கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

டேவிட் செப்பர்ட் காலமானார்

இங்கி லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல முன்னாள் சர்வதேச கிரிக்கெட் நடுவர் டேவிட் ஷெப்பர்ட் மரணம் அடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட காலம் சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் நேற்று பிரிந்தது.

291009david-shepherd.bmp68 வயதான டேவிட் ஷெப்பர்ட் 1983 ஆம் ஆண்டு முதல் 2005 ம் ஆண்டு வரை 172 ஒரு நாள் போட்டி மற்றும் 92 டெஸ்ட் போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றி இருக்கிறார்.

இதில் 3 உலக கோப்பை போட்டி இறுதி ஆட்டமும் அடங்கும். 282 முதல் தர போட்டியில் விளையாடியுள்ள ஷெப்பர்ட் 1981 ஆம் ஆண்டில் முதல் தர போட்டியில் நடுவராக நியமிக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டில் சர்வதேச நடுவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

சட்டியைப் பார்த்துப் பானை ….. : பா ஜெ வேந்தன்

Hunting_Dogsஅமைச்சர் முரளீதரன், முதலமைச்சர் சந்திரகாந்தன் அப்பதவிக்கு லாயக்கு அற்றவர் என்று டெய்லி மிரர் க்கு கொடுத்த பேட்டி, முதலமைச்சரின் லாயக்கைவிட அமைச்சர் கருணாவின் லாயக்கையும் அரசியல் சாணக்கியத்தையும் அப்பட்டமாகக் காட்டிவிட்டது. இன்று சிறிலங்காவில் தகுதி அடிப்படையில் பதவிகள் வழங்கப்பட்டால் முக்கால்வாசிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிராமத்து குடும்பக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வேலைக்கே தெரிவு செய்யப்பட மாட்டார்கள் என்பது நிச்சயம். இதில் சிங்கள அரசியல்வாதிகள் மட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ‘டாக்டர்’ மேர்வின் சில்வா மற்றும் தமிழ் அரசியல் மட்டத்தில் Tamil Nutters Alliance (TNA) அனைத்து உறுப்பினர்களையும் குறிப்பிடலாம். இதில் ரிஎன்ஏ சிவாஜிலிங்கத்தை தனியாக எடுத்தப் பார்த்தால் வல்வெட்டித்துறை தாச்சி மறிப்பு விளையாட்டிற்குக் கூட தலைவராக வரத் தகுதியற்றவர்.

‘இன்று வடக்கு கிழக்கு மாகாணத்தில் தகுதியற்ற அதிகாரிகள் தான் இருக்கிறார்கள் ஆதலால் நான் கொழும்பிலிருந்து அனைத்து நிர்வாகத்தையும் செய்ய வேண்டி இருக்கின்றது’ என கிழக்கின் உதயம் நிர்வாக அதிகாரி கருத்துத் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பிலிருந்து தமது அதிகார ஆதிக்கத்தை வடக்கு கிழக்கில் தொடர இவ்வாறான உதாரணங்கள் பாவிக்கப்படுவதும் அவதானிக்கப்பட வேண்டிய விடயம். சிறிலங்காவில் தகுதி அடிப்படையில் அரசியல் நியமனங்கள் நடைபெறுவது நம் வாழ்நாளில் இடம்பெறப் போகும் விடயமல்ல. (நீங்கள் இன்னமும் பிறக்காமல் இருந்தாலொழிய.) ஆதலால் அந்த ஆசையை இப்போதைக்கு விட்டுவிடுவோம்.

தமிழ் இனத்தின் ‘ஒப்பற்ற தீர்க்கதரிசனமான தலைவர்’ மறைந்து சில மாதங்கள் தான் ஆகின்றது. இச்சில மாதங்களுள் சகல விடயங்களும் எதுவிதத் தடையுமின்றி சுமூகமாக இயங்கும் என எவரும் எதிர்பார்க்க முடியாது தான்.

வடக்கில் நிலை இப்படிப் பரிதாபமாக இருக்கும் போது கிழக்கு ஏதோ ஜனநாயகத்தில் திளைத்து இருந்தது என யாரும் கருதிவிட முடியாது. கொலை கொள்ளை ஆட்கடத்தல் தொடக்கம் அனைத்து அராஜகங்களும் நடந்த வண்ணம் தான் இருக்கின்றது. 2005க்கு முன் சாரத்துடனும் கலுசானுடனும் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களையும் காடைத்தனங்களையும் இப்போது கோட்சூட் போட்டுக் கொண்டு செய்கின்றார்கள். ‘தொட்டில் பழக்கம் விடிஞ்சால் போய்விடுமா’ என்று எங்கள் பெரியோர்கள் தெரியாமலா சொல்லி வைத்திருக்கிறார்கள்.

எமது எல்லாத் தலைவர்களையும் ஒன்றாக ஒப்பிட்டால் தந்தை செல்வா, அண்ணன் அமீர், தம்பி பிரபா, ஐயா சம்பந்தர், கடிதப் புகழ் சங்கரி, வெத்து வேட்டுச் சித்தர், அறுவைச் சுகு என்று ஒப்பிட்டளவில் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே ஒப்பீட்டளவில் தமிழரின் பிரச்சினையை யதார்த்தமாகப் புரிந்துகொண்டு  உறுதியுடன் எதிர்கொண்டார் என்று கூற வேண்டும். அதனால் தான் பல கொலை முயற்சிகளில் இருந்தும் சில தற்கொலை முயற்சிகளில் இருந்தும் தன்னைத் தற்காத்துக் கொண்டார். இன்று அமைச்சர் கருணா முதுகெலும்பு முறிகிற வரைக்கும் குனிந்ததால் டக்ளஸ் தேவானந்தாவும் தன்னைத் தக்க வைக்க சற்று வளைந்து கொடுக்க வேண்டி இருந்தது. அதனால் தான் வீணையை மீட்டியவர் வெற்றிலை போட வேண்டி வந்தது.

மறைந்த தலைவர் செல்வநாயகம் கூட வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் ‘எமது தமிழ் இனத்தை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று கூறியதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. தந்தை செல்வாவின் இந்தக் கூற்று அவரின் இயலாமையையும் தான் பல சக்திகளால் நெருக்கப்படுவதையும் அம்பலமாகக் காட்டி உள்ளது. நான் டக்ளஸ் தேவானந்தா உட்பட பல தலைவர்களை 1985 முதல் சந்தித்து வருகின்றேன். 2005ல் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்த போது தான் முதற் தடவையே சந்திரிகாவுடன் இணையாததை ஒரு சுயவிமர்சனக் கண்ணோட்டத்தில் கூறி வைத்தார். நான் இதை எழுதுவதன் மூலம் டக்ளஸ் தேவானந்தா ஏதோ தமிழ் இனத்தின் ஒப்பற்ற தீர்க்க தரிசனமான தலைவர் தூய்மையான தலைவர் என்று அர்த்தமல்ல. டக்ளஸ் தேவானந்தா ‘ஒரு நல்ல பிரபாகரன்’ என்று வேண்டுமென்றால்  சொல்லலாம். அவர் ஒருவகை புலி மார்க்ஸிஸ்ட் ‘தோழர்’. அவரிடம் ஒரு தெளிவான கருத்து இருந்ததை குறிப்பிட முனைகிறேன். மற்றவர்கள் அரச பாதுகாப்பிலும் நிதியிலும் இருந்துகொண்டு நாங்கள் அரசுடன் இல்லை என்று தமிழிலும் நாங்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம் என்று ஆங்கிலத்திலும் றீல் விடுவது போல் டக்ளஸ் தேவானந்த செயற்படவில்லை.

சுருக்கமாகக் கூறின் எமது ஒப்பற்ற தலைவர் மேதகு முழுத் தமிழ் இனத்தையும் சிங்கள ஆட்சியாளர்களின் முன்னிலையில் கைகட்டிப் பிச்சை கேட்கும் தரத்திற்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டு கறுத்த கோவணத்துடன் விடைபெற்றுச் சென்றுவிட்டார். இந்நிலையில் ஒப்பீட்டளவில் வலுவான தலைமையை டக்ளஸ் தேவானந்தா கொண்டுள்ளார்.

இந்த 50 வருட தமிழ் அரசியல் வரலாற்றில் Tamil Nutters Alliance (TNA) தமிழ் நட்டுக் கழன்றவர்களின் கூட்டணி போன்ற பினாமி அரசியல்வாதிகளை தமிழ் இனம் ஏற்றுக்கொள்வது ஆபத்தானது. பிரபாகரன் தமிழ் இனத்தின் சாபக்கேடு என்றால் இந்தத் தமிழ் நட்டுக் கழன்ற கூட்டணியினர் சாத்தன்கள்.

இன்று வடக்கு கிழக்கு அதிகார நிர்வாக அமைப்பு பெரும்சவால்களை எதிர்நோக்குகின்றது. அரசியல் சீராகவில்லை. 250 000 பேர் வன்னியில் உட்பட வடக்கு கிழக்கில் 600 000 தமிழ் முஸ்லீம் மக்கள் அகதிகளாக உள்ளனர். பிரச்சினைகள் மலை உயரத்திற்கு இருக்கின்றது. சுமூகநிலை திரும்ப 10 வருடங்கள் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வடக்கு கிழக்கு இப்படியான நிலையில் இருக்க லண்டன் உட்பட வெளிநாடுகளில் இருந்து சிலர் உதவி செய்கிறேன் பேர்வழி என்று இலங்கைக்கு சென்றுள்ளனர். ஆலோசகர் பதவிகளையும் கட்சிப் பதவிகளையும் அலங்கரிக்கத் தொடங்கிவிட்டனர். அங்குள்ளவர்கள் தான் தகுதியற்றமுறையில் நியமிக்கப்படுகிறார்கள் என்றால் வெளிநாட்டில் இருந்து செல்பவர்களிடம் என்ன வாழுது. அவர்களுக்குள்ள ஒரே தகுதி கடந்த 30 வருடமாக மாற்றுக் கருத்தும் மாற்று அரசியலும் பேசி ரீல் விட்டது மட்டுமே. புலம்பெயர்ந்த நாடுகளில் அவர்களுக்கு ஒப்பீட்டளவில் அதிக வாய்ப்புகள் இருந்த போதும் அவர்களால் சமூகத்திற்கு எவ்வித நன்மையும் கிட்டவில்லை என்பது மட்டுமல்ல அவர்களால் அவர்களையே முன்னெற்றிக் கொள்ளவும் முடியவில்லை. பெரியவர்கள் சொல்வார்களே முயல் பிடிக்கப் போகிற பிராணியின் மூஞ்சையைப் பற்றி. அது தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றது. பலசரக்குக் கடை கொம்பியூட்டர் கடை சொலிசிட்டர் கடை இதெல்லாம் செய்து பார்த்து சரி வராத ஒரு கோஸ்டி கிழக்கிலும் வன்னியிலையும் யாழிலையும் தலைவர்களாகவும் ஆலோசகர்களாகவும் படையெடுக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து கிழக்கு வன்னி யாழ் மக்களை வழிநடத்தவும் வழிகாட்டவும் போகின்ற இவர்கள் இவ்வளவு நாளும் புலத்தில் செய்தவற்றை பட்டியல் போட்டால் எல்லாம் வெளிக்கும்.

அம்மண்ணோடு ஒன்றாக் கலந்த அந்த மக்களைப் பலப்படுத்தி அங்குள்ள இளையவர்களின் திறமையை இனம்கண்டு அவர்களை பொறுப்புகளில் அமர்த்துவதை விட்டுவிட்டு வெளிநாடுகளில் உள்ள பெயில் ஓடருக்கு கடையை மூடிய, லோ சொசைட்டிக்கு பயந்து சொலிசிட்டர் கடையை மூடி தங்களிடம் வந்த அகதிகளைத் தவிக்கவிட்ட ‘சோம்பேறிக் கோஸ்டியை’ வைத்துக் கொண்டு அம்மக்களை வழிநடாத்துவதும் வழிகாட்டுவதும் பாரிய ஆபத்தினை விளைவிக்கும். ஆலோசனைணையும் வழிகாட்டல்களையும் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த வல்லுனர்களிடம் பெற வேண்டும். டாக்குத்தர் சொலிசிட்டர் என்றதற்காக பதவிகளில் இருத்தப்படாது.

குறிப்பு : இக்கட்டுரையாளர் புனைபெயரில் கட்டுரையைத் தந்துள்ளார். ஆயினும் கட்டுரையாளர் தேசம்நெற் ஆசிரியர் குழுவிற்கு தன்னை வெளிப்படுத்தி அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

முதலாவது ஹஜ் குழு இன்று பயணம்; இலங்கையர் 5800 பேருக்கு அனுமதி

hajj.jpgபுனித ஹஜ் கடமையை நிறை வேற்றச் செல்லும் முதலாவது இலங்கை ஹஜ் யாத்திரிகர் குழு இன்று மக்காவுக்கு பயணமாகிறது.முதலாவது ஹஜ் குழுவில் சுமார் 50 பேர் செல்லவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.

இம்முறை இலங்கையில் இருந்து 5800 யாத்திரிகர்கள் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக செல்ல உள்ளனர். ஹஜ் யாத்திரிகர்களை உத்தியோ கபூர்வமாக வழியனுப்பிவைக்கும் வைபவம் நவம்பர் முதலாம் திகதி காலை 10.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெறும்.

அன்றைய தினம் 210 யாத்திரிகர்கள் மக்கா செல்ல உள்ளனர்.

உருப்படுமா உலகமயமாதல்: குலன்

Iran_SL_Leadersபனிக்காடாய் கிடந்த பூமி, வெப்பம் அதிகரிப்பினால் பனி உருக நிலம் புலப்பட ஆரம்பித்தது என்கிறது விஞ்ஞானம். ஒன்றுமில்லாது இருந்து பூமியில் ஒன்றாக உயிரினங்கள் உயிர்த்தெழத் தொடங்கி கூர்ப்பு, வளர்ச்சி, கலப்பு என்று வேற்றுமை அடையத் தொடங்கியது. பூச்சியத்துக்குள்ளிருந்த பூமி, இராச்சியமாக மாறி இன்று உலகமயமாதல் என்பதில் வந்து நிற்கிறது.

