கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

நிவாரணக் கிராமங்களில் நடமாடும் பாடசாலைகள் – இடம்பெயர் மாணவர் நலன்கருதி அரசாங்கம் நடவடிக்கை

college1.jpgமுல்லைத் தீவில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்தவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள வவுனியா நிவாரணக் கிராமங்களில் மாணவர்களின் நலன் கருதி நடமாடும் பாடசாலைகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த கிராமங்களில் தங்கியுள்ள மாணவர்கள் கல்வி கற்கத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் ஏற்கனவே செய்து கொடுத்துள்ள போதிலும் அடுத்த வாரம் நடமாடும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் சுமார் 1200 மாணவர்களும் 35 ஆசிரியர்களும் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், இந்த ஆசிரியர்களை பயன்படுத்தியே நடமாடும் பாடசாலைகளை நிவாரணக் கிராமங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். முல்லைத்தீவு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உடனடியாகக் கப்பல் மூலம் அனுப்பி வைக்க அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இங்கு அமைச்சர் மேலும் தகவல் தருகையில்:-

இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் வருகை தந்துள்ளனர். இவர்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 13 நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மக்களுக்கு தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது. இங்குள்ள மக்களின் சுகாதார துறையை மேம்படுத்தும் வகையில் சுகாதார மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதற்குத் தேவையான சகல வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் பொது மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு முகாம்களுக்கும் அவ்வப்போது விஜயம் செய்து தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படுகிறது.

மாத்தையா மகிந்தவும் தம்பி பிரபாவும் ஆடும் சிங்கம் புலி ஆட்டத்தின் மரணப் பொறியில் வன்னி மக்கள் !!! : த ஜெயபாலன்

Pranab_MukherjeeJohn_Holmes_UNYogaradnam_Yogiவன்னியில் சிக்குண்ட மக்களை வெளியேற்றத் தாங்கள் தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவுத்தறைச் செயலாளர் பிரணர்ப் முகர்ஜி இந்தியப் பாராளுமன்றத்தில் நேற்று (பெப் 18ல்) தெரிவித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாது இந்த அவல நிலைக்கு புலிகளே காரணம் என்று வேறு குற்றமும் சாட்டி உள்ளார். இலங்கை அரசுக்கு பின்னால் இந்த யுத்தத்தை இந்தியா நடாத்துகிறது என்பதை உறுதிப்படுத்துவது போல் பிரணர்ப் முகர்ஜியின் பாராளுமன்ற உரை அமைந்திருந்தது. யுத்த நிறுத்தத்தை இந்தியா கோராது என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதற்கிடையே புலம்பெயர் நாடுகளில் உள்ள இந்தியத் து}தரகங்களுக்கு முன்னால் ‘இலங்கை அரசுக்கு இந்தியா உதவுவதைக் கண்டித்து’ ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகம் கொந்தளித்து உள்ளது. தமிழ் நாட்டில் மூன்றாம் நபரொருவரும் தீக்குழிப்பு முயற்சியில் ஈடுபட்டு உயிருக்காகப் போராடிக் கொண்டு உள்ளார். பிரணர்ப் முகர்ஜியின் உரை மக்களது போராட்டங்களை முற்று முழுவதுமாகப் புறக்கணித்து இலங்கை அரசுக்கு தனது முழுமையான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.

இலங்கை பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் கெகலிய ரம்புக்வல இந்திய வெளியுறவுத்துறைச் செயலரின் உதவியை வரவேற்று இருப்பதாக பிபிசி செய்தி வெளியட்டு உள்ளது. இலங்கை அரசாங்கத்தின் செயற்திட்டத்திற்குள் அவ்வுதவியை வரவேற்பதாக கெகலிய ரம்புக்வல தெரிவித்து உள்ளார்.

