தமிழ் பேசும் கட்சிகள் – தமிழ் மற்றும் இஸ்லாமியக் கட்சிகளின் மாநாடு நவம்பர் 19, 20, 21ம் திகதிகளில் சூரிச்சில் இடம்பெறுகிறது. இம்மாநாடு தமிழ் பேசும் கட்சிகளிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு என்று சொல்லப்பட்ட போதும் அவர்கள் எட்ட நினைக்கும் புரிந்துணர்வு தமிழ் பேசும் கட்சிகளிடையேயானதல்ல என்ற சந்தேகங்கள் எழ ஆரம்பித்து உள்ளது. இம்மாநாடு நவம்பர் 12ல் லண்டனில் நடாத்த திட்டமிட்டு இருந்த போதிலும் பின்னர் சூரிச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இம்மாநாட்டில் ஓரிரு கட்சிகளின் தலைவர்கள் தவிர ஏனைய 20 தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளதாகத் தெரியவருகிறது.
இம்மாநாட்டுக்கு இன்னமும் ஒரு சில தினங்களேயே உள்ள நிலையில் இம்மாநாடு யாரால் நடத்தப்படுகின்றது என்பது பற்றியோ அதன் நோக்கம் பற்றியோ எவ்விதமான உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அழைக்கப்பட்ட கட்சிகளின் முக்கிய உறுப்பினர்களுக்குமே தெரியாமல் இம்மாநாடு பற்றிய விபரம் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இம்மாநாட்டுக்கு முன்னணியில் நின்று அழைப்புவிட்டவர்களின் விபரம் தற்போது ஓரளவு தெரியவந்துள்ளது. இம்மாநாட்டை சட்டத்தரணி மனோகரன் என்பவரே ஏற்பாடு செய்வதாக சொல்லப்பட்டு வந்தது. ஈஎன்டிஎல்எப் அமைப்பைச் சேர்ந்த இவர் பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ரிஎம்விபி அமைப்புடன் இணைந்து செய்ற்பட்டவர் எனத் தெரியவருகின்றது. பெரும்பாலும் அழைப்புகள் சட்டத்தரணி மனோகரனூடாகவே விடுக்கப்பட்டும் இருந்தது. சட்டத்தரணி மனோகரனுக்குப் பின்னணியில் மற்றுமொரு ரிஎம்விபி முக்கியஸ்தரான கிருஸ்ணன் பின்னணியிலுள்ளர். ஆனால் இந்த மாநாட்டில் மனோகரனுக்கு வழங்கப்பட்ட பொறுப்பையே மனோகரன் மேற்கொண்டதாகவும் ஏனைய விடயங்களில் அவர் ஈடுபட்டு இருக்கவில்லை என்றும் தெரியவருகின்றது. இம்மாநாட்டின் பின்னணயில் தமிழர் தகவல் நடுவம் இருப்பதாக இந்நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ள முஸ்லிம் கட்சி ஒன்றின் பிரதிநிதி தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
இம்மாநாட்டு ஏற்பாட்டில் தமிழர் தகவல் நடுவம் முக்கிய பங்கு வகிப்பதாக லண்டனில் உள்ள தமிழ் அரசியல் கட்சிவட்டாரங்களில் பேச்சு அடிபடுகின்றது. மேலும் மனோகரன் தமிழர் தகவல் நடுவம் இந்தியாவில் செயற்பட்ட வேளையில் அதனுடன் அங்கு தொடர்புபட்டு இருந்துள்ளார். மனோகரனுடைய கடந்தகால அரசியல் செயற்பாடுகள் பற்றி பல்வேறு விமர்சனங்களும் உள்ளது.
இம்மாநாட்டில் கட்சியின் தலைவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற கடுமையான கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு உள்ளதாக இதில் கலந்துகொள்ள உள்ளவொரு கட்சிப் பிரதிநிதி தேசம்நெற்க்கு தெரிவித்தார். இலங்கையில் இருந்து வரவுள்ள கட்சிகளின் தலைவர்களின் பயணச் செலவு ஒரு வாரகாலம் தங்குவதற்கான செலவு என்பனவற்றை மாநாட்டு ஏற்பாட்டாளர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர். அண்ணளவாக இம்மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கு 100 000 பவுண்கள் வரை ஆகும் என மதிப்பிடப்படுகின்றது.
