இலங்கையின் வடக்கே வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் இன்று அங்குள்ளவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல்கள் இடம் பெற்றுள்ளன.
அங்குள்ள இராமநாதன் முகாமிலிருந்து சிலர் அடுத்துள்ள ஆனந்தகுமாரசாமி முகாமுக்கு செல்ல முற்பட்ட போது அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு செல்ல முயன்றவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்த போது, முகாமிலிருந்தவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை எறிந்ததாகவும், அதையடுத்து தற்பாதுகாப்புக்காக படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இராணுவப் பேச்சாளர் கூறுகிறார்.
இந்த மாதம் 17 ஆம் தேதி முதல் இலங்கை அரசு அங்குள்ளவர்களுக்கு சமைத்த உணவு வழங்குவதை நிறுத்திவிட்டததால், உலக உணவுத் திட்டத்தால் வழங்கபடும் உலர் உணவுகளை சமைக்க தேவைப்படும் விறகுகளை எடுத்து வருவதற்காகவே மக்கள் ஒரு முகாமிலிருந்து மற்ற முகாம்களுக்கு செல்ல வேண்டிய தேவை எழுந்துள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவிக்கிறார்.
இந்த மோதலின் காரணமாக இரு முகாம்வாசிகளுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் கூறுகிறார்.