இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்குக் காரணமாக இருந்த இனமுரண்பாட்டுக்கு தீர்வு காணாதவரை நீண்டகால உறுதித்தன்மையை தக்க வைக்கவோ மூலதனத்தை கவரவோ முடியாது என உலக வங்கி அறிக்கை தெரிவிக்கின்றது. மாநிலங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதே ஏற்புடைய செயன்முறையாக இருக்கும் என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள அரிய சூழல் ஏற்பட்டு உள்ளது என்று தெரிவிக்கும் உலக வங்கி அறிக்கை இச்சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி தமிழ் மக்களுடைய அரசியல் குற்றச்சாட்டுக்களை திருப்திப்படுத்துகின்ற தீர்வை முன் வைக்க வேண்டும் என்று அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
குறுகிய காலத்திலிருந்து இடைக்கால கட்ட பொருளாதார வளர்ச்சி சாதகமானதாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள உலகவங்கி அறிக்கை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து உலகு வெளியேவருவது அதற்கு உறுதுணையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. உல்லாசப் பயணத்துறையிலும் குறிப்பிடத்தக்க உயர்ச்சியையும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.
போருக்குப் பின்னான இலங்கைப் பொருளாதாரம் வளர்ச்சியைக் கொண்டிருந்தாலும் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளுக்குத் தீர்வு காணப்படாவிட்டால் மீண்டும் இனமுரண்பாடுகள் தலைதுக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் உலக வங்கி அறிக்கை எச்சரித்துள்ளது.
மாநிலங்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்தை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற ஆலோசணையையும் உலக வங்கி தனது அறிக்கையில் வழங்கி உள்ளது. அடுத்த தேர்தலுக்கு பின்னரேயே அதிகாரப் பரவலாக்கம் பற்றி அரசு சிந்திக்கும் என அரச தரப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.