இவ்வாறான ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கான பொருளாதார பலமும் அரசியல் பலமும் இலங்கை இந்திய அரசுகளுக்கும் புலம்பெயர் நாடுகளில் உள்ள பிரிஎப் போன்ற புலி ஆதரவு அமைப்புகளுக்குமே உள்ளது. ஆனால் இம்மாநாட்டு ஏற்பாடுகளில் தமிழர் தகவல் நடுவத்தின் ஈடுபாடும் இலங்கையின் ஆளும் கட்சி வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்களும் இலங்கை அரசு இம்மாநாட்டின் பின்னணியில் இல்லை என்பதை தெளிவாக்குகின்றது.
இங்கு வரவுள்ள கட்சிகளின் லண்டன் அமைப்பாளர்கள் சிலருடன் உரையாடியதில் இந்திய அரசும் இம்மாநாட்டின் பின்னணியில் இல்லையென உறுதியாகத் தெரிவிக்கின்றனர். இந்த மாநாட்டை ஒழுங்கு செய்யக் கூடியவர்கள் பொருளாதார பலமுடைய பிரிஎப் ம் அரசியல் ஆளுமையைக் கொண்ட தமிழர் தகவல் நடுவமும், மட்டுமே. ஆனால் தங்களுக்கென்று ஒரு தலைமைத்துவ ஆளுமையைக் கொண்டிராமல் தலைமறைவாக இருந்து அவர்களின் பினாமிகளால் வழிநடாத்தப்படும் அமைப்பு 100 000 பவுண் செலவில் இம்மாநாட்டை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே. மேலும் பிரிஎப் பின்னணியில் ஏற்பாடு செய்யும் ஒரு கூட்டத்திற்கு இத்தமிழ் பேசும் தலைமைகள் அழைப்பையேற்று வர முற்படாது.
ஆக இந்த மாநாட்டின் பின்னணியில் தமிழர் தகவல் நடுவம் மட்டுமே எஞ்சி நிற்கின்றது. ஆனால் இவ்வாறான ஒரு பாரிய செலவில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்கின்ற வல்லமை தமிழர் தகவல் நடுவத்திற்கு இல்லை என்பதும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்பாகக் கருதப்படும் தமிழர் தகவல் நடுவத்தின், அதன் தலைவர் ஆர் வரதகுமாரின் அழைப்பையேற்று இந்த தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் வரமாட்டார்கள் என்பதும் உறுதியானது. ஆகையால் தமிழர் தகவல் நடுவத்திற்குப் பின்னணியில் உள்ளவர்களே இம்மாநாட்டை ஏற்பாடு செய்கின்றனர் என்ற முடிவுக்கு வருவது தவிர்க்க முடியாததாகின்றது.
அந்த வகையிலும் மேலதிகமாக தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்களும் மேற்கு நாடுகள் குறிப்பாக பிரித்தானிய அரசு இம்மாநாட்டின் பின்னணியில் இருப்பதாக தெரிவிக்கின்றன. அதனாலேயே ஆரம்பத்தில் லண்டனில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் பின்னர் பிரித்தானிய அரசின் ஈடுபாடு வெளிப்படாமல் தவிர்க்கப்படுவதற்காக சூரிச்ற்கு இம்மாநாடு இடமாற்றப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
மாநாட்டின் திரைக்குப் பின்னால் உள்ளவர்கள் யார்?
International Working Group on Sri Lanka என்ற அமைப்பே இம்மாநாட்டை ஒழுங்கு செய்வதாகவும் Initative on Conflict Prevention through Quiet Diplomacy, தமிழர் தகவல் நடுவம் ஆகியனவே இம்மாநாட்டின் ஏற்பாடுகளைச் செய்வதாக அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தெரியவருகின்றது.
