றும் பிரிடோ நிறுவன வெளிக்கள இணைப்பதிகாரி எஸ்.கே. சந்திரசேகரன் வேண்டுகோள் வித்துள்ளார். அண்மையில் மலையக கல்வி வளர்ச்சியில் எதிர்நோக்கப்படும் புதிய பிரச்சினைகள் என்ற தலைப்பில் அட்டன் சக்தி மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில்கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்; பிரிடோ நிறுவனத்தால் சிறுவர் கழக உறுப்பினர்களுக்காக நடத்தப்படும் பல்வேறு அறிவூட்டல் நிகழ்வுகளின் போது வகுப்பு நேரத்தில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசியில் பேசுவது தங்களின் கல்விக்கு பெரிதும் தடையாக இருப்பதாகவும் சில சந்தர்ப்பங்களில் தொலைபேசி அழைப்புகள் வந்தால் சில ஆசிரியர்கள் அத்துடன் பாடம் நடத்துவதை நிறுத்தி விடுவதாக குறைகூறும் மாணவர்கள் இதனால் கல்வி பெறுவதற்கானதமது உரிமை மறுக்கப்படுவதாக் கூறிவருகிறார்கள். இந்த பின்னணியில் அண்மையில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள மத்திய மாகாண கல்வி அமைச்சர் வே. இராதாகிருஷ்ணனும் ஆசிரியர்களின் கையடக்கத் தொலைபேசிப் பாவனை மாணவர்களின்கல்வியை பாதிப்பதால் வகுப்பு நேரத்தில் கையடக்கத் தொலைபேசிப் பாவனையை தடை செய்யப் போவதாக கூறியிருந்தார். இந்தத் தீர்மானத்துக்குப் பிரிடோ நிறுவனம் தனது முழு ஆதரவையும் தெரிவிப்பதுடன் இத்தடையை உடனடியாக உத்தியோகபூர்வமாக அமுல்நடத்துமாறு அமைச்சரிடம் கோரவிருக்கிறது.

கையடக்கத் தொலைபேசிகள் இன்று தவிர்க்க முடியாத அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. ஆனால், பாட நேரத்தில் தொலைபேசி அழைப்புகளை எடுப்பதோ அல்லது அவற்றிற்கு பதில் சொல்வதோ ஆசிரியரின் கருத்தூன்றிக் கற்பிக்கும் தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் மாணவரின் கவனத்தையும் திசை திருப்புகிறது. பல்லாண்டுகளாக பின்னடைவுக்குள்ளாகியிருந்த மலையக கல்வி பலசிரமங்களுக்கு மத்தியில் படிப்படியாக முன்னேற முயற்சிக்கும் அதேவேளையில் விசேடமாக நுவரெலியா மாவட்டத்தில் தமிழ்ப்பிரிவில் கல்வி வளர்ச்சி பின்னடைவை கண்டுள்ளதாக புள்ளிவிபரங்களும் சுட்டிக்காட்டுவதையும் கவனிக்க வேண்டும். இந்த பின்னணியில் ஆசிரியரின் கையடக்கத் தொலைபேசிப்பாவனை மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்துள்ளது.

பொதுவாக ஆலோசனை கூட்டங்கள், கருத்தரங்குகள், வேலைக்களங்கள் என்பன நடைபெறும் போது கூட அவை முடிவடையும் வரை கையடக்கத் தொலைபேசிகளை இயங்காமல் செய்யுமாறு ஏற்பாட்டாளர்கள் பங்குபற்றுவோரிடம் கோருகிறார்கள். பல அரசு காரியாலயங்களுக்கு உள் நுழையும் போதும் இவ்வாறான வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. அந்த கோரிக்கை எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சாதாரண கூட்டங்களின் போது கூட இவ்வாறான கோரிக்கை விடுக்கப்பட்டு அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் போது மாணவரும் ஆசிரியரும் ஒருமித்த கவனத்தோடு ஈடுபட வேண்டிய குறுகிய நேர பாடவேளையில் கையடக்கத் தொலைபேசிப் பாவனை கூடாது என்ற கோரிக்கையை எவரும் அநீதியானது என கூற முடியாது.

ஆசிரியர் தங்கள் பாட வேளைக்குப் பின்னர் அல்லது இடைவேளைகளின் போது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதில் தடையில்லை. அவசர தொலைபேசி அழைப்புகள் வந்தாலும் கூட பாட வேளைக்குப்பின்னர் அவற்றிற்குப்பதில் அளிக்கக் கூடிய வசதியிருப்பதால் எதுவித பாதகமும் ஏற்பட வழியில்லை. இது விடயத்தில் ஆசிரியர்களே சுய கட்டுப்பாட்டுடன் செயற்பட்டு கையடக்கத் தொலைபேசிகளை இயங்காமல் வைத்திருக்க முன்வருவதே சிறந்தது. ஆசிரியர் இதை செய்யாத போது மாணவர்கள் அது தொடர்பாக அதிபருக்கோ அல்லது அதிகாரிக்கோ முறைப்பாடு செய்யும் நிலை ஏற்படும். இதேவேளையில் பாடநேரத்தில் ஆசிரியருக்கு தொலைபேசி அழைப்பு விடுப்பது ஒரு சமூக விரோதச்செயலாக கருதும் மனப்பாங்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