பிரணர்ப் முகர்ஜியின் கருத்துப்படவே யுஎன் செயலாளர் நாயகமும் கருத்து வெளியிட்டு உள்ளார். யுத்தத்திற்குள் சிக்குண்ட மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதே முக்கிய  அம்சம் என அவர் தெரிவித்து உள்ளார். யுஎன் உள்ளுர் பணியாளர்களை புலிகள் தடுத்து வைத்திருப்பதாகவும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியை விட்டு வெளியேறுபவர்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்கிறார்கள் என்றும் யுஎன் பெப் 16ல் குற்றம்சாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே யுஎன் பிதிரிநிதி ஜோன் ஹோல்ம்ஸ் இன்று (பெப் 19) இலங்கை செல்கிறார். பெப் 21 வரை இலங்கையில் தங்கவுள்ள யுஎன் மனிதாபிமான செயற்பிரிவின் அவசர உதவி இணைப்பாளர் ஜோன் ஹோல்ம்ஸ் இலங்கை அரச பிரிதிநிதிகளையும் ஏனைய கட்சி பிரதிநிதிகளையும் இலங்கையில் உள்ள யுஎன் ஐசிஆர்சி பிரிதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார். மேலும் வவுனியாவில் இடம்பெயர்ந்துள்ள மக்களையும் சந்திகக உள்ளார்.

இந்தியா மற்றும் யுஎன் பிரிதிநிதிகள் இலங்கை அரசாங்கம் வன்னி மக்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதல்கள் மனித உரிமை மீறல்கள் பற்றி கண்டுகொள்ளாத போக்கையே கொண்டுள்ளனர். இலங்கை அரசு மீதான கண்டனங்கள் மேம்போக்கானதாகவே உள்ளது. இலங்கை அரசைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற வகையிலேயே செயற்படுகின்றன. இதில் இந்தியா காட்டும் அக்கறை என்பதும் அவர்களுடைய நலன் சார்ந்ததாகவே அமையும்.

புலிகளால் அண்மைக்காலமாக வெளியிடப்படும் அறிக்கைகள் உலகமே தங்களைத் தீர்த்துக்கட்ட கங்கணம் கட்டி நிற்பதாகக் குறிப்பிடுகின்றன. ”இன்றைக்கு உலக நாடுகள் எல்லாமே இந்த தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்து விட வேண்டும் என நினைக்கின்றன் குறிப்பாக தேசிய தலைவரை அழித்து விட வேண்டும் என நினைக்கின்றன.” என்று புலிகளின் போர் ஆய்வுமையப் பொறுப்பாளர் யோ செ யோகி பெப்ரவரி 18ல் குறிப்பிட்டு உள்ளார். அவர் மேலும் குறிப்பிடகையில் ”நாங்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது. உலகத்தின் மனசாட்சி என்பது உலகத்தின் மக்கள்தான். அந்த மக்களோடு பேசுவோம். அந்த மக்களுக்குத் தொடர்ந்து எங்கள் கருத்துகளைச் சொல்லி வைப்போம். அதன் மூலம் அரசுகளையும் அதன் எண்ணங்களையும் மாற்ற வைப்போம். ” என்றும் தெரிவித்து இருந்தார். யோ செ யோகியின் கூற்று ‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்பது போல் உள்ளது. ‘ஆயுதத்தை மட்டும் நம்பாதீர்கள்’ என்று பலரும் சொன்ன போது அவர்களையெல்லாம் தீர்த்துக் கட்டிவிட்டு இப்போது ‘பாசக் கயிறு’ தெரிந்தவுடன் மக்களுடன் பேசுவோம் என்று கதையளக்கிறார் யோகி.

தமிழர்களில் மிகப் பெரும்பான்மையினர் இலங்கை அரசின் மீது என்றுமே நம்பிக்கை வைத்தது கிடையாது. இலங்கை அரசு ஒரு பேரினவாத அரசு என்று அவர்கள் சரியாகவே அதனை அடையாளம் கண்டிருந்தனர். அந்த அரசு தமிழ் மக்களைக் கொல்லும் படுகொலை செய்யும் என்பதுவும் அவர்களுக்குப் புதிதல்ல. அதனால் தான் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு தங்கள் பங்களிப்பைத் தொடர்ச்சியாக வழங்கினர்.

