அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

ரொஜர் பெடரர் மூன்றாம் முறையாக சின்சினாட்டி சாம்பியன்

tenis_champ.jpgசின் சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் உலகின் “நம்பர்-1′ வீரரான சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி நகரில் ஏ.டி.பி., சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் இறுதிப்போட்டியில்  சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்,  செர்பியாவின் நொவாக் ஜோகோவிச்சை சந்தித்தார்.

விறுவிறுப்பான இப்போட்டியின் முதல் செட்டை பெடரர் 6-1 என கைப்பற்றினார். தொடர்ந்து அபாரமாக ஆடிய பெடரர் இரண்டாவது செட்டை 7-5 என சற்று போராடி தன்வசப்படுத்தினார். இறுதியில் பெடரர் 6-1,  7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று,  சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் இத்தொடரில் மூன்றாவது முறையாக (2005, 2007, 2009) சாம்பியன் பட்டம் வென்றார் பெடரர்.

சிறைச்சாலைகளுக்கு விசேட ஸ்கானர் இயந்திரம்

சிறைக்கைதிகளை பார்வையிட செல்பவர்கள் கொண்டு செல்லும் பொருட்களை சோதனையிடவென விசேட ஸ்கேனர் இயந்திரம் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சுக்கும், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வஜிர விஜேகுணவர்த்தனவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இதற்கான இணக்கம் காணப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஹெனத் பெர்னாண்டோ நேற்றுத் தெரிவித்தார்.

எவ்வாறான ஸ்கேன் இயந்திரம் பொருத்துவது அதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை பெறுவது தொடர்பாகவும், இதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு பெறுவது தொடர்பாகவும் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு சகல நடவடிக்கைகளும் பூர்த்தியாகும் பட்சத்தில் கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளில் இந்த இயந்திரங்களை பரீட்சார்த்தமாக பொருத்தி அது தொடர்பாக ஆராய்ந்த பின்னர் நாடு முழுவதிலும் அதனை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். ஸ்கேனிங் இயந்திரம் பொருத்தப்படுவதன் மூலம் சட்டவிரோத ஆயுதங்கள், பொருட்கள் மற்றும் போதை பொருட்கள் சிறைச்சாலைக்குள் கொண்டு செல்வதை தடுக்க முடியும் என்றும் ஹெனத் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

வினாத்தாள்களை மாறிக் கொடுத்ததால் உயர்தரப் பரீட்சை மண்டபத்தில் குழப்பம்

000stud.jpgக.பொ.த. (உயர் தர) பரீட்சை ஆங்கில வினாத்தாள்களைக் கொட்டிகாவத்தை ராஜசிங்க வித்தியாலயத்தில் மாற்றிக் கொடுத்ததால் குழப்ப நிலையேற்பட்டது. இம்முறை உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பாட வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானதாகக் கூறப்பட்டு வந்த நிலையிலேயே மேற்படி பாடசாலையில் மேற்பார்வையாளர்களின் தவறால் சனிக்கிழமை குழப்ப நிலையேற்பட்டது.

பரீட்சை நிலையத்தின் மண்டபம் ஏ யில் சனிக் கிழமை காலை ஆங்கில பாடம் பகுதி I ற்குப் பதிலாக பகுதி II வினாத் தாள்கள் வழங்கப்பட்டுள்ளன. பகுதி I காலை 8.30 மணிமுதல் முற்பகல் 11.30 மணிவரையும் நடைபெறவிருந்தது. ஆனால் பகுதி I ற்குப் பதிலாக பகுதி II வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்தப் பாடசாலையின் ஏனைய பரீட்சை மண்டபத்திலிருந்த மாணவர்களுக்குச் சரியான வினாத்தாள் (பகுதி-I) வழங்கப்பட்டுள்ளது. தவறை உணர்ந்து கொண்ட பரீட்சை மேற்பார்வையாளர்கள், மாணவர்கள் பகுதி II வினாத்தாளுக்கு விடையளித்ததும் அவர்களை மதிய போசனை இடைவேளைக்கு வெளியே செல்ல அனுமதிக்காது அந்த மண்டபத்தினுள்ளேயே வைத்திருந்ததுடன் ஒரு மணிநேர இடைவேளைக்குப் பின் பகுதி I வினாத்தாள்களை வழங்கியுள்ளனர்.

