வன்னியி லிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள வவுனியா நலன்புரிநிலையங்களில் உணவு விநியோகத்தில் மாற்றங்களைச் செய்ய அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
30 ஆயிரம் மக்களுக்கு சமைத்த உணவே இதுவரை வழங்கப்பட்டு வந்தது. உணவு பழுதடைந்த நிலையிலும் தரமற்றதாகவும் காணப்படுவதாக கிடைத்த புகாரைத் தொடர்ந்து நலன்புரி நிலையங்களில் தலா 100 பேரைக் கொண்ட குழுக்களை அமைத்து அவர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் வழங்கப்பட்டு உணவு தயாரிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. உடனடியாக இதனை நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
உலக உணவு தாபனம் உலர் உணவுப் பொருட்களை வழங்க முன்வந்துள்ளது. மாவட்ட செயலகம் சமையலுக்குத் தேவைப்படும் உப உணவுப் பொருட்களை வழங்கும் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் சமையல் பாத்திரங்களையும் சமையலுக்குரிய கொட்டகைகளை அமைத்துக் கொடுக்கவும் முன்வந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் தரமானதும் சுவைமிக்க உணவுகளை பரிமாற்றம் செய்யக்கூடியதாயிருக்குமென நிவாரணப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில தினங்களாக வழங்கப்பட்ட உணவுகள் பழுதடைந்து காணப்பட்டதாக செயலகத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
இதற்கிடையில் வவுனியா நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள மக்களுடைய விபரங்கள் அடுத்த சில தினங்களில் வெளியிடப்படும் என தெரிவிக்கும் வவுனியா செயலக சிரேஷ்ட உயர் அதிகாரி ஒருவர் அது தொடர்பான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.