உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

வெளிநாட்டு கடைகளுக்கு அடிமைகள் போல் வேலைக்கு செல்லும் தமிழ் இளைஞர்கள் ! 

தொழில் திறனுடன் வெளிநாடு செல்லும் சிங்கள முஸ்லீம் இளைஞர்கள் – வெளிநாட்டு கடைகளுக்கு அடிமைகள் போல் வேலைக்கு செல்லும் தமிழ் இளைஞர்கள் !

 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து 6,000 முறைப்பாடுகளை அதிகாரிகள் பெற்றுக் கொண்டுள்ளதோடு அந்நிறுவனங்களின், உரிமங்களை இடைநிறுத்தல் மற்றும் சட்ட ரீதியாக வழக்குத் தொடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பதில் அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.

தற்போதும் நாளாந்தம் ஏராளமான முறைப்பாடுகள் கிடைகின்றன. அண்மைய காலத்தில் முறைப்பாடுகளுடன் தொடர்புடைய 6,000 நிறுவனங்களுக்கு எதிராக முறைப்பாடுகள் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளன என்றார்.

இதேவேளை யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் வெளிநாட்டு மோகம் அதிகரித்து வரும் நிலையில் லட்சங்கள் தொடங்கி கோடிகள் வரை கொடுத்து ஆயிரக்கணக்கானவர்கள் ஏமாந்து போயுள்ளனர் என யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்து வருகின்றனர். இதேவேளை பாடசாலை மாணவர்கள் தொடங்கி பல்கலைக்கழக இளைஞர்கள் வரை தமிழர் பகுதிகளில் வெளிநாட்டு மோகம் கல்வி நிலையையும் சீரழித்து வருவதாக கல்வி சமூகத்தினர் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

வடக்கு இளைஞர்களின் வெளிநாட்டு மோகம் தொடர்பில் அண்மையில் தேசம் நெட்க்கு தெரிவித்த தொழில்கல்வி ஆசிரியர் ஒருவர், சிங்கள, முஸ்லீம் இளைஞர்களிடையேயும் வெளிநாட்டு மோகம் காணப்படுகின்றது. ஆனால் அவர்கள் அனைவருமே NVQ முறையில் அமைந்த தொழில்கல்விகளை கற்று தொழில் அறிவுடன் ஜப்பான், கொரியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு நல்ல வேலைகளுக்கு செல்கின்றனர். நிம்மதியாக இருக்கிறார்கள்.

ஆனால் நமது தமிழ் இளைஞர்கள் – மாணவர்கள் அவ்வாறின்றி பாடசாலை கல்வியையும் இடைநிறுத்தி எந்த ஒரு தொழில் திறனும் இல்லாமல் அடிமைகள் போல் ஐரோப்பிய நாடுகளுக்கு தலைமறைவாக செல்ல ஏஜென்சிகளிடம் லட்சம் ரூபாய் தொடங்கி கோடி வரை கொடுத்து ஏமாறுகின்றனர். அங்கு தலைமறைவாக செல்வோரை ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்களும் தம் கடைகளில் இரகசியமாக வேலைக்கு அமர்த்தி உழைப்பை உறிஞ்சி விடுகின்றனர். சுருக்கமாக சொல்வதாயின் ஒரு காலத்தில் வெளிநாட்டவர்கள் அங்கிருந்து இங்கு வந்து நம்மை அடிமையாக்கினர் – தற்போது நாமே விரும்பி போய் அங்கு அடிமையாகி வேலை செய்ய ஆசைப்படுகின்றோம். வெளிநாட்டுக்கு செல்ல செலவழிக்கும் பல லட்சம் ரூபாய்களை இங்கு வைத்திருந்தாலே ஓர் புதிய தொழிலை தொடங்க முடியும் எனவும் குறித்த தொழில்கல்வி ஆசிரியர் தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் கட்டாயம் நடக்கும் – ஆனால் ஊழலில் திளைத்த தமிழ் தேசியவாதிகள் ஆட்சியமைப்பார்களா என்பது தான் ஒரே கேள்வி ! 

மாகாண சபை தேர்தல் கட்டாயம் நடக்கும் – ஆனால் ஊழலில் திளைத்த தமிழ் தேசியவாதிகள் ஆட்சியமைப்பார்களா என்பது தான் ஒரே கேள்வி !

