இந்தியாவில் பிறந்த பிள்ளைகளுக்கான பிரஜா உரிமைப்பத்திரம் வழங்குவதற்கான நடமாடும் சேவை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரஜா உரிமைக் கிளையின் உதவியுடன் இடம்பெறவுள்ளது. வவுனியா, மன்னார் மாவட்டங்களில் எதிர்வரும் 28ம், 29ம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டத்தின் கீழ் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. அபிவிருத்தித் திட்டம் அறிவித்துள்ளது.
28ம் திகதி வவுனியா மாவட்டத்திலும் 29ம் திகதி மன்னார் மாவட்டத்திலும் இடம்பெற உள்ள இந்நடமாடும் சேவையில் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து இந்தியாவில் பல வருடங்களாக வசித்து மீண்டும் இலங்கை திரும்பியவர்களின் இந்தியாவில் பிறந்த பிள்ளைகள் இருப்பின் அவர்களுக்கான இலங்கைப் பிரஜா உரிமைப் பத்திரம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது.
உரிய தினங்களில் நடமாடும் சேவையில் கலந்து பயன் பெறுமாறு நீதிநியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டத்தின் வடபிராந்திய இணைப்பாளர், சட்டத்தரணி எம். எச். எம். ஸியாத் கேட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்ட காரியாலயத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.