ஆயிரத்தித் தொளாயிரங்களில் நாடுகள் பிரிவதும், ஆட்சிகள் அமைப்பதும், உலகமெங்கும் விடுதலை இயக்கங்கள் உருவாவதும், தனித்து நின்று போராடியதும், வென்றதும், ஒரு தலைமையின் கீழ் நாடுகள் இருந்ததும், இயக்கங்கள் அமைந்ததும், சாதாரணமான ஒன்றாக இருந்தது. தலைமை என்பதும் அதற்குப் பணிதல் என்பதும் அத்தியாவசியமான ஒன்றாகவே இருந்தது வந்தது. உலகத்தின் பாதுகாவலராக சோவியத்தும், அமெரிக்காவும் இருந்து ஒரு பனிப்போரை நடத்தினர். காலப்போக்கில் பெருந்தலைமை என்பது மறையத்தொடங்க பிராந்திய வல்லரசுகள் உ.ம் இந்தியா, சீனா, பாக்கிஸ்தான் தலைதூக்கத் தொடங்கின. அமெரிக்க இரசியப் பனிப்போர் உடைந்ததால் பிராந்தியங்களின் பாதுகாப்பு பிராந்திய வல்லரசுகளின் கையில் சென்றுள்ளது. இடதுசாரித்துவ பெருநிலப்பரப்பைக் கொண்ட சோவியத்தை உடைக்கப்போய் அமெரிக்கா பொருளாதாரம் உடைந்து சுக்கு நூறானது தான் மிச்சம்.

இந்தப் பிராந்திய வல்லரசுகள் தம்நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அயல் நாடுகளுடன் நட்புறவாகவும் அன்னியோன்யமாகவும் பரஸ்பர புரிந்துணர்வுகளுடனும் இருக்க வேண்டிய காலகட்டத்தில் வந்து நிற்கிறது. வல்லரசுகளைப் பொறுத்தவரையில் புஜபலம் பொருந்திய அயல்நாடுகள் நட்புறவுடன் தமது இராஜதந்திர நடவடிக்கைகளுடன் இருந்து வந்தன. உ.ம் ஜேர்மன் பிரான்ஸ். இந்து சமுத்திரத்தைப் பொறுத்தமட்டில் 3 பிராந்திய வல்லரசுகள் தமது எல்லை விரிவாக்கங்களைக் கருத்திற்கொண்டு செயற்படுகிறன்றன. இந்த நிலையைச் சரியாகப் பயன்படுத்தி, புலிகளின் கோட்டையை உடைத்தெறிந்தது சிங்களப் பேரினவாத அரசு.

புலிகள் இடதுசாரித்தன்மையைக் கொண்டவர்களாகவும் சீனாவின் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் இயல்பு கொண்டவர்களாக இருந்தும் ஏன் புலிகளுக்கு சீன உதவி கிடைக்கவில்லை? இந்தியத் துணைக்கண்டம் 6 கோடிக்கு மேற்பட்ட தமிழர்களைக் கொண்டவர்கள் ஒரேமொழியும் இரத்தஉறவும் கொண்ட துணைக்கண்டம் ஏன் புலிகளுக்கு உதவி செய்யவில்லை? பாக்கிஸ்தானைப் பொறுத்தமட்டில் தமிழ் பேசுபவர்களே முஸ்லீம்களாக மாறினார்கள் இவர்கள் தமிழ் முஸ்லீம்களே. இப்படியான எல்லா வசதிகளும் தொடர்பு வசதிகள் இருந்தும் புலிகள் நந்திக்கடலில் குதித்தது ஏன்? உலக அரசியலை நன்கு உணராமை, இராஜதந்திரம் இல்லாமை, மக்களை, மக்கள் போராட்டத்தை மதியாமை, சரியான கெரில்லாவாக இயங்காமை, முரண்டு பிடித்தமை, எல்லாவற்றையும் விட முக்கியமாக அரசியலே இல்லாமை, ஷோ காட்டி வாழ விளைந்தமை. மக்கள் சக்தியையும், அரசியலையும் சரியாக உணர்ந்து கொண்டிருந்தால் நந்தியோ நந்தியாக நின்று காப்பாற்றியிருக்கும்.

மேற்கூறிய அனைத்தையும் நன்கு ஆராய்ந்து அலசி சந்தர்பத்தைச் சரியாகப் பயன்படுத்தியது இலங்கை அரசு என்பதை யாரும் மறுக்க இயலாது. ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் ஆப்பு அறைந்து அனுப்பியது இலங்கை அரசே. இன்றைய உலகில் புஜயபலத்தை விட புத்திப்பலமே மேலோங்கி நிற்கிறது என்பதை புலிகள் ஏன் மறந்தார்கள். இந்துசமுத்திர அரசியல் சதுரங்கத்தில் பலமுள்ள சிறுநாடுகளை தன்கைக்குள் போடமுயன்றன பிராந்திய வல்லரசுகளான இந்தியா சீனா பாக்கிஸ்தான். இச்சதுரங்கத்தில் காய்களை சரியாக நகர்த்தி பிராந்திய வல்லரசுகளை ஒழுங்குபடுத்தி புலிகளுக்கு செக் வைத்தது சிங்கள அரசு. இராக்கியப் போரையும் தலிபானையும் கருத்தில் கொண்ட அமெரிக்கக் கனவில் இருந்த பிரபாகரனுக்கு புலம்பெயர் தமிழர்களின் அம்புலிமாமா கதை நிலாச்சோறாக அமைந்தது. கடைசி வேளையிலும் அமெரிக்கா வரும் ஒபாமா வருவார் என்ற நம்பிக்கையில் சரணடைந்து வாள்வெட்டு பட்டு இறந்தார் தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன். தேசியத்தலைவன் என்பவன் மக்களின் பிரதிநிதியாக மக்களுடன் இருக்க வேண்டியவன். பங்கருக்குள்ளா இருப்பான் என்றும் மக்களை மையப்படுத்தடா மடையா என்றும் எத்தனைபேர், மாற்றுக்கருத்தாளர்கள் கத்தினார்கள். கேட்டார்களா? சொந்த மக்களை நம்பமுடியாத போராட்டவீரன் எப்படி அமெரிக்காவை நம்பினார்.

உடைபட்ட பனிப்போரால் உடைபடத்தொடங்கின நாடுகள். இதேவேளை புஜபலகண்காட்சி மாயையை தொடர்ந்தும் நிலைநிறுத்த ஒரு இராக்குப்போர் நடந்தது. இப்போரால் பொருளாதார ரீதியில் வெற்றியைக் கண்டது அன்றை இடதுசாரி நாடுகளான இரஸ்சியாவும் சீனாவும்தான். சச்சேனிய தீவீரவாதத்தை முடிவுக்குக் கொண்ட வந்து தமது ஒற்றனான சச்சேனிய தீவீரவாதி ஒருவனின் கையில் அதை ஒப்படைத்து விட்டு அவர்களை அவர்களுடனே அடிபட விட்டுவிட்டு இரஸ்சியா தன் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்திக் கொண்டது. புஜபலம் காட்டப்போய் அமெரிக்கா இராக்கிலும் ஆவ்ஃக்கானிஸ்தானிலும் முடங்கிப்போய் கிடந்து இன்று பொருளாதார நெருக்கடிக்குள் முட்டி மோதிக் கொண்டு இருக்கும் வேளைதான் ஒபாமா வந்தார். இவரை நம்பியா புலிகள் சரணடைந்தார்கள். புலிகள் கூப்பிட்டவுடன் ஓடிவர ஒபாமா என்ன சித்தப்பனா?

இந்தியா சதுரங்கத்தில் தன்காய்களைச் சரியாகவே நகர்த்திக் கொண்ட இருக்கிறது. தமக்கு அயலில் தலையிடியாக இருந்துவந்த பாக்கிஸ்தானுக்கு தனிபான்களினூடாக ஒரு செக்கை இன்று வைத்துள்ளது. அன்றைய இராணுவத்தலைவர் இதன் பின்னணியில் இருப்பாரா என்பது இன்றைய கேள்வியாக உள்ளது. அமெரிக்காவால் இரஸ்சிய அரசுக்கு எதிராக உருவாக்கப்பட்ட பின்லாடனை பின் அமெரிக்காவே அழிக்க வேண்டிய நிலையானது. இப்படிப் பின்லாடன் இருக்கிறானா இல்லையா என்ற முடிவில்லாமல் போனதால் தலிபான் தொடர்ந்து போராடுகிறது. அமெரிக்கா தன் வெற்றியை உறுதிப்படுத்த முடியாமல் நிற்கிறது. இந்த நிலையையாவது பிரபாகரன் உருவாக்கி விட்டுவிட்டுப் போயிருக்கலாம். பிரபாகரன் இருக்கலாம் என்ற நம்பிக்கையில் ஒருவனாவது போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு இருந்திருப்பான். சிங்கள அரசோ பேரினவாதமோ தன் இனவெறியைக் காட்டாமலும் போரின் வெற்றியை உணராமலும் இருந்திருப்பார்கள் ஆனால் பிரபாகரன் என்ற பெயர் வாழ்ந்து கொண்டிருக்கும். சிலவேளை மக்களின் போராட்டம் தொடர்ந்திருக்கும். அமெரிக்கா வரும் என்ற புலம்பெயர் புலம்பல்களில் கனவுகண்டு உலக இயற்கை நிதர்சனங்களை விட்டுவிட்டு சரணடைந்து எம்மினத்தை முழு நிர்வாணமாக்கிச் சென்றிருக்கிறார் பிரபாகரன்.

இனிவரும் தலைவர்களாவது இன்றைய உலக அரசியல் நிலமையை உணர்வார்களா? உலகமயமாதல் எதற்காக நடக்கிறது? இதன் விளைவுகள் என்னவாகும்? இவற்றைக் கருத்தில் கொண்டு அரசியல் நடத்த முயற்சியுங்கள்.

பெருந்தலைமை உடையும்போது சிறுசிறு தலைமைகள் உருவாவது இயற்கையானது. இந்தச் சிறுதலைமைகள் சுயமாக தம்மைப் பாதுகாத்துக் கொள்வது என்பது கடினமானதே. இதனால் இணைவுகளும் உடன்படிக்கைகளும் அவசியமாகிறது. இதனால் இசைவாக்கமுள்ள தம்முடன் ஒத்துப்போகக் கூடியவர்களை இணைத்து தம்நாட்டின் ஆட்சிப்பலத்தையும் பிராந்தியப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் இருப்பதால் சிறு சிறு நாடுகளின் பங்களிப்புகள் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் உலகமயமாதல் என்பது அவசியமாகிறது.

கணனிகளாலும் இலத்திரனியல்சார் தொழில்நுட்பங்களாலும் உலகம் ஒரு கிராமம் போல் குறுகிவிட்டது. இன்நிலையைப் பயன்படுத்திய வசதியான நாடுகள் தம் வசதிகளை மேலும் பெருக்கிக்கொள்ள வளர்முக நாடுகளை நாடுகிறார்கள். அங்கே தொழிலாளர்கூலி மிகக் குறைவாக இருப்பதுடன் தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்களும் மலிவாகவே கிடைக்கின்றன. தொழிற்சாலையின் இரசாயனக்கழிவுகளையும் வளியசுத்தங்களையும் அங்கேயே விட்டுவிட்டு தயாரிப்புகளை மட்டும் தமது முத்திரைகளுடன் உலகநாடுகளின் பெரும் விலையில் சந்தைப்படுத்தி பெருங்கொள்ளை இலாபம் ஈட்டமுடியும். ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் தம் முதலீடுகளை 3ம் உலகநாடுகளில் செய்வதினூடு சுமார் 200மடங்கு இலாபத்தைப் பெறலாம். மூலப்பொருட்களை 3ம் உலகநாடுகளில் இருந்து கொண்டுவந்து பொருள்களை இங்கே உற்பத்தி செய்து அதைச் சந்தைப்படுத்துவதனால் அடையும் இலாபத்தை விட எல்லாவற்றையும் அங்கேயே எடுத்து கழிவுகளையும் அங்கேயே விட்டு விட்டு அதாவது சக்கையை அங்கே எறிந்து விட்டு சாற்றை மட்டும் இங்கே எடுத்துவந்து சந்தைப்படுத்துவதை விட இலாபம் தரக்கூடிய சிறந்த வியாபாரம் என்ன இருக்கிறது.

இந்நாடுகளின் முதலீடுகள் அங்கே ஆழமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்றால் போர் எப்படியும் நிறுத்தப்பட வேண்டும். அங்குள்ள அரசின் நட்புறவு வலுப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் குறுகிய காலத்தில் பெரிய முதலீடுகளைச் செய்து பெரு இலாபம் பெறமுடியும். இவையனைத்தும் குறுகிய காலத்தில் நடந்தேறினால் மட்டுமே பெருலாபம் உறுதியாகும். இந்நிலையில்தான் தமிழர்களது தலைவிதியும் புலிகளின் ஈழக்கனவும் நந்திக்கடலினுள் கொட்டப்பட்டது.

போர்காரணமாக அகதிகளின் பெருக்கம் ஐரோப்பிய நாடுகளில் அதிகரிப்பதனால் கலாச்சாரச் சீரழிவுகளும், சட்டவிரோதச் செயல்கள் அதிகரிப்பும், பொருளாதார நெருக்கடியும் எற்படுகிறது. போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதனால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்றாகி விடுகிறது. அகதிகளை திருப்பி அனுப்பவும் வசதியாகிறது. தமிழ்மக்களின் அழிவையும் அரசாங்கத்தின் அஜாரகங்களையும் நேரில் நின்று பார்த்த நாடுகளே அகதிகளை அனுப்புவற்கான விண்ணப்ப நிராகரிப்புகளை பெருந்தொகையாகக் கொடுக்கத் தொடங்கி விட்டன.

புலிகளுக்கு உதவிசெய்வதூடு ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு என்ன இலாபம் ஏற்படமுடியும்? மாறாக நட்டமே ஏற்படும். புலிகளுக்கு உதவி செய்வதூடு போர் நீடிக்கும், தமது முதலீடுகள் தக்கவைக்கப்படும், ஆயுதவிற்பனையால் ஏற்படும் வருமானத்தை விட ஒரு தொழிற்சாலையூடு அள்ளப்போகும் பெருந்தொகையான இலாபத்தை யார் கைவிடத்தயார்? இதனால் இலங்கை அரசைப் பகைத்துக் கொள்ள ஐரோப்பிய, அமெரிக்க, பிராந்திய வல்லரசுகள் விரும்பவில்லை. இதுவே ஐரோப்பிய அமெரிக்க தெருக்களில் எங்கள் கண்ணீர்கள் காணாமல் போனதற்கும், எங்கள் குரல்கள் கேட்காமல் போனதற்கும் காரணமாகும்.

