அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

குடும்பிமலையில் தங்க நகைகள், பெருமளவு பணம் மீட்டெடுப்பு

udaya_nanayakkara_brigediars.jpg குடும்பி மலை (தொப்பிகல) நரகமுல்லை பிரதேசத்திலிருந்து 15 இலட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மட்டக்களப்பு, புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போதே புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் நகைகளை பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். 1.5 மில்லியன் ரொக்கப் பணம், தங்க மோதிரங்கள் – 2, தோடு – 2, வளையல் மற்றும் மாலைகளையே மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை மற்றுமொரு பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல்களின் போது ரி – 56 ரக துப்பாக்கிகள் – 14, சினைப்பர் துப்பாக்கி – 01, கிளேமோர் குண்டுகள் – 03 மற்றும் பல்வேறு வகையான ரவைகளையும் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

‘இனத்தை இனம் அழிக்கும் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க உதவிபுரிய கூடாது’

r-b0000.jpgநாட்டில் இனியொரு போதும் இனத்தை இனம் அழிக்கும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு மீள்குடியேறும் மக்கள் உதவிபுரிந்துவிடக் கூடாது என்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். அடக்கி ஆளும் நிலைக்கு இனியும் நாம் இடமளிக்கக் கூடாது என்று வவுனியாவில் நேற்று முன்தினம் (05) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்து முகமாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் வவுனியா நகர சபை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ரிசாட், “இடம்பெயர்ந்த மக்களை வைத்து சிலர் அரசியல் இலாபம் தேட பிரசாரம் செய்தார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்ற தலைவர் ஒருவர் முன்பே இருந்திருந்தால் இந்த நாட்டில் யுத்தம் ஏற்பட்டு உயிர்கள் அழிந்திருக்கா! புலிகளின் தளபதிகள் இன்று ஜனநாயக வழிக்கு வந்து மக்களுக்கு சேவைசெய்வதற்கு ஜனாதிபதியின் செயற்பாடுகள்தான் காரணம்.

இந்த நாட்டில் இனவாதத்தைப் பூண்டோடு இல்லாது அழிக்கவேண்டும். அது தமிழ், முஸ்லிம், சிங்கள இனவாதமாக இருந்தாலும் சரி இனியொருபோதும் இடமளிக்கக்கூடாது ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஒரு சிறந்த நிர்வாகி. நாட்டின் விபரங்களை விரல் நுனியில் வைத்துச் செயற்படுகிறார். கிளிநொச்சியிலும், வவுனியாவிலும் எத்தனை குளங்கள் உள்ளனவென்பதை அவர் ஆராய்ந்து வைத்து அவர் செயற்படுகிறார். ஓர் அரசாங்க அதிபரைவிட பசில் ராஜபக்ஷவுக்குத் தகவல்கள் தெரியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

“பஸ் கட்டணம் குறித்து அடுத்தவாரம் தீர்மானம்’

bussss.jpgதனியார் பஸ் சங்கங்களுடன் அடுத்தவாரம் நடைபெறவிருக்கும் சந்திப்பை அடுத்து பஸ் கட்டணம் குறித்து முடிவெடுக்கப்படுமென பயணிகள் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண நேற்று வியாழக்கிழமை சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. யான ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் லசந்த அழகியவண்ண இவ்வாறு கூறினார்.

“”பஸ் கட்டணங்களை 7 சதவீதத்தால் அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்தச் சங்கத்திற்கும் பஸ் கட்டணம் பற்றி தீர்மானம் எடுக்க முடியாது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவே இது பற்றி முடிவெடுக்க வேண்டும்.

அடுத்தவாரம் தனியார் பஸ் சங்கங்களுடன் சந்திப்பொன்று நடக்கவுள்ளது. அதன் பின்னர் பஸ் கட்டணம் குறித்து முடிவெடுக்கப்பட்டு வெளியிடப்படும்’ என்றும் அவர் இதன்போது கூறினார்.