International Working Group on Sri Lanka என்ற அமைப்பு கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்ற அமைப்பு. அதன் தலைவராக Richard Reoch என்பவர் இருந்துள்ளார். அதன் பொதுச் செயலாளராக Peter Bowling என்பவர் இருந்துள்ளார். இவ்வமைப்பு இலங்கை மனித உரிமைகள் விடயம் தொடர்பாக மேற்கு நாட்டு அரசுகளுக்கு தகவல்களை பரிமாறியுள்ளனர். ஒரு சில அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மிகமோசமான மனித உரிமைகளை மீறிய இறுதி யுத்தம் தொடர்பாக இவ்வமைப்பு மௌனமாகவே இருந்துள்ளது. இவ்வமைப்புப் பற்றி டிசம்பர் 11 1998ல் அமெரிக்க கொங்கிரஸ்ற்கு அதன் தலைவர் Richard Reoch பின்வருமாறு கூறுகிறார் ‘The International Working Group on Sri Lanka is an independent, non-partisan network of organisations and individuals concerned with the promotion of human rights, development and peace in Sri Lanka. It has a management board in London and an international network that currently comprises humanitarian and advocacy groups in Asia, Australasia, Canada, Europe and the USA as well as Sri Lankan organisations working in the fields of development, peace and human rights.” இவ்வமைப்பின் சார்பில் Richard Reoch யை பிரித்தானிய அரசின் சர்வதேச அபிவிருத்திக்கான திணைக்களம் (Department for International Development of the UK Government) இரு வார வேலைத் திட்டத்தில் இலங்கைக்கு அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் தகவல் நடுவத்துடன் இம்மாநாட்டின் ஏற்பாடுகளைக் கவனிக்கும் Initative on Conflict Prevention through Quiet Diplomacy அமைப்பு கனடாவைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்ற Human Rights Internet அமைப்பின் ஒரு பிரிவாகும். 2007ல் இவ்வமைப்பு ஒரு மில்லியன் டொலர் நிதித் திட்டத்தைக் கொண்டிருந்தது. இவ்வமைப்பிற்கு கனடிய சர்வதேச அபிவிருத்தி முகவரகம் நோர்வே வெளிநாட்டு அமைச்சு உட்பட பல நிறுவனங்கள் நிதி வழங்குகின்றன. இவ்வமைப்புகள் நிதியுதவிக்காக அழைப்பிதழில் சேர்க்கப்பட்டது என்று தங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக அழைக்கப்பட்ட கட்சி ஒன்றின் பிரமுகர் தேசம்நெற்க்கு தெரிவித்தார். Human Rights Internet அமைப்பு பற்றிய மேலதிக தகவல்களுக்கு http://www.hri.ca/pdfs/HRI%20Annual%20Report%202006-2007.pdf
Human Rights Internet அமைப்பின் வேலைத்திட்டங்களில் ஒன்றான Initative on Conflict Prevention through Quiet Diplomacyஅமைப்பு செயற்படுகின்றது. இதன் ஆலோசணைக் குழுவில் பல்வேறு நர்டுகளின் முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளனர். பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் டொக்டர் பெர்னாட் கோச்னர், இந்தியாவில் இந்திர் குமார் குஸ்ரால், முன்னால் இலங்கை ஜனாதிபதி சத்திரிகா குமாரதுங்க ஆகியோர் அவர்களில் சிலர். இவ்வமைப்பின் வேலைத்திட்டங்களில் தமிழ் முஸ்லீம் தேசியக் கட்சிகளை இயக்கங்களை வன்முறையற்ற வழிகளில் பலப்படுத்துவதும் ஒன்றாக உள்ளது. மேலும் சர்வதேசத் தொடர்புகளை ஏற்படுத்தி பேச்சுவார்த்தைகளில் சர்வதேச தொடர்பை பேணுவதும் அதன் வேலைத்திட்டங்களில் ஒன்றாக உள்ளது.
ஆனால் இப்பின்னணிகள் பற்றியெல்லாம் முழுமையான இருட்டடிப்பைச் செய்து இம்மாநாடு ஒழுங்கு செய்யப்படுவதன் நோக்கம் மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது. இம்மாநாட்டில் பங்குகொள்ளும் கட்சிகளுக்கே இவை பற்றிய முழுமையான விபரங்கள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லீம் கட்சிகள் ஒன்றுடன் ஒன்று புரிந்துணர்வை ஏற்படுத்தி பொதுக்கூட்டமைப்பை உருவாக்கவே என்று மட்டும் சொல்லப்பட்டே அனைத்து தமிழ், முஸ்லீம் கட்சிகளும் அழைக்கப்பட்டு உள்ளன.