இது ஒரு பெரியகட்டுரையாக வளராமல் இருப்பதற்காக உலகமயமாதலினால் ஏற்படும் நன்மை தீமைகளை புள்ளிவடிவத்தில் தந்து மீதியை பின்னோட்ட எழுத்தாளர்கள் கொண்டு சென்று முடிப்பார்கள் என்ற நம்பிக்கையில் விட்டுவிடுகிறேன்.

• உலகமயமாதலினால் சிலவேளைகளில் பொருளாதாரச் சமநிலை ஏற்பட சாத்தியம் உண்டு.
• 3ம் உலகநாடுகளில் மூலவளங்கள் அழிக்கப்படும் ஆனால் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கலாம். வெளிநாடு சென்று திரைகடலோடியும் திரவியம் தேடாமல் வெளிநாட்டவர்களே உங்களை நோக்கி வரும் காலம் கனிந்துள்ளது.
• பொருளாதார வளங்கொண்ட நாடுகளின் முதலீடுகள் உறுதியுடனும் உத்தரவாதத்துடனும் இருக்க வேண்டுமானால் போர்கள் நிறுத்தப்படும். இது இலங்கையில், பிலிப்பைந்து, சுமாத்திரா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் நடந்தேறின.
• போர்கள் நிறுத்தப்படும் போது இணைதல்கள் சாத்தியமாகும். பலமுள்ளவர்கள் இணைந்து பலவீனர்களை உண்பார்களா?
• வளர்முகநாடுகள் ஐரோப்பிய அமெரிக்கநாடுகளின் கழிவறையாக மாற்றம் பெறும்.
• வளர்முகநாடுகளிலும், படித்தவர்களுக்கும் வசதியானவர்களுக்குமே வேலைவாய்ப்பு என்று ஆகிவிடும். இதனால் கறுப்புப் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
• பொருளாதார மையமாக்கல் வலதுசாரித்துவத்துக்கு வழிகோலும். பணக்காரன் பெரும் பணக்காரனாவதும் ஏழைகள் தொடந்து கொடுமைகளை அனுபவிப்பதும் ஊக்கிவிக்கப்படும்.
• வலதுசாரித்துவம் வகுப்புவாதத்துக்கு தூபமிடும்.
• சிறுபான்மை இனங்களின் போராட்டங்கள் பிராந்திய வல்லரசுகளாலும், பெரும்பான்மை இனத்தவர்களின் இணைவுகளாலும் வெளியே வராமல் நசுக்கப்படும். உ.ம் சீனாவில் நடந்து கொண்டிருக்கும் உகுரு இனப்போராட்டம். சிறுபான்மை இனங்கள் உருந்தெரியாமால் பையப் பைய அழிக்கப்படுவார்கள் அன்றேல் தானாக அழிவார்கள்.
• ஆதிக்க மொழிகள் ஆட்சியைப் பெறும் உ.ம் ஆங்கிலம், அரேபிய மொழி இரஸ்சிய மொழிகளால் சிறுமொழிகள் சிறுபான்மை இனம்போல் உலகத்தை விட்டே விரட்டப்படும்.
• சிறுகைத்தொழில்கள் அழிக்கப்படும். பெருந்தொழில்கள் அவற்றை விழுங்கும்.
• மனிதனின் அடிப்படை தேவையான விவசாயம், பண்ணைகள் அழிக்கப்பட்டு பெருவருமானம் தரும் கைத்தொழில்கள் முதன்மைப்படுத்துப்படும். இதனால் வளியசுத்தம் அதிகரித்து உலகில் சமநிலை பாதிக்கப்படும். உணவு தயாரிப்புக்குப் பதிலாக வில்லைகள் தயாரிப்பு அதிகரிக்கும்.
• 3ம் உலகநாடுகளில் முன்பின்னறியா புதிய வியாதிகள் வில்லை வியாபாரங்களுக்காக வலம்வரும். உ.ம். தெங்குக்காச்சல், பறவைக்காச்சல், பன்றிக்காச்சல் இனி பூனைக்காச்சல், நாய்காச்சல் என்று இன்னும் எத்தனை எத்தனையோ காச்சல்களும் பேச்சல்களும் பீச்சல்களும் உருவாகும்.
• பெருந்தெருக்களாலும், போக்குவரத்து, தொழிற்சாலை போன்றவற்றினால் ஏற்படும் வளியசுத்தமும், இரசாயனக்கழிவுகளும் ஐரோப்பிய அமெரிக்க பிராந்திய வல்லரசுகளில் குறைப்பதற்காக 3ம் உலகநாடுகளுக்கு வெளிநாட்டு முதலீடு எனும் பெயரில் ஏற்றுமதி செய்யப்படும். அதாவது வளர்முகநாடுகள் பொருளாதார வல்லரசுகளின் கழிவறையாகும்.
• உலகரீதியாக பொருளாதாரச் சமநிலை ஏற்படச்சாத்தியம் இருந்தாலும் வல்லரசுகள் அவற்றை தடுக்கும். ஆனால் வளர்முக நாடுகளில் ஏற்றத்தாழ்வு மிகப்பெரிய அளவில் இருக்கும்.
• ஒருநாட்டில் இன்னொருநாடு தங்கிவாழவேண்டி அமைவதால் சிறுபான்மைகளின் கருத்துக்கள் போராட்டங்கள் பெரும்பான்மை இணைவுகளால் கொல்லப்படும். பெரும்பான்மை பெரும்பான்மையுடன் கைகோர்த்துக் கொள்ளும் உம் இந்திய இலங்கை உறவு. சீன இலங்கை உறவு.
• கணனிகளாலும் அதிவேக வாழ்வியலாலும், இரசாயனக்கழிவுகளாலும் வளியசுத்தங்களினாலும் அங்கே மக்களின் வாழ்வுக்காலம் குறையும், கூட்டுவாழ்வு குலையும். தனித்துவமான கலாச்சாரங்கள் அழியும்.
• கலாச்சாரங்கள் இணைவுகளால் பலமானதே வாழும். இயந்திரவாழ்க்கை ஒன்று மிருகவாழ்வியலுக்கு வித்திடும்
• உடன்பாடுகளுடன் நாடுகள் இணைந்து பெருலாபம் பெறும்.
• நாடுகளின் எல்லைகள் உடையும், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு அதிகரிப்பதனால் வகுப்புவாதமும் வர்க்கபேதமும் போராட்டங்களும் அதிகரிப்பதற்கு சாத்தியம் உண்டு.
• தனித்துவமற்ற சமூகம் உருவாகி பணத்துக்காக அலையும்.
• பொருளாதாரப் பரிமாற்றம் போல் பயங்கரவாதப் பரிமாற்றமும் வெகு வேகமாக நடைபெறும். அமைதியான நாடுகளில் களவு கன்னக்கோல் பாலியல் வல்லுறவு என்பன அதிகரிக்கும்.
• நன்மை தீமைகள் இரண்டும் பொதுவானாலும் பொருளாதாரம் ஐரோப்பிய அமெரிக்க பிராந்திய வல்லரசுகளின் கையிலேயே என்றும் இருக்கும்.
• இவ்வளவு காலமும் 3ம் உலகநாடுகள் வல்லரசுகளின் ஆயுதக்கழிவகமாக இருந்தது. இன்று அவை வழியசுத்தம், இரசாயனக்கழிவகமாக மாற்றம் பெறுகின்றன. எது எப்படி வளர்ந்தாலும் மாற்றம் பெற்றாலும் ஒன்று மட்டும் உண்மை ஏதோ ஒருகழிவகத்தை எம்மக்கள் சுமப்பார்கள்.

இப்படி நன்மை தீமைகளுடனான ஒரு உலகமயமாதல் நடந்தேறும். நான் தவறவிட்ட விடயங்களை பின்நோட்டம் விடுவோர் விட்டுவைக்காது தொடருங்கள்.

ஓசியில் ஒரு இந்திய எதிர்ப்பு ஓலம்! : வாசு

Pirabakaran V & Mahathaya‘மறை களண்ட கோமளிகள்!’, ‘வெள்ளி பார்க்க வந்த வெங்காயங்கள்!’, ‘இந்தியா ஒரு வாந்தி!’, ‘சோனியா ஒரு சோந்தி!’, ‘வடக்கன் வம்பிலை பிறந்தவன்’ இது நான் சொல்வது அல்ல. இந்தியா பற்றி அண்மையில் புலம்பெயர் தமிழ் தேசிய ஊடகங்கள் வெளிக்கொணர்ந்த பதங்கள்! 1980களில் இந்தியாவையும் இந்திய அரசை மட்டும் நம்பி படையெடுத்த தேசிய விடுதலைப் போராட்டம் இன்று இந்தியாவை வாந்தி பேந்தி என்று திட்டுமளவிற்கு வந்த காரணங்கள் வெள்ளிடைமலை!. சுருங்ககூறின் புலிகளின் இருப்பை இந்தியா கேள்விக்கு உள்ளாக்கியமையும் புலிகளை அழிக்க சிறீலங்கா அரசிற்கு உதவியமையுமே இந்த இந்திய எதிர்பின் இன்றைய உச்சக் கட்டம். ‘ஆகாசவாணி’யின் செய்திகளை மெய்மறந்து  கேட்ட யாழ்பாண மக்கள் இன்று அதே ஆகாசவாணியை அழிக்க வேண்டும் என்ற பார்வையில் கட்டுரைகள் பல  எழுதப்பட்டு வருகிறது. அதாவது இந்தியா என்ற தேசம் இருக்கும் வரை தமிழீழம் கிடைக்காதாம். இதை எழுதியவர் ஒரு அரசியல் ஆய்வாளராம். இவர் பெயர் சபேசனாம்!. நாம் அனைவரும் இந்தியாவை அழிக்க சீனாவுடன் கூட்டுப் புணர்ச்சி செய்ய வேண்டும் என்று நாசூக்காக வேறு சொல்லுகிறார். அட முட்டாள் பயலுகளே இந்தியாவில் இப்ப பிரபலமாக விற்கப்படும் பிள்ளையார் சிலைகள் செய்யப்படுவதே சீனாவில்தான்.

இந்த ஆய்வாளர் திலகம் இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி போற போக்கில இந்தியாவுக்கு விசா எடுப்பற்கு நாங்கள் ‘இந்தியாவின் இறைமைக்கு ஆதரவாக இருப்போம்’ என்று கற்பூரத்தில் அடித்து சத்தியப் பிரமாணம் எடுக்க  வேண்டி வந்தாலும் வரும்!. இதுதான் இந்த ஆய்வாளரின் இந்திய எதிர்ப்பின் பலாபலனாக இருக்குமே ஒழிய வேறு எதுவும் நடந்துவிடப் போவதில்லை.  1980களில் இருந்த நிலையில்தான் சர்வதேச அரசியல் இருப்பதாக  இந்த பத்திரிகையாளர் நினைப்பதுதான் ‘மறை களன்ட கோமாளி’யின் சிந்தனை. இதை லண்டன் வாழ் தமிழ்மக்கள் ஓசியில் படிப்பது….. ???

இந்திய எதிர்ப்பை இன்று மிக மோசமாக நடாத்திவரும் இந்த பத்திரிகைகளும் வானொலிகளும் யதார்த்தத்தை மறந்து கற்பனை உலகில் இருக்கிறார்கள்.  1986இல் சிறிலங்கா இந்திய ஒப்பந்தம் இடம்பெற்றபோது நான் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறி கல்வி கற்றுக்கொண்டிருந்த சமயம். புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட சமயம், நான் புலிகளின் முக்கிய தளபதியாக இருந்த செங்கமலத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து. அப்போது அவர்களின் மனநிலை மிகவும் குழம்பியதாக இருந்தது. ”இந்தியாவின் உதவியுடன் நாம் மிகவும் நல்லவிதமாக நமது போராட்டத்தை வென்றெடுக்க முடியும். ஆனால் தலைமை பிழை விடுகிறது. என்ன செய்வது தலைமையின் சொல்லை கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என அவர் மன வேதனையுடன் கூறியது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது.

இந்தியா தனது நலனை தவிர வேறு எந்த நலனுக்காகவும் இலங்கைக்கு வரவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை! ஆனால் இந்திய இராணுவம் தமிழ் மக்களின் காவலாளிகளாகவே அன்று தமிழ் மக்களால் பார்க்கப்பட்டார்கள். கிழக்கில் சிறீலங்கா அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை இல்லாது செய்ய இந்தியா சில திட்டங்களை புலிகளுடன் தீட்டியது பலருக்கு தெரிய நியாயமில்லை. அது மட்டுமல்ல புலிகளின் தலைமைக்கு பல வாக்குறுதிகளை கொடுத்ததுடன் ”மாகாணசபையை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள். சிங்கள இனவாத அரசு அதை நிச்சயம் மறுக்கும். அந்த நேரத்தில் நமது இராணுவம் வடக்கு கிழக்கில் உங்களிற்கு பயிற்சி அழித்து ஒரு தமிழ் தேசிய இராணுவத்தை ஏற்படுத்த அனைத்தும் செய்வோம்” என்று உறுதிமொழியும் வழங்கப்பட்டது.

ஆனால் ”வடக்கு கிழக்கில் புலிகள் மட்டுமல்ல மற்றைய குழுக்களும் இயங்க புலிகள் வழி சமைக்க வேண்டும்” என்றும் கோரப்பட்டது. இதுதான் புலிகளை உசுப்பேத்திய ஓரே ஒரு பிரச்சனை. இந்த நிபந்தனை இல்லாதிருந்திரதால் புலிகள் இந்திய இராணுவத்திற்கு நிச்சயம் சலாம் போட்டிருப்பார்கள்.  புலிகள் தம்மை தவிர எந்த ஒரு இயக்கமும் இருக்க கூடாது என்பதில் முனைப்பாக இருந்த ஒரே காரணம்தான் அவர்களை இந்தியாவுடன் மோத வைத்தது என்பதை புலிகளின் பல முன்னைநாள் போராளிகள் அன்றே ஒப்புக் கொண்டார்கள். மக்களின் நலனில் எந்தவித அக்றையும் கொள்ளாத புலிகள் தமது இருப்பை மட்டும் முன்நிறுத்தியது என்ன நியாயாம்? காலா காலமாக சிங்கள இனவாதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளான கிழக்குவாழ் தமிழ் மக்கள் இந்திய இராணுவ பிரசன்னத்தில் பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தார்கள். புலிகள் மெதுவாக மக்களிடமிருந்து ஒதுக்குப்பட்டார்கள். இதைக் கண்ணுற்ற புலிகள் இனியும் இந்த நிலை நீடித்தால் தாம் முழுவதுமாக மக்களிடமிருந்து ஒதுக்குப்பட்டு விடுவோம் என்ற நிலையில் இந்திய இராணுத்துடன் மோதுவதே தம்மை காக்கும் என பிரபாகரன் உணர்ந்தார். புலிகளின் தலைவர் பிரபகாரனின் இந்த தனிப்பட்ட முடிவு தமிழ் மக்களின் தலைவிதியை மாற்றியதுடன் இந்தியா தமிழர்களுக்கு எதிரான ஒரு நாடாக மாற்றப்பட்டது.

