அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

சந்திராயன்- இஸ்ரோ தகவல் தொடர்பு துண்டிப்பு

29-chandrayaan.jpgஇந்தியா வின் ரூ. 400 கோடி மதிப்பிலான கனவுத் திட்டமான சந்திராயன் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. சந்திராயனுக்கும், இஸ்ரோவுக்கும் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது சந்திராயன். நிலவை ஆராய இந்தியா அனுப்பிய விண்கலம்தான் சந்திராயன். இந்தியாவின் முதல் ஆளில்லாத நிலவுப் பயணமும் இது என்பதால் ஒட்டுமொத்த இந்தியர்களும் சந்திராயனின் பயணத்தால் பெருமிதம் கொண்டிருந்தனர். நிலவை வலம் வந்து கொண்டிருந்த சந்திராயன் உடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதை இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது. சந்திராயன் விண்கலம் என்ன ஆனது என்பது குறித்து ஆய்வுகள் தொடங்கியுள்ளன. இருப்பினும் சந்திராயன் ஏற்கனவே தனது பணிகளை நிறைவேற்றி விட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நிலவை அடைவது மற்றும் நிலவு குறித்த புகைப்படங்களை அனுப்புவது ஆகிய முக்கியப் பணிகளை சந்திராயன் ஏற்கனவே முடித்து விட்டதாக இஸ்ரோ கூறுகிறது.

நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்ற ஆய்வையும் சந்திராயன் மேற்கொண்டது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், சந்திராயன் விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் சூடு ஆகிய பிரச்சினைகளைச் சந்தித்தது. இந் நிலையில் தற்போது சந்திராயனுக்கும், இந்தியாவுக்குமான ததகவல் நின்று போய் விட்டது. விண்வெளியில் 312 நாட்களை முடித்துள்ளது சந்திராயன். நிலவைச் சுற்றிலும் மொத்தம் 3,400 முறை வலம் வந்துள்ளது.

கடற்புலிகளை முற்றாக இல்லாதொழித்த இலங்கை கடற்படை உலகில் சக்திவாய்ந்தது – கோத்தாபய

29-sayura00.jpgதாய் நாட்டை பயங்கரவாதத்திலிருந்து வெற்றி கொண்டதைப் போன்று இலங்கையின் கடற்பரப்பை பாதுகாக்கும் பாரிய பொறுப்பு கடற்படைக்குரியது என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கடற்புலிகளை முற்றாக இல்லாதொழித்த இலங்கை கடற்படையினர் உலகில் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவர்களாக திகழ்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடல்வழியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் முயற்சிகளை செயலிழக்கச் செய்து கடல் பாதுகாப்பைப் பலப்படுத்தும் பொருட்டு முகாம்கள் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். படை நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தில் இலங்கை கடற்படையின் சகல செயற்பாடுகளுக்கும் விசேட பங்களிப்புக்களை வழங்கிய ஜி623 என்ற தாக்குதல் கப்பல் ‘சயுரல’ என்ற பெயரில் இலங்கை கடற்படையின் சேவையில் நேற்று உத்தியோகபூர்வமாக இணைத்துக்கொள்ளப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க தலைமையில் நேற்றுக் காலை திருகோணமலை கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மூன்றில் இரண்டு கடற்பரப்பை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த கடற்புலிகளையும் அதன் தலைவர்களையும் கடற் படையினர் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை பயன்படுத்தி தாக்கியழித்த பெருமை கடற்படையைச் சாரும்.

பலமான வளங்களையும் நவீன வசதிகளையும் கொண்ட நாடுகள் இலங்கை கடற் படையின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வருமாறு அழைப்பு விடுத்திருப்பது இலங்கை கடற்படையின் பலம் மேலும் உறுதியாக காணப்படுகின்றது என்றும் தெரிவித்தார். இந்தியாவினால் வழங்கப்பட்ட 74.1 மீற்றர் நீளமும், 11.4 மீற்றர் அகலமும் கொண்ட ஜி623 கப்பல் வன்னி மனிதாபிமான நடவடிக்கையின் ஆழ் கடல் ரோந்து கடமையில் ஈடுபடுத்தப்பட்டது.

