::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

ஈராக்கில் ‘டிரக்’ குண்டு வெடி – 72 பேர் பலி

21-iraq.jpgஈராக்கில் இன்று டிரக் குண்டு வெடித்ததில் சுமார் 72 பேர் வரை பலியாகி இருப்பார்கள் என அஞ்சப்படுகிறது. சுமார் 200 பேருக்கு மேல் பலத்த காயமடைந்துள்ளனர். ஈராக்கை அமெரிக்கா கைப்பற்றிய நாளில் இருந்தே அங்கு அடிக்கடி தற்கொலை படை தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா இந்த மாதம் 30ம் தேதி முதல் கொஞ்சம் கொஞ்சமாக படைகளை ஈராக்கில் இருந்து வாபஸ் வாங்க திட்டமிட்டுள்ளது. 2012ம் ஆண்டுக்குள் அமெரிக்க ராணுவம்  முழுமையாக திரும்ப பெறப்படும் என தெரிகிறது.

இதையடுத்து அந்நாட்டு பிரதமர் ஈராக்கில் மேலும் பல குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெறும் வாய்ப்பு இருக்கிறது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

இந்நிலையில் ஈராக்கின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிர்கூக்கிற்கு தெற்கே சுமார் 16 கிமீ., தூரத்தில் இருக்கும் தாஷா என்ற பகுதியில் இருக்கும் மசூதியில் டிரக் வெடிகுண்டு வெடித்தது. இதில் மசூதியில் வழிபாடு நடத்தி விட்டுத் திரும்பி கொண்டிருந்த ஏராளமானவர்கள் பலியானார்கள். அந்த மசூதி மற்றும் அருகில் இருந்த பல வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தது.

இந்த விபத்தில் சுமார் 72க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பார்கள் என தெரிகிறது. 200க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தனர். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பெறுப்பேற்கவில்லை.

ஆப்கானிஸ்தான் சென்று யுத்தத்தில் ஈடுபட இளவரசர் வில்லியம் விருப்பம்

21wiliam.jpgஇங்கி லாந்து நாட்டு இளவரசர் வில்லியம், ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு சென்று யுத்த களத்தில் இங்கிலாந்து வீரர்களுடன் இணைந்து போர் செய்ய விரும்புகிறார்.

நான் இராணுவ சேவையில் இருந்து விலகி அரசபொறுப்பை ஏற்பதற்கு முன்பு, போர்க்களத்தில் பணியாற்றுவேன் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார். இவர் சார்ள்ஸுக்கு பிறகு பட்டத்துக்கு வரக்கூடிய இடத்தில் இருப்பதால், போர் முனைக்கு செல்லத்தடை இருப்பதாக நம்பி வந்த அவர், தன் தம்பி ஹரி போர் முனைக்கு சென்று திரும்பிய பிறகு தானும் போர் முனைக்கு செல்வதற்கு தடை இருக்காது என்று நம்புகிறார்.

“என் கண்முன்னாலேயே என் தம்பி ஹாரி போர் முனையில் பணியாற்றி இருக்கும் போது, ஏன் நான் பணிபுரிய முடியாது” என்று கேட்டார். ஆப்கானிஸ்தான் சென்று போர்க் களத்தில் குதிக்க நான் விரும்புகிறேன்’ என்று அவர் மேலும் தெரிவித்தார். இளவரசர் வில்லியம் இப்போது விமானப் படையில் விமானியாக பயிற்சி பெற்று வருகிறார்.

இரானியத் தலைவரின் கருத்துக்கு பிரிட்டன் விளக்கம் கோரியுள்ளது

uk-pm.jpgஅயோ துல்லா கமனெய் அவர்களின் கருத்துக்கள் குறித்து விளக்கம் கேட்க இலண்டனில் உள்ள இரானியத் தூதரை பிரிட்டிஷ் அரசு அழைத்திருக்கிறது.