வடக்கு கிழக்கு மக்களிடம்  எந்தவித அபிப்பிராயமும் கேட்காது தான்தோன்றி தனமாக யுத்த நிறுத்தத்தை மீறியது புலிகளே. இந்த முடிவை பல புலிப் போராளிகள் எதிர்த்தபோதும் தலைமைக்கு கட்டுப்பட்டு இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போராடினார்கள். இதே போராளிகள் பின்னர் இந்தியாவுடன் சேர்ந்து பிரபாகரனை அழிக்க சதி செய்ததாக கூறி போட்டுத் தள்ளப்பட்டார்கள். மாத்தையா, சுசீந்திரன், செங்கமலம் உட்பட 700 புலிப் போரளிகள் பிரபாகரனினாலும் பொட்டம்மானாலும் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டார்கள். இதன் பின்னர் இந்தியாவில் ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்பட்ட இந்திய முன்னைநாள் பிரதமரை எந்தவித அரசியல் காரணங்களும் இன்றி பிரபாகரனின் தனிப்பட்ட குரோத வெறிக்கு பலியாக்கியது தமிழ் மக்களை இந்தியாவின் நிரந்தர எதிரியாக்கியது. மிகவும் முட்டாள்தனமான இந்திய எதிர்ப்பு முடிவுகளை எடுத்தது புலிகள் அமைப்பும் அதன் தலைமையுமே!

ஒரு காலத்தில் சிறீலங்காவில் இருந்து இராணுவத்தால் துரத்துப்பட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தபோது இந்த புலித் தலைமைக்கு பாதுகாப்பும் பயிற்சியும் கொடுத்தது இந்தியாவே.! இந்தியா தனது நலனுக்காக தான் இலங்கைக்கு வந்தது என்பது அனைவரும் அறிந்த விடயம். ஆனால் அதை நமது அரசியல் இலாபத்திற்கு பாவிக்க தெரியாத முட்டாள்களாக இருந்த புலிகளின் தலைமை படு முட்டாள்கள் தான் என்பதை 22 வருடங்களின் பின் மீண்டும் நிரூபித்துள்ளார்கள். அன்று சமயோசிதமாக முடிவெடுத்திருந்தால் நாம் இன்று இந்த இழப்புகளை சந்தித்திருக்க தேவையில்லை. புலிகளின் பொய்யான பிரச்சாரங்கள் இன்று புலம்பெயர் மக்களை இந்தியாவிற்கு எதிராக திருப்பியதை ஏன் இந்த பத்திரிகையாளர்கள் உணர மறுக்கிறார்கள். அனைத்து தவறுகளையும் துரோகங்களையும் நாமே செய்துவிட்டு இன்று இந்தியா துரோகி அதை அழிக்க வேண்டும் என்பது என்ன நியாயாம்? வரலாறு தெரியாதவர்கள் ஓசியில் பத்திரிகை நடாத்தினால் இதைவிட வேறு எதைதான் எழுதுவார்கள்?

ஓசியில் பேப்பர் விடுவது இலகுவான விடயம் அல்ல. அதற்கு வர்த்தகப் பெருமக்களின் ஆதரவு வேண்டும்! அவர்களுக்கென்ன, என்ன விடயம் பத்திரிகையில் இருக்கிறது என்பது அவர்கள் கவலையில்லை. எத்தனை பேர் ஓசியில் படிக்கிறார்கள் என்பதே அவர்களின் கவலை! அண்மையில் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் சிறீலங்காவின் போர்கால நிலவரம் தொடர்பாக வெளியிட்ட 72 பக்க அறிக்கையில் உள்ள பல தகவல்கள் நமக்கு தெரிந்தவையே! குறிப்பாக சிறீலங்கா அரசு செய்த அத்தனை மனிதஉரிமை மீறல் விடயம் முதல் மக்களை கும்பல் கும்பலாக ஷெல்லடித்து கொன்றது வரை, இந்த ஓசி பேப்பர்கள் இதை வரிக்குவரி எழுதியதோடு அதை ஊதிப் பெரிப்பித்து  இலங்கையில் ஒரு இனப்படுகொலை நடக்கிறது என்று ஓலமிட்டு அழுதன.

ஆனால் அமெரிக்க ராஜாங்க திணைக்கள அறிக்கையில் வரிக்குவரி புலிகள் செய்த அக்கிரமங்கள் பற்றி இந்த ஊடகங்கள் ஒரு மூச்சுக்கூட விடவில்லை. மாறாக அங்கு  நடப்பவை எல்லாம் சரியெனவும் மக்கள் ஒரு சில தியாகங்களை செய்தால்தான் விடுதலை பெறமுடியும் என்றும் இந்த  சேயோன்களும் சபேசன்களும், கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதிக் குவித்தார்கள். ஆனால் தப்பிச் செல்ல முனைந்த தமிழ்மக்களை புலிகள் சுட்டுக் கொன்றதையோ பத்து வயதுப் பாலகன்களை கடத்தி சென்றதை பற்றியோ எந்த மூச்சும் விடவில்லை. அது மட்டுமல்ல ஒரு சில முதுகெலும்புள்ள ஊடகங்கள் அந்த செய்திகளை வெளியிட அவர்களை புலியெதிர்ப்பு ஊடகங்கள் என்று முத்திரை குத்தி அவர்களையும் துரோகிகளாக்கினர்.

இந்த பத்திரிகை ஒருகாலத்தில் பயோடேட்டா என்ற பெயரில் புலம்பெயர் வாழ் பெண் ஜனநாயகவாதிகளை புலியெதிர்ப்பாளர்கள் என்ற போர்வை சுமத்தி அவமானப்படுத்தினார்கள். ஆனால் புலிகள் மக்களை கொடுமைப்படுத்தியதை இன்று வன்னி தடுப்பு முகாம் மக்கள் கூறுவதைக் கூட தமது பத்திரிகையில் போட திரணியற்று நிற்கின்றனர். ஆனால் இந்த சேயான்களுக்கு ராஜேஸ் பாலாவையும் நிர்மலாவையும் உச்சரித்தால் மட்டும் கிக் வந்துவிடும். இவர்களுடைய அந்த எழுத்துக்களுக்கு இவர்கள் ஓசியில் பத்திரிகை அடிப்பதை விடுத்து காசுக்கு விற்பனை செய்யும் மஞ்சள் பத்திரிகையே நடாத்தி இருக்கலாம்.

அதற்குள் தாங்கள் சிவப்புச் சட்டைகாரராம் என்று சிலருக்கு தற்பெருமை. மம்மி ஜெயலலிதா தம்பிக்கு தமிழீழம் வாங்கித் தருவார் என்று அரசியல் ஆய்வு செய்தவர்கள், ஓபாமாவும் ஹிலரியும் கப்பல் அனுப்புவார்கள் என்று தலைவரை நந்திக்கடல் ஓரத்தில் வெள்ளி பார்க்கவிட்ட பெருமை ஒரு பேப்பர் உட்பட தேசிய ஊடகங்களையே சாரும். தலைவரை உசுப்பேத்தி உசுப்பேத்தி முருங்கை மரத்தில் ஏத்தி முள்ளிவாய்காலில் தள்ளிவிட்ட இந்த ஜம்பாவான்களுக்கு மாவீரர் தினத்தன்று தேசிய ஆய்வாளர் விருதுகைள வழங்கி கௌரவிக்க வேண்டும். அப்போது தான் தலைவரின் ஆத்மசாந்தி அடையும்.

மாநிலங்களுக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் – உலகவங்கி

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்குக் காரணமாக இருந்த இனமுரண்பாட்டுக்கு தீர்வு காணாதவரை நீண்டகால உறுதித்தன்மையை தக்க வைக்கவோ மூலதனத்தை கவரவோ முடியாது என உலக வங்கி அறிக்கை தெரிவிக்கின்றது. மாநிலங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதே ஏற்புடைய செயன்முறையாக இருக்கும் என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள அரிய சூழல் ஏற்பட்டு உள்ளது என்று தெரிவிக்கும் உலக வங்கி அறிக்கை இச்சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி தமிழ் மக்களுடைய அரசியல் குற்றச்சாட்டுக்களை திருப்திப்படுத்துகின்ற தீர்வை முன் வைக்க வேண்டும் என்று அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

குறுகிய காலத்திலிருந்து இடைக்கால கட்ட பொருளாதார வளர்ச்சி சாதகமானதாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள உலகவங்கி அறிக்கை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து உலகு வெளியேவருவது அதற்கு உறுதுணையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. உல்லாசப் பயணத்துறையிலும் குறிப்பிடத்தக்க உயர்ச்சியையும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

போருக்குப் பின்னான இலங்கைப் பொருளாதாரம் வளர்ச்சியைக் கொண்டிருந்தாலும் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளுக்குத் தீர்வு காணப்படாவிட்டால் மீண்டும் இனமுரண்பாடுகள் தலைதுக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் உலக வங்கி அறிக்கை எச்சரித்துள்ளது.

மாநிலங்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்தை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற ஆலோசணையையும் உலக வங்கி தனது அறிக்கையில் வழங்கி உள்ளது. அடுத்த தேர்தலுக்கு பின்னரேயே அதிகாரப் பரவலாக்கம் பற்றி அரசு சிந்திக்கும் என அரச தரப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கிழக்கு மாகாண ஆளுனருக்கும், ஆளும் தரப்புக்குமிடையிலான முறுகல் உச்சகட்டம் – நஜிமிலாஹி

ep-map.jpgஅதிகாரங்கள் மனிதனை முதன்மைப்படுத்துகிறது. அதிகாரமுள்ள மனிதன் முன் சகலதும் அடிமைதான் என்பதுதான் இன்றைய உலக அரசியலாக காணப்படுகிறது. இந்த அரசியல் எமது நாட்டுக்கும் புதுமையானதல்ல. அரசியல் என்ற சொல்லாடல் உச்சரிக்கப்படும் பொழுது அது அதிகாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு அதன் தன்மையைப் பிரதிபலிக்கும் முகமாகவே இருக்கிறது. இந்த அதிகாரங்கள் என்ற வார்த்தை தற்போது கிழக்கு மாகாண சபையில் சூடான ஒரு விவாதப் பொருளாக மாறியிருப்பவதை நாம் அவதானிக்கலாம்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்படி மாகாண சபைகள் உருவாக்கம் இலங்கை அரசியல் அமைப்பில் இடம்பெறுகிறது. இந்தியாவிலிருக்கும் மாநில அரசாங்க முறைக்கு ஒத்ததாக இலங்கையில் மாகாண சபைகள் கொண்டுவரப்பட்டன. இருந்தாலும் இந்திய மாநிலங்களுக்கும்,  இலங்கை மாகாணங்களுக்குமிடையில் அதிகாரங்களை ஒப்பிட்டு நோக்கும் பொழுது இந்திய மாநிலங்கள் பலமானதாக காணப்படுகிறது. இருந்தாலும் இலங்கைப் பிரச்சினையை தணிக்கும் முகமாகக் கொண்டுவரப்பட்ட படியால் இலங்கை மாகாண சபைகளுக்கு குறிப்பிட்டு சொல்லக்கூடிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த மாகாண சபைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு சிறுபான்மை சமூகம் குறிப்பாக தமிழர்கள் தங்களது உரிமைகளை படிப்படியாக பெற்றுக்கொள்வதற்கான ஒரு ஏற்பாடாகத்தான் 13ம் அரசியல் சீர்திருத்தத்தின்படி மாகாண சபைகள் அரசாங்கமுறை புகுத்தப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருதினார்கள்.

ஆனால் இந்த வழிமுறைக்கு உடன்பட மறுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் மாகாண அரசாங்க முறைக்கு தங்களது கடும் எதிர்ப்பை பிரயோகித்தார்கள். இந்த அரசாங்க முறையை இலங்கைக்குக் கொண்டுவந்த இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியை புலிகள் கொன்று சர்வதேச ரீதியாக மாகாண அரசாங்க முறையை தாங்கள் எதிர்பபதாக பிரபாகரன் தமது அரசியல் நகர்வை மேற்கொண்டார்.

கடைசியில் பிரபாகரனின் தோல்விக்கும் மாகாண அரசாங்க முறை முக்கிய புள்ளியாக அல்லது கருவாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. இலங்கைக்கு மாகாண அரசாங்க முறையை கொண்டு வந்தவர் கொலை செய்யப்பட்டு இரு தசாப்தங்களின் பின்னர் மாகாண அரசாங்க முறையை எதிர்த்தவரும் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே,  ஆரம்பம் தொடக்கம் இன்று வரையும் மாகாண அரசாங்க முறைமை இலங்கை அரசியலில் முக்கிய பங்காளியாக காணப்படுகிறது.

இந்த வகையில் 21 வருடங்களின் பின் ஏற்படுத்தப்பட்ட கிழக்கு மாகாண சபை தற்போது அதிகாரங்கள் தொடர்பில் மத்திய அரசாங்கத்துக்கும் மாநில அரசாங்கத்துக்கும் இடையில் கேள்விகள் எழத் தொடங்கியுள்ளதை நாம் அவதானிக்கலாம். கிழக்கு ஆளுனர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்துவதால் மாகாண சபையை சுயமாகக் கொண்டு நடாத்த முடியாத நிலை எழுந்துள்ளதாக குற்றம் சாட்டுகிறது.

221009eastern-provincial.jpgஆளுனர் முதலமைச்சர் உட்பட அமைச்சர்களுக்கு கூடுதலான அழுத்தங்களை பிரயோகிப்பதாகவும் இதனால் கிழக்கு மாகாண மக்களுக்கு மாகாண சபையால் எதுவிதப் பயனும் கிடைக்காமல் போகும் என்ற மனப்பதிவுடன் கிழக்கு மாகாண அமைச்சர்கள் சோர்ந்திருக்கின்றார்கள். கிழக்கு மாகாண ஆளுனர் மொஹான் விஜயவிக்கிரம கிழக்கு மாகாண சபையினை தீர்மானிக்கும் சக்தியாக தென்படுகிறார். இதனை அவரே வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். மாகாண சபையைக் கலைக்கும் அதிகாரம் ஆளனரின் அதிகாரங்களின் கோடிட்டுக் காட்ட வேண்டிய பந்தியாகும்.

முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்த் அவர்களின் செயலாளராக கடமையாற்றிய மாமங்கராஜா முதலமைச்சரின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் 60 வயதைக் கடந்ததால் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் முதலமைச்சர் ஆளுனரிடம் மாமங்கராஜாவை இன்னும் 02 வருடங்களுக்கு பதவி நீடிப்பு செய்யுமாறு கேட்டு ஆளுனர் அதற்கான அனுமதியைக் கொடுக்க மறுத்துள்ளார். அதேபோன்று கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராகக் கடமையாற்றிய தயாபரன் என்பவரை ஆளுனர் இடைநிறுத்தம் செய்துள்ளார். இவ்வாறான சம்பவங்களால் முதலமைச்சருக்கும் ஆளுனருக்குமிடையிலான நிர்வாக முறுகல்கள் ஏற்பட்டுள்ளன.

221009hisbullah.jpgஅதேபோன்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் அதிகாரம் தொடர்பில் அடிக்கடி ஆளுனரிடம் முரண்பட்ட நிலையில் காணப்படுகிறார்.  ஒரு சாதாரண சுகாதார தொழிலாளியை நியமிக்கும் அதிகாரம் தனக்குதான் உண்டு என ஆளுனர் செயற்படுகிறார். இவ்வாறு அனைத்து துறைகளிலும் ஆளுனரின் தலையீடு இருப்பதாக அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கருத்து தெரிவித்துள்ளார். ஆளுனரின் தலையீடு அமைவதால் ஏனைய மாகாண சபைகளுக்குள்ள அதிகாரம் கூட கிழக்கு மாகாண சபைக்கு இல்லை என்று அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபை அதிகாரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளால் கிழக்கு அபிவிருத்திகள் கூட பின்தள்ளப்படலாம் அல்லது காலம் நீடித்து செல்லலாம் என்ற கருத்தும் தற்போது காணப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகள் தமது சேவைகளை வழங்க முடியாத ஒரு நிலை எழுந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை விட ஆளுனர் பலசாலியாக இருப்பது மாகாண சபை நிர்வாகத்தை கொண்டு நடத்துவதில் பல முட்டுக்கட்டைகள் ஏற்படும் என்ற கருத்தில் கிழக்கு மாகாண சபை ஆளுந்தரப்பு உள்ளது.

13ம் அரசியல் சிர்திருத்தத்தின்படி கொண்டுவரப்பட்ட மாகாண சபை அரசாங்க முறைமையின் மீது தொடுக்கப்பட்ட விமர்சனங்களில் முக்கியமானது ஆளுனர் தொடர்பானது ஏனெனில் மக்களின் விருப்புக்கு அப்பாற்பட்டவராக ஆளுனர் காணப்படுகிறார். மாகாண சபையின் எதிர்பார்ப்புக்கள் ஆளுனரின் மிதமிஞ்சிய அதிகாரத்தினால் இல்லாமல் போய்விடுகிறது. எனவே அதிகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் சர்ச்சைகள் எழுந்தவாறு உள்ளன.

ஆளுனருக்கு எதிராக கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் ஆளுனருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு முயற்சிகள் செய்தபோதும் அதனை அறிந்த ஆளுனர் தனக்கு எதிராக மாகாண சபை செயற்பட முன்வந்தால் நான் 24 மணித்தியாலத்துக்குள் சபையைக் கலைத்து விடுவேன் என எச்சரித்துள்ளார். இதனால் கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் ஆளனரின் எச்சரிக்கைக்குப் பயந்து தமது இருப்பை தக்கவைத்துக் கொண்டு காலத்தைக் கடத்தும் நிலையில் காணப்படுகிறார்கள். இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் செல்லாக் காசாகவே இருக்கிறார்கள்.

மாகாண சபையைக் கலைத்தால் அடுத்த தேர்தலில் தமது நிலையை நினைத்துப் பயந்துபோய் காலத்தைக் கடத்துகிறார்கள் கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் குழாம்.

உலக சமாதானத்தை ஏற்படுத்துவதில் ஐக்கிய நாடுகள் தவறி விட்டனவா? – புன்னியாமீன் –

un.jpgமுதலாம் உலக மகாயுத்தம் முடிவடைந்ததும் உலக சமாதானத்திற்கான அறைகூவல்கள் மீண்டும் ஓங்கலாயிற்று. உலக யுத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு உலக மக்களை ஒன்றிணைக்கும் நோக்குடன் சமாதானத்தின் பக்கம் உலக மக்களின் கவனம் ஈர்க்கப்பட்டன. இவற்றின் பெறுபேறாக 1919 ஆண்டு ஜுன் மாதம் 28 ஆம்திகதி  உதயமானதே (League of Nation) சர்வதேச சங்கமாகும்.

ஆனால், காலப்போக்கில் சிற்சில நாடுகள் சர்வதேச நலனைவிட தத்தமது சொந்த நலனைக் கருத்திற் கொண்டு மேற்கொண்ட நடவடிக்கைகள் சர்வதேச ஒத்துழைப்பு எனும் உன்னத நோக்கை அடையும் முயற்சி வெற்றியளிக்காமைக்கு முக்கிய காரணமாயிற்று. சர்வதேச சங்கத்தின் நோக்கம் தோல்வி கண்டதும் மீண்டும் ஓர் உலகமகாயுத்தம் ஏற்படலாயிற்று. அதுவே 2ம் உலக மகாயுத்தமாகும்.

2ம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்னர் சர்வதேச சங்கத்தில் காணப்பட்ட குறைபாடுகள் இல்லாதவகையில் ஐக்கிய நாடுகள் சபை என்ற பெயரில் சமாதானத்தை நிலைநாட்டும் ஒரு அமைப்பு, எதிர்கால சந்ததியினரை யுத்த ஆபத்திலிருந்து காப்பாற்றும் நோக்கோடு 1945 இல் தோற்றுவிக்கப்பட்டது. 2ம் உலக மகாயுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெலும், பிரித்தானியப் பிரதமர் வின்சன் சர்ச்சிலும் அத்திலாந்திக் கடலில் கப்பலொன்றில் (1941.08.14) ஒன்றுகூடி உலக சமாதானத்தை ஏற்படுத்த முடிவுசெய்து ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் இந்த அமைப்பு 1 ஜனவரி 1942 முதல் போர்க்கால கூட்டணியாக செயற்பட்டது.

இதையடுத்து 1943 அக்டோபர் மாதத்தில் அமெரிக்கா,  சீனா,  பிரித்தானியா,  ரஸ்யா ஆகிய நாடுகள் மொஸ்கோவில் ஒன்றுகூடி உலகில் சமாதானத்தை ஏற்படுத்த ஒரு தனிநிறுவனம் அமைக்க வேண்டுமென முடிவு செய்தன.

இவற்றின் விளைவாக யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், கலிபோர்னியாவிலுள்ள, சென்பிரான்ஸிஸ்கோ நகரில் (1945 ஜூலை) 51 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய ஒரு மகாநாடு கூட்டப்பட்டது. இம் மகாநாட்டிலேயே ஐக்கிய நாடுகள் சாசனம் உருவாக்கப்பட்டது. 1945 ஒக்டோபர் 24ம் திகதி இச்சாசனத்தில் சீனா, பிரான்ஸ், சோவியத் நாடு, பிரித்தானியா, அமெரிக்கா ஆகியன கைச்சாத்திடப்பட்ட பின்பே அதே தினத்தில் உத்தியோகபூர்வமான முறையில் ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்றும் அக்டோபர் 24ம் திகதியே ஐக்கிய நாடுகள் தினமாகக் உலகளாவியரீதியில் கொண்டாடப்படுகின்றது. 51 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச்சபை, ஜனவரி 10 1946 இல், இலண்டனிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் மெதடிஸ்த மத்திய மண்டபத்தில் கூடியது. 1960இல் 100 நாடுகளும், 1980 ஆம் ஆண்டில் 154 நாடுகளும் அங்கத்துவம் பெற்றிருந்த இவ்வமைப்பில்  2009 ஆண்டு தரவுகளின் படி தற்போது 192 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோக பூர்வ மொழிகளாக அரபு, மாண்டரின், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்ய மொழி, எசுப்பானிய மொழி என்பன காணப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் பொது நோக்கங்களை பின்வருமாறு சுருக்கமாகக் குறிப்பிடலாம். சர்வதேச சமாதானத்தையும் பொது பாதுகாப்பையும் பேணல், நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்த்தல், உறுப்பு நாடுகள் ஒரு நாட்டின் உள்நாட்டு, விவகாரத்தில் பிரிதொரு நாடு தலையிடாதிருத்தல், சர்வதேச பொருளாதார, சமூக, கலாசார மனிதாபிமானப் பிணக்குகளைத் தீர்த்தல், மனித அடிப்படை உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாத்தல். ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகள் அனைத்தும் சமமானவைகளே, எனவே அங்கத்துவ நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளைச் சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ளல் வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான அமைப்புக்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். பொதுச் சபை (General Assabbly),
பாதுகாப்புச் சபை (Security Council),
பொருளாதார, சமூக சபை (Socio Economic Council),
நம்பிக்கைப் பொறுப்புச் சபை (Trustieship Council),
சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice),
செயலகம் (The Secretariat)

பொதுச்சபை

192 அங்கத்துவ நாடுகளையும் இது கொண்டிருக்கும். எல்லா அங்கத்துவ நாடுகளும் 5 பிரதிநிதிகளை பொதுச்சபைக்கு அனுப்பலாம். இருப்பினும் ஒருவர் மட்டுமே வாக்கிற்கு உரித்தானவர். பொதுச்சபை பொதுவாக வருடத்தில் ஒருமுறை கூடும். ஐக்கிய நாடுகள் சபையின் 64-வது வருடாந்த அமர்வு 2009 அக்டோபரில் நியூயோர்க் நகரில் நடைபெற்ற போது சமாதானம் மற்றும் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி, மனித உரிமை விருத்தி, மனிதாபிமான மற்றும் அனர்த்த நிவாரண விடயம், சர்வதேச சட்டங்கள் மற்றும் நீதி, போதைப்பொருள் தடுப்பு, ஆயுதக் களைவு, நிர்வாக விவகாரம், பயங்கரவாதத்தை ஒழித்தல் ஆகிய ஒன்பது விடயங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் நியுயேர்க்கில் அமைந்துள்ளது. சாசனத்தின் வரையறைகளுக்குட்பட்டு எந்தப் பிரச்சினைகளையும்,  எந்த அங்கத்துவ நாடும் விவாதிக்கலாம். முக்கிய நெருக்கடிப் பிரச்சினைகளைப் பற்றிய முடிவெடுக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் அவசியம்.

இதன் பொறுப்புக்கள் 7 நிர்வாகக் குழுக்கள் மூலம் நிறைவேற்றப்படும் அவையாவன: அரசியல் பாதுகாப்பு, பொருளாதாரம், சமூகம், கலாசாரம், தர்மகர்த்தா, நீதி, நிர்வாகம், சிறப்பு அரசியல் குழு என்பனவாகும். பாதுகாப்புச் சபையின் சில உறுப்பினர்களையும், பொருளாதார சமூக சபையின் அனைத்து உறுப்பினர்களையும், பொதுச் செயலாளரையும் பொதுச்சபையே தெரிவு செய்யும்.

பாதுகாப்புச்சபை

இதன் மொத்த அங்கத்தவர் எண்ணிக்கை 15 ஆகும். நிரந்தர அங்கத்துவ நாடுகள் 5, அவையாவன: சீனா, பிரான்ஸ், ரஸ்யா அமெரிக்கா, பிரித்தானியா. ஏனைய 10 நாடுகளையும் பொதுச்சபை 2 ஆண்டுகளுக்கொருமுறை தெரிவு செய்யும். பாதுகாப்புச் சபையின் அங்கத்தவர் எண்ணிக்கையை 17ஆக உயர்த்துவதற்கும் யப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு நிரந்தர அங்கத்துவத்தை வழங்கவும் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதுவரை இது நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதே நேரம் இந்தியாவும் நிரந்தர அங்கத்துவத்தைப் பெறமுயன்று வருகிறது.

பாதுகாப்புச்சபையில் ஒரு தீர்மானத்தை எடுக்க 5 நிரந்தர அங்கத்துவ நாடுகளும் ஏனைய 4 நாடுகளும் வாக்களிக்க வேண்டும். 5 நிரந்தர அங்கத்துவ நாடுகளில் ஒரு நாடாவது பிரேரணையை நிராகரித்தால் நடைமுறைப்படுத்த முடியாது. இவ்விசேட அதிகாரம் ‘வீட்டோ” எனப்படும். இந்த ‘வீட்டோ” அதிகார முறை தற்போது பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு உற்பட்டு வருகின்றது. அதே நேரம் இந்த வீட்டோ அதிகாரம் ரஸ்யா, சீனாவிடம் இல்லாவிடின் மேலைத்தேய நாடுகளின் செல்வாக்கு மிகைத்து விட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

பாதுகாப்புச் சபையின் நோக்கங்களும், செயற்பாடுகளும்

ஐ.நா.வின் நோக்கங்களுக்கும், கொள்கைகளுக்கும் ஏற்ப உலக சமாதானத்தையும், பாதுகாப்பையும் பேணல், சர்வதேச மோதல்களுக்கு வழிகோலும் அபிப்பிராய பேதங்கள் பற்றி ஆராய்தல், இத்தகைய மோதல்களைத் தீர்ப்பதற்கான வழிகளை அல்லது நிபந்தனைகளை முன்வைத்தல், ஆயுதக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளல், சமாதானத்திற்கெதிராக எழும் பிரச்சினைகள், ஆக்கிரமிப்புக்கள் பற்றி ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை முன்வைத்தல்

இச்சந்தர்ப்பத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளல், ஆக்கிரமிப்பைத் தடுக்க பொருளாதாரத் தடை, ஒழுக்க நடவடிக்கையை எடுத்தல், இராணுவப் பலத்தைப் பிரயோகித்தல் போன்ற படிமுறைகள் மேற்கொள்ளப்படும். அண்மைக்காலத்தில் ஈராக் மீது அமெரிக்க நேசப்படைகள் தாக்குதல் மேற்கொண்டமை ஐ.நா மீது அமெரிக்காவின் செல்வாக்கை நிரூபிக்கும் ஒரு நிகழ்வாகவே கருதப்படுகிறது.  