எனினும், இது விடயத்தில் வெறும் நல்லெண்ணத்தால் மட்டும் மாற்றம் வரும் என எதிர்பார்க்க முடியாததால் மலையக சமூகத்தின் கல்விஅபிவிருத்தி நலன்கருதி வகுப்பு நேரத்தில் கையடக்க தொலைபேசிப் பாவனைக்கு உத்தியோகபூர்வ தடையை உடனடியாக கொண்டு வருமாறு பிரிடோ நிறுவனம் கல்வி அமைச்சருக்குக் கோரிக்கை விடுக்கிறது. இது பின்தங்கிய சமூகத்தின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு விடுக்கப்படும் இந்த வேண்டுகோளை ஆசிரியர்களும் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும்.

மெனிக்பாம் முகாமில் இருக்கும் மக்கள் முதல் கட்டமாக மீள்குடியமர்த்தப்பட உள்ளனர்: றிசாட் பதியுதீன்

risadbadurudeen.jpg வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வவுனியா மெனிக் பாம் முகாம்களில் வசிக்கும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் யாழ் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த மாதம் 5 ஆம் திகதி தமது சொந்த கிராமங்களில் மீள்குடியமர்த்தப் படவுள்ளதாக மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைவாக, ஜனாதிபதியின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த மீள் குடியேற்றம் இடம் பெறவுள்ளதாக அமைச்ச்ர் றிசாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் 180 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த மக்கள் மீண்டும் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 1445 பேரும்,யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 45 குடும்பங்களுமே இம் மாதம் 5 ம் திகதி புதன்கிழமை, 60 பஸ் வண்டிகளில் வவுனியாவிலிருந்து சொந்த கிராமங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் மேலும் கூறினார்.

அடுத்தாண்டில் சிங்கள மாணவர்களுக்குக் கிழக்குப் பல்கலைக்கழக அனுமதி

eastern-university.jpgகிழக்குப் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் கல்வி ஆண்டில் வைத்தியம் மற்றும் வர்த்தக பீடங்களில் சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப்பட இருக்கின்றார்கள். பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் கல்வி ஆண்டில் அனுமதி பெறவிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்கள்(கலைப் பீடம் தவிர்ந்த) பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டு தெரிவான மாணவர்கள் பதிவு தற்போது நடைபெற்று வருகின்றது.

சௌக்கிய பராமரிப்பு – 51, விவசாயம் – 53, விஞ்ஞானம் (உயிரியல்) – 26, விஞ்ஞானம் (பௌதீகம்) – 52, வர்த்தகம் – 101. முகாமைத்துவம் – 82, தாதியியல் – 08 என்ற எண்ணிக்கையில் 372 மாணவர்கள் குறிப்பிட்ட பாட நெறிகளில் அனுமதி பெறவிருக்கின்றார்கள்.

சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்கு தெரிவான 51 பேரில் முஸ்லிம் – 30, சிங்களம் – 06, தமிழ் -15 என மாணவர்கள் அடங்குகின்றனர்.

முகாமைத்துவ பீடத்திற்கு தெரிவான 101 மாணவர்களில் 64 பேர் சிங்கள மாணவர்கள் என பல்கலைக்கழக தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது. 

வவுனியாவுக்கான ரயில் சேவைகள் இன்று முதல் வழமைபோல நடைபெறும்

train0000.jpgவவுனியா கொழும்பு ரயில் சேவைகள் நீண்ட காலத்தின் பின் இன்று சனிக்கிழமை முதல் வழமைபோல் நடைபெறும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. வவுனியா, கொழும்பு இரவு தபால் ரயில் சேவை வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு இந்த ரயில் வவுனியா ரயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் தாண்டிக்குளம் வரையும் சென்றது.

வடக்கில் தற்போது அமைதியான சூழல் காணப்படுவதால் இந்த ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும வவுனியாவில் வியாழக்கிழமை கூறினார்.

பாதுகாப்புக் காரணங்களால் வவுனியா வரையுமான ரயில் சேவைகள் மதவாச்சி வரையும் மட்டுப்படுத்தப்பட்டு கடந்த ஒன்றரை வருடங்களாக நடைபெற்று வந்தன.  இன்று சனிக்கிழமை முதல் வவுனியாவில் இருந்து கொழும்பு கோட்டைக்கும் கொழும்பு கோட்டையில் இருந்து வவுனியாவுக்கும் வழமையான நேரப்படி ரயில் சேவைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதையடுத்து வவுனியா, மன்னார் பிரதேசங்களின் தபால் சேவைகளும் தாமதமின்றி நடைபெறும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார செயலாளராக நிருபமாராவ் இன்று பதவியேற்பு

01-nirupama.jpgஇந்தி யாவின் புதிய வெளிவிவகார செயலாளராக நிருபமாராவ் இன்று சனிக்கிழமை பதவியேற்கிறார். சிவ்சங்கர் மேனனிடமிருந்து இன்று காலை 7 மணிக்கு பதவியை பொறுப்பேற்கும் நிருபமாராவ் கோகிலா ஐயருக்குப் பின்னர் இந்தியாவின் வெளியுறவு செயலாளராகும் இரண்டாவது பெண்ணாவார்.