இரானில் கடந்த சில நாட்களில் காணப்பட்ட ஒடுக்குமுறையும் மூர்க்கத்தனமும் திரும்ப நடக்கக்கூடாது என்று பிரதமர் கோர்டன் பிரவுன் வலியுறுத்தியிருக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பிரஸ்ஸல்சில் கூடி, இரானில் நடந்த எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையை ஒருமனதாகக் கண்டித்த கூட்டத்தில் பிரவுன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். அயதுல்லாவின் பேச்சு, இனி எந்த ஒரு ஆர்ப்பாட்டத்தையும் வன்முறை வழியில் ஒடுக்க, இரானிய பாதுகாப்புப் படைகளுக்கு பச்சைக்கொடி காட்டுவதுபோல இருப்பதாக இலண்டனிலிருந்து இயங்கும் சர்வதேச பொதுமன்னிப்புச் சபை என்ற மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

இரான் அதிபர் தேர்தல் முடிவுகளில் ஏமாற்று வேலைக்கு இடமில்லை; போராட்டங்கள் முடிவுக்கு வரவேண்டும்: அயதுல்லா கமெனெய்

khamenie.jpgஇரானில் கடந்த வாரம் நடந்த சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தல்களை தொடர்ந்து நடக்கும் போராட்டங்கள் ஏற்கமுடியாதவை என்றும், அவை நிறுத்தப்பட வேண்டும் என்றும், வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இரானிய அதியுயர் மதத்தலைவரான அயதொல்லா அலி கமெனெய் கூறியுள்ளார்.

அதிபர் அஹமதிநெஜாத் அவர்கள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கான தனது முன்பெப்போதும் இல்லாத அளவிலான ஆதரவை வழங்கிய பின்னர் முதன்முதலாக பகிரங்க வைபவத்தில் உரையாற்றிய அவர், அந்த போராட்டங்கள் தொடர்ந்தால், அவற்றின் விளைவுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களே பொறுப்பு என்று கூறினார்.

அகங்கார சக்திகளும், அமெரிக்காவிலும் வேறு ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள ஊடகங்களும் தேர்தலுக்குப் பின்னர் தமது சுயரூபத்தைக் காட்டிவிட்டார்கள் என்று அயதொல்லா கமெனெய் சாடினார்.

தேர்தல் முடிவுகளை எதிர்த்து ஈரானில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் – ஈரான் விடயத்தில் தலையிடவில்லையென அமெரிக்கா அறிவிப்பு

president-ahamadinejad.jpgஈரான் அரசாங்கத்தின் உத்தரவை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் நேற்று வியாழக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டமொன்றுக்குத் தயாராகினர். தேர்தலில் தோல்வியடைந்த ஹுஸைன் மூஸாவி ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்பை விடுத்தார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைக் கண்டித்து அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இதில் 07 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். ஆர்ப்பாட்டத்தில் பலியானோருக்கு துக்கம் தெரிவிக்கும் வகையில் நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அனைவரையும் கறுப்பு நிற ஆடைகளை அணியுமாறு ஹுஸைன் மூஸாவி கேட்டுள்ளார். அரச தொலைக் காட்சியொன்று ஆர்ப்பாட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்த சனக் கூட்டத்தைக் காட்டியது. ஆனால் வெளிநாட்டு ஊடகங்கள் ஆர்ப்பாட்டக் காரர்களின் செய்திகளைத் திரட்டவோ அல்லது அவ்விடங்களுக்குச் செல்லவோ அனுமதிக்கப்படவில்லை.

ஈரானில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் முறைகேடாக நடந்தது. வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டுமென மூஸாவியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பல நாட்களாக இந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறுகின்றன. அரசாங்கத்தின் உத்தரவை மீறியும் வன்முறைகளும், ஆர்ப்பாட்டங்களும் இடம் பெறுகின்றன.

ஜனாதிபதி அஹ்மெதி நெஜாதுக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் வாக்குகளை மீள்எண்ணும்படி ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லாஹ் அலி கொமெய்னி உத்தரவிட்டுள்ளார்.