பொருளாதார சமூக சபை அங்கத்துவ நாடுகள் 54 ஐக் கொண்டது. 18 நாடுகள் 3 ஆண்டுகள் காலத்துக்குப் பொதுச்சபையால் தெரிவு செய்யப்படும். ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அமைப்புக்களை ஒன்றிணைக்கும் அமைப்பே இது. இது வருடத்தில் இரு தடவைகள் கூடும் (ஏப்ரல் மாதத்தில் நியுயேர்க்கிலும்,  ஜூலை மாதத்தில் ஜெனிவாவிலும் கூடும்)

இந்நிறுவனத்தின் கடமைகள் துணைக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. போக்குவரத்து, செய்தித் தொடர்புகள் குழு, புள்ளிவிபரக்குழு, சனத்தொகைக் குழு,  சமூக வளர்ச்சிக் குழு, மனித உரிமைகள் பாதுகாப்புக் குழு, சிறுபான்மையினரின் பாதுகாப்புக் குழு, பெண்கள் நல பாதுகாப்புக் குழு மேலும் ஐரோப்பிய ஆசிய,  லத்தீன் அமெரிக்கா நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் என தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

நம்பிக்கைப் பொறுப்புச்சபை

சுதந்திரம் பெறாத நாடுகள் தாம் வளர்ச்சி பெறும்வரை வல்லரசுகளின் பொறுப்பில் இருக்கும். அவ்வாறு இருக்கும் நாடுகளால் (உறுப்பு) நிர்வாகிக்கப்படும் நாடுகளைக் கண்காணிக்க இது அமைக்கப்பட்டது. இச்சபையில் 12 உறுப்பினர்கள் இடம்பெறுவர் 3 ஆண்டுகளுக்கொருமுறை பொதுச்சபையால் இத்தெரிவு இடம்பெறும். இன்றைய காலகட்டத்தில் நம்பிக்கைப் பொறுப்புச்சபை முக்கியத்துவம் இழந்ததொரு சபையாகவே திகழ்கின்றது.

சர்வதேச நீதிமன்றம்

இது ஹெய்க் நகரில் அமைந்துள்ளது. இந்நீதிமன்றத்தின் சட்டங்களை ஏற்றுள்ள எந்தவொரு உறுப்பு நாடும் தமது பிணக்குகளைத் தீர்த்துக் கொள்ள இந்நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கலாம். இதில் 15 நீதிபதிகள் இருப்பர் (பதவிக்காலம் 9 ஆண்டுகள்)

செயலகம்

ஐ.நா. சபையின் ஏனைய அமைப்புக்களுக்குச் சேவையாற்றவே பொதுச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதல்வர் செயலாளர் நாயகமாவார். இதன் முதலாவது செயலாளர் நாயகம் டிரக்லி வி என்பவராவார். தற்போதைய செயலாளர் நாயகம் ‘பன்-கீ மூன்” ஆவார்.
செயலாளர் நாயகம் பாதுகாப்புச் சபையின் சிபார்சின் பேரில் பொதுச்சபையால் தெரிவு செய்யப்படுவார். ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான நிர்வாகியான இவரது பிரதான கடமை உலக சமாதானத்தையும்ää பாதுகாப்பையும் பாதிக்கும் எந்த விடயத்தையும் பாதுகாப்புச் சபையின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகும்.

ஐக்கிய நாடுகள் சபை கொண்டுள்ள நடவடிக்கைகள் விமர்சன ரீதியில் நோக்கப்பட வேண்டியதாகும்.

சர்வதேச சங்கத்தால் உலக சமாதானத்தைப் பேண முடியாமற் போனதன் காரணமாக 2ம் உலக மகாயுத்தம் ஏற்பட்டது. இனிமேல் இதுபோன்றதொரு யுத்தம் ஏற்படக்கூடாது என்பதைப் பிரதானமாக் கொண்டு உலக சமாதானத்தை நிலைநிறுத்த வேண்டியிருந்தது. உலக மகாயுத்தங்களை எடுத்து நோக்குமிடத்து நாடுகளுக்கிடையே ஏற்பட்ட அடிப்படைப் பிரச்சினைகள் காலகதியில் விஸ்வரூபம் எடுப்பதன் காரணமாகவே யுத்தங்கள் தோற்றுவிக்கப்பட்டன. எனவே உலக சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் நாடுகளுக்கிடையிலான பிணக்குகள் சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தப்பட்ட பின் மற்றுமொரு உலக யுத்தம் ஏற்படவில்லை. இவ்வடிப்படையில் நோக்குமிடத்து ஐ.நா. அமையம் உலக சமாதானத்தை ஏற்படுத்த வில்லையென்று முற்றுமுழுதாகக் கூறமுடியாது.
பல சந்தரப்பங்களில் ஐ.நா. சபையின் அங்கத்துவ நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பிணக்குகளை (குறுங்காலப் பிணக்குகள் அல்ல நீண்ட காலப் பிணக்குகள்) ஐக்கிய நாடுகள் சபையினால் தீர்க்க முடியாமற்போன சந்தர்ப்பங்களும் உண்டு. உதாரணமாக மத்திய கிழக்குப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியாமல் இதுவரை ஐ.நாவின் பிரயத்தனங்கள் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளமை. 1967 ஆம் ஆண்டு ஐ.நா வின் தீர்மானத்தை மீறி இஸ்ரேல், பலஸ்தீன் பகுதிகளை ஆக்கிரமித்தமை, – 1968 ஆம் ஆண்டில் சோவியத் – செக்லோஸ்லவியா பிரச்சினை, 1974 ஆம் ஆண்டு துருக்கியின் சைப்ரஸ் படையெடுப்பு, 1991 ஆம்ஆண்டு அமெரிக்க ஈராக் யுத்தம், அண்மைக் காலத்தில் அமெரிக்க – ஈராக், அமெரிக்க – ஆப்கான் யுத்தம்…   இதைப் போன்ற காரணங்களை எடுத்து நோக்குமிடத்து ஐ.நா. சபை உலக சமாதானத்தைப் பேணவில்லை என்ற கூற்றில் சில உண்மைகள் இருப்பதை மறுக்க முடியாது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகளை நடைமுறைப் படுத்துகையில் ஏற்படக்கூடிய சிற்சில பிரச்சினைகள் உலக சமாதானத்திற்கான தலையீடாக அமைந்து காணப்படுகின்றன. இவற்றை பின்வருமாறு சுருக்கமாக நோக்கலாம்.

பிரச்சினை நிலைகளில் ஐ.நா. சபையின் யோசனைகளை கட்டாயம் ஏற்க வேண்டும் என்ற நிலை இல்லாமை. சட்ட அதிகாரம் பொருந்தியதாக இன்மை. வல்லரசுகள் ஐ.நா.சபைக்குப் புறம்பான முறையில் தனது பலத்தினைப் பிரயோகித்தல் அமைப்பினுள் வல்லரசுகளின் தலையீடு. இத்தகைய தலையீடுகளுக்கிடையே ஐ.நா. சபை செயற்பாடு; சிக்கல்களை எதிர் நோக்குகின்றன. எனவே, உலக சமாதானத்தை ஏற்படுத்துவதில் ஐ.நா. சபை தவறிவிட்டது என்ற கருத்து சற்று உண்மையாகின்றது சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என வர்ணிக்கப்பட்ட பிரித்தானியா 2ம் உலகப் போரின் பின்னர் தன் முதன்மையை இழக்க, அமெரிக்கா, சோவியத் ரஸ்யா ஒன்றியம் ஆகிய இரு பெரும் வல்லரசுகள் எழுச்சி பெற்றன. முன்பு பிரித்தானியாவின் தனியுரிமையாக இருந்த உலக நிர்வாகம்,  பொருளாதாரச் சுரண்டல், இராணுவ ஆதிக்கம் என்பன இவ்விரு வல்லரசுகளுக்கிடையேயும் பங்கிடப்பட்டன. இவ்விரு வல்லரசுகளுக்கிடையிலான பனிப்போர் (Cold War) பல சிறிய நாடுகளை நசுக்குவதன் மூலம் செயற்பட்டன. தவிர மறை முகமாக ஐ.நா சபை அமெரிக்காவின் கைப்பொம்மையாகவே செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

2ம் உலக மகாயுத்தம் முடிவடைந்து இன்றுவரை பல தசாப்தங்கள் கழிந்துவிட்டன. ஆனால், 1ம் உலக மகாயுத்தம் முடிவடைந்து 2 தசாப்தங்களுக்குள்ளேயே 2ம் உலக மகாயுத்தம் ஏற்பட்டுவிட்டது. எனவே 2ம் உலக மகாயுத்தத்தின் பின்னர் மீண்டும் ஒரு உலக மகாயுத்தம் ஏற்படாமைக்கு ஐ.நா. சபை முழுமையான காரணியா? இவ்வினாவினைச் சற்று அழுத்தமான முறையில் ஆராய்தல் வேண்டும். எவ்வாறாயினும் உலக சமாதானத்தைப் பேணத்தக்க முறையில் சில அத்தியாவசியமான கருமங்களை இது ஆற்றிவருவதை எம்மால் மறுக்கமுடியாது.

முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்

Kvingar Murugaiyan Photo - Thamayanthyமுருகையன் இறந்து ஏறத்தாழ நான்கு மாதங்களில் நான் இக்கட்டுரையை எழுதுவதற்கு காரணம் இருக்கிறது. தமிழ்த்தேசியம் என்ற போர்வையில் புலிப் பாசிஸத்தை அறிந்து அறியாமலோ அல்லது தங்களது தனிப்பட்ட சந்தர்ப்பவாத நலன்களுக்காகவோ ஆதரித்து வரும் எழுத்தாளர்கள் வலைப்பதிவாளர்கள் முருகையனை ஒருபக்கச் சார்போடு விதந்துரைத்து அதிகளவில் முருகையனுக்கு அஞ்சலிக்குறிப்புக்களை எழுதியிருக்கிறார்கள். முருகையனும் புலிப்பாசிஸத்தை நியாயப்படுத்தி அதனது பிரச்சாரத்துக்கு உதவியவர் என்பதால் இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

தான் வாழ்ந்த சமூகத்தின் விமர்சகராக தன் காலத்தின் மனச்சாட்சியின் குரலாக முருகையன் இருந்தாரா? அவரது சமகாலத்து ஈழத்துத் தமிழ்க் கவிதைகளில் முருகையனின் இடம் என்ன?

1986ம் ஆண்டு முருகையன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு துணை பதிவாளராகப் பணியாற்ற வருகின்றபோது தான் புலிப் பாஸிசத்திலிருந்து தனது சுயாதீனத்தை பேணிக்கொள்வதற்காக பல்கலைக்கழகம் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. இதே ஆண்டுதான் யாழ் பல்கலைக்கழக மாணவரான விஜிதரனை புலிகள் கடத்திச்சென்று சித்திரவதை செய்து கொன்றதன் மூலமாக பல்கலைக்கழகம் மீதான தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தினார்கள். மாற்று இயக்கங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் பலர் கல்வியை இடைநிறுத்தி ஓட வேண்டியிருந்தது.

Dr Rajani Thiranagamaஅடுத்தடுத்த ஆண்டுகளில் ஈழத்தமிழ் சூழலின் நிலமையினை விமர்சித்து “முறிந்த பனை” எழுதிய நான்கு  யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்களில் முதன்மையானவரான ராஜினி திராணகம புலிகளால் கொல்லப்பட மீதிப்பேர் ஒதுங்க வேண்டியிருந்தது அல்லது தென்னிலங்கைக்கு தப்பிச்செல்ல வேண்டியிருந்தது. யாழ் பல்கலைக்கழக மாணவியும் கவிஞையும் நாடகவியலாளரும் பெண்ணியவாதியுமான செல்வி புலிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும் கவிஞரும் தன்னுடைய முதல் கவிதைத் தொகுப்புக்கு முருகையனிடமிருந்து முன்னுரையைப் பெற்றவருமான எம்.ஏ. நுஃமான் முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளால் கலைக்கப்பட்டார். நிலமை இவ்வாறு இருக்கும்போது நமது கவிஞர் முருகையனோ சற்றும் மனம் தளராது புலிப்பாசிச அரசியலுக்கு வெற்றுப்பிரச்சாரம் செய்யும் கவிதைகளையும் நாடகங்களையும் எழுதினார்.

‘தற்கொடை’ என்ற முருகையனின் கவிதையில் வள்ளுவரை கவிதைசொல்லி தெருவில் சந்தித்து வீட்டுக்கு அழைத்துச் செல்லுகிறார். வீட்டிலோ வள்ளுவர் தான் இயற்றிய புதிய அதிகாரத்தை கொடுக்கிறார். கவிதையின் இரண்டாவது பகுதி பின்வருமாறு

தற்கொடை என்ப தமிழீழ
மைந்தர்கள்
நிற்கும் புதிய நிலை.

தன்னுயிரை தான் ஈயும்
சான்றாண்மை தற்கொடையாம்
ஏன்ன நிகர் ஆகும் இதற்கு?

ஓர்ம உரமும் துறவும்
உறுதியுமே
கூர்மதியோர் ஆவிக் கொடை

கற்கண் டினிது பழங் கள் இனிதே
என்பார்கள்
தற்கொடையின் தன்மை தெரியார்.

ஆவி கொடுக்கும் அசையாத்
திடம் கொண்ட
வாலிபர்கள் வாழ்வதிந்த மண்.

சொந்த மண் மீளச் சுடுகலன்கள்
ஏந்திடுவோர்
தந்திடுவார் தங்களுயிர் தாம்.

நஞ்சைக் கழுத்தில் நகையாய்
அணிவோரின்
நெஞ்சம் நிரம்ப நெருப்பு.

வெங்கொடுமைச் சாவும் விளையாட்டுக்
கூடமாம்
பொங்கு சினம் கொண்ட புலிக்கு.

அச்சம் அறியார்: அடங்கார்:
அவர்க்குயிரோ
துச்சம்: எதிரி வெறுந்தூள்.

கொல்வோரை மோதிக் கொடுபட்ட
இன்னுயிரை
ஏல்லா உலகும் தொழும்.

இதைவிட நல்ல பிரச்சார முத்து புலிகளுக்குக் கிடைக்கப் போவதில்லை. இப்பிரச்சாரத்தின் முன் புலிகளின் ஆஸ்தானக் கவிஞரான புதுவை ரத்தின துரையே பிச்சைதான் வாங்கவேண்டும்.

