உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

எனது அண்ணன் மகேஸ்வரனின் படுகொலைக்கு தொழில் அதிபர் விண்ணணும் காரணம் ! தியாகராசா விக்கினேஸ்வரன்

எனது அண்ணன் மகேஸ்வரனின் படுகொலைக்கு தொழில் அதிபர் விண்ணணும் காரணம் ! தியாகராசா விக்கினேஸ்வரன்

 

முன்னாள் அமைச்சராக இருந்த தன்னுடைய சகோதரன் தியாகராசா மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டதற்கு தொழில் அதிபர் விண்ணன் முக்கிய காரணம் எனக் குற்றம்சாட்டுகின்றார் மகேஸ்வரனுடைய சகோதரர் தியாகராசா விக்கினேஸ்வரன். பிரித்தானியாவிலிருந்து புலம்பெயர்ந்து தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் விக்கினேஸ்வரன் தேசம்நெற்க்கு அளித்த நேர்காணலில் மகேஸ்வரனுடைய கொலையின் பின்னணியில் தொழில் அதிபர் விண்ணணுக்கு முக்கிய பங்கிருப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

விண்ணன் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் கூட்டிய ஊடகவியலாளர் சந்திப்பில் ஆயதம் ஏந்திய இயக்கங்கள் பற்றி மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தார். ஈபிடிபி, புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எப் ஆகிய இயக்கங்கள் கடத்தல், கொள்ளை, கொலை ஆகிய சம்பவங்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இது விடுதலைப் போராட்ட அமைப்புகளை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் லண்டன் பிரிதிநிதி சாம் தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தார்.

முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் ஆலயத்தில் வைத்து வசந்தன் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். சுட்டுக்கொல்லப்பட்டவர் ஈபிடிபி அமைப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் உண்மையிலேயே விடுதலைப் புலிகளால் ஈபிடிபிக்குள் அனுப்பி வைக்கப்பட்ட புலனாய்வுப் புலி உறுப்பினராகவே அடையாளம் காணப்பட்டார். இது தொடர்பில் தியாகராசா விக்கினேஸ்வரனிடம் கேட்ட போதே அவர் தொழிலதிபர் விண்ணனை நோக்கி குற்றச்சாட்டை வைத்தார்.

 

 

பட்ஜெட்டில் கிழக்கு புறக்கணிப்பு – உள்ளூராட்சித் தேர்தலில் பாடம் புகட்டுவோம் ! சாணக்கியன்

பட்ஜெட்டில் கிழக்கு புறக்கணிப்பு – உள்ளூராட்சித் தேர்தலில் பாடம் புகட்டுவோம் ! சாணக்கியன்

வரவு, செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றஞ்சாடியுள்ளார். பாராளுமன்ற வரவு செலவுத் திட்டத்தின் மீதான 5 ஆம் நாள் விவாதத்தில் நேற்று உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மாறாக வடக்கிற்கு வழமைக்கு மாறாக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசுக்கு ஆதரவு பெருகியுள்ளது. மக்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்த்து வருகின்றனர்.

சாணக்கியன் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “வடக்கு மாகாண அபிவிருத்திக்கு பெருமளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தை நிர்மாணிப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. தேசிய மக்கள் சக்திக்கு வடக்கு மாகாண மக்கள் பெருமளவில் வாக்களித்தார்கள். ஆனால் மொத்த வரவு செலவுத் திட்டத்தில் 6 சதவீதமான அளவு தான் வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தளவான நிதியை ஒதுக்கி வடக்கு மாகாண மக்களை ஏமாற்றலாம் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நினைக்க கூடாது.

வடக்கு மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார்கள். காணாமல் போனோரின் உறவுகள் 2,900 நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த விடயத்துக்கு ஒரு முன்மொழிவை கூட இதுவரையில் முன்வைக்கவில்லை. இந்த நாட்டில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லையென நீதியமைச்சர் குறிப்பிடுகிறார். பட்டியலை தருமாறு என்னிடம் கேட்கிறார். இந்த நாட்டில் நான் நீதியமைச்சரா அல்லது அவர் நீதியமைச்சரா, வடக்கில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் பொறிமுறை வகுக்கப்படவில்லை.

அபிவிருத்திகளை செய்து இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்று கருத வேண்டாம். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதி மீது நம்பிக்கை கொண்டே வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினார்கள். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை அரசாங்கம் கிடப்பில் போட்டுள்ளது. தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தது தவறு என்பதை வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்” என்றார் சாணக்கியன்

புலிகள் உள்ளிட்ட 9 தமிழ் அமைப்புகள் 6 இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடை நீடிப்பு !

புலிகள் உள்ளிட்ட 9 தமிழ் அமைப்புகள் 6 இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடை நீடிப்பு !

தமிழீழ விடுதலை புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புகள் மீதான தடை நீடிக்கப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்தவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2014 இல் வெளியிடப்பட்ட இப்பட்டியலானது 2024 திருத்தி வெளியிடப்பட்டு இருந்தது அதன் தொடர்ச்சியாக நேற்று புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE), தமிழர் புனர்வாழ்வு அமைப்பு (TRO), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC), தமிழ் இளைஞர் அமைப்பு (TYO), உலக தமிழர் இயக்கம் (WTO), நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE), உலக தமிழர் நிவாரண நிதியம் (WDRF), தலைமைச் செயலகம் (HQ), கனேடிய தமிழர் தேசிய அவை ஆகிய தமிழ் அமைப்புகளும்; தேசிய தௌஹீத் ஜமாஅத், ஜமாதே மிலாதே ஈப்ராஹிம், விலாயத் அஸ் செய்லானி, டருல் ஆதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் மற்றும் சேவ் த பேர்ள்ஸ் ஆகிய இஸ்லாமிய அமைப்புகளும் வர்த்தமானி அறிவித்தலூடாக தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டுள்ளன.