“13ஆவது திருத்தச்சட்ட விடயத்தில் எமது நிலைப்பாட்டை விடவும் தமிழ் மக்களின் நிலைப்பாடே முக்கியமானது.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சென்னையில் தெரிவித்துள்ளார்.

அங்கு அமைச்சர் சந்திரசேகர் மேலும் தெரிவிக்கையில், 13ஆவது திருத்தச்சட்டத்தினை தமிழ் மக்கள் தமக்கு கிடைத்த உரிமையாக கருதுகின்ற நிலையில் அதில் கைவைப்பதற்கு நாங்கள் முனையவில்லை. 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக நாங்கள் என்ன கருதுகின்றோம் என்பதை விடவும் தமிழ் மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது தான் முக்கியமான விடயமாகும். என தெரிவித்தார்.

எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதனை உள்ளீர்த்திருந்தோம். அதுமட்டுமன்றி, 13ஆவது திருத்தச்சட்டம் நாட்டின் அடிப்படைச் சட்டமான அரசியலமைப்பிலும் காணப்படுகின்றது என குறிப்பிட்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அந்த வகையில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்தவுள்ளதோடு அதனையடுத்து இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல், மற்றும் மாகாண சபை தேர்தல் ஒருபுறமிருக்க தமிழ் தலைமைகள் மாகாண சபையை அனைத்து மக்களுக்கும் ஏற்றதாக நடாத்துவார்களா என்ற சந்தேகத்தை அரசியல் செயற்பாட்டாளர்கள் பலரும் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக கடந்த வடக்கு மாகாண சபை தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரான சி.வி விக்கினேஸ்வரன் உள்ளிட்ட குழுவினரின் நிர்வாகத்தில் ஊழல் மலிந்து போயிருந்ததது பலரையும் முகஞ்சுழிக்க வைத்திருந்தது அனைவரும் அறிந்ததே. இரணைமடு நீர்ப்பாசன திட்டத்தில் நடைபெற்ற ஊழல் தொடங்கி மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் வரை அனைத்திலும் ஊழல் நடைபெற்றதாக ஆதாரங்கள் வெளியாகியிருந்தது. இது தவிர மக்களின் ஒப்புயர்வற்ற தலைவர் என தமிழ்தேசிய கூட்டமைப்பினர் பிரச்சாரம் செய்து முதலமைச்சராக்கிய சி.வி விக்கினேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைத்து துண்டாடியதும் – அதன் பின் பாராளுமன்ற ஆசனம் ஒன்றை பெற்றதும் – இதன் வழியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து பார் லைசன்ஸ் பெற்றதுமே தமிழ் மக்களுக்கு எஞ்சியது.

இது ஒருபுறமிருக்க அரசியல் செயற்பாட்டாளரும் , சர்வ ஜன அதிகாரம் கட்சியின் யாழ் தேர்தல் மாவட்ட அமைப்பாளரான அருண் சித்தார்த் தொடர்ச்சியாக மாகாண சபை முறையை எதிர்த்து வருவதும் கவனிக்கத்தக்கது. இந்த வடக்கு மாகாண சபை அதிகாரமானது சாதிய கட்டமைப்பின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது என குறிப்பிடும் அருண் சித்தார்த் வடக்கு மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் அது ஒடுக்கப்பட்ட கீழ் சாதி என மேட்டுக்குடி கூறும் மக்களின் மீது தான் முதலாவது தாக்குதலை நடாத்தும் என குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை மாகாண சபை தேர்தலை மையப்படுத்தி பாராளுமன்ற தேர்தலில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தமிழ்தேசிய தலைமைகள் செயற்படுவதையும் அவதானிக்க முடிகிறது. குறிப்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன், சுமந்திரன் ஆகியோர் மாகாண சபை தேர்தலை வலியுறுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது. தேசிய மக்கள் சக்தியின் கட்சி அமைப்பானது தமிழர் பகுதிகளின் ஒவ்வொரு பிரதேசத்திலும் அதன் அடிமட்டம் வரை ஆழமாக வேரூன்றியுள்ள நிலையில் உள்ளூராட்சி சபை, மாகாண சபை தேர்தல்கள் தமிழ்தேசிய கட்சிகளுக்கு பாரிய சவாலாக அமையலாம் எனவும் சில நேரங்களில் என்.பி.பி ஆட்சி அமைத்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என அரசியல் செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டு வருவதும் கவனிக்கத்தக்கது.

