::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

‘மூன்றரை லட்சம் ஸ்வாத் மக்கள் இருப்பிடம் திரும்பினர்’

200709.jpgபாகிஸ் தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கை சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களில் குறைந்தது மூன்று லட்சத்து ஐம்பதினாயிரம் பேர் தமது இருப்பிடங்களுக்கு திரும்பி விட்டதாக அரசாஙங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பிராந்தியத்துக்கு அருகில் உள்ள இரண்டு பெரிய முகாம்கள் மூடப்பட்டுவிட்டன. ஆனால், லட்சக்கணக்கான மக்கள் ஏனைய முகாம்களில் இருப்பதாகவும், தொடரும் பாதுகாப்பு குறித்த அச்சங்கள் காரணமாக அவர்கள் தமது இருப்பிடம் திரும்ப மறுத்து வருவதாகவும் பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஸ்வாத் பிராந்தியத்தில் அண்மையில் அரசாங்கப் படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையில் நடந்த மோதல்கள் காரணமாக இருபது லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர்.

அணுச்செறிவூட்டல் தொழில்நுட்பத்தை இந்தியா பெறுவதை அமெரிக்கா எதிர்க்கவில்லை என்கிறார் ஹிலாரி

இந்தியா அணுசக்தி செறிவூட்டல் தொழில்நுட்பத்தைப் பெறுவதை அமெரிக்கா எதிர்க்கவில்லை என்று தெரிவித்தார் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன்.

திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேசினார்.

அவரது இந்தப் பயணத்தின்போது தொழில்நுட்ப பாதுகாப்பு ஒப்பந்தம், அணுசக்தி எரிபொருள் பயன்பாட்டை இறுதியில் கண்காணிக்கும் ஒப்பந்தம் ஆகியவை அதில் அடங்கும். தொழில்நுட்ப பாதுகாப்பு ஒப்பந்தப்படி, இனிமேல் அமெரிக்க சாதனங்களைக் கொண்ட செயற்கைக்கோள்களை வர்த்தக ரீதியாக இந்தியா விண்ணில் செலுத்த முடியும். அணுசக்தி எரிபொருள் பயன்பாட்டை இறுதியில் கண்காணிக்கும் ஒப்பந்தத்தை அடுத்து, இனிமேல் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கான பாதுகாப்பு ஆயுதங்களை வழங்க முடியும்.

மேலும், இன்றைய ஒப்பந்தத்தில், அமெரிக்க நிறுவனங்கள் அணு உலைகளை அமைக்க இரு இடங்களை ஒதுக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. சுமார் 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள அந்த ஒப்பந்தங்கள் மூலம், இந்தியாவுக்குத் தேவையான அணுஎரிபொருள்களை அமெரிக்க நிறுவனங்கள் வழங்கும். இதுதவிர, சுகாதாரம், கல்வி, அறவியில் தொழில்நுட்பம், மகளிர் அதிகாரமளிப்பு உள்ளிட்ட பல துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

கஸாப் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

மும்பை நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான முகமது அஜ்மல் அமீர் கஸாப், அந்தக் குற்றத்தில் தான் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

திங்கட்கிழமை மும்பையில் சிறப்பு நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்ற விசாரணையின்போது, கஸாப் திடீரென தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 170 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதுதொடர்பாக கைது செய்யப்பட்ட கஸாப், பாதுகாப்பு மிக்க ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கேயே சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து கடல் வழியாக படகில் தாங்கள் எப்படிப் பயணித்தார்கள் என்பது குறித்தும், அங்கிருந்து தங்களை இயக்கியவர்கள் யார் என்பது உள்ளிட்ட விவரங்களையும் நீதிபதிகளிடம் கஸாப் விளக்கியதாகத் தெரிகிறது.

கஸாப் திடீரென தனது குற்றத்தை ஒப்புக்கொண்டது அனைத்துத் தரப்பினருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், ஏற்கனவே நடந்த முந்தைய விசாரணைகளின்போது, கஸாப் தான் குற்றவாளி இல்லை என்று கூறிவந்தார்.