‘மீள்குடியேற்றம் தாமதமென்போருக்கு கண்ணிவெடியின் தாக்கம் தெரியாது’ – அமைச்சர் முரளிதரன்

karuna000.jpgஇடம் பெயர்ந்த மக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த போலிப் பிரசாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வவுனியாவில் தெரிவித்தார். மக்களை முகாம்களில் தடுத்து வைக்கும் நோக்கம் எதுவும் அரசாங்கத்திற்குக் கிடையாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று முன்தினம் (05) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் முரளிதரன் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ,“மீள்குடியேற்றம் தாமதமாகுவதாக விமர்சனம் செய்பவர்களுக்குக் கண்ணிவெடியின் தாக்கம் தெரியாது.  அவசரப்பட்டு மக்களைக் குடியமர்த்தியிருந்தால், இதுவரை ஆயிரம், இரண்டாயிரம் பேரை இழந்திருப்போம். எனவே அவற்றை அகற்றிப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே மக்களை மீளக்குடியேற்ற வேண்டும். ஆயுதப் போராட்டத்தின் மூலம் பல்லாயிரம் உயிர்களை இழப்பதைத் தவிர வேறு நன்மை கிடைக்காது என ஐந்து வருடங்களுக்கு முன்பே கூறினோம். ஆனால், அவர்கள் ஏற்கவில்லை.

இனித் தமிழ் மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாகும். அதற்கு ஜனாதிபதியின் கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும். இன்னும் 2, 5 வருடங்களில் பாரிய அபிவிருத்தி ஏற்படும். நாம் ஜனாதிபதியின் அன்புக்கு உரியவர்களாகவும், விருப்பத்துக்கு உரியவர்களாகவும் மாறவேண்டும். கடந்த கால வடுக்களை மறந்துவிட்டு தன்னம்பிக்கையுடனும், ஆளுமையுடனும் நாம் வாழவேண்டும்” என்றார்.

40,000 இலங்கையர்களுக்கு இத்தாலியில் வதிவு அனுமதி – சட்டவிரோதமாக சென்றோருக்கு மனிதாபிமான அணுகுமுறை

rohitha.jpgசட்ட விரோதமாக இத்தாலியில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு வதிவு அனுமதியை வழங்க இத்தாலி அரசு முன்வந்துள்ளது. “நெருக்கடி தவிர்ப்பு சட்ட மூலத்தின் ஊடாக இவ் விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் ஊடாக சுமார் 4,000 முதல் 40,000 இலங்கையர்கள் நன்மையடையவுள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

நேற்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்துப் பேசும்போதே அமைச்சர் போகொல்லாகம மேற்கண்டவாறு தெரிவித்தார். இத்தாலியில் இவ்வாறு தங்கியிருக்கும் இலங்கையர் புதிய சட்ட மூலம் அமுலுக்கு வரும் போது தமக்கு புதிய கடவுச் சீட்டை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக இத்தாலியின் ரோம் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நெருக்கடி தவிர்ப்பு சட்ட மூலம் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட போதும் அதற்கு எதிர்ப்புகள் வலுத்தன. இதன் காரணமாக சட்ட மூலம் திருத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு 2009 ஓகஸ்ட் 3 ஆம் திகதி இத்தாலிய ஜனாதிபதியினால் கைச்சாத்தும் இடப்பட்டுள்ளது. உத்தியோக பூர்வமாக சட்ட மூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதுடன் 15 நாட்களில் அமுலுக்கு வரும்.

இச் சட்டத்தின் பிரகாரம் இத்தாலியின் வீட்டுப் பணி உதவியாளர்கள் மற்றும் நோயாளர்களுக்கு வயோதிபர்களுக்கு பராமரிப்பு உதவிகளைச் செய்வோர் போன்றோரை மட்டுமே உள்ளடக்குகிறது. சட்ட விரோதமாக தங்கியிருக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கும் வதிவு அனுமதியை நீடிப்பதற் கான சாத்திய கூறுகள் இல்லை என்றும் இத்தாலிய அரசு தீர்மானித்துள்ளது.

இத்தாலிய வீடுகளில் பெருமளவிலான இலங்கையர்கள், வீட்டுப் பணியாளர்களாகவும், உதவிச் சேவை வழங்குவோராகவும் உள்ளனர். இத்தாலிய தொழில் வழங்குனர்களின் நம்பிக்கையை யும் பெற்றுள்ள நிலையில் இவர்களை தொடர்ந்தும் தொழிலுக்கு அமர்த்துவதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனை இச் சட்ட மூலத்தின் ஊடாக இலங்கையர்கள் நன்மையடைவர்.