கிளிநொச்சியில் கோயில் திருவிழாக்கள் போல நீதிமன்றங்களில் குவியும் தமிழர்கள் – குற்றவாளிகளுக்கு துணைபோகும் பொலிஸார் !

கிளிநொச்சியில் கோயில் திருவிழாக்கள் போல நீதிமன்றங்களில் குவியும் தமிழர்கள் – குற்றவாளிகளுக்கு துணைபோகும் பொலிஸார் !

கிளிநொச்சியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சமூக சீர்கேடுகளும் , போதைப்பொருள் பாவனை, வாள்வெட்டு கலாச்சாரம் என்பன மலிந்து போயுள்ளது என சூழலியல் செயற்பாட்டாளரும், ஊடகவியலாளருமான தமிழ்செல்வன் தேசம் திரை நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தமிழ்செல்வன் காடையர் கூட்டம் ஒன்றினால் தாக்கப்பட்டிருந்தார். குறித்த குழுவினர் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். இந்த பிரச்சனைகள் தொடர்பில் தேசம் ஜெயபாலன் கேள்விகளை தமிழ்ச்செல்வனிடம் எழுப்பியிருந்தார். தன்னை தாக்கிய குழு பிணையில் வந்து அடுத்த இரு நாட்களில் மேலும் ஒரு வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதையும் சுட்டிக்காட்டிய தமிழ்செல்வன் கிளிநொச்சியில் போதைப்பொருள் பாவனை, வாள்வெட்டு, கள்ளமரக்கடத்தல் மற்றும் ஐஸ்போதைப்போதைப்பொருள் பாவனை என்பன மலிந்து கண்முன்னே நமது எதிர்கால தலைமுறையினர் காணாமல் போவதாகவும் இந்த சமூக சீர்கேடுகள் பற்றி பேசவோ தடுக்கவோ எந்த தமிழ்தேசிய அரசியல்வாதிகளும் தயாரில்லை எனவும் சுட்டி காட்டினார்.

நானும் சமூக சீர்கேடுகள் பற்றி பேசாமல் தமிழ்தேசியம் பற்றி பேசி நூல் வெளியிட்டிருந்தால் தமிழ் தேசியவாதிகள் தன்னை கொண்டாடியிருப்பார்கள் என கூறும் ஊடகவியலாளர் தமிழ்செல்வன் கண்முன்னே அழிவடையும் தமது எதிர்கால சமூகத்தை பாதுகாக்க தவறினோம் என்றால் எதிர்காலத்தில் தமிழ்தேசியம் பெறவுள்ள நிலத்தில் யார் வாழப்போகிறார்கள்..? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிளிநொச்சியில் கோயில் திருவிழாக்களை போல மக்கள் நீதிமன்றங்களில் குவிந்து வழிவதாகவும் பொலிஸாரின் நடவடிக்கைகள் மக்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் இல்லை என விசனம் வெளியிட்ட ஊடகவியலாளர் தமிழ்செல்வன், பொலிஸார் குற்றவாளிகளை பாதுகாப்பதுடன் அரசியல்வாதிகள் கூட தமது சுயலாப அரசியலுக்காக குற்றச்செயல்களில் ஈடுபடவதாகவும் மக்கள் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இரணைமடு தண்ணியும் தர ஏலாது, மகாவலித் தண்ணியையும் விடேலாது, அப்ப யாழ் மக்களுக்கு சயனைட்டா கொடுக்கிறது !

இரணைமடு தண்ணியும் தர ஏலாது, மகாவலித் தண்ணியையும் விடேலாது, அப்ப யாழ் மக்களுக்கு சயனைட்டா கொடுக்கிறது !

சூழலியல் ஆய்வாளர் மு தமிழ்செல்வனுடன் கலந்துரையாடல்

லைக்கா உடன்பாட்டில் இருப்பது என்ன ? லைக்கா – தமிழ் அரசியல் கட்சிகளின் டீலின் பின்னால் ஆதவன் தொலைக்காட்சி இயக்குநர் !

