இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழம் மட்டுமே தீர்வு என்றும் அதனை அமைத்தே தீருவேன் என்றும் தான் அளித்த வாக்குறுதியை நிச்சயம் காப்பேன் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி மார்க்சிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து சனிக்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ஈழத் தமிழர்களுக்கு தான் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற தனது கூட்டணிக்கு வாக்களித்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தனி ஈழமே தீர்வு என்று தான் கூறியதற்கு உலகத் தமிழர்களிடமிருந்து குவியும் பாராட்டுக் கடிதங்கள் குறித்து இக்கூட்டத்தில் குறிப்பிட்ட ஜெயலலிதா, சுவிட்சர்லாந்து தமிழ் பேரவை அனுப்பியிருந்த கடிதத்தை கூட்டத்தினருக்குப் படித்துக் காட்டினார்.
“இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழமே ஒரே தீர்வு என்று துணிச்சலாக, பகிரங்கமாக, அச்சமின்றி நீங்கள் அளித்திருக்கும் ஈழம் குறித்த வாக்குறுதிக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி என்று எனக்கு உலகம் முழுவதிலும் இருந்து தமிழர்கள் செய்திகளை அனுப்பியவண்ணம் இருக்கிறார்கள். எங்களுக்கு மிகுந்த ஆறுதல் தருவதாக உங்கள் ஈழப் பிரகடனம் அமைந்திருக்கிறது என்று நன்றி சொல்லி கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.
உலகெங்கும் வாழும் தமிழர்கள் இப்படி உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும் வேளையில், நம் கைக்கெட்டிய தூரத்தில், கண்ணுக்கெட்டிய தூரத்தில் வாழுகின்ற தமிழர்களைப் பற்றி சிறிதும் அக்கறையில்லாது மத்திய, மாநில அரசுகள் கபட நாடகங்களை தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.
இலங்கைத் தமிழர்களின் துயரத்திற்கு முடிவு ஏற்பட தனி ஈழம் அமைவதுதான் ஒரே வழி, ஒரே தீர்வு. அதை நான் செய்து முடிப்பேன். வங்காள தேசம் உருவாக பாகிஸ்தானிற்கு எதிராக இந்தியப் படையை இந்திரா காந்தி அனுப்பியது நியாயமென்றால், எங்கள் தமிழர் நலன் காக்க இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவதும் நியாயமே. அதை நான் செய்து முடிப்பேன் என்று நான் பிரகடனம் செய்தேன். அதைப் பாராட்டித்தான் உலகம் முழுவதிலும் இருந்து தமிழர்கள் எனக்கு நன்றி செய்திகளையும், வாழ்த்துகளையும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகிய நான் ஒன்றைச் சொன்னால் அதைச் செய்து முடிப்பேன் என்று உலகத் தமிழனம் நம்புகிறது என்று ஜெயலலிதா பேசினார்.