மைக்கல் ஜாக்ஸனின் குழந்தைகளில் இரண்டுக்கு நானே தந்தை – அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தகவல்

மறைந்த பிரபல பொப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்ஸன் குழந்தைகள் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜாக்ஸனுக்கு, மூன்று குழந்தைகள் உள்ளனர். அந்தக் குழந்தைகளை யார் பராமரிப்பது என்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில்; நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ஜாக்ஸனின் இரண்டு குழந்தைகளுக்கு தாமே தந்தை என அவருக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக தோல் நோய் சிகிச்சை அளித்து வந்த டாக்டர் ஆர்னால்ட் கெலின் கூறியுள்ளார்.

ஜாக்சனின் மூன்று குழந்தைகளில், மூத்த இரண்டு குழந்தைகளான பிரின்ஸ் மைக்கல் (வயது 12) மற்றும் பாரிஸ் (வயது 11) ஆகியோருக்கு நானே உண்மையான தந்தை. அதனால், அவர்களை என் பாதுகாப்பில் வளர்க்க உரிமை கோரி, கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமது வக்கீல்களுடன் ஆலோசித்து வருவதாகவும் பிரின்ஸ், பாரிஸ் இருவரும் ஜாக்ஸனின் மனைவியான டெப்பி மூலம் தமக்குப் பிறந்தவர்கள். எனவும் கூறியுள்ளார். அவர்கள், என் குழந்தைகள் தான் என்பதை என்னால் நிரூபிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜாக்ஸனின் இரண்டாவது மனைவியான டெப்பி ரோவே, 1996ம் ஆண்டில் டாக்டர் ஆர்னோல்ட் கெலினிடம்; தொழில் புரிந்துள்ளார். அப்போது தான் ஜாக்ஸன் அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அல் ஜெஸிராவை பலஸ்தீன அரசாங்கம் தடை செய்யவில்லை; சட்ட நடவடிக்கைக்கு முயற்சி – பிரதமர் சலாம்பயாத்

அல் ஜெஸிரா தொலைக்காட்சி சேவை ஒளிபரப்புக்கு அனுமதியளிக்கப்படுமெனத் தெரிவித்துள்ள பலஸ்தீன அரசாங்கம் இச் சேவையை முன்னர் தடைசெய்ய வில்லையென்றும் தெரிவித்துள்ளது.

அல் ஜெஸிராவின் தொலைக்காட்சி ஆதாரமில்லாத செய்தியை ஒளிபரப்பியமை தொடர்பாக அந்நிறுவனத்துக் கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படு மெனவும் பலஸ்தீன அரசாங்கம் அறிவித்துள்ளது. பலஸ்தீன ஜனாதிபதி மஃமூத் அப்பாஸ் மற்றும் அவரது நிர்வாகம் தொடர்பாக அல் ஜெஸிரா மோசமான செய்தியை கடந்த வாரம் ஒளிபரப்பியது.

இஸ்ரேலுக்கும் அதன் நேச நாடுகளுக்கும் விசுவாசமாக மஃமூத் அப்பாஸ் நடந்து கொள்வார் என்பதே அந்தச் செய்தியாகும். இச் செய்தி வெளியான பின்னர் அல் ஜெஸிரா தொலைக்காட்சிச் சேவை பலஸ்தீனத்தில் தடை செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இது சம்பந்தமாக பலஸ்தீனப் பிரதமர் சலாம் பயாத் கூறிய தாவது:-

அல் ஜெஸிராவுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறோம். அதைத் தடை செய்வதற்கான முயற்சிகளும் தொடரலாம். ஆனால் இதுவரை அல் ஜெஸிரா ஒளிபரப்பு பலஸ்தீனில் தடை செய்யப்படவில்லையெனக் கூறினார். தொடர்பாடல் அமைச்சர் இது பற்றிக் கூறுகையில், மேற்குக் கரை மக்களை அல் ஜெஸிரா தவறுதலாக வழிநடத்த முற்படுவதாகவும் இந்தச் செய்தியை வாசித்த ஊடகவியலாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றார்.

