காங்கிரஸ் கட்சியின் தலைவி திருமதி சோனியா காந்தி முன்னிலையில் நடிகர் விஜய், விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளாரென்றும் அவருக்கு அகில இந்திய அளவில் கட்சியில் முக்கிய பொறுப்பும், ராஜ்யசபா எம்.பி., பதவியும் வழங்கப்படும் எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி முனைப்பாக இறங்கி உள்ளார்.
நடிகர் விஜய், கடந்த 24ஆம் திகதி டில்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். தன் ரசிகர்களை காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ள இச்சந்திப்பில் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் விஜய் இணைவதன் மூலம், எதிர்வரும் 2011ம் ஆண்டில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியும் என காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் நம்புகின்றனர். காங்கிரஸ் கட்சியில் விஜய் இணைந்தால் முழு மனதுடன் வரவேற்போம் என, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார். திரையுலகில் இளைஞர்களை ஈர்க்கும் சக்தியாக நடிகர் விஜய் வலம் வருவதால், அவரது வரவு கட்சிக்கு பலத்தைத் தரும் என காங்கிரஸ் கட்சியினர் கருதுகின்றனர்.
2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பிரசார பீரங்கியாக விஜயை பயன்படுத்திக் கொள்ளவும் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னர் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பும், ராஜ்யசபா எம்.பி., பதவியும் அவருக்கு வழங்கப்படலாமென அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.