லைக்கா உடன்பாட்டில் இருப்பது என்ன ? லைக்கா – தமிழ் அரசியல் கட்சிகளின் டீலின் பின்னால் ஆதவன் தொலைக்காட்சி இயக்குநர் !

தமிழ் தரப்பில் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பே லைக்காவின் வலையில் முதலில் வீழ்ந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் இந்த டீலைப் போடுவதற்குப் பொறுப்பாக இருந்தவர் முன்னாள் புளொட் உறுப்பினராகவும் தற்போது ஆதவன் தொலைக்காட்சியின் இயக்குநராகவும் உள்ள நடராஜா குருபரன் என முன்னாள் புளொட் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றன. நடராஜா குருபரன் 2006இல் கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்தாக ஒரு கதையுண்டு. அதனைத் தொடர்ந்து அரசியல் தஞ்சம்பெற்று புலம்பெயர்ந்து தற்போது பிரித்தானியாவில் வாழ்கின்றார்.

ஆதவன் தொலைக்காட்சி லைக்கா ஊடகக் குழமத்தின் ஒரு அங்கம். அதன் இயக்குநராக இருக்கும் நடராஜா குருபரன் முன்னாள் புளொட் உறுப்பினரும் ஊடகவியலாளரும் ஆகையால் புளொட் உறுப்பினர்களையும் அவர்களுடாக அவர்கள் அங்கம் வகித்த ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைபினர்களையும் இந்த டீலக்குள் கொண்டுவர முயற்சிகள் எடுத்ததாகவும் அவரே லைக்காவின் பிரதிநிதியாகச் செயற்பட்டதாகவும் தேசம்நெற்க்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தக் கதைகள் ஜனவரி முற்பகுதியில் நடைபெற்ற ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநாட்டிலும் கிளறப்பட்டிருந்தது.

லைக்கா நிறுவனம் தமிழ் அரசியல் தலைவர்களை, கட்சிகளை வாங்க முற்பட்டது ஒன்றும் இரகசியமல்ல. அவர்கள் தமிழ் அரசியல் கட்சிகளை ஏன் வாங்க முயன்றார்கள் என்பதும் ஒரளவு ஊகிக்கக் கூடியதே. லைக்காவால் வாங்கப்பட்ட கட்சியில் ஒலிவாங்கியில் ஐக்கிய ஜனநாயகக் குரலின் தலைவர் நடிகர் ரஞ்சன் ராமநாயக்க தென்பகுதியில் போட்டியிட்டமை அனைவரும் அறிந்ததே.

லைக்கா நிறுவனம் தமிழ் அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் வாங்கத் திட்டமிட்டிருந்ததை தேசம்நெற் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது. தற்போது லைக்கா நிறுவனம் அல்லது அதன் பினாமி அமைப்பு ஒன்றுடன் சில அரசியல் தலைவர்கள் ஒரு உடன்பாட்டைச் செய்துகொண்டுள்ளனர் எனவும் தெரிவருகின்றது. அந்த உடன்பாட்டில் கையெழுத்திட்ட பின்னரேயே அதன் அரசியல் தலைவவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. அந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டு ஒரு கோடியைப் பெற்றுக்கொண்டவர்கள் பட்டியலில் ரெலோ செல்வம் அடைக்கலநாதன், குருசாமி சுரேன், கோவிந்தன் கருணாகரன், ஈபிஆர்எல்எப் சுரெஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் அடங்குவதாக் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நெருங்கிய வட்டாரங்கள் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றன.

இந்த லைக்கா டீலை புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஏற்றுக்கொள்ள மறுத்த போதும் நடராஜா குருபரன் மற்றவர்களைத் தொடர்புபடுத்தி விடக் கேட்டதை அடுத்து கூட்டணியின் ஏனையவர்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

அரசியல் கைதிகள் விடுதலையை உறுதிப்படுத்தியதுடன் விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கு 25 லட்சம் நிதியையும் லைக்கா வழங்கியது. லைக்காவுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இருந்த உறவைப் பயன்படுத்தி இது சாத்தியமாக்கப்பட்டது. இதில் ரெலோ முக்கிய பங்கெடுத்திருந்தது. ரெலோவின் குருசாமி சுரேனும் லைக்காவின் துணைத் தலைவர் சிவசாமி பிரேம்குமாரும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்கள், செல்வம் அடைக்கலநாதன் லண்டன் வருகின்ற போது லைக்காவில் சந்திப்பது வழமையென, அவருக்கு நெருக்கமானவர்கள் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றனர். இருந்தலும் இந்த டீலை வெளியே இருந்து வருவது போன்ற ஏற்பாட்டில் நடராஜா குருபரன் டீல்மேக்கராக மற்றவர்களை சம்மதிக்க வைக்க அனுப்பட்டதாகத் தெரியவருகின்றது.