இந்தக் கப்பலை முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சயுரல என்ற பெயரில் இலங்கை கடற்படையின் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான பிரகடனத்தை வழங்கியுள்ளார். கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் சுமித் ஆனந்த வீரசிங்கவிடம் பாதுகாப்புச் செயலாளரினால் பிரகடனம் வழங்கி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சமய வழிபாடுகள் இடம்பெற்றன.கப்பலைச் சென்று பார்வையிட்ட பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான உயர் அதிகாரிகள் அங்கு வழங்கப்பட்ட மரி யாதை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டனர்.படை நடவடிக்கையின் போது ஈடுபடுத் தப்பட்ட சகல தாக்குதல் படகுகளும் கப்பல்களும் அணிவகுத்து சென்றன. அதனைத் தொடர்ந்து சயுரல கப்பல் வெள்ளோட்டத்திற்கு விடப்பட்டது.

வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் தான் உள்ளார். – சிவாஜிலிங்கம்

29-sivajilingam.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். இதுபற்றிய நம்பகமான தகவல்கள் எனக்குக் கிடைத்துள்ளன, என்ற இலங்கை எம்பி சிவாஜிலிங்கம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.  3 மாதங்களுக்கு முன், புலிகள் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்ட தகவல் வெளியானபோது, ‘இன்னும் சில நாட்களில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று புலிகளே அறிவிப்பார்கள்… சூழ்நிலை கருதி அப்படியொரு அறிக்கை வெளியாகும்!” என்று மதுரையில் இவர்தான் பேட்டி கொடுத்தார். அடுத்த சில தினங்களிலேயே அப்படியொரு அறிக்கையை செல்வராசா பத்மநாதன் வெளியிட்டார்.

இந் நிலையில் கோவையில் நிருபர்களிடம் பேசிய சிவாஜிலிங்கம், எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். அவர் இறந்துவிட்டதாக செல்வராஜா பத்மநாதன் கூறியிருப்பதில் ஏதேனும் அரசியல் சூசகம் அடங்கியிருக்கலாம்.

பத்மநாபன் கைது முதற்கொண்டு பல விஷயங்களை நாங்கள் அப்படித்தான் கருதுகிறோம். தேசிய தலைவர் இறந்துவிட்டதாக எந்த தகவலும் எங்களுக்கு உறுதியாக, ஆதாரங்களுடன் கிடைக்கவில்லை. இலங்கை  அரசு அதற்கான ஆதாரங்கள் எதையும் தரவுமில்லை.

நான் தமிழ்மக்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான். தேசிய தலைவர் உயிருடன் உள்ளாரா என்பதற்கு காலம் பதில் சொல்லும். தற்போதைய உடனடி தேவை அகதிகளாக உள்ள 3 லட்சம் மக்களை அங்கிருந்து காப்பாற்றி, அவர்களின் இடங்களில் குடியமர்த்துவதுதான்.

மற்றபடி தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு என்பது சுய அரசியல்  நிர்ணய சபையுடன் கூடிய தமிழீழமே. ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வதா இல்லையா என்பது விடுதலைப் புலிகளின் கையில்தான் உள்ளது என்றார்.