ஆனால் இன்றைய வன்னிக் கொடுமையில் இனவாத அரசு புரிகின்ற கொடுமைகளுக்கு புலிகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உடந்தையாக உள்ளனர் என்பது மிகவும் கசப்பான உண்மையாகி உள்ளது. எந்த மக்களை வைத்து தங்களை வளர்த்து வளம்படுத்திக் கொண்டார்களோ அநத மக்களை அந்த மக்களின் பொது எதிரியின் முன் பணயம் வைத்து ஒரு யுத்தம் நடைபெறுகிறது. ஒரு கை விரலுக்குள் எண்ணக் கூடிய கிராமங்களைத் தவிர அனைத்து பகுதியையும் இழந்துவிட்டு 250000 மககளுள்ள பகுதிக்குள் யுத்தம் புரிந்து இழந்தவற்றை மீட்க முடியும் என்று கூறுவது பகற் கனவு.

தங்கள் ஆயுதங்களினால் சாதிக்க முடியாது போனதை 250 000 மக்களை வைத்து  அவர்களில் சில ஆயிரம் பேரைப் பலி கொடுத்து சாதிக்கலாம் என்று புலிகள் போடும் கணக்கு இலங்கை அரச படைகளின் இன அழிப்புக்கு உதவுவதைத் தவிர வேறு எதனையும் சாதிக்கப் போவதில்லை. ஏற்கனவே பேரினவாத அரசின் அடக்குமுறைகளாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை கொடுத்த புலிகளினதும் ஏனைய அமைப்புகளினதும் அரசியலின் பயனாகவும் தமிழ் மக்கள் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களைவிட்டு பெரும்தொகையில் வெளியேறி உள்ளனர். இன்று இடம்பெறும் இந்த அவலங்கள் எஞ்சியுள்ளவர்களையும் பலியாக்குவதற்கே வழிகோலப் போகின்றது.

வார்த்தைகளுள் அடக்க முடியாத அவலம் வன்னியில். கையறு நிலையில் இரத்த உறவுகள் துடிக்கின்றன. யார் உயிரிழந்தார்கள் யார் உயிருடன் உள்ளனர் என்று அறியாத ஓலங்கள். நிமிடத்திற்கு நிமிடம் உயிர்ப் போராட்டத்தில் வன்னி மக்கள் தவிக்கின்றனர். ‘எமராஜன்’ நடத்தும் வதைகூடத்திலும் இவ்வளவு கொடுமை கற்பனை செய்யப்பட்டு இருக்குமா என்பது சந்தேகமே. கைக்குழந்தைகள் மழலைகள் பெண்கள் வயோதிபர் என்ற எவ்வித வேறுபாடும் இன்றி வகைதொகையின்றி மக்கள் கொல்லப்படுகின்றனர். தினமும் நாற்பது பேர் வரை கொல்லப்படுவதாக யுஎன் மதிப்பிட்டு உள்ளது. இழப்புகள் இதனிலும் அதிகம் என்று அஞ்சப்படுகிறது.