இத்தாலியின் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் றொபேட்டோ மரோணி மற்றும் பொதுநலசேவை அமைச்சர் மொறிசியோ சக்கோணி ஆகியோர் இத்தாலியில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் சகல வெளிநாட்டவர்களும் குற்றவியல் தவறை புரிந்துள்ளார்கள் என “நெருக்கடித் தவிர்ப்பு” சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்கள்.

சட்ட மூலத்தில் உள்ள சில சரத்துக்கள் ஐரோப்பிய அரசியல் யாப்புக்கு ஒவ்வாதது என்ற கருத்துபட இத்தாலிய வெளிநாட்டமைச்சுக்கு ரோமிலுள்ள இலங்கைத் தூதரகம் எடுத்துக் கூறியிருந்தது. இத்தாலிய ஜனாதிபதி ஜியோர்ஜியோ நபோலிரானோவின் இசைவிற்காக சமர்ப்பிக்கப்பட்டபோது மேற்படி கருத்துகள் காரணமாக மேல் மற்றும் கீழ் சபைகளின் மீளாய்வுக்காக திருப்பி அனுப்பப்பட்டது.

வயது முதிர்ந்தவர்களையும், வலது குறைந்தவர்க ளையும் பராமரிப்புக்க அரசு மாற்று வழிவகைகளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமாகையாலும், இது இத்தாலிய பொருளாதாரத்திற்கு எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதாலும் சில அரசியல் கட்சிகளிலும் எதிர்ப்புகள் இருந்தன.

அரசியல் கட்சிகளினதும், தூதரகங்களினதும் எதிர்புகளினாலும் முதியோருக்கான தாக்கம் என்பதையும் கருத்தில் கொண்டும், இத்தாலி அரசு ஐரோப்பிய யூனியன் அல்லாத நாடுகளிலிருந்து வந்து தொழில் புரியும் பல்லாயிரக்கணக்கான வீட்டுப் பணியாளர்கள், சேவை புரிவோர் தொடர்ந்தும் தங்குவதற்காக சட்ட ரீதியாக இத்தாலியில் தங்கும் விதத்தில் விசேட வதிவு அனுமதி வழங்கும் விதத்தில் முன்னைய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கமைய செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து 30 ஆம் திகதிக்குள் இத்தாலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு விண்ணப்பிக்க முடியும்.

வீட்டுப் பணியாளர் அல்லது பராமரிப்புகளில் ஈடுபட்டுள்ளவர் ஒரு குடும்பம் என்ற வகையில் ஒரு வதிவு அனுமதி பத்திரம் அல்லது தனி நபர் என்ற வகையில் இரண்டு வதிவு அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்ள முடியும். விண்ணப்பிப்பவர் 2009 ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக சேவையில் அமர்த்தப்பட்டுள்ள மையையும் உறுதிப்படுத்த வேண்டும்.

இலங்கையர்களின் நன்மை கருதி இத்தாலி ரோமிலுள்ள இலங்கைத் தூதரகத்தை இரவு 10 மணி வரை திறந்து வைக்குமாறும் வெளிநாட்டமைச்சு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

யாழ். ச.தொ.ச கிளையில் தினமும் 10 இலட்சம் ரூபா வருமானம் – ச.தொ.ச. தலைவர் தகவல்

sathosa-outlet.jpgயாழ்ப் பாணத்திலுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள் உட்பட ஏனைய பாவனைப் பொருட்களை சாதாரண விலையில் பெற்றுக் கொடுப்பதற்காக அங்கு ஆரம்பிக்கப்பட்ட ச.தொ.ச. கிளையில் நாளொன்றுக்கு பத்து இலட்சம் ரூபா வருமானமாகக் கிடைக்கின்றதென ச.தொ.ச. தலைவர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த ச.தொ.ச. கிளையில் கொழும்பு விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் முன்னர் அதிக விலை கொடுத்து அவற்றை வாங்கிய யாழ். மக்கள் தற்போது மிக்க உற்சாகத்தோடு பொருட்களைக் கொள்வனவு செய்ய திரண்டு வருகின்றனர். மின்சக்தி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டதற்கமைய யாழ்ப்பாணம்,  கஸ்தூரியார் வீதியில் உள்ள புதிய கட்டிடத்தில் கடந்த மாதம் 28ஆம் திகதி இந்த ச.தொ.ச. கிளை திறந்து வைக்கப்பட்டது.

வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இந்த யாழ். ச.தொ.ச. கிளையைத் திறந்து வைத்தார். யாழ்ப்பாணத்தில் விரைவில் இன்னும் இரண்டு ச.தொ.ச. கிளைகள் திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மும்பை குண்டுவெடிப்பு விசாரணை: மூவருக்கு மரண தண்டனை

மும்பையில் கடந்த 2003ம் ஆண்டு நடந்த இரட்டைக் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு மும்பையில் இரு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 54 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் ஹனீஃப் சையது, அவரது மனைவி ஃபாமீதா, அஸ்ரத் அன்சாரி ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 4ம் திகதி தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் தண்டனை அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று தண்டனைகளை வாசித்த நீதிபதிகள், குற்ற வாளிகள் மூவருக்கும் மரண தண்டனை வழங்கப்படுவதாக அறிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் லஷ்கர் இ. தொய்பா அமைப்புடன் தொடர்பு இருந்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது

நாடு திரும்பும் இந்திய டாக்டர்கள் குழு

vaccine.jpgஇலங் கையில் போர் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது அதில் காயமடைந்த தமிழர்களுக்கு சிகிச்சையளிக்க 6 மாதங்களுக்கு முன் இந்திய ராணுவ டாக்டர்கள் குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டது.

அவர்கள் திருகோணமலை மாவட்டம் புல்மொட்டையில் தற்காலிக மருத்துவமனை அமைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

பின்னர் இந்த மருத்துவமனை வவுனியா மாவட்டம் செட்டிகுளத்துக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள அகதி முகாமில் தங்கியிருந்த தமிழர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந் நிலையில் தங்களது பணிகள் முடிந்துவிட்டதால் இப்போது இந்தக் குழு இந்தியா திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றம் வரும் மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டம் ஆரம்பம்

26parliament.jpgபாராளு மன்றத்தைப் பார்வை யிட வருகை தரும் மாணவ ர்களுக்கு இலவசமாக பால் வழங்கும் திட்டம் சபாநாயகர் டபிள்யு. ஜே. எம். லொக்கு பண்டார தலைமையில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. தனியார் பால்மா கம்பனியொன்றின் அனுசரணையோடு இத்திட்டம் பாராளுமன்ற வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் பின்னர் பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகை தரும் சகல மாணவ, மாணவியருக்கும் ஒரு கிளாஸ் பால் வழங்கப்படும்.

பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில் ஒரு தனியார் கம்பனியும் ஏனைய நாட்களில் மற்றொரு கம்பனியும் பாடசாலை மாணவ மாணவியருக்கு இலவசமாக பால் வழங்க முன் வந்திருப்பதாக இத்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும்போது சபாநாயகர் கூறினார். இவ்வைபவத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த்தும் கலந்துகொண்டார்.

4வது கட்ட நிவாரணப் பொருட்கள் கப்பல் கொழும்பு நோக்கி வருகிறது.

06-cargo-ship.jpgஇலங் கையில் போரினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களுக்கு தமிழக அரசின் 4வது கட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் கொழும்பு நோக்கி வருகிறது.

உணவு பொருட்கள், மளிகை, பிளாஸ்டிக் கேன்கள், செருப்புகள், குழந்தைகளுக்கான துணிகள், வேட்டி-சேலைகள் அடங்கிய ரூ.15 கோடி மதிப்புள்ள இந்த பொருட்களை எம்.சி.பி. ஆம்ஸ்டர்டாம் என்ற கப்பல் மூலம் நேற்று இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இந்தக் கப்பல் நேற்று காலை 11.50 மணிக்கு சென்னை துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. 8ம் தேதி இது கொழும்பு வந்தடையும்.

இந்த நிவாரணப் பொருட்கள் இங்குள்ள இந்திய தூதரகம் மூலம், ஐக்கிய நாடுகள் சபை அமைப்பினரால் வன்னிதமிழர்களுக்கு வழங்கப்படும்.