பிரி. செனல் – 4 வீடியோ காட்சி குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் : ஐ.நா.பிரதிநிதி

ExtraJudicialKillingsபிரித்தா னியாவின் செனல்-4 தொலைக்காட்சி சேவை அண்மையில் வெளியிட்ட வீடியோ காட்சிகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டவிரோத கைதுகள் மற்றும் படுகொலைகளுக்கான பிரதிநிதி பிலிப் ஆல்ஸ்டன் தெரிவித்துள்ளதாக ஏஎப்பி செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில், குறித்த வீடியோ காட்சிகளின் நம்பகத்தன்மை தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ள போதிலும், விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததென அவர் தெரிவித்துள்ளார் எனவும்-

விசாரணைகளின் மூலம் உண்மைத் தகவல்கள் வெளியிடப்பட்டால் இலங்கை அரசாங்கம் மீதான சர்வதேச சமூகத்தின் நம்பிக்கை வலுப்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

குறித்த வீடியோ காட்சிகள் பாரிய மனித உரிமை மீறல்களை விதந்துரைப்பதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவுக்கு புதிய இலங்கை தூதர் காரியவாசம்

2prsad.jpgஇந்தியா வுக்கான புதிய இலங்கைத் தூதராக பிரசாத் காரியவாசம் நியமிக்கப்படுகிறார். இவர் இலங்கைக்கான ஐ.நா. நிரந்தரப் பிரதிநிதியாக முன்பு பணியாற்றினார்.

1981ம் ஆண்டு பிரசாத் இலங்கை வெளியுறவுப் பணியில் இணைந்தார். ஜெனீவா, ரியாத், வாஷிங்டன், டெல்லி ஆகிய இடங்களில் உள்ள இலங்கை தூதரகங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். இந்தியாவில், அம்பாசடர் பதவித் தகுதியிலான துணை ஹை கமிஷனராக பணியாற்றியுள்ளார்.

தற்போது தூதராக உள்ள ரொமேஷ் ஜெயசிங்கேவின் பதவிக்காலம் முடிவடைவதால் அவரது இடத்திற்கு காரியவாசம் வருகிறார். ரொமேஷ் ஜெயசிங்கே, இலங்கையின் புதிய வெளியுறவுத்துறை செயலாளராகிறார். தற்போது அப்பொறுப்பில் இருக்கும் பலித கொஹனா, ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர உறுப்பினர் பதவியை ஏற்கிறார்.

ஏற்கனவே சென்னையில் உள்ள இலங்கை  துணைத் தூதர் அம்சா, லண்டனுக்கு மாற்றப்பட்டு விட்டார். அவருக்குப் பதில் கிருஷ்ணமூர்த்தி அப்பொறுப்புக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய்க்கு விரைவில் ராஜ்யசபா எம்.பி. பதவி – காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல்

rahul_vijay.jpgகாங்கிரஸ் கட்சியின் தலைவி திருமதி சோனியா காந்தி முன்னிலையில் நடிகர் விஜய், விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளாரென்றும் அவருக்கு அகில இந்திய அளவில் கட்சியில் முக்கிய பொறுப்பும்,  ராஜ்யசபா எம்.பி., பதவியும் வழங்கப்படும் எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி முனைப்பாக இறங்கி உள்ளார்.

நடிகர் விஜய், கடந்த 24ஆம் திகதி டில்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். தன் ரசிகர்களை காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ள இச்சந்திப்பில் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் விஜய் இணைவதன் மூலம், எதிர்வரும் 2011ம் ஆண்டில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியும் என காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் நம்புகின்றனர். காங்கிரஸ் கட்சியில் விஜய் இணைந்தால் முழு மனதுடன் வரவேற்போம் என,  தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார். திரையுலகில் இளைஞர்களை ஈர்க்கும் சக்தியாக நடிகர் விஜய் வலம் வருவதால், அவரது வரவு கட்சிக்கு பலத்தைத் தரும் என காங்கிரஸ் கட்சியினர் கருதுகின்றனர்.