மேற்கூறிய கவித்துவச் சிறப்பு எதுவுமில்லை. திருக்குறளின் வடிவத்தை பிரதிபண்ணி கவிதை பண்ணும் இவ்வுக்தி மிகவும் மலினமானதும் இலகுவானதுமான முயற்சி. வழமையாக பாடசாலை மாணவர்கள் பாலியல் வசை மொழிகளை இதே யுத்தியைப் பயன்படுத்தி உருவாக்குவதுண்டு. இதற்கு நல்ல உதாரணம்:

ஏவ்வோழ் ஓழ்த்தார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை
கள்ளோழ் ஓழ்த்தாருக்கு

எட்டாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையான தமிழ்ப் புலமையுள்ள எந்தவொரு மாணவருமே இந்த வகையில் கவிதை கட்டமுடியும். இப்பருவ மாணவர்களையே புலிகளும் தங்களது ஆட்சேர்ப்புக்கு இலக்கு வைப்பதால்தான் முருகையனின் தற்கொடை கவிதை புலிகளுக்கு அற்புதமான பிரச்சார முத்து.

முருகையன் யாழ்ப்பாண சனத்தொகையில் 50 வீதமான ஆதிக்க வேளாள சாதியைச் சேர்ந்தவர். அதிலும் சைவ உணவு மட்டுமே உண்ணும் சாதியின் உட்பிரிவைச் சேர்ந்தவர். ஈழத்தமிழரின் அதியுச்ச கல்வி கலாச்சார நிறுவனமான  யாழ் பல்கலைக்கழகத்தின் முது துணைப்பதிவாளராக இருந்துகொண்டு தன்னுடைய ஐம்பதுகளின் இறுதியில் பாதி நரைத்த தாடி மீதி கவிஞன் நாடகாசிரியன் என்கிற படிமங்களோடும் யாழ் பல்கலைக்கழகத்தில் அதிகாரத்திலிருக்கிற பெரும்பாலானோர் மாணவன் மாணவிகளுடன் ஈடுபடுகின்ற பாலியல் லீலைகளில் சம்பந்தப்படாத நல்ல மனிதர் என்ற பெயரோடும் ‘தற்கொடை’ எழுதுகிறபோது இக்கவிதையின் உச்ச பிரச்சார பயன்பாடு சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

Selviபுலிகளுக்காக முருகையன் எழுதிய இன்னொரு பிரச்சாரப் படைப்பு உயிர்த்த மனிதர் கூத்து என்கிற நாடகம். விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளனான க. சிதம்பரநாதனோடு சேர்ந்து கூட்டு முயற்சியாக இதனை எழுதினார். நாடகத்துறையில் தனக்குப் போட்டியாக இருந்த செல்வி புலிகளால் கொல்லப்பட்டதில் சிதம்பரநாதனுடைய பங்களிப்பும் இருந்திருக்கிறது. சிதம்பரநாதனுடைய முன்னைநாள் மேலாளரான அதிபர் ஆனந்தராஜா புலிகளாலால் கொல்லப்பட்டதில் சிதம்பரநாதனுடைய பங்களிப்பும் இருந்ததான ஒரு குற்றச்சாட்டும் உண்டு. உயிர்த்த மனிதரின் கூத்து பிரதியை வாசித்துப் பார்த்தால் பிரச்சார அம்சம் மட்டும் மேலோங்கும் மிகச்சுமாரானது என்பது புரியும். விடுதலைப் புலிகளின் ஆணைப்பிரகாரம் (Commissioned to)    எழுதப்பட்ட நாடகம் போலவேயுள்ளது.

ஸ்ராலின் போன்ற ஒரு கொடுங்கோலனை மிகச் சரியாகவே வெறுத்த மகத்தான ரூஷ்ய பெண்கவிக்குக்கூட அவருடைய மகன் “குலாக்” கொடுஞ்சிறையில் வதைக்கப்பட்ட போது ஸ்ராலினைப் போற்றிப் புகழ்ந்து கவிதை எழுத வேண்டியிருந்தது. ஆனால் புலிகளுக்குச் சேவகம் செய்ய வேண்டிய எந்த நெருக்கடிகளும் முருகையனுக்கு இருந்ததில்லை. ஏ. ஜே.கனகரட்னா போன்ற உன்னத மனிதர்கள் புலிகள் பற்றிய மிகத்தெளிவான விமர்சனங்களையும் சிந்தனைகளையும் தங்களுக்கு மிக நெருக்கமானவர்களிடமே பகிர்ந்து கொண்டு இதே யாழ்ப்பாணத்தில் கௌரவம் அறம்சார் வீரம் நேர்மையோடு வாழ்ந்திருக்கிறார்கள்.

“ஊருக்குத்தானடி உபதேசம் உனக்கல்லடி கண்ணே” என்பதற்கிணங்க ஒரு Hypocrite ஆக இயங்கி புலிகளின் பாசிசத்தை நியாயப்படுத்தி புலிகளின் அனுதாபிகளாகவும் புலிகளின் பிரச்சாரகர்களாகவும் செயற்பட்ட பேரா. சிவத்தம்பி மு. பொன்னம்பலம், சு. வில்வரத்தினம் போன்றவர்களின் அணியிலேயே முருகையனும் வருகிறார். முருகையனுக்கும் மேற்கூறியவர்களுக்கும் பிரபாகரனுடைய போராட்டத்திற்குப் “பதமான” பதின்ம வயதுக் குழந்தைகள் இருந்தார்கள். இவர்கள் அனைவருமே புலிகளின் பிரச்சாரத்துக்கு ஆட்பட்டு தங்களது குழந்தைகள் புலிகளில் இணையக்கூடாது என்பதற்காக அவர்களை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து கூட்டிவந்து கொழும்பு சென்னை முதலிய இடங்களில் வைத்து வளர்த்து சிறந்த பல்கலைக்கழக கல்வி பெறுவதை உறுதிப்படுத்தினார்கள். முருகையனுடைய பெண் திருமணமாகி கொழும்பில் சந்தோசமான குடும்ப வாழ்விலிருக்கிறார். முருகையனுடைய பையன் நிரந்தரமான ஒரு உளநோயாளி. ஆம் இது “போராட்டத்தில்” விலக்குப்பெறுவதற்கான நியாயத்தை வழங்குகிறது.

ஆனால் மறுபக்கத்தில் ஒரு உளப்பாதிப்புள்ள மகனின் தந்தையான முருகையனுக்கு என்ன குறைபாடுகள் இருந்தாலும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை எவ்வளவு அருமை பெருமையாகச் சீராட்டி வளர்ப்பார்கள் என்பது சொல்லிக்கொடுத்துத் தெரிய வேண்டியதில்லை. அப்படிப்பட்ட முருகையன் மற்றவர்களுடைய குழந்தைகளை ஒரு தனி மனிதனின் நலனுக்காக நடத்தப்பட்ட பாசிசப் போராட்டத்திற்கு தாரை வார்த்துக் கொடுபடுவதற்காக பிரச்சாரம் செய்ததை புரிந்துகொள்வது எவ்வாறு? (முருகையனும் ஒரு உளநோயாளி. அவ்வப்போது நோய் முற்றுகிறபோது சிகிச்சை இளைப்பாறலுக்குச் சென்றுவிட்டு மீளவும் தேறி சித்த சுவாதீனமுள்ள மனிதராக மீண்டு வருகின்ற அளவில் தன் நோயை அவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்)

இந்த இடத்தில்தான் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஒரு மாயையிலிருந்தாலும் நியாயமானதாக நம்பியவரும் முருகையனைப் போன்ற hypocrite அல்லாதவருமான நேர்மையான மனிதனும் கவிஞரும் சொல்லப்பட்ட தமிழாசிரியருமான பண்டிதர் பரந்தாமன் வருகிறார். பகுத்தறிவுத் தந்தை என வர்ணிக்கப்படும் தென்புலோலியூர் கந்த முருகேசனார் இவருடைய குரு.  ஹாட்லிக்கல்லூரியில் நான் படித்த காலப்பகுதியில் இவர் ஆசிரியராக இருந்தாலும் இவரிடத்தில் தமிழ் படித்திருக்ககூடிய பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை.

இரண்டாம் ஈழப்போர் தொடங்கிய தொண்ணூறுகளில் தன்னுடைய நாற்பதுகளிலிருந்த பண்டிதர் ஆசிரியர் வேலையைவிட்டு விலகி முழுநேர உறுப்பினராக சீருடையணிந்து புலிகளில் இணைந்தார். சங்க காலக் கவிதைகளில் ஒரு அதிபதியான பரந்தாமனின் பொற்காலமும் சங்ககாலத்திலேயே இருந்தது. விடுதலைப் புலிகளின் பொற்காலமான தொண்ணூறுகளில் புராதன சங்ககாலம் “தமிழீழத்தில்” re enact பண்ணப்படுவதாக  ஒரு குழந்தையின் முகச்சாயலைக் கொண்டிருந்த பண்டிதர் உண்மையிலேயே நம்பினார். சங்ககாலத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்த பண்டிதர் சங்ககால மொழியையும் பதங்களையும் கொண்டு பிரச்சாரமில்லாத சில நல்ல கவிதைகளையும் எழுதியுள்ளார். பண்டிதர் பரந்தாமனுடைய மகனும் வேறொரு பிரிவில் எங்கள் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அவனும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளில் போய்ச் சேர்ந்தான். மகன் புலிகளில் இணைவதை பண்டிதர் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊக்குவித்திருந்தார். அதுமட்டுமின்றி தன் மகன் இணைந்ததை மிகப்பெருமையாகச் சொல்லியும் திரிந்தார். புலிகள் யாழை விட்டு வன்னிக்குச் சென்றபோது பண்டிதரும் வன்னிக்குப் போனார். இவ்வாண்டில் புலிகளுக்கும் இராணுவத்திற்குமிடையிலான இறுதிச் சமரொன்றின் போது பண்டிதர் புதுக்குடியிருப்பில் தள்ளாத வயதிலும் போரிட்டு மடிந்தார். அவருக்கு நெற்றியிலோ நெஞ்சிலோதான் சன்னம் பாய்ந்திருக்கும் என்பதில் எனக்கு எள்ளவும் சந்தேகம் இல்லை.

பின்வருவது பண்டிதரின் நல்ல கவிதையொன்று.

நல்லையல்லை நெடுவெண்ணிலவே

இல்லும் இழந்தனம் ஊரும் இழந்தனம்
ஏல்லாம் இழந்தே ஏதிலியர் ஆனோம்
வேற்றூர் தன்னில் வெய்யிலுக்கொதுங்கல்
போற்றெருவோரம் புளியோ வேம்போ
ஆலோ அரசோ அருநிழல் தேடி
ஓலை மறைப்பில் உழலும் வாழ்க்கை
ஒழியுநாள் வருமோ?
முன்னாள் எம்மூர் உழுது வித்திய பழனச் செந்நெல்
அலைகடற் படுத்த விளைமீன் குழம்பொடு
ஆர உண்டே மூரல் முறுவலர்
சேர இருந்து
திங்கள் சொரிந்த
பாலொழிப் பரப்பில்
மாலைத் தென்றல்
முல்லை நறுமணம் முகந்து வீச
மேனி சிலிர்ப்ப இன்பில் மிதந்த
எழில் வாழ்வு கழிந்தது மாதோ
இன்னாள் ஏர்க்களம் யாவும் போர்க்களம் ஆன
வாரியிடையே வலைஞர் செல்லார்
குயிலும் கோழியும் கூவல் மறந்தன
கிள்ளை மழலையும் கேளா நல் ஆன்
கன்று துள்ளா கறவை சுரவா
எல்லாம் அழுக்காறுடையான் உள்ளம் போல்
புல்லென்றாகிப் போன
யாமோ கடுவெயில் அருவழி நெடுந்தொலை ஏகி
கான விறகு கட்டி விற்கும்
அல்லல் வாழ்க்கையே ஆனோம்
இங்ஙன் சிறுவர் மகிழார் இளையோர் நயவார்
பாடுநர் நோக்கார் பகையறக் களத்தில்
ஆடுநர் வேண்டார் நீடொழி பரப்பி
மெல்ல வானில் வருகுவை
நல்லை அல்லை நெடுவெண்ணிலவே

பண்டிதரோடு முருகையன் வகையறாக்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.

முருகையன் யூன் 27 ல் கொழும்பில் இறந்தபோது உடனடியயாக அவரைப் போற்றிப் புகழ்ந்து அஞ்சலி அறிக்கை விட்டவர்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவர். தேவானந்தாவை பல தடவைகள் கொல்ல முயன்ற புலிகள் குறைந்த பட்சம் இரு தடவைகளேனும் பெண் தற்கொலைதாரிகளைப் பயன்படுத்தி அவரைக்கொல்ல முயன்றுள்ளனர். தேவானந்தாவோ தற்கொலைக் குண்டுதாரிகளை நியாயப்படுத்தியும் பிரச்சாரப்படுத்தியும் கவிதை எழுதிய முருகையனை போற்றிப் புகழ்ந்ததானது பெருந்தன்மையாலோ அறியாமையாலோ அல்ல. முருகையன் இறந்து சரியாக ஆறு நாட்களின் பின் புலிக் காய்ச்சலிலிருந்து மெல்ல மெல்ல மீண்டுவரும் யாழ் பல்கலைக்கழகத்துள் சண்டை சச்சரவு இல்லாமல் நுழைவதற்கு தேவானந்தாவுக்கு முருகையனை போற்ற வேண்டியிருந்தது. மேலும் இது வாக்குப்பெறுவதற்கான ஒரு மலினமான அரசியல் நடவடிக்கையும் கூட. மறைத்தும் மறந்தும் கடந்து செல்லுதல் அல்ல reconciliation என்பதை தேவானந்தா உணரவேண்டும்.

40 களில் ஈழத்து நவீன கவிதை மஹாகவியுடன் தொடங்கியது. மஹாகவி முதல் தலைமுறைக்கவிஞர். 50 களிலிருந்து கவிதை எழுதிவரும் நீலாவணனும் முருகையனும் இரண்டாவது தலைமுறைக் கவிஞர்கள். (பார்க்க: பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் என்ற நூலின் முன்னுரை). நவீன ஈழத்துக் கவிதையின் பிதாமகரான மஹாகவியின் கவிதைகள் அசலானவையும் தரத்தில் மிக உயர்வானவையும் ஆகும். இவருக்குப் பின்னர் வந்த நீலாவணனும் முருகையனும் பல சுமாரான கவிதைகளை எழுதியுள்ள போதும் நீலாவணனின் சிறந்த கவிதைகள் முருகையனின் சிறந்த கவிதைகளைவிட தரத்தில் உயர்வானவைகள். முருகையனில் அசலைவிட நகல்தான் அதிகமாக இருக்கிறது.

