அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இந்தியாவில் பிறந்த பிள்ளைகளுக்கு இலங்கை பிரஜாவுரிமை பத்திரம் – வவுனியா, மன்னாரில் 28ம், 29ம் திகதிகளில் நடமாடும் சேவை

இந்தியாவில் பிறந்த பிள்ளைகளுக்கான பிரஜா உரிமைப்பத்திரம் வழங்குவதற்கான நடமாடும் சேவை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரஜா உரிமைக் கிளையின் உதவியுடன் இடம்பெறவுள்ளது. வவுனியா, மன்னார் மாவட்டங்களில் எதிர்வரும் 28ம், 29ம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டத்தின் கீழ் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. அபிவிருத்தித் திட்டம் அறிவித்துள்ளது.

28ம் திகதி வவுனியா மாவட்டத்திலும் 29ம் திகதி மன்னார் மாவட்டத்திலும் இடம்பெற உள்ள இந்நடமாடும் சேவையில் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து இந்தியாவில் பல வருடங்களாக வசித்து மீண்டும் இலங்கை திரும்பியவர்களின் இந்தியாவில் பிறந்த பிள்ளைகள் இருப்பின் அவர்களுக்கான இலங்கைப் பிரஜா உரிமைப் பத்திரம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது.

உரிய தினங்களில் நடமாடும் சேவையில் கலந்து பயன் பெறுமாறு நீதிநியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டத்தின் வடபிராந்திய இணைப்பாளர், சட்டத்தரணி எம். எச். எம். ஸியாத் கேட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்ட காரியாலயத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்ட நீர் விநியோகத்திற்கு ஜப்பான் நிதி உதவி

260909japanflag.jpgயுத்த நடவடிக்கைகளால் அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் குடிநீர் விநியோகத் திட்டத்துக்கு ஜப்பான் அரசாங்கம் 8.6 மில்லியன் ரூபாவை உதவியாக வழங்கியுள்ளது.

குறிப்பிட்ட பிரதேசத்துக்கான குடிநீர் விநியோகத்திட்டத்தின் நிர்மானப்பணிகள் 2002 ஆம் ஆண்டு முதல் தடைப்பட்டுள்ளன.
ஜப்பான் நிதியுதவி மூலம் தடைப்பட்டுள்ள நிர்மானப்பணிகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அம்பாறை மாவட்டத்தின் தமன பிரதேச செயலகப்பிரிவைச் சார்ந்த 600 குடும்பங்களுக்கு குடிநீர் வசதி கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வவுனியா முகாமிலிருப்பவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் மோதல்

இலங்கையின் வடக்கே வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் இன்று அங்குள்ளவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல்கள் இடம் பெற்றுள்ளன.

அங்குள்ள இராமநாதன் முகாமிலிருந்து சிலர் அடுத்துள்ள ஆனந்தகுமாரசாமி முகாமுக்கு செல்ல முற்பட்ட போது அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு செல்ல முயன்றவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்த போது, முகாமிலிருந்தவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை எறிந்ததாகவும், அதையடுத்து தற்பாதுகாப்புக்காக படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இராணுவப் பேச்சாளர் கூறுகிறார்.

இந்த மாதம் 17 ஆம் தேதி முதல் இலங்கை அரசு அங்குள்ளவர்களுக்கு சமைத்த உணவு வழங்குவதை நிறுத்திவிட்டததால், உலக உணவுத் திட்டத்தால் வழங்கபடும் உலர் உணவுகளை சமைக்க தேவைப்படும் விறகுகளை எடுத்து வருவதற்காகவே மக்கள் ஒரு முகாமிலிருந்து மற்ற முகாம்களுக்கு செல்ல வேண்டிய தேவை எழுந்துள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவிக்கிறார்.

இந்த மோதலின் காரணமாக இரு முகாம்வாசிகளுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் கூறுகிறார்.

கிழக்கு மாகாணத்தில் வீடமைப்புத் திட்டம் – வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தகவல்

260909house_new.jpgகிழக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு வீடமைப்புத் திட்டமொன்று அமைக்கப்படவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஏ.ஐ. விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும்  திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டத்திற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த திட்டத்திற்கு முதல் கட்டமாக மூன்று கோடியே 80 இலட்சம் ரூபா செலவு செய்யப்படவுள்ளன. நாடு பூராகவும் ஐயாயிரம் குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் குடியிருப்பு வசதிகள் இல்லாதுள்ளனர். இவர்களுக்கு குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

மாவிலாறு முதல் புதுமாத்தளன்வரை: கொழும்பில் மாபெரும் கண்காட்சி – நினைவு முத்திரை ரூ. 1000 நாணய குற்றி வெளியிட ஏற்பாடு

பாதுகாப்புப் படையினர் மாவிலாறு முதல் புதுமாத் தளன் வரை நடவடிக்கை மேற்கொண்ட விதத்தையும், பிரபாகரனின் உடலைக் கண்டெடுத்ததையும் பொதுமக்கள் மீண்டும் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் மூன்றாம் திகதி சனிக்கிழமை முதல் ஏழாந் திகதி புதன்கிழமை வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் கண்காட்சியிலேயே இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.

