முல்லைத் தீவில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்தவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள வவுனியா நிவாரணக் கிராமங்களில் மாணவர்களின் நலன் கருதி நடமாடும் பாடசாலைகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த கிராமங்களில் தங்கியுள்ள மாணவர்கள் கல்வி கற்கத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் ஏற்கனவே செய்து கொடுத்துள்ள போதிலும் அடுத்த வாரம் நடமாடும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார்.
நிவாரணக் கிராமங்களில் சுமார் 1200 மாணவர்களும் 35 ஆசிரியர்களும் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், இந்த ஆசிரியர்களை பயன்படுத்தியே நடமாடும் பாடசாலைகளை நிவாரணக் கிராமங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். முல்லைத்தீவு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உடனடியாகக் கப்பல் மூலம் அனுப்பி வைக்க அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இங்கு அமைச்சர் மேலும் தகவல் தருகையில்:-
இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் வருகை தந்துள்ளனர். இவர்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 13 நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மக்களுக்கு தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது. இங்குள்ள மக்களின் சுகாதார துறையை மேம்படுத்தும் வகையில் சுகாதார மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதற்குத் தேவையான சகல வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.
வவுனியாவில் பொது மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு முகாம்களுக்கும் அவ்வப்போது விஜயம் செய்து தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படுகிறது.