இந்த டீலை புளொட் தலைவர் முன்னாள் பா உ தர்மலிங்கம் சித்தார்த்தனும்,  ரெலோ எம் கெ சிவாஜிலிங்கமும் ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்கள் இருவரும் லைக்காவின் உடன்பாட்டில் கையெழுத்திடவும் இல்லை. ஒரு கோடியைப் பெறவுமில்லை. இதுவொரு அரசியல் தற்கொலைக்கு ஒப்பான செயல் என புளொட் சித்தார்த்தன் குறிப்பிட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது.

இந்த ஒரு கோடி முன்னாள் ஈபிஆர்எல்எப் பா உ துரைரணட்னத்திற்கும் தேர்தலில் போட்டியிட்ட ரவிராஜின் துணைவி சசிகலாவுக்கும் வழங்கப்பட்டதாக இவர்களுடன் நெருங்கிச் செயற்படும் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். சம்பந்தப்பட்டவர்கள் இதுதொடர்பில் தமது நிலைப்பாடுகளை வெளியிட்டால் அதனை தேசம்நெற் நிச்சயமாக வெளியிடும். மேலும் லைக்கா உடன்பாட்டை சம்பந்தப்பட்டவர்கள் வெளியிட வேண்டும். அதன் உள்ளடக்கத்தை அறிகின்ற சகல உரிமையும் தமிழ் மக்களுக்கு உள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் செல்வம் அடைக்கலநாதன் மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்.

அரசாங்கம் ஊடகவியலாளர்களிற்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்த விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் – ஊடகவியலாளர்கள் வேண்டுகோள் !

அரசாங்கம் ஊடகவியலாளர்களிற்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்த விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் – ஊடகவியலாளர்கள் வேண்டுகோள் !

இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யவேண்டும் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு 24 சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளது. புதிதாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஊடகவியலாளர்களிற்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிக்கவேண்டும் இது குறித்து ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளன. ஜனாதிபதிக்கான கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் அரசியல் அமைப்பினாலும் ஐசிசிபிஆரினாலும்  பாதுகாக்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமைகளை உறுதி செய்யுமாறு உங்களை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வது மற்றும் பத்திரிகையாளர்களிற்கு எதிரான கடந்த கால குற்றங்களிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வது ஆகியவை குறித்த தேசிய மக்கள் சக்தியின் வாக்குறுதிகளை நாங்கள் வரவேற்கின்றோம். தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஊடகவியலாளர்களிற்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிக்கவேண்டும். அல்லது இந்த சம்பவம் குறித்து பொறுப்புக்கூறலிற்காக உடனடி பக்கச்சார்பற்ற வெளிப்படையான விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும். என கோரப்பட்டுள்ளது

இலங்தை தமிழ் அகதிகள் மற்றும் மீனவர் பிரச்சினை தொடர்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்  கலந்துரையாடல் !

இலங்தை தமிழ் அகதிகள் மற்றும் மீனவர் பிரச்சினை தொடர்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்  கலந்துரையாடல் !

இலங்கை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பெருந்தோட்டம்  சமூக உட்கட்டமைப்புத் துறை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் கலந்துரையாடலொன்று கட்சியின் தமிழ் நாட்டிலுள்ள மாநிலக்குழு அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் புதிதாக அமைந்துள்ள அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்து தெரிவித்ததோடு, தமிழக கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலுக்குச்  செல்லும் போது முன்னெழுகின்ற பிரச்சினைகள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. அத்தோடு, இலங்கை தோட்ட தொழிலாளர்களின் வாழ்விட, வாழ்வாதாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால்  முன்வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு கடவுச்சீட்டு வழங்க வேண்டும் என்றும் கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. மாகாணத் தேர்தல்கள் நடத்துவது தொடர்பிலும், தமிழ்மொழிக்கு சம அந்தஸ்து வழங்குவது குறித்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும்  கோரப்பட்டது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தமிழர் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளில் உறுதியாக கவனம் செலுத்துவதாகவும், மக்கள் தங்கள் மீது அதன் காரணமாகவே நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

செல்ஃபி: smart ஆக ஏமாற்றுகிறார் சாணக்கியன் – பேசப்படாத மீனவர் பிரச்சினை  யாழ் மீனவர்கள் வேதனை !