யுத்தத்தால் ஏற்படும் நேரடிப் பாதிப்புகளுடன் இடம்பெயர்வினால் ஏற்படும் அதற்கே உரிய பிரச்சினைகளும் சேர்ந்து உள்ளது. மேலும் மருந்து உதவிகள் இன்மை நீர் உணவுத் தட்டுப்பாடு என்பன நிலைமையை மிகவும்  மோசமாக்கி உள்ளது. இரத்தப் போக்கை நிறுத்தவதற்கு அப்பால் எவ்வித சிக்ச்சையை மேற்கொள்வதற்கும் அங்கு மருந்தப் பொருட்களோ வசதிகளோ கிடையாது என அங்கு தமது உயிரையும் உத்தியோகத்தையும் பணயம் வைத்து 24 மணி நேரமும் பணியாற்றும் விரல் விட்டு எண்ணக் கூடிய மருத்துவ பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெப் 18 அன்று அரச படைகளின் செல் வீச்சில் 38 பேர் கொல்லப்பட்டதாக பிராந்திய சுகாதார அலுவலர் டொக்டர் துரைராஜா வரதராஜா அசோசியேடட் பிரஸ்ற்குத் தெரிவித்து உள்ளார். விடுதலைப் புலிகளின் ஊடகங்கள் வெவ்வேறு சம்பவங்களில் இன்று கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை 150 ற்கு மேல் என மதிப்பிடுகின்றன. ஒவ்வொரு நாள் ஆட்டத்திலும் கிறிக்கட் ஸ்கோர் போன்று மரணங்களின் எண்ணிக்கைகள் வெளியிடப்படுகிறது.

இரண்டு மூன்று கிராமங்களுக்குள் 250000 வரையான மக்கள் பல வாரங்களாக சிக்குண்டு உள்ளனர். கடைசியாக எப்போது அந்த மக்கள் நல்லுறக்கம் கொண்டார்கள் என்பது அவர்களுக்கு நினைவில் இருக்காது. இருக்க இடமில்லை மாற்றி உடுக்க  உடையில்லை உண்ண உணவில்லை குடிக்க நீரும் இல்லை. இவ்வளவு நெருக்கத்தில் வாழும் போதும் மழைகாலம் வேறு. நோய் பரவுவதற்கு மட்டும் குறைவு இல்லை. இந்த நோய்களினால் காயப்பட்ட பலர் அவயவங்களை இழக்கின்ற ஆபத்தும் உயிரிழக்கும் ஆபத்தும் அதிகரித்து உள்ளது.

சுனாமியால் ஏற்பட்ட இயற்கை அழிவில் இழந்ததில் இருந்து மீளு முன் இந்த மனிதர்களால் மகிந்த – பிரபாகரன் என்ற யுத்தப் பிரியர்களால் உருவாக்கப்பட்ட மரணப் பொறிக்குள் வன்னி மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இன்றைய இந்தக் கொடிய அவலம் வன்னி மக்களின் எதிர்காலத்தையும் இருள வைக்கப் போகின்றது. அன்புக்குரியவர்கள் கொல்லப்படுகின்றனர். குழந்தைகள் பெற்றோரை இழக்கின்றனர். பெற்றோர் குழந்தைகளை இழக்கின்றனர். உறவுகளை முற்றும் இழந்த அனாதைகளான சமூகம் ஒன்று எம்முன் உருவாகிக் கொண்டு இருக்கிறது. அந்த சமூகத்தில் பல நூற்றுக்கணக்கில் அவயவங்களை இழந்து ஊனமுற்றவர்களாக்கப்பட்டுக் கொண்டுள்ளனர். மழலைகள் முதல் மூத்தொர் வரை வயது பால் வேறுபாடின்றி உளவியல் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வன்னி மக்கள் மீள முடியாத அவல வாழ்வுக்குள் தள்ளப்படுக் கொண்டுள்ளனர். அதுவும் அவர்களின் பெயரிலேயே.

இந்த அவலத்தின் பிரதான குற்றவாளி யார்? துணைக் குற்றவாளி யார்? என்று நீதி விசாரணை மேற்கொள்ளவும் பட்டிமன்றம் நடத்தியும் எவ்வித பலனும் இல்லை. ஏனெனில் இந்த மக்களின் அவலம் பற்றி அந்த அரசியல் தலைமைகளுக்கு கிஞ்சித்தும் கரிசனை கிடையாது. சிங்கள மக்களின் அதிகாரத்தை தனது கைகளில் தக்க வைத்துக் கொள்ள மகிந்த மாத்தையா இந்த யுத்தத்தை நடாத்துகிறார். தமிழ் மக்களின் அதிகாரத்தை தான் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தம்பி பிரபா இந்தப் போராட்டத்தை தொடர்கிறார். இன்றைய சூழலில் ஒருவருடைய இருப்புக்கு மற்றையவரின் இருத்தல் இன்றியமையாதது. மகிந்தா பாதி பிரபா பாதி சேர்ந்து செய்த கலவை தான் இந்த வன்னி அவலம்.

