க.பொ.த. (உயர் தர) பரீட்சை ஆங்கில வினாத்தாள்களைக் கொட்டிகாவத்தை ராஜசிங்க வித்தியாலயத்தில் மாற்றிக் கொடுத்ததால் குழப்ப நிலையேற்பட்டது. இம்முறை உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பாட வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானதாகக் கூறப்பட்டு வந்த நிலையிலேயே மேற்படி பாடசாலையில் மேற்பார்வையாளர்களின் தவறால் சனிக்கிழமை குழப்ப நிலையேற்பட்டது.
பரீட்சை நிலையத்தின் மண்டபம் ஏ யில் சனிக் கிழமை காலை ஆங்கில பாடம் பகுதி I ற்குப் பதிலாக பகுதி II வினாத் தாள்கள் வழங்கப்பட்டுள்ளன. பகுதி I காலை 8.30 மணிமுதல் முற்பகல் 11.30 மணிவரையும் நடைபெறவிருந்தது. ஆனால் பகுதி I ற்குப் பதிலாக பகுதி II வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்தப் பாடசாலையின் ஏனைய பரீட்சை மண்டபத்திலிருந்த மாணவர்களுக்குச் சரியான வினாத்தாள் (பகுதி-I) வழங்கப்பட்டுள்ளது. தவறை உணர்ந்து கொண்ட பரீட்சை மேற்பார்வையாளர்கள், மாணவர்கள் பகுதி II வினாத்தாளுக்கு விடையளித்ததும் அவர்களை மதிய போசனை இடைவேளைக்கு வெளியே செல்ல அனுமதிக்காது அந்த மண்டபத்தினுள்ளேயே வைத்திருந்ததுடன் ஒரு மணிநேர இடைவேளைக்குப் பின் பகுதி I வினாத்தாள்களை வழங்கியுள்ளனர்.