ஈரான் விமான விபத்தில் பலியானோரை அடையாளம் காண முடியாத நிலை

iran-plane.jpgஈரான் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 168 பேரும் உயிரிழந்தனர். தலைநகர் தெஹ்ரானில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பகல் 11.30 மணியளவில் இந்த விமானம் புறப்பட்டது. பின்னர் சில நிமிடங்களில் விமானத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இந்த விபத்து ஏற்பட்டது. ஈரானில் இந்த ஆண்டு நிகழ்ந்த மிகப் பெரிய விமான விபத்தாக இது கருதப்படுகிறது- இதில் 153 பயணிகளும் 15 சிப்பந்திகளும் பயணம் செய்தனர்.
ஈரான் விமானம் விபத்துக்குள்ளான தெஹ்ரானின் வடமேற்குப் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளோரைக் காணலாம்.

பலியானோரில் 147 ஈரானியர்களும், 31 ஆர்மினிய நாட்டைச் சேர்ந்தோரும் அடங்குவர். இன்னும் நான்கு அமெரிக்கர்களும் இரண்டு ஜோர்ஜிய நாட்டைச் சேர்ந்தோரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். விமானத்திலிருந்து மூன்று இன்ஜின்களில் ஒன்று தீப்பற்றிக்கொண்டதால் விமானி விமானத்தை தரையிறக்க முற்பட்ட வேளை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தலைநகர் தெஹ்ரானுக்குச் சற்றுத் தொலைவிலுள்ள எரிவின் என்ற இடத்தில் விமானம் நொறுங்கி வீழ்ந்ததாக சாட்சியாளர்கள் தெரிவித்தனர். விமானத்தின் டயர்கள் வெளியே தெரிந்தவாறு அது தீப்பற்றி எரிவதைக் கண்டதாகவும் சிலர் கூறினர். விமானத்தை விமானமோட்டி தரையிறக்க முயன்றுள்ளார் என்பதை இது காட்டுகின்றது.

ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் தேடும்பணிகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளைப் பணித்துள்ளார். எலும்புகளையும், சதைத் துண்டுகளையும் உடல் அவயங்களையும் தேடி எடுத்து பொதிகளில் சேமித்துள்ள மீட்புப் பணியாளர்கள் எவரையும் அடையாளம் காண முடியாதுள்ளதாகக் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த விமானம் கஸ்பியன் ஏயார் லைன்ஸ¤க்குச் சொந்தமானது.

ஐம்பது சிறிய, நடுத்தர விமானங்களைச் சேவையில் ஈடுபத்தியுள்ள கஸ்பியன் எயார் லைன்ஸ் விமான நிலையம் வாரமொரு தடவை ஈரான் மத்திய கிழக்கு கிழக்கைரோப்பிய நாடுகளின் நகரங்களுக்கும் விமான சேவைகளை நடத்துகின்றது.

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிடமிருந்து விமான உதிரிபாகங்களைக் கொள்வனவு செய்வதிலிருந்து ஈரான் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்த வலுவுடைய இன்ஜின்கள் மற்றும் விமான உதிரிப்பாகங்களே ஈரானிடம் உள்ளன. சர்வதேச நாடுகள் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிதிது ள்ளதால் ஈரான் இவ்வாறான நிலைமைகளுக்கு முகங் கொடுக்க வேண்டியுள்ளது.

ஹிலாரி கிளிண்டன் இன்று இந்தியா செல்கிறார்

hillary_clinton.jpgஅமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை இந்தியா செல்கிறார்.

இலங்கையில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் கடல்சார்ந்த இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான புதுடில்லியின் தீர்மானங்கள் தொடர்பாக அமெரிக்கா ஆர்வம் காட்டுவதாக அவர் கூறியுள்ளார். தமது விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோருடன் மிகவும் விரிவான முறையில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக்கொள்கை,  கேந்திர ரீதியா சவால்கள்,  சுகாதாரம்,  கல்வி,  விவசாயம்,  பொருளாதாரம் மற்றும் அணுவாயுதப்பரிகரணம் உட்பட மிகவும் கடினமான விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்தோனேஷியாவின் ஆடம்பர ஹோட்டல் குண்டுத் தாக்குதல்களில் 9 பேர் பலி

indoonisian_blast.jpgஇந்தோ னேஷியாவின் தலைநகரிலுள்ள இரு ஆடம்பர ஹோட்டல்களில் இன்று காலை இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 9 பேர் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்திருப்பதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனேஷியத் தலைநகர் ஜகர்த்தாவிலுள்ள ரிட்ஸ்-கர்ல்டன் மற்றும் மெர்ரியட் ஆகிய ஆடம்பர ஹோட்டல்களிலேயே இக்குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த குண்டுத் தாக்குதல்களில் 4 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களின் சடலங்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தென் ஜகர்த்தா பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த இரு குண்டுத் தாக்குதல் சம்பவங்களும் ஐந்து நிமிட இடைவெளியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மெர்ரியட் ஹோட்டலின் மீது கடந்த 2003ஆம் ஆண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதோடு இதில் சுமார் 12 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

