யாழ்ப் பாணத்திலுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள் உட்பட ஏனைய பாவனைப் பொருட்களை சாதாரண விலையில் பெற்றுக் கொடுப்பதற்காக அங்கு ஆரம்பிக்கப்பட்ட ச.தொ.ச. கிளையில் நாளொன்றுக்கு பத்து இலட்சம் ரூபா வருமானமாகக் கிடைக்கின்றதென ச.தொ.ச. தலைவர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த ச.தொ.ச. கிளையில் கொழும்பு விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் முன்னர் அதிக விலை கொடுத்து அவற்றை வாங்கிய யாழ். மக்கள் தற்போது மிக்க உற்சாகத்தோடு பொருட்களைக் கொள்வனவு செய்ய திரண்டு வருகின்றனர். மின்சக்தி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டதற்கமைய யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் உள்ள புதிய கட்டிடத்தில் கடந்த மாதம் 28ஆம் திகதி இந்த ச.தொ.ச. கிளை திறந்து வைக்கப்பட்டது.
வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இந்த யாழ். ச.தொ.ச. கிளையைத் திறந்து வைத்தார். யாழ்ப்பாணத்தில் விரைவில் இன்னும் இரண்டு ச.தொ.ச. கிளைகள் திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.