ஈரானில் இரண்டு தடவைக்கு மேல் ஒருவர் ஜன திபதியாக முடியாது. அஹ்மெதி நெஜாத், இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாகியுள்ளார். இவரின் வெற்றியை ஹுஸைன் மூஸாவியால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. அமெரிக்கா, மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் மூஸாவி ஈரானின் அமைதியைக் குழப்புவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கா இதை நிராகரித்துள்ளது. ஈரானின் உள் விவகாரங்களில் தலையிடும் தேவையோ, நோக்கமோ எமக்கில்லையென அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானில் நடப்பதை அவதானிக்கின்றோம். ஆனால் அதில் தலையிடவில்லையென ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். வாக்குகள் மீள எண்ணப்பட்டாலும் அஹ்மெதி நெஜாதே வெல்வார் என நம்பப்படுகின்றது.

மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க சர்தாரியிடம் மன்மோகன்சிங் வலியுறுத்தல்

manmohan_sardari.jpgபிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் அதிபர் சர்தாரியும் ரஷ்யாவில் நேற்று சந்தித்து பேசினர். அப்போது மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் கண்டிப்புடன் வலியுறுத்தினார்.
இதுபற்றி விவாதிப்பதற்காக இரு நாடுகளின் வெளியுறவு செயலாளர்களும் விரைவில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. மன்மோகன் சிங்கும், சர்தாரியும் அடுத்த மாதம் எகிப்தில் அணி சேரா நாடுகளின் மாநாடு நடைபெறும் போது மீண்டும் சந்தித்து பேச ஒப்புக் கொண்டனர்.

ரஷ்யாவின் 3வது பெரிய நகரமான யக்தரின்பர்க்கில் உள்ள “ஹயாத் ரீஜன்சி” ஓட்டலில் ஷாங்கை ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ.) மாநாடு நேற்று நடந்தது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் தான் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் பார்வையாளர் நாடுகள் என்ற முறையில் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டு இருந்தன.

தனியாக பேச்சு: மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியும் மாநாட்டு மண்டபத்தில் நேருக்கு நேராக சந்தித்தனர். அப்போது இரு தலைவர்களும் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இருவரும் இணைந்து நின்று போட்டோவுக்கு “போஸ்” கொடுத்தனர்.

மாநாட்டு இடைவேளையில் நேற்று மதியம் இருவரும் சந்தித்துப் பேசினர். மும்பை தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பது இதுவே முதல் தடவை.

உதவியாளர்கள் இன்றி மன்மோகன் சிங்கும், சர்தாரியும் தனியாகவே பேசினார்கள். அப்போது பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை முற்றிலுமாக அழித்து இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் பகிரங்கமாகவே வற்புறுத்தினார்.

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் ஜமாத்- உத்-தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் முகமது சயீத்தை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது ஏமாற்றம் அளிப்பதாகவும், பாகிஸ்தானில் உள்ள இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளை ஒடுக்க இன்னமும் நடவடிக்கை எடுக்காதது வருத்தம் தருகிறது என்றும் சர்தாரியிடம் மன்மோகன் சிங் கடுமையாக கூறினார்.

இன்னும் ஆதாரம் தேவை: பாகிஸ்தான் அதிபர் சர்தாரி பதில் அளிக்கையில், “மும்பை தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் சில தீவிரவாதிகளை பிடித்து உள்ளோம். ஆனால் இந்தியா தரப்பில் இருந்து இன்னும் அதிக ஆதாரங்கள் தேவைப்படுகின்றன” என்றார். இதற்கு இந்தியா தரப்பில் இதுவரை கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களை மன்மோகன்சிங் எடுத்துக் கூறினார்.

இதையடுத்து மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இரு நாடுகளின் வெளியுறவுச் செயலாளர்களும் விரைவில் சந்தித்துப் பேசுவது என்றும், அடுத்த மாதம் எகிப்தில் நடைபெற உள்ள அணி சேரா நாடுகளின் மாநாட்டின் போது மன்மோகன் சிங்கும், சர்தாரியும் மீண்டும் சந்தித்துப் பேசுவது என்றும் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.