இராணுவத்தின் 60 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவிலாற்றில் இருந்து புதுமாத்தளன் வரை படை யினர் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகள் குறித்து விளக்கும் காட்சிக் கூடங்கள் அமைக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினருக்கு ஆசிவேண்டி அநுராதபுரம் மகாபோதியில் நடைபெறும் பூஜையைத் தொடர்ந்து இந்த நிகழ்வு நடைபெறும்.

புலிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது படையினர் கைப்பற்றிய ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்படுவதுடன் படையினர் பயன் படுத்திய ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

இதேவேளை, படையினரை கெளரவிக்கு முகமாக நினைவு முத்திரையொன்றும் ஆயிரம் ரூபா நாணயக் குற்றியொன்றும் வெளியிட்டு வைக்கப்படுகின்றன.

யாழ். தமிழ் இலக்கிய விழா ஒத்திவைப்பு

260909srilanka.jpgவட மாகாணம் பிரிக்கப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த தமிழ் இலக்கிய விழா மூன்றாவது முறையாகவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை வட மாகாண கல்வி, கலை, கலாசார, பண்பாட்டு, விளையாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் 2,3,4 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த தமிழ் இலக்கிய விழா, எதிர்வரும் 8,9,10ஆம் திகதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. வட மாகாண தமிழ் இலக்கிய விழா சென்ற (2008) ஆண்டு மன்னாரில் இரு தினங்கள் நடைபெற முதலில் ஏற்பாடு செய்யப்பட்டு, பின் ரத்தானது. இதனால் மன்னார் மாவட்ட கலைஞர்களும், பேராளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்புக் காரணங்களுக்காகவே விழா ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது தடவையாக எதிர்வரும் 2,3,4ஆம் திகதிகளில் மேற்படி விழா இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. தற்போது 3ஆவது தடவையாக 8,9,10 ஆம் திகதிகளுக்கு விழா மாற்றப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம் – 2 விமானங்கள் ரத்து

26-air-india.jpgஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானிகள் வேலை நிறுத்தம் சமீபத்தில் ஓய்ந்த நிலையில் தற்போது ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதன் காரணமாக இன்று இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

உற்பத்தியுடன் கூடிய போனஸில் 50 சதவீதத்தைக் குறைக்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.  இதற்கு விமானிகள்  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை எதிர்த்து விமானிகளில் ஒரு பிரிவினர் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதன் காரணமாக இன்று டெல்லியிலிருந்து மும்பை மற்றும் காபூல் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதில் பயணம் செய்யவிருந்த பயணிகள் வேறு விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காபூல் செல்ல வேண்டிய பயணிகள் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே விமானிகள்  சங்க பிரதிநிதி கேப்டன் பல்லா கூறுகையில், ஊதியக் குறைப்பு காரணமாக எந்த பைலட்டுமே வேலை பார்க்கும் மன நிலையில் இல்லை. எனவே யாரும் வேலை செய்ய மாட்டோம் என்று கூறியிருந்தார்.

ஏர் இந்தியா நிறுவனத்தில் 300 எக்சிகியூட்டிவ் விமானிகள் உள்ளனர்

வோல்ட்டர் கேலின் நேற்று வவுனியா முகாம்களுக்கும் நேரில் விஜயம்

210909walter-kalin.jpgஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இடம்பெயர்ந்த மக்களின் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதி வோல்ட்டர் கேலின் நேற்று மாலை வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு விஜயம் செய்த அங்கு முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமைகளை பார்வையிட்டார்.

இன்று சனிக்கிழமை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின்போது, இடம்பெயர்ந்த நிலையில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு அரசாங்கம் செய்துகொடுத்துள்ள வசதிகள், மீள்குடியேற்றம், நிலக்கண்ணி வெடி அகற்றல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த புதன்கிழமை இலங்கை வந்த வோல்டர் கேலின் நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்டார்.

கோரம் இன்மையால் சபை நடவடிக்கை ஒத்திவைப்பு

26parliament.jpgசபையில் கோரமின்மையால் (சபையை நடத்த போதிய உறுப்பினர்கள் இன்மையால்) ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பிக்க முடியாமல் போனது.

நேற்று பகல் 12.30க்கு சபை நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைக்குமாறு பிரதி சபாநாயகர் பிரியங்கர ஜயரட்ன தெரிவித்தார்.

பிரேரணையை சமர்ப்பிக்க தயாரான போது போதிய உறுப்பினர்கள் இல்லாமையை சுட்டிக்காட்டி கோரம் மணியை ஒலிக்கச்செய்யுமாறு அமைச்சர் லசந்த அழகியவண்ண கோரினார்.

கோரம் மணி ஒலித்த சில நிமிடங்களில் உறுப்பினர்கள் சபைக்குள் வந்தனர். மீண்டும் பிரேரணையை சமர்ப்பிக்க முற்பட்ட போது பிரதி அமைச்சர் ஹுசைன் பைலா கோரமின்மையை சுட்டிக்காட்டினார்.