செல்ஃபி: smart ஆக ஏமாற்றுகிறார் சாணக்கியன் – பேசப்படாத மீனவர் பிரச்சினை  யாழ் மீனவர்கள் வேதனை !

சென்னையில் இடம்பெறும் 2025 ஆம் ஆண்டுக்கான அயலகத் தமிழர் தின விழா இறுதி நாளில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுடன் செல்பி எடுத்துள்ளார். குறித்த செல்ஃபியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுடன் நிற்கும் பா. உ செல்வம் அடைக்கலநாதன், பா.உ சாணக்கியன், முன்னாள் பா.உ சுமந்திரன் ஆகியோர் சிரித்த படி உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இன்னமும் தமிழக அரசு முறையான வாழ்விட வசதிகளையோ அல்லது அடிப்படை வசதிகளையோ செய்து கொடுத்திருக்கவில்லை. மேலும் மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் இலங்கை வடக்கு தமிழ் மீனவர்கள் விடயத்தில் இன்னமும் பாராமுகமாக செயற்பட்டு வருவதுடன் தி.மு.க அரசு தமிழக மீனவர்களை – இலங்கை தமிழ் மீனவர்களுடன் மோதுபடும் நிலையையும் உருவாக்கிவருகிறது.

இவ்வாறான நிலையில், பா.உ இரா.சாணக்கியன், பா.உ செல்வம் அடைக்கலநாதன் தமிழக முதல்வருடன் சிரித்த படி  செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளனர். தனது பேஸ்புக் பதிவில் வழமை போல் தான் Smart ஆக இருப்பதாக காட்டிக்கொள்ள பா.உ இரா. சாணக்கியன் தமிழக முதல்வர் தானாகவே தன்னுடைய தொலைபேசியை வாங்கி செல்ஃபி எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். எனினும் நேரலை வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பலரும் இரா.சாணக்கியன் தானே தொலைபேசியை தமிழக முதல்வரிடம் கொடுத்து செல்ஃபி எடுக்க காத்திருக்கும் காணொளியை பதிவிட்டு இரா.சாணக்கியன் Smart ஆக ஏமாற்றுகிறார் என்கின்றனர்.

இந்நிலையில்,  இலங்கை மீனவர்களது பிரச்சினைகள் குறித்து பேசாமல் முதலமைச்சருடன் சிரித்துக்கொண்டு வெறுமனே செல்ஃபி எடுத்தமை வருத்தம் அளிப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட மீனவ சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் திரு.ரட்ணகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த யாழ்ப்பாணம் மாவட்ட மீனவ சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர்,  தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு கடற்றொழில் அமைச்சரின் தலைமையில் தான் இந்த குழு சென்றதாக அறியமுடிகிறது. அதிலும் சிலருக்கு அழைப்பு விடுத்தும், சிலருக்கு அழைப்பு விடுக்காமலும் அந்த நிகழ்வுக்கு சென்றிருந்தனர். அங்கு சென்று கடற்றொழில் அமைச்சர் கூட மீனவர் பிரச்சினை குறித்து பேசியதாக ஊடகங்களில் செய்திகள் எவையும் வெளிவரவில்லை. நிகழ்ச்சிக்கு வெளியே வந்து அங்குள்ள ஊடகங்களுக்கு என்றாலும் எமது மீனவர்களது வளங்கள் அழிப்பது குறித்து சொல்லுங்கள். எங்களது மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை சொல்லுங்கள். அதை சொல்லிவிட்டு வாருங்கள் என்றார் திரு.ரட்ணகுமார்.

மொக்கு மோடையா’ அர்ச்சுனாவா ? சிங்களவனா ?’