இலங்கை அரசாங்கம் ஒரு பெளத்த பேரினவாத அரசாங்கம். அதன் இருத்தலுக்கு இனவாதம் மிக அவசியமான ஒன்றாகிவிட்டது. அதனை கடந்த அறுபது ஆண்டுகளாகப் பார்க்கலாம். பெளத்த பேரினவாதத்தின் ஒரு பக்க விளைவு தமிழர் விடுதலைக் கூட்டணியும் அதனைத் தொடர்ந்து புலியும். இலங்கை உட்பட சர்வதேச பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்க இன்று இலங்கை இனவாதத்தின் உச்சிக்குச் சென்று கொண்டிருக்கிறது. இலங்கை மக்களின் நாளாந்த வாழ்நிலைப் பிரச்சினைகள் இனவாதத்திற்குள் மூழ்கிப் போய்க் கிடக்கிறது. அதற்குள் மகிந்த மாத்தையாவும் தம்பி பிரபாவும் மட்டும் மூழ்கி அதிகார முத்தெடுக்க முயற்சிக்கிறார்கள்.

ஆகவே இலங்கையின் பேரினவாத அரசுக்கு எதிரான போரட்டத்தை முன்னெடுக்கவும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைமைத்துவத்தினால் இயலாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளது. இதன் அர்த்தம் ரிஎன்ஏ, ரியுஎல்எப், ஈபிடிபி ,ரிஎம்விபி என்பவற்றால் முடியும் என்பதல்ல. இவையெல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.

ஒரு சிறிய தேக்கம் ஏற்பட்டாலும் காலப் போக்கில் மக்கள் புதிய சக்திகளை இனம்கண்டு அவர்களின் தலைமையில் அணி திரள வாய்ப்பு ஏற்படும். அது ஒட்டு மொத்த இலங்கை மக்களுக்கான ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டமாகவும் அமையலாம். ஆகவே இன்று மிக அவசியமானது இந்த யுத்தம் நிறுத்தப்பட்டு மக்கள் அவலத்திற்குள் இருந்து மீள வேண்டும்.

100 சதுர கிலோ மீற்றருக்குள் புலிகள் முடக்கம்; படைகளால் புதுக்குடியிருப்பு சுற்றிவளைப்பு

udaya_nanayakkara_.jpgமுல்லைத் தீவில் புலிகள் தற்போது 100 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் முடக்கப்பட்டிருப்பதாக இராணு வப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவி த்தார்.

இராணுவத்தின் இரண்டு படையணிகளும், மூன்று படைப்பிரிவுகளும் புதுக்குடி யிருப்பை சுற்றிவளைத்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (18) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

மூன்றாம் படையணி புதுக்குடியிருப்பின் தெற்காகவும், நான்காம் படையணி தென்மேற்காகவும் முன்னேறிவரும் நிலையில், 53 ஆம் படைப் பிரிவினர் புதுக்குடியிருப்பு நகருக்கு 800 மீற்றர் தொலைவை நெருங்கி விட்டதாகவும் பிரிகேடியிர் நாணயக்கார தெரிவித்தார்.

 புலிகளின் ஆயுத பலம் முற்றாக ஒடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதே வேளை, 20-22 சதுர கிலோ மீற்றர் பரப்பைக்கொண்ட பாதுகாப்பு வலயத்தை நோக்கி பெருந்தொகையான சிவிலியன்கள் வந்துள்ளதாகக் கூறிய பிரிகேடியர், இதுவரை 35,756 பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஜனவரி மாதத்தில் 3848 பேரும், பெப்ரவரி மாதத்தில் இதுவரை 31,908 பேரும் வருகை தந்துள்ளதாக பிரிகேடியர் தெரிவித்தார்.

