லண்டணில் தமிழ் மக்கள் மிக நெருக்கமாக வாழ்கின்ற ஈஸ்ற்ஹாமில் ஒக்ரோபர் 25 அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தை அடக்க நூற்றுக்கும் மேற்பட்ட பொலிசார் குவிக்கப்பட்டு 13 பேர் கைது செய்யப்பட்டனர். பேர்ச்சஸ் றோட்டில் இருந்து பிரிகின்ற சவுத்என்ட் றோட்டில் உள்ள தமிழ் மண்டபத்தில் ஒக்ரோபர் 24 இரவு நடந்த பார்ட்டியிலேயே இந்த மோதல் வெடித்துள்ளது. இந்தப் பார்ட்டியில் லண்டனின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர் குழுக்களும் பங்கு பற்றியதாகவும் அப்போதே இந்த மோதல் வெடித்ததாகவும் தெரியவருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு ஒக்ரோபர் 28ல் லண்டன் தமிழ்ச் சங்கத்தில் பொலிஸார் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். பொலிஸ் தரப்பில் இருந்து பத்துக்கும் மேற்பட்டவர்கள் இச்சந்திப்பிற்கு வந்திருந்தனர். தமிழ் சமூகத்தில் இருந்து குறிப்பாக ஒரு சிலரே சமூகமளித்து இருந்தனர்.
ஒக்ரோபர் 25 அதிகாலை இடம்பெற்ற மோதலில் கத்தி பொல்லுகள் உட்பட கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் வன்முறையின் தன்மை மோசமானதாக இருந்ததாகவும் புலனாய்வு அதிகாரி சைமன் டொபின்சன் தெரிவித்தார். பார்ட்டி நடந்த மண்டபத்திற்கு அருகில் இருந்த கட்டிட பொருட்கள் விற்பனை நிலையத்தில் இருந்த கற்கள் மரக்குற்றிகள் போன்றவற்றை இளைஞர்கள் எடுத்துக்கொண்டு மோதலில் ஈடுபட்டதான புலனாய்வு அதிகாரி சைமன் டொபின்சன் தெரிவித்தார். பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்த போது பெரும்தொகையானோர் மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகவும் சவுன்என்ட் றோட்டின் தொடக்கத்தில் இருந்து ஈஸ்ஹாம் அன்டகிறவுண்ட் ஸ்ரேசன் வரை மோதல் இடம்பெற்றதாகவும் அவ்வதிகாரி லண்டன் குரலுக்குத் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் பலருக்கு காயம் ஏற்படிருந்து என்றும் இவர்களில் மூவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும் பொலிஸ் அதிகாரி லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். மோசமாகக் காயமடைந்தவர்களில் ஒருவர் தொடர்ந்தும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றார். மோசமாகக் காயமடைந்தவர் ஸ்னெக் (பாம்பு) என்றும் அவர் தன்னுடைய நெருங்கிய நண்பர் என்றும் ஒக்ரோபர் 28; பொலிஸ் சந்திப்பில் ஒருவர் தெரிவித்தார். தன்னுடைய நண்பனுக்கு தலையில் பாரிய அடி வீழ்ந்து கோமா நிலைக்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒக்ரோபர் 24 இரவு இடம்பெற்ற சம்பவத்தினால் அம்மண்டபப் பகுதி குற்றப் பரிசோதணைக்காக பொலாஸாரினால் எல்லையிடப்பட்டது. அதனால் அதே மண்டபத்தில் மறுநாள் நடக்க இருந்த பிறந்த தின வைபவம் நிறுத்தப்பட வேண்டி ஏற்பட்டது.
இக்குறிப்பிட்ட பார்ட்டி யாருடைய பிறந்த தினம் அல்லது திருமண நிகழ்வுக்காக ஏற்பாடு செய்யப்பட வில்லை என்றும் இது தமிழ் போன்கார்ட் நிறுவனமொன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் லண்டன் குரலுக்குத் தெரியவருகின்றது. மேற்படி நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் இப்பார்ட்டிக்கு வேண்டிய மதுபானம் மற்றும் உணவு வகைகளை ஈஸ்ற்ஹாமில் ஓடர் செய்ததையும் உறுதிப்படுத்தக் கூடியதாக உள்ளது. தங்கள் நிறுவனத்தின் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் இளைஞர்களை குசிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட இந்தப் பார்ட்டியே மோதலில் முடிவடைந்துள்ளது.
மேற்படி சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 13 இளைஞர்களும் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இவர்களுடைய விசாரணைகள் தங்களுக்கு கிடைக்கப் பெற்ற ஆதாரங்கள் என்பன சிபிஎஸ் க்கு வழங்க்பட்டு அவர்களுடைய முடிவுகளின் படி குற்றங்கள் சம்பந்தப் பட்டவர்கள் மீது பதிவு செய்வது பற்றி முடிவெடுக்கப்படும் என புலனாய்வு அதிகாரி சைமன் டொபின்சன் தெரிவித்தார். கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் பிரித்தானியா விலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிப்பது தொடர்பாக புலனாய்வு அதிகாரியிடம் கேட்டபோது அவ்வாறான குற்றப் புலனாய்வுடன் தொடர்பான தகவல்களை தன்னால் பகிர்ந்தகொள்ள முடியாது என அவ்வதிகாரி தெரிவித்தார்.
முப்பது வரையான தமிழ் இளைஞர்களைப் பலிகொண்ட இந்த இளைஞர் குழுக்களின் வன்முறை ஒப்பிரேசன் என்வர் போன்ற நடவடிக்கைகளால் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் இவ்வன்முறைகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.