மூன்றரை கோடி பெறுமதியான சிகரட் வகைகளை சுங்க அதிகாரிகளினால் மீட்பு

cigarette.jpgமூன்றரை கோடி பெறுமதியான சிகரட் வகைகளை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட இந்த சிகரட் வகைகளின் மூலம் அரசாங்கத்திற்கு பாரியளவு வரி வருமான நட்டம் ஏற்பட்டுள்ளதெனக் குறிப்பிடப்படுகிறது. சட்டவிரோதமாக தருவிக்கப்பட்ட சிகரட் வகைகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
பயணப் பொதி என்ற போர்வையில் பெருந்தொகை சிகரட்டுக்கள் டுபாயிலிருந்து கடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் சிகரட் வகைகளினால் பெரும் நட்டம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பாசிக்குடா

srilanka_passikuda.jpgஇலங் கையின் கிழக்கு மாகாணத்தில் உல்லாசப் பயணத்துறையில் பிரபலமான பெற்றுள்ள கடலோர பிரதேசங்களிலொன்றான பாசிக்குடா சுமார் 25 வருடங்களின் பின்பு தற்போது மீண்டும் தொடங்கியுளள்து.

கடற் குளிப்பிற்கு சர்வதேச ரீதியில் பிரபல்யம் பெற்றுள்ள பாசிக்குடாவிற்கு உள்நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் உட்பட தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கு சென்று தமது பொழுதைக் கழித்து திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

உல்லாசப் பயணிகளின் வருகை காரணமாக தமது பொருளாதாரம் தற்போது முன்னேற்றமடைந்து வருவதாக உள்ளுர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பிரதேசத்தில் உல்லாசப் பயணத்துறையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதால், நிலங்களுக்கும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாக கூறும் உள்ளுர்வாசியொருவர், கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக வெளியாட்கள் இங்கு வரவில்லை என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டிருந்த தமது தொழில் கூட தற்போது முன்னேற்றம் அடைந்து வருவதாக விருந்தினர் விடுதியொன்றின் உரிமையாளர் தெரிவிக்கின்றார்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நவம்பரில் சீனா செல்வார்

000-obama.jpgஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நவம்பர் மாதத்தில் சீனா செல்லவுள்ளதாக சீனாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதர் தெரிவித்தார். ஏப்ரல் மாத அழைப்பை ஏற்று பராக் ஒபாமா சீனா செல்வார். சிங்கப்பூரில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க வரும் அமெரிக்க ஜனாதிபதி மாநாடு முடிவடைந்ததும் சீனா செல்வார். இவரின் இந்த விஜயத்தால் அமெரிக்க- சீன உறவுகள் இந்த ஆண்டுக்குள் உறுதியடையும் எனவும் சீனாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதர் சொன்னார்.

பராக் ஒபாமாவை சீனா வருமாறு ஜனாதிபதி ஜுஹிண்டாவோ அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை பராக் ஒபாமா ஏற்றுக் கொண்டதையடுத்து இந்த விஜயம் ஏற்பாடாகியுள்ளது. ஜனாதிபதியின் முதல் விஜயமாக இது அமையவுள்ளது. பெரும்பாலும் நவம்பர் 14-15ம் திகதிகளில் அமெரிக்க ஜனாதிபதி சீனா செல்வாரென நம்பகரமான வட்டாரங்கள் கூறுகின்றன.

சீனாவும் அமெரிக்காவும் பாரிய வியாபாரக் கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுகின்றன. வர்த்தகம், வியாபாரம் காலநிலை மாற்றம் எரிவாயு பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் பற்றி இரு தலைவர்களும் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளனர்.

தாய்வானுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கியதால் ஆத்திரமடைந்த சீனா 2008ம் ஆண்டு 6.5 பில்லியன் பெறுமதியான ஆயுதப் பரிமாற்றங்களை அமெரிக்காவுக்கு வழங்காமல் நிறுத்திக் கொண்டது இது தவிர சீனாவின் கடல் எல்லைக்குள் அமெரிக்கக் கப்பல் ஊடுருவியதால் இரு நாடுகளிடையேயும் முறுகல் ஏற்பட்டது. இந்நிலைமைகளைச் சீர்செய்வது பற்றி முக்கிய பேச்சுக்களிலும் அமெரிக்க – சீன ஜனாதிபதிகள் ஈடுபடுவர். தாய்வான் எப்போதும் சீனாவின் இறைமைக்குக் கீழ் உள்ள ஒரு பகுதி என்பதை பராக் ஒபாமாவுக்கு இச்சந்திப்பின் போது வலியுறுத்தவும் சீன ஜனாதிபதி தயாராகவுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்

ஜனாதிபதித் தேர்தலில் வெல்லும் வல்லமை எனக்குள்ளது : எஸ்.பி.திஸாநாயக்க

dissanayake.jpgஜனாதி பதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறக் கூடிய வல்லமை தம்மிடம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு அழைக்கப்பட்டால் தயங்காது அந்த அழைப்பைத் தாம் ஏற்றுக் கொள்ளப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியை ஒரு புதிய பாதைக்கு இட்டுச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் பெயரில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் தாம் ஆதரவு வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பல்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், கட்சித் தலைமைத்துவத்தின் ஆளுமையின்மையே தேர்தல் தோல்விகளுக்குக் காரணம் எனக் கட்சி உறுப்பினர்கள் கருதவில்லை எனவும், அவர் தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர் ஒருவர் தமக்கு இருப்பதாகவும், பிரச்சினைகளைக் கட்சிக்குள்ளேயே தீர்த்துக் கொள்ளவே தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்வைன்: இந்தியாவில் 76 பலி