Arnold_Weskerமுருகையனின் படைப்புக்களில் வேறொருவரின் படைப்பை தழுவி அல்லது மொழிபெயர்த்து அல்லது வடிவம் மாற்றி எழுதியiவைதான் சிறப்பாக இருக்கின்றன. ஆனோல்ட் வெஸ்கர் என்ற பிரித்தானிய நாடகாசிரியரின் உருவகக்கதையொன்றை தழுவியே ஆதி பகவன் என்ற நெடுங்கவிதையை எழுதியுள்ளார். ஆதிக் கிரேக்க நாடகாசிரியரான Sophocles இனது நாடகங்களான  Antigone, Oedipus Rex  என்பவற்றை  தழுவி குனிந்த தலை தந்தையின் கூற்றுவன் ஆகிய நாடகங்களை எழுதியுள்ளார். Bertolt Brecht  இன் Life of Galileo வை தழுவி கலிலியோவை எழுதியுள்ளார். அன்ரன் செக்கோவின் Enemies என்ற சிறுகதையைத்தழுவி இருதுருவங்கள் என்ற நாடகத்தை எழுதியுள்ளார். Terry Eagleton எழுதிய The Illusions of Post Modernism என்ற கட்டுரையை முருகையன் முதலாளியத்தின் மறுபக்கம் என்ற தலைப்பில் மொழிபெயர்த்துவிட்டு  “பின் நவீனத்துவம் மாயைகளைக் கட்டவிழ்த்தல்” என்ற புத்தகத்தில் தனது கட்டுரையாகப் போடுகிறார். 

தான் சுயமாக எழுதிய நாடகங்களோடு தான் மொழிபெயர்த்த நாடகங்களையும்  தான் எழுதிய நாடகம் போன்ற மாயையோடு சேர்த்துத் தொகுக்கிறார். முருகையனுடைய அகராதியில் தழுவலுக்கும் மொழிபெயர்ப்புக்கும் வித்தியாசமில்லை. மொழிபெயர்ப்பு சரியாக செய்ய முடியாவிட்டால் தழுவல் என்றும் தழுவல் திருட்டல்லவா என்ற குற்றச்சாட்டு வந்தால் மொழிபெயர்ப்புத்தான் என்றும் சொல்லித்தப்பலாம். உண்மையில் இவை அப்பட்டமான இலக்கியத் திருட்டுக்கள். ஐரோப்பிய மொழியொன்றில் இந்தத்திருவிளையாடல்களை முருகையன் செய்திருப்பாராயின் ரெறி ஈகிள்ரனின் பதிப்பாளர் முருகையன் மீது வழக்குத்தாக்கல் செய்திருப்பார்.

முருகையனின் சொந்த நாடகங்கள் மிகச்சுமாரானவையாக இருக்கின்றன. அதிலும் ‘வந்துசேர்ந்தன’ போன்ற நாடகங்கள் வேடிக்கைக்குரிய வகையில் பாடசாலை மாணவர்கள் எழுதுகின்ற தரத்தில் இருக்கின்றன. செய்யுளில் (Verse)  எழுதிவிட்டால் மட்டும் அது நல்ல நாடகமாகிவிடாது. ஆனால் நல்ல நாடகம் நாடகப்பிரதி பற்றிய புரிதல் இல்லாத ஒருவருக்கு செய்யுளில் எழுதப்பட்டது நல்ல நாடகப்பிரதி என்ற பிரமையைக் கொடுக்கக் கூடியது. முருகையனின் கவிதைத் தொகுதிகளிலுள்ள 80 வீதமான கவிதைகள் மிகச் சுமாரானவைவும் தனித்தன்மை இல்லாதவையும். ‘அகிலத்தின் மையங்கள்’ எழுதிய முருகையனால்தான் மேற்கூறிய 80 வீதமான கவிதைகளும் எழுதப்பட வேண்டுமல்ல.  மேமன் கவி அப்துல் ரகுமான் போன்ற மூன்றாந்தரமான ஒரு கவிஞராலோ சாதாரணமான தமிழ்ப் புலமையுள்ள ஒருவராலோ மேற்கூறிய 80 வீதமான கவிதைகளை எழுதமுடியும்.  முருகையனிடம் சொந்தச் சரக்கு இல்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

துரதிஸ்ட வசமாக மஹாகவியும் நீலாவணனும் தங்களுடைய 44 ம் வயதிலேயே மரணமடைந்துவிட்டதால் மூத்த கவிஞர் என்ற பதவி முருகையனுக்கு போட்டியின்றிக் கிடைத்தது. அவரது கவிதைகளின் தரத்தின் அடிப்படையிலன்றி வயது ஆங்கில மொழிப்புலமை அதிகாரம் மிக்க பதவிகளிலிருந்தமை என்பனவே முன்னணிக் கவிஞர் என்ற அடைமொழியை முருகையன் அடையக்காரணமாக இருந்தது. இந்த உண்மையை ஏற்றுக்கொண்டால் தங்களின் உக்கிப்போன கோவணங்களின் நாறல் அம்பலத்திற்கு வந்துவிடும் என்பதால் ‘ஒறிஜினல்’  பேராசிரியர்களான சிவத்தம்பியும் சிவசேகரமும் முருகையனுக்கு எழுதிய அஞ்சலிகளில் மகா பொய்கள் சொல்லியுள்ளனர். சிவத்தம்பி கைலாசபதியோடு சேர்ந்து மஹாகவியை இருட்டடிப்புச் செய்தவர். சிவசேகரம் மஹாகவியை இருட்டடிப்புச் செய்த கைலாசபதிக்கு வக்காலத்து வாங்கியவர்.

எந்தவொரு அசலான கலைஞனும் ஒரு சித்தாந்துத்துக்குள் (Doctrine) சிறைப்பட்டுப் போகமாட்டான். மார்க்ஸியம் ஒரு சித்தாந்தம். இதன் காரணமாகத்தான் மஹாகவியும் நீலாவணனும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற பிரச்சார இலக்கியத்தை முதன்மைப்படுத்திய கிளப் (club)களில் தங்களை இணைக்கவில்லை. மேலும் அசலான கலைஞர்கள் என்பதால் கைலாசபதி சிவத்தம்பி போன்ற Literary cognition  (இலக்கிய ஞானம்) ஐ  அரிதாக உடையவர்களிடம் சேவகம் செய்து இலக்கிய அந்தஸ்து பெறவேண்டிய தேவையும் அவர்களுக்கு இருந்ததில்லை.

அடிப்படையில் மஹாகவியும் நீலாவணனும் முற்போக்காளராய் இருந்தார்களே தவிர பிற்போக்காளராயும் வலதுசாரிகளாயும் இருக்கவில்லை. நகல் கவிஞரான முருகையனோ கைலாசபதி சிவத்தம்பிக்கு சேவகம் செய்தார். மார்க்ஸியக் கிளப்பின் சீன சார்பு chapter ஆன தேசிய கலை இலக்கியப்பேரவையின் உறுப்பினர் முருகையன். இந்த மார்க்ஸியக் கிளப் களுக்கும் சாயிபாபா கிளப் மற்றும் மோட்டார் வண்டிக் கிளப்புக்களுக்கும் (Bikie clubs) பெரிய வித்தியாசங்களில்லை. இவ்வகையான இலக்கிய மார்க்ஸிய கிளப்புக்கள்தாம் குழுமனப்பான்மை முதுகுசொறிதல் காரணமாக உண்மையான இலக்கியத்தை சீரளிப்பவர்கள்.

இந்த அடிப்படையிலேயே சிவத்த தம்பியும் சிவத்த சேகரமும் முருகையனுக்கு எழுதிய புனைவுசார் அஞ்சலிகளை புரிந்துகொள்ள முடியும். சிவத்த சேகரத்தார் “குறுகிய தமிழ்த் தேசியவாதத்திற்கு பலியாகாமல் அவரால் முழுமையான ஒரு மனிதநேயவாதியாக விருத்தியடைய முடிந்தது.“ என்று முருகையனைச் சொல்கிறார். தேசிய கலை இலக்கியப்பேரவை பதிப்பித்த முருகையனின் கவிதை தொகுப்பில் “தற்கொடை” என்ற அவரது கவிதையும் முருகையனின் நாடகங்களின் தொகுப்பு நூலில் “உயிர்த்த மனிதர் கூத்து” என்ற புலிப்பிரச்சார நாடகமும் தவிர்க்கப்பட்டு உத்தியோக பூர்வமாக சுயதணிக்கை செய்யப்பட்ட பின்னர் சேகரத்தார் நம் காதில் பூச்சுற்றுகிறார். முருகையன் குறுகிய தமிழ்த் தேசியவாதத்துக்குப் பலியாகியிருந்தாலும் மன்னிக்கலாம். முருகையன் அதைவிடக் கேவலமாகிப்போய் புலிப் பாசிஸத்துக்கல்லவா பலியாகியிருக்கிறார். சேகரத்தார் மேலும் உன்மத்தம் கொண்டு “முருகையனுடைய கவிதைகள் ஈழத்துத் தமிழ்க் கவிதை தனது உச்சங்களை எட்டிய காலப் பகுதியில் எழுதப்பட்டவை. ஈழத்துக் கவிதையை அதன் உச்சங்கட்குக் கொண்டு சென்றவற்றுள் அவரது கவிதைகளுக்கு ஒரு பெரும் பங்குண்டு. அவற்றின் சிறப்பை அறிந்ததனாலேயே பேராசிரியர் கைலாசபதி அவரைக் கவிஞர்கட்குக் கவிஞர் என்று கூற முற்பட்டார். அக்கூற்று இன்று வரையுங் கூட செல்லுபடியானது”  என்கிறார். இதைவிட தம்பியும் சேகரமும் முருகையனை பாரதிதாசனுக்கு ஒத்தவராக அல்லது அவரையும் மீறியவராகக்காட்ட முற்பட தம்பியோ முருகையனைக் கொண்டுபோய் மஹாகவிக்கு அருகில் வைக்க முற்பட்டிருக்கிறார். நவீன தமிழிலக்கியத்தில் மஹாகவி ஒரு இரத்தினக்கல் என்றால் முருகையன் ஒரு கூழாங்கல்.

Sergei_Mikhalkovஇந்த ஆகஸ்டு 27 ம் திகதி சேர்ஜி மிகல்கோவ் என்ற ரூஷ்ய கவிஞர் இறந்தார். அவர் கிரெம்ளினில் ஆயுட்கால ஆஸ்தான கவி. முதலில் அவர் சோவியத் தேசிய கீதத்துக்கு இரண்டு வகையான பாடல்களை எழுதினார். ஸ்ராலின் உயிரோடு இருந்த போது ஸ்ராலினை மகிமைப்படுத்தி எழுதியது ஒன்று. ஸ்ராலின் இறந்தபின்னர் ஸ்ராலினை புறக்கணித்து எழுதியது மற்றது. சோவியத் உடைந்த பின்னரும் ரூஷ்ய அதிபர் பூட்டினின் கட்டளைக்கிணங்க அதே பழைய சோவியத் இசைக்கு மூன்றாவது முறையாகவும் ரூஷ்ய தேசிய கீதத்துக்கான பாடலை எழுதினார். அவர் சேவகம் செய்த எல்லா ஆட்சிகளும் அவருக்கு பதக்கங்களை வழங்கின. மிகல்கோவ் இறப்பதற்கு சரியாக 2 மாதங்களுக்கு முதல் யூன் 27 ல் இறந்த முருகையனோ மிகல்கோவையே விஞ்சிய சேவக்காரன். ருஷ்ய ஆட்சிகளுக்கு சேவகம் செய்த மிகல்கோவ் ஒருபோதும் ரூஷ்யர்களின் எதிரிகளான ஜெர்மானிய நாசிகளுக்கு சேவகம் செய்யவில்லை. முருகையன் அதற்கொப்பானதை செய்திருக்கிறார்.

முருகையன் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முதலே பிரபாகரன் மண்டையில் போடப்பட்டு விட்டதால் முருகையனுக்கு மாமனிதர் பட்டம் கிடைக்கவில்லை. ஆனால் இலங்கை அரசின் அதியுயர் இலக்கிய விருதான சாகித்ய ரத்னா விருது (இடது சாரிக்கட்சிகள் கூட்டணி ஆட்சியிலிருந்தபோது முருகையனின் இடதுசாரித் தொடர்பாலேயே இவ்விருது)  முருகையனுக்கு 2007 ல் வழங்கப்பட்டபோது அவர் அதனை ஏற்றுக்கொண்டார். விடுதலைப் புலிகளையும் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகளையும் நியாயப்படுத்தி ‘தற்கொடை’ எழுதிய முருகையனுக்கு இலங்கை அரசு இவ்விருதைக் கொடுத்திருக்கிறது. (இலங்கையின் புலனாய்வுப்பிரிவினர் 9 மணியிலிருந்து 5 மணி வரையான பகல்வேளைகளில் மட்டுமே தொழில் செய்வார்கள் என்று சக கவிஞர் ஒருவர் என்னிடம் ஒருமுறை சொல்லியிருக்கிறார். சிங்களவர்களுக்கு மேல் வீடு இல்லை என்று பிரபாகரனின் மதியுரைஞர் இலண்டன் சீமையில் பேசியிருக்கிறார்.)

ஆப்கானிஸ்தானில் நவம்பர்; 7 ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் – ஆப்கன் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று ஆப்கன் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெற்றதாக ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற குழு தெரிவித்திருந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ஆகஸ்ட் தேர்தலின்  ஆரம்ப கட்ட முடிவுகளில் ஹமீட் கர்சாய்க்கு 55 வீத வாக்குகள் கிடைத்ததாகவும்,  அவரின் பிரதான எதிர் வேட்பாளரான அப்துல்லாவுக்கு 28 சதவீத வாக்குகள் கிடைத்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் 210 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை கணக்கில் எடுக்கப்படக் கூடாது என்று ஐ நா அங்கீகாரம் கொண்ட தேர்தல் புகார் அமைப்பு உத்திரவிட்டதன் பிறகு நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் கர்சாய் பெற்ற மொத்த வாக்குகளில் எண்ணிக்கை 50 வீதத்தை விட குறைவாகவே இருந்தது.  இதனால் மறு வாக்கு எண்ணிக்கைகு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆப்கான் தேர்தல் எந்த அளவுக்கு நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற்றது என்பது தொடர்பாக சர்வதேச சந்தேகங்களும் அழுத்தங்களும் அதிகமான நிலையில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்ற இந்த அறிவிப்பு வந்துள்ளது.