மொக்கு மோடையா’ அர்ச்சுனாவா ? சிங்களவனா ?’

ஒரு கார் மட்டும் போகக் கூடிய வீதியில், மற்றுமொரு கார் ஏற்கனவே வந்துகொண்டிருக்கும் போது, பா உ அர்ச்சுனாவின் காரும் பிரதான வீதியிலிருந்து அதே வீதிக்குள் இறங்க, இரு சாரதிகளுக்குமிடையே ஏற்பட்ட தர்க்கம் சமூக வலைத்தளங்களில் பரவியது. தன்னுடைய காரை ஓட்டிவந்த அர்ச்சுனா எதிரே வந்தவருக்கு வழிவிட மறுத்து, காரை நிறுத்தினார். ஏற்கனவே அவ்வீதியில் பெருமளவு தூரத்தைக் கடந்திருந்த சிங்கள சாரதியும் தன்னாள் பின்னுக்கு நகர முடியாது என்று அடம் பிடித்தார்.

உலகெங்கும் உள்ள உபத்திரவம் பிடித்த விடாக்கொண்டனும் கொடாக்கண்டனும் ஆனா சாரதிகளுக்கு இந்தக் காட்சி மிகச் சிறந்த உதாரணம். இலங்கை வாகனப் பயிற்சி பெறுபவர்களுக்கு, விபத்துக்களை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு, நிச்சயமாக இதனைப் போட்டுக் காட்ட வேண்டும். ஒரு சாரதி எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கும், இந்த மண்டைக் கொதிப்பில் போய் இவர்கள் எப்படி அப்பாவிகளைப் பலியாக்குகிறார்கள் என்பதற்கும் இதைவிடச் சிறந்த காணொலி கிடைக்காது.

இந்த இரண்டு தனிப்பட்ட விட்டுக்கொடுப்பற்ற சாரதிகளின் சண்டையில் தெறித்த வார்த்தைகள் இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையையும் அத்தெருவில் கொண்டு வந்து இறக்கியது. இன்னுமொரு இனக்கலவரம் ஒன்று ஏற்படுமளவிற்கு, இன உணர்வுகளைத் தூண்டும் வகையில், வார்த்தைகள் தெறித்தது. காரை ஓராமாக்கி வழிவிடுவதற்கு இடமிருந்த போதும், பா உ அர்ச்சுனா நீளக்களுசானும், அடிக்கிற வெய்யிலுக்க் முழுக்கை சேட்டும் ரையும் கட்டி கூலிங் கிளாசும் போட்டுக்கொண்டு அசல் தெருப்பொறுக்கி மட்டத்துக்கு கீழிறங்கி தர்க்கத்தில் ஈடுபட்டார். ‘நான் பாராளுமன்ற உறுப்பினர், டொக்டர். நீ மோடையனா நான் மோடையனா ?’என்று மொண்டசெரி பள்ளிக்கூடப் பிள்ளைகள் லெவலில் தர்க்கம் நிகழ்ந்தது.

கம்பவாருதி தலையில் வைத்து தோய்வதற்கு, தனது தங்கையின் சிறுநீரைப் பெற்றுக் கொடுக்க முன்வந்த அர்ச்சுனா, இன்று ‘கையாட்டம் செய்கிறியோ?’ என்று ஆரம்பித்துவிட்டார். மறுபக்கத்தில் வந்தவரும் இவருக்கு சளைத்தவரில்லை. ‘இவர் தான் எங்கள் எதிர்ககட்சித் தலைவரின் கதிரையில் இருந்தவர். கஜேந்திரகுமார் வாகனத்தால் மோதியது, இது எங்கள் நாடு’ என்றெல்லாம் அளந்தார்.

இதுபற்றி தன்னுடைய யூரியூப்பில் பதிவிட்ட பா உ அர்ச்சுனா, இந்தப் பிரச்சினையை வைத்து இனவாத அரசியலைக் கக்கினார். இந்தக் கார் பிரச்சினைக்கும் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. கார் வைத்திருக்கும் இரண்டு திமிர் கொண்ட, அந்த வீதியைப் பயன்படுத்தும் மற்றையவர்களைப் பற்றி கிஞ்சித்தும் அக்கறையற்ற இரண்டு மனிதர்கள் தங்களுடைய ஈகோவுக்காக சமூகங்களை இழுத்து விடுகின்றனர். “நான் தமிழன். நான் எப்பிடி ரிவேர்ஸ் எடுக்கேலும். சிங்னவனின்ட இடத்தில போய் சிங்களவனையே மொக்குமொடையா, மொக்கு மாடு, பன்றி என்டெல்லாம் பேசினனான்” என்று அவித்து இன உணர்வுகளைத் தூண்டுகிறார் அர்ச்சுனா.

