ஈராக்கில் இன்று டிரக் குண்டு வெடித்ததில் சுமார் 72 பேர் வரை பலியாகி இருப்பார்கள் என அஞ்சப்படுகிறது. சுமார் 200 பேருக்கு மேல் பலத்த காயமடைந்துள்ளனர். ஈராக்கை அமெரிக்கா கைப்பற்றிய நாளில் இருந்தே அங்கு அடிக்கடி தற்கொலை படை தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா இந்த மாதம் 30ம் தேதி முதல் கொஞ்சம் கொஞ்சமாக படைகளை ஈராக்கில் இருந்து வாபஸ் வாங்க திட்டமிட்டுள்ளது. 2012ம் ஆண்டுக்குள் அமெரிக்க ராணுவம் முழுமையாக திரும்ப பெறப்படும் என தெரிகிறது.
இதையடுத்து அந்நாட்டு பிரதமர் ஈராக்கில் மேலும் பல குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெறும் வாய்ப்பு இருக்கிறது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
இந்நிலையில் ஈராக்கின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிர்கூக்கிற்கு தெற்கே சுமார் 16 கிமீ., தூரத்தில் இருக்கும் தாஷா என்ற பகுதியில் இருக்கும் மசூதியில் டிரக் வெடிகுண்டு வெடித்தது. இதில் மசூதியில் வழிபாடு நடத்தி விட்டுத் திரும்பி கொண்டிருந்த ஏராளமானவர்கள் பலியானார்கள். அந்த மசூதி மற்றும் அருகில் இருந்த பல வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தது.
இந்த விபத்தில் சுமார் 72க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பார்கள் என தெரிகிறது. 200க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தனர். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பெறுப்பேற்கவில்லை.