கட்சித் தலைவர்களுக்குள் மட்டும் ஏற்படுத்தப்படும் புரிந்தணர்வு இலங்கையில் நீண்டகாலம் புரையோடிப் போயுள்ள இன முரண்பாட்டைத் தீர்க்க எவ்வாறு உதவும். தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் முஸ்லீம் தேசியக் கட்சிகளுக்கும் சிங்கள தேசியக் கட்சிகளுக்கும் ஏற்கனவே காலத்திற்குக் காலம் புரிந்துணர்வும் பொது உடன்பாடும் ஏற்பட்டு வந்திருக்கின்றது. அடுத்து வருகின்ற தேர்தலிலும் அந்தப் புரிந்தணர்வும் பொது உடன்பாடும் ஏற்படும். ஆனால் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு மட்டும் எப்போதும் தீர்வு எட்டப்படுவதில்லை. அதற்கு சுவிஸ் சொக்லேட் கொடுத்து திரைமறைவில் இன்னுமொரு மாநாடு எதற்கு என்ற கேள்வியை எழுப்பியே ஆக வேண்டியுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசு மேற்குலகுக்கு எதிரான அணியில் அணிவகுத்து நிற்பதாலும் மேற்குலகின் ராஜதந்திரங்களுக்கு ஏற்பட்ட தோல்வியினாலும் மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றதா என்ற கேள்வி எழுப்பப்படுவது தவிர்க்க முடியாததாகின்றது. அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த ஓய்வுபெறப் போகின்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை அமெரிக்க உள்ளக பாதுகாப்பு அதிகாரிகள் அவரை ஒரு சந்திப்பிற்கு அழைத்து இருந்தனர். ஆனால் இச்சந்திப்பு போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைக்கானது என்ற அடிப்படையில் செய்திகள் வெளியாகின. ஆனால் இச்சந்திப்பு சரத் பொன்சேகாவை மகிந்த சகோதரர்களுக்கு எதிராக கொம்பு சீவிவிடும் ஒரு யுக்தியாக இருக்கலாம் என்றும் கருத இடமுண்டு.
எப்போதும் திறந்த பொருளாதாரக் கொள்கைகொண்ட மேற்குலகுக்கு உவப்பான ஒரு கட்சி ஐக்கிய தேசியக் கட்சி. ஆளுமையான தலைவரில்லாமல் உள்ள அக்கட்சிக்கு இன்று ஜனாதிபதி மகிந்தவை எதிர்க்கின்ற ஆளுமையை உடையவராக வரக்கூடியவர் சரத்பொன்சேகாவே என்ற வகையில் அமெரிக்க உள்ளக பாதுகாப்பு அதிகாரிகளின் சந்திப்பு குறிப்பிடத்தக்கது. இவற்றின் பின்னணியிலேயே தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களின் மாநாடும் நோக்கப்பட வேண்டும். இன்று மேற்குலகு இலங்கையில் ஒரு ரெஜிம் சேன்ஜ்யை எதிர்பார்க்கின்றது. புலித் தேசியமும் ரெஜிம் சேன்ஜ் ஒன்றை செய்வதன் மூலம் தனது மனதை ஆற்றிக் கொள்ளத் துடிக்கின்றது.
புரஜக்ற் பீக்கன் திட்டத்தை சர்வதேச நாடுகள் மகிந்த ராஜபக்ச அரசோடும் இந்தியாவுடனும் இணைந்து வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளன. Initative on Conflict Prevention through Quiet Diplomacy யின் மொழியில் சொல்வதானால் தமிழ் தேசியவாதத்தை வன்முறையற்ற வழிக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளன. அடுத்து மகிந்த ராஜபக்சவின் ரெஜிமைச் சேஞ் பண்ணுவதை நோக்கி நகர்கின்றன.
எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்ற கணக்கில் தமிழ் தலைமைகள் சரத்பொன்சேகாவின் கீழ் அணிதிரள காரணங்களைக் கண்டுபிடிக்க ஆரம்பித்துள்ளனர். முஸ்லீம் காங்கிரஸ் ஏற்கனவே யுஎன்பி அணியில் அணிவகுத்து ஏனைய தமிழ் கட்சிகளையும் சிறுபான்மைக் கட்சிகள் என்ற ஸ்லோகத்தில் அணிவகுப்பதற்கான அடுக்குகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. புலித் தேசியம் பேசிய கட்சிகளுக்கும் நபர்களுக்கும் சர்தபொன்சேக்காவை ஏற்றுக் கொள்வதில் சற்றுத் தயக்கம் இருக்கும். ஆனாலும் மேலக மலையக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் ஏற்கனவே சரத் பொன்சேக்காவை ஆதரிப்பதற்கான காரணங்களைக் கண்டுபிடித்துள்ளார். மனோ கணேசனுடன் தோளுக்குத் தோள் கொடுத்த சிறிதுங்க ஜெயசூரிய ஜனாதிபதித் தேர்தலில் நின்றாலும் மனோ கணேசன் சரத் பொன்சேகாவின் அணியிலேயே நிற்கப் போகின்றார். ஏனையவர்கள் பலரும் தங்களுக்கான காரணங்களைத் தேடத் தொடங்கி உள்ளனர். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரிக்கும்படி கேட்கும் தமிழ் கட்சிகள் அந்த சுயநிர்ணய உரிமையை வழங்க முன்வருபவர்களுக்கு வாக்களிக்கும்படி எப்போதும் கோரியதில்லை. இப்போதும் அவ்வாறு கோரப் போவதில்லை என்ற நிலையே தென்படுகின்றது.
இலங்கையில் இனமுரண்பாடுகளை கூர்மைப்படுத்தி தமிழ் மக்கள் மீது ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டதில் முக்கிய பங்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் உண்டு. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே ஆர் ஜெயவர்த்தனவுக்கு உண்டு. ஆனாலும் தமிழ் தேசியவாதிகள் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பின்னேயே அணிதிரண்டனர். தற்போதும் சரத் பொன்சேகா, கோதபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக மனித உரிமை மீறல், யுத்தக் குற்றங்கள், இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்களை வைத்த தமிழ் தேசியம், சரத்பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் நின்றவுடன் அவருக்கு பாவ மன்னிப்பு வழங்கி அவரின் கீழ் அணி திரளத் தயாராகின்றனர்.
சாதாரணமாகவே பேரினவாதக் கட்சிகளில் தொங்கிக் கொள்ளும் இலங்கை சிறுபான்மையினக் கட்சிகளுக்கு, தமிழ் பேசும் இனங்களின் கட்சிகளுக்கு இப்போது சூவிஸ் சொக்லேட்டு தருவதாக மேற்குலகம் சமிஞ்சை செய்கின்றது.
இலங்கை இனப்பிரச்சினையை அரசியல் ரீதியாகத் தீர்த்து வைப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கான நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை. காலம்காலமாக இருந்துவருகின்ற பேரினவாத நடவடிக்கைகள் இன்னமும் தொடரவே செய்கின்றது. இவை தமிழ் மக்களின் உள்ளங்களையும் இதயங்களையும் வென்றெடுப்பதற்கு மாறாக அவர்களை இலங்கை அரசியலில் நம்பிக்கை அற்றவர்களாக்கி உள்ளது. இந்த நம்பகமற்ற சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கி தமிழ் மக்களின் வாக்கு வங்கியை வைத்து பேரம் பேசுவதற்கு தமிழ்த் தேசிய சக்திகள் தயாராக உள்ளன.
சரத்பொன்சேகா என்ன கோத்தபாய ராஜபக்சவே வந்து ஐக்கிய தேசியக் கட்சியில் நின்றாலும் அவர்கள் தங்கள் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றால் யாருக்கும் வாக்களிக்கும்படி கோருவார்கள். தமிழ் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் என்றைக்காவது எண்ணி இருந்தால் எப்படி ஐக்கிய தேசியக் கட்சிக்கு அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு வாக்களிக்கும்படி கோரியிருக்க முடியும்.
இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள கட்சிகளும் அதன் தலைவர்களும் :
இம்மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (ஈபிடிபி) கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (ரிஎம்விபி), தமிழரசுக் கட்சித் தலைவர் சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், மலையக மக்கள் முன்னணித் தலைவர் பொ சந்திரசேகரன், மேல்மாகாண மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் உட்பட 22 தமிழ் முஸ்லீம் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
பேரியல் அஸ்ரப் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரியவருகின்றது. ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இம்மாநாட்டில் கலந்துகொள்ள விரும்பவில்லை என்றும் அக்கட்சியின் மற்றுமொரு உறுப்பினரே கலந்துகொள்வதாகவும் மேலும் தெரியவருகின்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஜேவிபி பா உ சந்திரசேகரன் ஆகியோர் எந்தவொரு கட்சியின் தலைவராகவும் இல்லாததால் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் தெரியவருகின்றது.