ஐந்து நிமிடங்களாக சபைக்குள் உறுப்பினர்கள் வராததால் பிரதி சபாநாயகர் பிரியங்க ஜயரட்ன சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார்.

தாய்நாட்டுக்கு துரோகமிழைத்தால் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன் – ஜனாதிபதி

slpr080909.jpg“எனக் கெதிரான அவதூறுகளை நான் பொறுத்துக் கொள்ள முடியும். எனினும் நாட்டுக்கு எதிராகச் செயற்படும் எவருக்கெதிராகவும் உரிய நடவடிக்கை எடுப்பதில் நான் பின்நிற்கப்போவதில்லை” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பிறந்த நாட்டுக்குத் துரோகம் செய்வதற்கான உரிமை எவருக்கும் கிடையாதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்ட மகளிர் அமைப்புகள் கலந்துகொண்ட நிகழ்வொன்று நேற்று மெதமுலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மூன்றரை இலட்சம் வாக்குகளை வழங்கி என்னை ஜனாதிபதியாக்கியதில் பெரும் பங்களிப்பு தென் மாகாண மக்களுடையது. ஏனைய பகுதிகளில் எமக்குக் கிடைத்த வாக்குகளோடு ஒப்பிடும் போது நீங்கள் வழங்கிய ஆதரவு பெருமைப்படக்கூடியது. முப்பது வருடகால இந்த நாட்டின் சாபமாயமைந்த பயங்கரவாதத்தை ஒழித்து துண்டாடப்பட்டிருந்த நாட்டை ஒன்றிணைக்கவே மக்கள் எனக்கு ஆணை வழங்கினர்.

அம்பாந்தோட்டை, மாத்தறை என நான் என்றும் பிரித்துப் பார்த்ததில்லை.  இரண்டும் எனக்கு ஒரு மாவட்டத்தைப்போன்றது. என்னைப் பெற்ற எனது தாய் மாத்தறையிலிருந்து வந்தவரே.  இந்த நாட்டை மீட்க தமது உயிரைப் பணயம் வைத்த படைவீரர்கள் மட்டுமன்றி அவர்களது பெற்றோரும், உறவுகளும் எமது கெளரவத்திற் குரியவர்களே. நாம் இந்த நாட்டை எளிதாக மீட்டெடுக்கவில்லை. உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் இருந்து பல்வேறு தடைகளும் அழுத்தங்களும் வந்தன. பலர் எமது காலை வாரமுயன்றனர். இத்தகைய தடைகளுக்கு மத்தியிலேயே நாம் இந்த நாட்டை மீட்க முடிந்தது.

இதற்கான நடவடிக்கையில் எமது படையினர் 26,000 பேர் பலியாகினர். மேலும் 5,000 ற்கு மேற்பட்டோர் உடல் ஊனமுற்றனர். அத்தகைய படையினருக்கு எதிராக குற்றஞ் சுமத்தி அவர்களை சர்வதேச இராணுவ நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதற்கு நம்மவர்களே முயற்சிக்கின்றனர்.

சர்வதேச இராணுவ நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க சாட்சியங்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உலகில் மிகக் கொடூரமான பயங்கரவாத இயக்கத்தை இல்லாதொழித்த எம் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர். ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இடம்பெற்றவைகளைப் பற்றி கவனத்திற்கொள்ளவோ விசாரணைக்குழு அமைக்கவோ முன்வரவில்லை. கொடூர பயங்கரவாதத்தை ஒழித்த எம்மீது குற்றஞ்சுமத்த வருகின்றனர்.

மக்களின் வாக்குகளைப் பெற்றுப் பாராளுமன்றம் சென்றவர்களே இன்று நாட்டை மீட்ட படையினருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் செல்ல தலைப்பட்டுள்ளனர். சுனாமி முதல் எனக்கெதிராக அவதூறுகளை எதிர்க்கட்சி மேற்கொண்டது.  அதனை நான் பொருட்படுத்தவில்லை. எனினும் தாய்நாட்டுக்கு எதிராக துரோகமிழைத்தால் அதற்குப் பதிலடி கொடுக்க நான் தயங்கமாட்டேன்.

நாட்டில் தற்போது பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.  கொழும்புக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி இன்று கிராமிய ரீதியில் சகல பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரச சேவையில் தற்போது 12 இலட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கான சம்பளம், மக்களுக்கான நிவாரணம், விவசாயிகளுக்கான மானியம், அத்தியாவசியப்பொருட்களுக்கான வரிச் சலுகைகள் என மக்கள் நலனைக் கருத்திற்கொண்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அம்பாந்தோட்டை, மாத்தறை மாவட்டங்களைப் பொறுத்தவரை முழுமையான அபிவிருத்திக் குள்ளாக்கப்பட்டு வருகின்றன. வீதிகள் அனைத்தும் புனரமைக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 10ம் திகதி நடைபெறும் தேர்தலின் மூலம் அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் திருப்திகரமானது என்பதை உலகிற்கு காட்ட முடியும் எனவும் ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்தார்.