இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டுத் தீர்வொன்றைப் பெற்றுத் தருவாரென்று பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதி வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியதும் எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை குறித்த ஊழியர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அறிவித்த அமைச்சர் பெளஸி, அதுவரை சட்டப்படி வேலைசெய்யும் போராட்டத்தைக் கைவிடுமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களைக் கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஜே. வி. பி. உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்வி யொன்றுக்கு அமைச்சர் பெளஸி பதில் அளித்தார்.
தற்போது சட்டப்படி வேலை செய்யும் ஊழியர்களுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை விளக்கியுள்ளதாகக் கூறிய அவர், ஊழியர்களின் தொழிற்சங்க அலுவலகம் தாக்குதலுக்கு இலக்கானதாகத் தெரிவிக்கப்பட்டதாகவும் அது குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மேலும் தெரிவித்தார்.