தமிழரசுக் கட்சி, கார் இல்லாத காலத்தில், தாங்கள் வைத்திருந்த கார்களுக்கு ‘சிறி’ எழுத்து வந்ததால் ‘சிறி எதிர்ப்புப் போராட்டம்’ செய்தது. போராட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டது, அப்பாவி இளைஞர்கள். கார் வைத்திருந்த எம்பி மார் எல்லாம் சிங்கள பேரினவாதிகளோடு கூடி விருந்துண்டனர். அதைத்தான் எழுபது ஆண்டுகளின் பின் அர்ச்சுனாவும் செய்கிறார். தன்னையொரு தமிழ் தேசிய உணர்வாளனாக சித்தரிக்கும் அர்ச்சுனா விடுதலைப் போராட்டம் உச்சம்பெற்றிருந்த போது புலிகளில் இணைந்து போராடப் போகவில்லை. தன்னை முன்னேற்றுவதற்காகப் படித்தார். இப்ப இவர் படித்தவர். பாராளுமன்ற உறுப்பினர். போராடியவர்கள் படிக்காதவர்கள். ஊனமுற்றவர்கள். இதே நச்சுச் சூழலை மீண்டும் கொண்டு வருவதற்கும் தன்னுடைய யூரியூப் சனலை ரென்டிங் ஆக்கவும் என்ன கேவலம் எல்லாம் செய்ய முடியுமா அதையெல்லாம் அர்ச்சுனா செய்கின்றார் போலவே தோன்றுகிறது.

 

கழிவு நீரை வீட்டு வளவுகளுக்குள் விட்டதற்கு மேற்கு மீசாலை மக்களிடம் அதிகாரிகள் மன்னிப்புக் கோரினர் !

கழிவு நீரை வீட்டு வளவுகளுக்குள் விட்டதற்கு மேற்கு மீசாலை மக்களிடம் அதிகாரிகள் மன்னிப்புக் கோரினர் !

தாங்கிகள் கழுவிய இரசாயனங்கள் கிருமிகொல்லிகள் கொண்ட தண்ணீரை வீடுகளுக்குள் பரவவிட்டதற்காக நீர்பாசனத் திணைக்கள அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மேற்கு மீசாலை மக்களிடம் மன்னிப்புக் கேட்டதுடன் அவர்களின் கிணறுகளையும் இறைத்து விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஜனவரி 8ல் இக்கழிவு தண்ணீர் காணிகளுக்குள் விடப்பட்ட தகவல் தேசம்நெற்க்குத் தெரிவிக்கப்பட்டதும் ஊடகங்களின் தலையீடுகள் வரும் என்பதை உணர்ந்த அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு மறுநாளே தங்களுடைய தவறுக்காக மன்னிப்புக் கோரி பாதிக்கப்பட்டவர்களின் கிணற்றையும் இறைத்துக் கொடுத்தனர்.

எதிர்காலத்தில் இத்தண்ணீரை குழாயைப் பொருத்தி குடிமனைகள் இல்லாத பகுதிக்கு திசை திருப்புவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்துச் சென்றுள்ளனர். தங்களுடைய தவறை உணர்ந்து அதனைச் சரிசெய்ய முயன்றமையை அப்பகுதி மக்கள் வரவேற்றனர்.

ஆனால் இவ்வாறான திட்டமிடப்படாத பொறுப்பற்ற செயல்கள் தவிர்க்கப்பட்டால் தேவையற்ற செலவுகள் பாதிப்புக்களை குறைக்க முடியும். அதிகாரிகளும் பணியாளர்களும் வினைத்திறனுடன் செயற்திறனுடன் பணியாற்ற கற்றுக்கொள்ள வேண்டும். தங்களுடைய தவறைத் திருத்திக்கொள்ள முயற்சி எடுத்தமை பாராட்டத்தக்கது.