இவ்வாறு வருகை தந்தவர்களுள் 1117 நோயாளர்களும், 494 உதவியாளர்களுமாக 1611 பேர் 5 தடவைகளில் சர்வதேச செஞ் சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் கொண்டு வரப்பட்டதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.

மேல் மாகாண சபைக்கான வேட்பு மனுக்கள் இன்று முதல் ஏற்பு

election_.jpgமேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று 19 ஆம் திகதி ஆரம்பமாவதுடன் எதிர்வரும் 26 ஆம் திகதி நன்பகல் 12.00 மணியுடன் பூர்த்தி அடையும் என்று தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மாகாண சபைக்கான 102 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி கொழும்பு மாவட்டத்திலிருந்து 43 உறுப்பினர்களும் கம்பஹா மாவட்டத்திலிருந்து 39 உறுப்பினர்களும் களுத்துறை மாவட்டத்திலிருந்து 20 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இத்தேர்தலில் வாக்களிக்க கொழும்பு மாவட்டத்தில் 15இலட்சத்து 60 ஆயிரத்து 593 பேர். கம்பஹா மாவட்டத்தில் 14 இலட்சத்து 58 ஆயிரத்து 295 பேர், களுத்துறை மாவட்டத்தில் 8 இலட்சத்து 1326 பேர் என்ற அடிப்படையில் தகுதி பெற்றுள்ளனர்.

மத்திய மாகாண சபை தேர்தல் முடிவு ஐ.தே.க. வழக்குத் தொடரத் திட்டம்

justice.jpgமத்திய மாகாண சபைத் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி வழக்குத் தொடரத்திட்டமிட்டுள்ளது. குறிப்பாக மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட உறுப்பினர்கள் பல்வேறு தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

மத்திய மாகாணசபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அரச சொத்துகள் மிகவும் மோசமான வகையில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக கட்சி குற்றஞ் சுமத்தியுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து தேர்தல் சட்ட விதிகளுக்கு புறம்பான வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு இடையில் நேற்று விசேட சந்திப்பொன்றும் நடைபெற்றுள்ளது.

வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு 1500 தாதியர்களை அவசரமாக அனுப்புவதற்கு அரசு தீர்மானம்

sri-lanka-nurses.jpgவவுனியா வில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்க ளுக்கு ஆரோக்கிய சேவை வழங்கவென 1500 மருத்துவத் தாதியரை உடனடியாக வவுனியாவுக்கு அனுப்பி வைப்பதற்கு சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சு முடிவு செய்துள்ளது.இந்தத் தாதியர் வவுனியாப் பகுதியில் அடுத்துவரும் ஆறு மாதங்களுக்கு தொடராகக் கடமையாற்ற வேண்டும் எனவும் அமைச்சு தீர்மானித்திருக்கிறது.

இதேநேரம், கொழும்பிலுள்ள அரசாங்க ஆஸ்பத்திரிகளில் கடமை புரியும் எட்டு முன்னணி மருத்துவ நிபுணர்கள் அடங்கிய மருத்துவ குழுவொன்றையும் அடுத்துவரும் இரு தினங்களுக்குள் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கவும் அமைச்சு முடிவு செய்திருக்கிறது.

புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து இற்றை வரையும் 35 ஆயிரத்து 756 பொதுமக்கள் தப்பி வந்துள்ளனர். இவர்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் 1 நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதே நேரம், முல்லைத்தீவில் சிக்குண்டிருந்த 1150 நோயாளர்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கடல் மார்க்கமாக அழைத்து வந்துள்ளது. இவர்கள் திருமலை, வவுனியா, பொலன்னறுவை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மக்களுக்கான ஆரோக்கிய சேவை தொடர்பாக சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நேற்று கொழும்பில் அவசரக் கூட்டமொன்று நடைபெற்றது. இக்கூட்டத் தின் போதே மேற்படி முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதேவேளை, மன்னார், மதவாச்சி ஆஸ்பத்திரிகளின் ஆரோக்கிய சேவையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் மருத்துவ நிபுணர்களையும் தாதியரையும் உடனடியாக அவ்வாஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கவும் இக் கூட்டத்தின் போது முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் டாக்டர்கள், தாதியர் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களின் தங்குமிட மற்றும் உணவுவசதிகளைக் கவனிக்கவென மூன்று அதிகாரிகளை சுகாதாரப் பராமரிப்பு அமைச்சு இணைப்பாளராகவும் நியமித்திருக்கிறது.

நிவாரணக் கிராமங்களில் வாந்தி, வயிற்றோட்டம், வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் தோற்றம் பெறாதிருப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளை யும் மேற்கொள்ளுமாறு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

‘முல்லைத்தீவுக்கு உணவுப் பொருட்கள் சென்றடைந்தன’

red-cross-srilanka.jpgஇலங்கை அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட உணவுப்பொருட்கள் இன்று முல்லைத்தீவை வந்தடைந்ததாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார். அத்துடன் பல நோயாளர்கள் நேற்று (18) கப்பல் மூலம் திருகோணமலைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை இன்னமும் அங்கு உணவுப்பற்றாக்குறையும், குடிநீருக்கான தட்டுப்பாடும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்றும் எறிகணை வீச்சுக்கள் நடந்து, அங்கு பலர் கொல்லப்பட்டதாகவும், 12 பேரது சடலங்கள் நேற்று புதுமாத்தளனில் உள்ள தற்காலிக மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் டாக்டர் சத்திய மூர்த்தி கூறினார்.

கடுமையான வெயில் காரணமாகவும், தூய்மையற்ற சூழ்நிலை காரணமாகவும் பல தொற்று நோய்கள் அங்கு பரவிவருவதாகவும், அவற்றை எதிர்கொள்வதற்கான மருத்துப் பொருட்களோ அல்லது ஏனைய மருத்துவ வசதிகளோ தம்மிடம் கிடையாது என்றும் அவர் கூறினார்.

வவுனியா நலன்புரி நிலையங்களில் இருப்போருக்கு உணவு விநியோக நடைமுறையில் மாற்றம்

children-srilanka-02.jpgவன்னியி லிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள வவுனியா நலன்புரிநிலையங்களில் உணவு விநியோகத்தில் மாற்றங்களைச் செய்ய அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

30 ஆயிரம் மக்களுக்கு சமைத்த உணவே இதுவரை வழங்கப்பட்டு வந்தது. உணவு பழுதடைந்த நிலையிலும் தரமற்றதாகவும் காணப்படுவதாக கிடைத்த புகாரைத் தொடர்ந்து நலன்புரி நிலையங்களில் தலா 100 பேரைக் கொண்ட குழுக்களை அமைத்து அவர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் வழங்கப்பட்டு உணவு தயாரிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. உடனடியாக இதனை நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

உலக உணவு தாபனம் உலர் உணவுப் பொருட்களை வழங்க முன்வந்துள்ளது. மாவட்ட செயலகம் சமையலுக்குத் தேவைப்படும் உப உணவுப் பொருட்களை வழங்கும் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் சமையல் பாத்திரங்களையும் சமையலுக்குரிய கொட்டகைகளை அமைத்துக் கொடுக்கவும் முன்வந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் தரமானதும் சுவைமிக்க உணவுகளை பரிமாற்றம் செய்யக்கூடியதாயிருக்குமென நிவாரணப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக வழங்கப்பட்ட உணவுகள் பழுதடைந்து காணப்பட்டதாக செயலகத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

