அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நவம்பர் மாதத்தில் சீனா செல்லவுள்ளதாக சீனாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதர் தெரிவித்தார். ஏப்ரல் மாத அழைப்பை ஏற்று பராக் ஒபாமா சீனா செல்வார். சிங்கப்பூரில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க வரும் அமெரிக்க ஜனாதிபதி மாநாடு முடிவடைந்ததும் சீனா செல்வார். இவரின் இந்த விஜயத்தால் அமெரிக்க- சீன உறவுகள் இந்த ஆண்டுக்குள் உறுதியடையும் எனவும் சீனாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதர் சொன்னார்.
பராக் ஒபாமாவை சீனா வருமாறு ஜனாதிபதி ஜுஹிண்டாவோ அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை பராக் ஒபாமா ஏற்றுக் கொண்டதையடுத்து இந்த விஜயம் ஏற்பாடாகியுள்ளது. ஜனாதிபதியின் முதல் விஜயமாக இது அமையவுள்ளது. பெரும்பாலும் நவம்பர் 14-15ம் திகதிகளில் அமெரிக்க ஜனாதிபதி சீனா செல்வாரென நம்பகரமான வட்டாரங்கள் கூறுகின்றன.
சீனாவும் அமெரிக்காவும் பாரிய வியாபாரக் கொடுக்கல்வாங்கல்களில் ஈடுபடுகின்றன. வர்த்தகம், வியாபாரம் காலநிலை மாற்றம் எரிவாயு பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் பற்றி இரு தலைவர்களும் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளனர்.
தாய்வானுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கியதால் ஆத்திரமடைந்த சீனா 2008ம் ஆண்டு 6.5 பில்லியன் பெறுமதியான ஆயுதப் பரிமாற்றங்களை அமெரிக்காவுக்கு வழங்காமல் நிறுத்திக் கொண்டது இது தவிர சீனாவின் கடல் எல்லைக்குள் அமெரிக்கக் கப்பல் ஊடுருவியதால் இரு நாடுகளிடையேயும் முறுகல் ஏற்பட்டது. இந்நிலைமைகளைச் சீர்செய்வது பற்றி முக்கிய பேச்சுக்களிலும் அமெரிக்க – சீன ஜனாதிபதிகள் ஈடுபடுவர். தாய்வான் எப்போதும் சீனாவின் இறைமைக்குக் கீழ் உள்ள ஒரு பகுதி என்பதை பராக் ஒபாமாவுக்கு இச்சந்திப்பின் போது வலியுறுத்தவும் சீன ஜனாதிபதி தயாராகவுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்