2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பிரசார பீரங்கியாக விஜயை பயன்படுத்திக் கொள்ளவும் காங்கிரஸ் கட்சியினர்  திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னர் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பும்,  ராஜ்யசபா எம்.பி., பதவியும் அவருக்கு வழங்கப்படலாமென அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள்” -இலங்கை உயர்நீதிமன்றம் உத்தரவு

00000court.jpgபயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக விரைவாக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டிருக்கிறது.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதமாக முடிவுக்குக் கொண்டுவந்து, அவர்களுக்கு எதிராக சாட்சிகள் இருப்பின், வழக்குத்தொடரவோ அல்லது சாட்சிகள் இல்லாதபட்சத்தில் அவர்களை விடுதலை செய்யவோ ஒரு அவசர வேலைத்திட்டத்தை நீதியமைச்சின் செயலாளருடன் சேர்ந்து தயாரிக்குமாறும் சட்டமா அதிபருக்கான உத்தரவில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளோவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு கடந்த ஒன்றரை வருடமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஜே. ஏ. பிரான்ஸிஸ் என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு இன்று எடுத்துக்கொண்ட போதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பது நீதியற்ற செயல் என்று பிரதம நீதியரசர் அசோக என். டி . சில்வா தெரிவித்திருக்கிறார்.

இதன் காரணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அடிப்படை உரிமை மீறல்கள் குறித்த வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பாக அமைகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

‘தமிழ் மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைவதற்கான அரசியல் தீர்வு திட்டம் அவசியம்’ – லியாம் பொக்ஸிடம் கோரிக்கை

liyam_pox-111.jpgஇலங் கையின் வடக்கே யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பி்னர் லியாம் பொக்ஸ் அவர்களிடம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்து செயற்படத்தக்க வகையிலான ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போரினால் இடம்பெயர்ந்துள்ள சுமார் 3 லட்சம் மக்களையும் உடனடியாக அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்தைத் தூண்ட வேண்டும் என்றும் யாழ் மாவட்டத்தி்ன் நல்லெண்ணத்திற்கும் சமாதானத்திற்குமான மக்கள் குழுவினர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்கள்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த லியாம் பொக்ஸ், நல்லை ஆதீன முதல்வர் மற்றும் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோர் உள்ளடங்கிய நல்லெண்ணத்திற்கும் சமாதானத்திற்குமான மக்கள் குழுவினரையும், யாழ் அரசாங்க அதிபர் கே.கணேஸையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அணுச் சோதனை தோல்வி என்ற இந்திய விஞ்ஞானியின் கருத்தால் சர்ச்சை

santhanam-nuclear_blast.jpgஇந்தியா 1998 ஆம் ஆண்டு நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி அடையவில்லை என்று அந்த சோதனையில் ஈடுபட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான கே. சந்தானம் தெரிவித்த கருத்தையடுத்து, இந்தியாவின் அணுசக்தித் திறன் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

அணுசக்திப் பரவல் தடை ஒப்பந்தம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசும்போது, சந்தானம் இந்தக் கருத்தை வெளியிட்டார். கடந்த 1998 ஆம் ஆண்டு வாஜபேயி பிரதமராக இருந்தபோது போக்ரானில் நடத்தப்பட்ட இரண்டாவது அணுகுண்டு சோதனையில், டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பிரதிநிதியாக அவரும் கலந்துகொண்டார்.

அந்த அணுகுண்டு சோதனை முழு வெற்றியடையாத நிலையில், இந்தியா மேலும் அணுகுண்டு சோதனைகளை நடத்த வேண்டும் என்றும், அவசரப்பட்டு, சிடிபிடி ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடாது என்றும் சந்தானம் வலியுறுத்தியுள்ளார்.

போக்ரன் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டு 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று அவரிடம் கேட்டபோது, “அணுப்பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று இந்தியாவின் மீது நிர்ப்பந்தம் அதிகரித்து வருகிறது. அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், அதன்பிறகு அணுகுண்டு சோதனை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் முற்றிலும் அடைக்கப்படும். அதனால், தற்போதுள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தியா இரண்டு அல்லது மூன்று அணுகுண்டு சோதனைகளை நடத்தி, தனது அணுத்திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும்’’ என்றார் விஞ்ஞானி சந்தானம்.