10092009.jpgஇந்தியா வில் பன்றி காய்ச்சல் நோய்க்கு இன்று பெங்களூர், டெல்லியில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர். இதையடுத்து பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஸ்வைன் ப்ளு எனப்படும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,900யை தாண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 205 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

.உல்லாச பயணம் வேண்டாம்-அரசு அறிவுரை:

இந்த நிலையில், பள்ளிகளில் பன்றி காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையில் அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் கடும் அறிவுரைகள் அடங்கிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறை மூலம் சுகாதாரத்துறை அனுப்பி உள்ள அந்த சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவுரைகள்:

– எந்த ஒரு மாணவருக்கோ, பணியாளருக்கோ, ஆசிரியருக்கோ பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

– பள்ளியில் பணிபுரிவோர், படிப்பவர் யாராக இருந்தாலும் உணவு உட்கொள்ளும் முன்பும், கழிவறைகளை பயன்படுத்திய பின்பும், கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

– தும்மல், இருமல் இருந்தால் கைக்குட்டை அல்லது சிறிய துண்டு அல்லது டிஸ்யூ பேப்பரை பயன்படுத்த வேண்டும்.

– ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டுவர வேண்டும்.

– பன்றி காய்ச்சல் பாதிப்புள்ள வெளிநாடுகள் மற்றும் ஊர்களுக்கு செல்ல அவசியம் ஏற்பட்டால் ஒழிய மற்றபடி பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கலாம். உல்லாச பயணம், மாநாடுகள் போன்றவற்றை தவிர்க்கலாம்.

– சரியான அறிவியல் பூர்வமான தகவல்களையும், செய்திகளையும் 044-24321569 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம். மேலும் சுகாதாரத்துறை இணையதளத்திலும் தகவல் பெறலாம்.

– வீண் வதந்திகளை நம்பி பள்ளிகளில் பீதி ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– பள்ளியில் பணிபுரிவோர் மற்றும் மாணவர்கள்  மருத்துவச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை.

– பன்றி காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ பரிசோதனைக்குப் பின் போதிய விடுமுறை வழங்கி வீடுகளில் இருக்கும்படி செய்ய வேண்டும். விடுதி மாணவர்களுக்கு நோய் அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவமனையில் சேர்த்திட வேண்டும்.

– நோய் வராமல் தடுக்க தும்மல் மற்றும் இருமலின்போது கைக்குட்டையால் வாய் மற்றும் மூக்குப்பகுதியை மூடிக்கொள்ள வேண்டும்.

– அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கக்கோரும் மனு அமெரிக்க நீதிமன்றால் நிராகரிப்பு

usa000.jpgதமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கக் கோரும் மனுவினை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் 2001 ஆம் ஆண்டில் சில குழுக்களை பயங்கரவாதக் குழுக்களெனப் பிரகடனம் செய்யவும் அவற்றின் சொத்துக்களை முடக்கி வைக்கவும் . அவற்றுக்கான உதவிகளையும் சேவைகளையும் தடை செய்யவும் அமெரிக்க அரசாங்கத்திற்கு அதிகாரமளித்து நிறைவேற்று கட்டளை பிறப்பித்திருந்தார்.

இதற்கு எதிராக அமைப்பு ஒன்று பயங்கரவாத பட்டியலிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்கிவிடுமாறு தாக்கல் செய்த மனுவை அமெரிக்க லொஸ் ஏஞ்ஜல்ஸ் மாநில நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

வடமராட்சியில் இன்று 75 வீடுகள் கையளிப்பு

home.jpgவடமராட்சி அல்வாயில் கடல்கோளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஹரித்தாஸ் கியூ டெக் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட 75 வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு சக்கோட்டையில் நடைபெறவுள்ளது. நிறுவன இயக்குநர் அருட்பணி கி.யோ.ஜெயக்குமார் அடிகளார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் யாழ்.ஆயர் வண.தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.

யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம், யாழ்.மாநகர சபை ஆணையாளர் மு.செ.சரவணபவ மற்றும் பருத்தித்துறை உதவிப் பிரதேச செயலர் திருமதி உஷா சுபலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

கையளிக்கப்படவுள்ள ஒவ்வொரு வீடுகளும் சுமார் 10 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.