இதற்கிடையில் வவுனியா நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள மக்களுடைய விபரங்கள் அடுத்த சில தினங்களில் வெளியிடப்படும் என தெரிவிக்கும் வவுனியா செயலக சிரேஷ்ட உயர் அதிகாரி ஒருவர் அது தொடர்பான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மக்களை வெளியேற அனுமதிக்க விடுதலைப்புலிகளுக்கு அமெரிக்க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் -இலங்கைத் தூதுவர் வேண்டுகோள்

srilanka_displaced.jpgவன்னியில் மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலிருந்து அங்குள்ள மக்கள் வெளியேறுவதற்கு விடுதலைப்புலிகள் அனுமதிப்பதற்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென இலங்கை அரசு அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வடக்கே மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் அங்கிருந்து மக்கள் வெளியேறுவதற்கு விடுதலைப்புலிகள் தடுத்து வருவதாக ஐ.நா. அறிவித்து ஒருநாள் கடந்த நிலையில் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜாலிய விக்ரம சூரிய இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அங்கு தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோதல்களால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு எதிர்பார்க்கின்றனர். இந்தநிலையில் அங்கிருந்து அம்மக்கள் வெளியேற முடியாதவாறு விடுதலைப்புலிகள் தடுத்து வருகின்றனர். இந்த மக்கள் வெளியேறுவதற்கான அழுத்தத்தை குறிப்பாக அமெரிக்கா கொடுக்கவேண்டுமென இலங்கைக்கான தூதுவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த மனோநிலையை மக்களிடம் வலுப்படுத்தி தற்காலிக வெற்றியையே அரசு பெற்றுள்ளது -காமினி ஜயவிக்ரம பெரேரா எம்.பி.

election_ballot_.jpgயுத்த மனநிலையை முழு நாட்டிலும் ஏற்படுத்தவோ, மக்களை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து அன்பளிப்புப் பொருட்களை வழங்கி விருந்தளித்து மக்களை ஏமாற்றும் வாய்ப்பு ஜனாதிபதிக்கு இனிக்கிடைக்கப்போவதில்லை என ஐக்கிய தேசியக்கட்சியின் நிறைவேற்றுக் குழுத் தலைவர் காமினி ஜயவிக்ரம பெரேரா திங்கட்கிழமை குருநாகலில் தெரிவித்தார்.

வடமேல்மாகாண சபையின் தேர்தல் முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது;

யுத்தத்தின் மூலம் பெறும் வெற்றிகளைக்காட்டியவாறு எப்போதும் தேர்தல்களில் வெற்றி கொள்ள முடியாது. நடந்து முடிந்துள்ள மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைத் தேர்தல்களில் அரசாங்கம் தற்காலிக வெற்றியொன்றையே பெற்றிருக்கின்றதேயொழிய வேறு குறிப்பிடத்தக்கவை எதுவும் இல்லை.

அரசாங்கத்தின் தற்காலிக வெற்றி குறித்து நாம் அச்சம் கொள்ளவோ அதைரியம் கொள்ளவோ தேவையில்லை. எதிர்வரும் தேர்தல்களில் நாம் சிறந்த வியூகங்களை வகுத்து எமது கட்சி ஆதரவாளர்களுடன் இணைந்து வெற்றி பெறுவோம் கட்சியை மேலும் பலப்படுத்துவோம்.

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கமும் ஜனாதிபதியும் அனைத்து அரசவளங்களையும் பயன்படுத்தி அரச ஊடகங்களின் மூலம் மக்களிடையே யுத்த மனநிலையை வலுப்படுத்திக் காட்டித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர்.

நடந்து முடிந்த தேர்தலில் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட போதிலும் அவ்விருவரும் மத்திய மாகாணத்தில் மிகக் குறைந்தளவு எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்றுள்ளனர்

வடமேல்மாகாண சபைத் தேர்தலில் பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர் தமது வாக்குகளைப் பயன்படுத்தத் தவறியமையாலேயே ஐ.ம சு. முன்னணி அங்கு அதிக ஆசனங்களைப் பெறமுடிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.