ஆனால், இந்திய அரசு சந்தானத்தின் கருத்தை ஏற்கவில்லை. உள்துறை அமைச்சர் சிதம்பரம் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது, சந்தானத்தின் கருத்தைக் கேட்டு தான் குழப்பமடைந்ததாகத் தெரிவித்தார்.

அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டபோது, டிஆர்டிஓ அமைப்பின் தலைவராக இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சந்தானத்தின் கருத்தை மறுத்திருக்கிறார். போக்ரான் அணுகுண்டு சோதனையில் தேவையான முடிவு கிடைத்ததாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இப்படியும் இந்தியாவில்..

இந்திய கிரிக்கெட் அணியின் கப்டன் டோனியுடன் ஒரே ஒரு போட்டோ எடுப்பதற்காக தனக்கு வருமானம் தந்த ஒரே சி.டி. கடையையும் விற்று போண்டி ஆகி உள்ளார் ஒரு வாலிபர். அவரது பெயர் ரவீந்திரகுமார் சைனி. 23 வயதான இவர் உத்தர பிரதேச மாநிலம் சஹராங்பூரை சேர்ந்தவர்.

இவருக்கு விரைவில் சோனியா என்ற பெண்ணுடன் திருமணம் நடக்க உள்ளது. இருவரும் டோனியின் தீவிர ரசிகர்கள் என்றாலும் சோனியாவை விட சைனிக்கே டோனி என்றால் கொள்ளைப் பிரியம். ‘டோனியுடன் இணைந்து உங்களால் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியுமா?’ என்று சோனியா ஒரு நாள் சவால் விட்டார். சவால் மட்டுமல்ல, தனது ஆசையும் அது தான் என்று சைனியிடம் கூறினார்.

இதையடுத்து வருங்கால மனைவியின் ஆசையை நிறைவேற்ற ரூ. 25 ஆயிரம் முதலீடு போட்டு ஆரம்பித்த கடையை வெறும் ரூ. 15 ஆயிரத்திற்கு விற்று விட்டு டோனியை பார்க்க ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு கிளம்பினார் சைனி. ஆனால் பாதுகாப்பு வலயத்தில் உள்ள டோனியை அவரால் எளிதாக சந்திக்க முடியவில்லை.

அங்குள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு முயற்சிகளில் இறங்கினார். டோனியின் சகோதரர் நரேந்திராவை சந்தித்து பேசியும் கூட, டோனியை பார்க்க இயலவில்லை. இப்படி 35 நாட்கள் தவம் கிடந்த அவரது கனவை கடைசியில் சில பத்திரிகையாளர்கள் நிறைவேற்றினர்.

அவர்கள் உதவியுடன் மும்பைக்கு புறப்பட இருந்த டோனியை ராஞ்சி விமான நிலையத்தில் சைனி சந்தித்தார். அப்போது தனது வருங்கால மனைவியின் சவால் மற்றும் ஆசையைபற்றி எடுத்து கூறி அவருடன் கைகுலுக்கி உற்சாகமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

தனது வருங்கால மனைவிக்காக தான் நடத்திய கடையை விற்று ஒரு மாத காலம் அலைந்து திரிந்து இதை செய்ததில் சைனிக்கு துளி கூட வருத்தம் இல்லையாம். புகைப்படம் எடுத்து கொண்ட தகவல் அறிந்ததும் சோனியா ரொம்ப ஆச்சரியப்பட்டதாக சைனி தெரிவித்தார்.

ஆனால் இந்த மகிழ்ச்சியை அவருடன் நேரில் உடனடியாக பகிர்ந்து கொள்ள முடியவில்லை. காரணம் கொண்டு வந்த பணம் எல்லாம் காலியாகி விட்டது. இதனால் வேறு வழியில்லாமல் ராஞ்சியில் ஜெய்பால்சிங் மைதானம் அருகே உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.  அது சைனியின் ஊரைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கடை. ரயில் டிக்கெட் எடுக்க பணம் தருவதாக அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் சொந்த ஊருக்கு திரும்பி விடுவேன் என்றும் சைனி தெரிவித்தார்.