58 வயதுடைய நிருபமா வெளிவிவகார சேவையில் பல முக்கியமான பதவிகளில் இருந்துள்ளார். இலங்கையில் இந்திய உயர்ஸ்தானிகராகப் பணியாற்றியிருந்த நிருபமா சீனத் தூதுவராகப் பணியாற்றி வந்தார்.

அதிகளவு நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் புதிய பதவியை ஏற்றுக்கொள்ளப் போவதாகவும் எதிர்நோக்க வேண்டியுள்ள சவால்கள் குறித்து பூரணமாக அறிந்திருப்பதாகவும் முன்னோக்கிச் செல்வதே தனது எதிர்பார்ப்பெனவும் ஏ.என்.ஐ.செய்திச் சேவைக்கு நிருபமா கூறியுள்ளார்.

இலங்கை சமாதான செயலகப் பணிகள் நேற்றுடன் நிறைவு

profrajiwawijesinha.jpgஇலங்கை சமாதான செயலகத்தின் பணிகள் நேற்று 31 ஆந் திகதியுடன் நிறைவு பெற்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரையின் பேரில் சமாதான செயலகம் தனது பணிகளை நிறைவு செய்து கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக பெற்றுக் கொள்ளப்பட்ட இராணுவ வெற்றியைத் தொடர்ந்து சமாதான செயலகத்தை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாக செயலகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நீண்ட ஆலோசனைகளின் பின்னர் சமாதான செயலகத்தை மூடும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த போது கடந்த 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி சமாதான செயலகத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

பேர்னாட் குணதிலக்க, ஜயந்த தனபால, பாலித கொஹணே உள்ளிட்டோர் சமாதான செயலகத்தின் பணிப்பாளர்களாகக் கடந்த காலங்களில் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமாதான செயலகப் பணிகளை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஏனைய நபர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் தொடர்பான ஐ.தே.க.வின் குற்றச்சாட்டை அரசு நிராகரிப்பு

anura.jpgசர்வதேச நாணய நிதியத் திடமிருந்து அரசாங்கம் பெற் றுக் கொண்டுள்ள கடன் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துவரும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அரசாங்கம் எவ்வித நிபந்தனைகளுமற்ற இணக்கப்பாட்டுடனான கடனையே பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் இவ்வவிணக்கப்பாட்டுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ள செயற்பாடுகளை அரசாங்கம் ஏற்கனவே செயற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த கடனைப் பெறும் விடயத்தில் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாதகமாகவுள்ள எந்தவொரு நிபந்தனைக்கும் அரசாங்கம் உடன்பாடு தெரிவிக்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சர்வதேச நாணய நிதியத்தில் 1950 ஆம் ஆண்டு காலப் பகுதியிலிருந்து மாறிமாறி வந்த அரசாங்கங்கள் அங்கத்துவம் வகித்ததுடன் கடன்களையும் பெற்று வந்துள்ளன. 1976, 1977, 1980, 1982 என தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு வரையில் பல்வேறு விடயங்களுக்காக கடன்களைப் பெற்று வந்துள்ளன.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் போன்று நாம் எந்தவித வாக்குறுதியோ அல்லது நிபந்தனைகளின் பேரிலேயோ இம்முறை கடன் எடுக்கவில்லை. அரச வளங்களைத் தனியாருக்குக் கையளிப்பது, அரச ஊழியர்களின் தொகையைக் கட்டுப்படுத்துவது, சம்பளம், ஓய்வூதியங்களைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் ஐ. தே. க. பல நிபந்தனைகளுக்கு உடன்பட்டே கடனைப் பெற்றது. இத்தகைய கடன்கள் நாட்டின் வர்த்தக நிலுவையை சமன் செய்வதற்கே உபயோகப்படுத்தப்படுவது வழக்கம்.

இலங்கை இம்முறை சர்வதேச நாணய நிதியத்திடம் 2.6 பில்லியன் ரூபாவைக் கடனாகப் பெறுகிறது. மஹிந்த சிந்தனை செயற்றிட்டத்தை முழுமையாகப் செயற்படுத்துவது, வறுமை ஒழிப்பு போன்ற அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்கள் இதன் மூலம் நிறைவேற்றப்படவுள்ளன. அத்துடன் தேச நிர்மாணத்துக்கான வரிகளிலும் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.

அரசாங்கம் காத்திரமானதொரு கொள்கையடிப்படையிலேயே இக்கடனைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி போலன்றி யுத்தத்தின் பின்னரான இலங்கையை அபிவிருத்தியில் கட்டியெழுப்புவதற்கே இந்நிதி பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.