12 ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனராம்.

maical-jak.jpgபாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் மறைவைத் தாங்க முடியாமல், இதுவரை உலகம் முழுவதும் 12 ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனராம். மேலும், ஏராளமான ரசிகர்கள் தற்கொலை எண்ணத்திலிருந்து வெளிவர உதவுமாறு அதற்கான ஹாட்லைன் வசதியைத் தொடர்பு கொண்டபடி உள்ளனராம். இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உதவி கோரி தொடர்பு கொண்டுள்ளதாக மன நல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

லண்டனைச் சேர்ந்த ஜாக்சனின் ரசிகரான கேரி டெய்லர் என்பவர் ஜாக்சனுக்கான இன்டர்நெட் ரசிகர் மன்றத்தை நடத்தி வருகிறார். அவர் கூறுகையில், இதுவரை 12 ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது மிகவும் கவலைகரமானது. மைக்கேல் ஜாக்சன் இதுபோன்ற மரணத்தை விரும்ப மாட்டார். அதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே ஜாக்சனின் விருப்பம் என்றார்.

ஜாக்சனின் மரணத்தால் அவரது பல ரசிகர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனராம். இதுபோன்ற பிரபலங்கள் மரணமடையும்போது அது மனதளவில் பலரையும் வெகுவாக பாதித்து விடுகிறது என்கிறார் லைப்லைன் என்கிற மன நல ஆலோசனை அமைப்பின் தலைமை செயலதிகாரி டான் ஓ நீல்.

இதற்கிடையே, ஜாக்சனின் குடும்ப நண்பரான ஜெசி ஜாக்சன் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதில், யாரும் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்ளக் கூடாது. இதயத்தை பலப்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது.

ஜாக்சனின் மரணம் பெரும் வலிதான். ஆனால் ஜாக்சனின் வாழ்க்கையை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும். அதுதான் ஜாக்சனுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும் என்றார்.

ஈரானில் விபத்துக்குள்ளான விமானத்தின் இரு கருப்புப் பெட்டிகள் மீட்பு

iran-plane.jpgஈரானில் நேற்று விபத்துக்குள்ளான விமானத்தின் மூன்று கருப்புப் பெட்டிகளில் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றதைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அந்நாட்டின் வீதி மற்றும் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

மீட்கப்பட்ட இரு கருப்புப் பெட்டிகளும் பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளன. எனினும் அவற்றிலிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சின் அனர்த்த செயற்பாட்டுக் குழுத் தலைவர் அஹ்மத் மாஜித் தெரிவித்துள்ளார்.

இந்த விமானத்தில் பயணம் செய்த 15 விமான ஊழியர்கள் உட்பட 168 பேரும் பலியாகியுள்ளனர். அவர்களுள் 7 பேர் வெளிநாட்டவர்கள். ஏனைய அனைவரும் ஈரானைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் தலைநகரான தெஹ்ரானிலிருந்து ஆர்மேனியாவின் தலைநகரான யேரேவான் நகருக்குப் பயணித்துக்கொண்டிருந்த இவ்விமானம் நேற்று அந்நாட்டின் வடமேற்குப் பிரதேசத்திலுள்ள குவாஸ்வின் நகர பகுதியில் வைத்து விபத்துள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின் சில காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. இவ்விபத்து காரணமாக நிலத்தில் ஒரு பாரிய பள்ளம் ஏற்பட்டிருப்பதையும்,  விமானத்தின் சிதறிய பகுதிகளிலிருந்து புகை வந்து கொண்டிருப்பதையும் ஈரானின் அரச தொலைக்காட்சி காண்பித்தாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் உலகில் நிகழ்ந்த மிகப்பெரிய 5ஆவது விமான விபத்தாக ஈரான் விமான விபத்து கருதப்படுவதாக சீ.என்.என். சர்வதேச செய்திச் சேவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.