மதுரையில் 15 டிபன் பாக்ஸ் குண்டுகள் சிக்கின – தீவிரவாத செயலுக்கு சதி?

16tiffin-box-bombs.jpgமதுரை ரிங் ரோடு அருகே உள்ள கானாத்தான் பாலத்துக்குக் கீழே மர்மமான முறையில் வைக்கப்பட்டிருந்த 15 டிபன் பாக்ஸ் குண்டுகளை போலீஸார் மீட்டுள்ளனர். தீவிரவாத செயலுக்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் போலீஸாருக்கு வந்துள்ளது. தென் மாநிலங்களில் தீவிரவாதத் தாக்குதல்  நடக்கலாம் என உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதால், தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பின் கீழ் உள்ளது.

குறிப்பாக சென்னை, மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட தீவிரவாத தாக்குதலுக்கான வாய்ப்பு உள்ள நகரங்களில் அதி தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.மதுரை நகரமும் தீவிர பாதுகாப்பு  மற்றும் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோவில் ஏற்கனவே உச்சகட்ட பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தல் முடிவு குறித்து விசாரணை நடத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை

president-ahamadinejad.jpgஇரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மோசடிகள் இடம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் நடைபெற வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.  இந்தத் தேர்தல் நடைபெற்ற விதம் குறித்து பல்வேறு எதிர்கட்சி வேட்பாளர்கள் வெளியிட்டுள்ள கவலைகளை இரான் அரசு நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

அங்கு நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துபவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று வர்ணித்துள்ள பிரிட்டிஷ் மற்றும் ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர்கள், அரசின் இந்த நடவடிக்கையினை விமர்சித்தும் உள்ளனர்.

இந்த ஆண்டு 81 அமெரிக்க இராணுவ வீரர்கள் தற்கொலை

அமெரிக்க இராணுவத்தில் இந்த ஆண்டு மட்டும் 81 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 2008ல் தற்கொலை செய்துகொண்ட அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கை வெறும் 31 ஆக இருந்தது.  ஆனால் இந்த ஆண்டு துவங்கி முதல் 6 மாதங் கள் கூட முழுமையாக முடியாத நிலையில் இதுவரை 81 அமெரிக்க இராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டு ஜனவரியில் மட்டும் 24 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதையடுத்து 1980 க்கு பின் இந்த ஆண்டுதான் அதிக அமெரிக்க இராணுவ வீரர்கள் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் போரில் பங்கேற்ற பின்னர் தான் வீரர்களிடம் இந்த தற்கொலை பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பணப் பற்றாக்குறை, நிதி நெருக்கடி, மனைவியை விட்டுப் பிரிந்தது, தவறான பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட வையும் இந்த தற்கொலை அதிகரிப்புக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. அமெரிக்க வீரர்களின் தற்கொலை அதிகரிப்பு குறித்து அமெரிக்க இராணுவத்தின் துணைத் தளபதி பீட்டர் சியாரெலி கூறுகையில் :தற்கொலைத் தடுப்பு திட்டங்கள் உரிய முறையில் பலன் அளிக்கவில்லை என்று தெரிகிறது. ஏன் அது தோல்வி அடைந்தது என்பது குறித்து விரிவாக ஆராயப் பட வேண்டும் என்றார்.

இரான் தேர்தல் முடிவு குறித்து அமெரிக்க துணை அதிபர் கருத்து

baiden.gifஇரானிய அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து தமக்கு நிறைய சந்தேகங்கள் இருப்பதாக அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

என்.பி.சி. என்னும் ஊடகத்துக்கு வழங்கிய நீண்ட செவ்வி ஒன்றில், இந்த விடயத்தில் நியாயமான ஒரு முடிவுக்கு வருவதற்கான போதுமான தரவுகள் இன்னமும் தமக்கு கிடைக்கவில்லை என்று பைடன் கூறியுள்ளார். முன்னதாக, இந்த தேர்தல் முடிவுகள் இரானிய மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் என்று அமெரிக்கா எதிர்ப்பார்ப்பதாக, அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் கூறியிருந்தார்.