தடை நீடிக்கப்பட்ட 9 தமிழ் அமைப்புகளில் பெரும்பாலானவை கனடா மற்றும் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன. இவ்வமைப்புகளின் செயற்பாடுகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. ஆண்டுகள் கடந்து செல்ல இவ்வமைப்புகளின் ஆதரவுத் தளம் குறுகிக்கொண்டே சென்று தற்போது தனிமனித முரண்பாடுகளில் சிக்குண்டு ஒருவரை மற்றவர் தூற்றுவதாகவே காணப்படுகின்றது.

பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட செயற்பாடுகளுக்கு நிதியளித்த குற்றச்சாட்டின் பேரில் இவை தடை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். இவற்றின் நிதி மற்றும் பொருளாதார சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.

மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 222 தனிநபர்கள் மீதான தடையையும் அரசாங்கம் நீடித்துள்ளது. பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடையவர்கள் அவற்றுக்கு நிதிஅளித்தவர்கள் என்ற அடிப்படையில் இவர்மீதான தடை விதிக்கப்பட்டுள்ளது.

எண்பதுக்களில் தாயகத்தின் குரலாக இருந்த ஆனந்தி அக்கா பிற்காலத்தில் புலிகளின் குரலாகி மௌனித்துக் கொண்டார் ! : தேசம் த ஜெயபாலன்

தமிழீழ விடுதலைப் போராட்டம் வீச்சுப் பெற்ற 1980க்களின் முற்பகுதியில், இலங்கைப் பேரினவாத அரசுகளின் கொடும் கரங்கள் தமிழ் மக்களை நசுக்கிய நாட்கள். இலங்கையின் வடக்கு கிழக்கில் என்ன நடைபெறுகின்றது என்பதை இலங்கைத் தேசிய ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்த காலம். மின்சார வசதியற்ற கிராமங்கள். தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத வரவேற்பறைகள். வானொலிகள் கோலோச்சிய காலகட்டம். அன்று பத்திரிகைகளை வாங்கும் வசதி குடும்பங்களில் இல்லை. சனசமூக நிலையங்களில் போய் பத்திரிகை படிக்கின்ற காலம். சன சமூக நிலையங்களிலும் ஒவ்வொரு பக்கத்தை ஒவ்வொருவர் வைத்து வாசிப்பார்கள். தகவலுக்கான கேள்வி மித மிஞ்சியிருக்கும். ஆனால் தகவல் கிடைப்பதற்கான வழிகள் மிக மிக அரிதாக இருந்த அந்தக் காலம்.

விரல் நுனியில் தட்டினால் செய்திவரும் இன்றைய காலத்தில் செய்திகளின் ஆயட்காலம் மிக மிக அரிது. அன்று நிலைமை அவ்வாறில்லை. 1986 இல் யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துகின்றார்கள் என்பதை அந்த ரெலோ இயக்கப் போராளிகள் அறிந்து உணர்ந்து கொள்ளவே பல மணிநேரம் ஆகியது. ஆவ்வாறான ஒரு காலகட்டத்தில் மக்கள் செய்திகளுக்காக ஏங்கினர்.

பிபிசி தமிழோசையில் ஆனந்தி அக்காவின் குரலால் தாயகத் தமிழர்கள் ஈர்க்கப்பட்டு இருந்தனர். அதேபோல் பிபிசி தமிழோசையில் சங்கர் அண்ணா, விமல் சொக்கநாதனும் குறிப்பிடத்தக்கவர்கள். சமகாலத்தில் பணியாற்றியவர்கள். விமல் சொக்கநாதன் சில ஆண்டுகளுக்கு முன் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டமை வருத்தத்திற்குரிய பதிவு. இவர்கள் வரிசையில் தாயக மக்களை தன்வசப்படுத்திய மற்றையவர் பிலிப்பைன்ஸ் வெரித்தாஸ் வானொலி அறிவிப்பாளராக இருந்த ஜெகத் கஸ்பர்.

எண்பதுக்களில் இவர்களின் குரல்களுக்காக மக்கள் தவமிருந்தனர். ஒரு நாளைக்கு 30 நிமிடங்களே ஒலிபரப்பாகும் இச்செய்தித் சேவைவைகளினூடாக மட்டுமே வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களால் இலங்கையின் வடக்கு, கிழக்கில் என்ன நடக்கின்றது என்பதை அறியக் கூடியதாக இருந்தது. அன்றை நாட்களில் அப்போதைய இலங்கை அரசு பற்றரிகளைத் தடைசெய்த போது சைக்கிள் டைனமோக்களை வைத்து செய்தி கேட்ட காலங்கள் அது. தமிழ் மக்கள் மிக நெருக்கடியாக இருந்த காலத்தில் அவர்களுக்கு நம்பிக்கை அளித்த குரல் பிபிசி ஆனந்தியின் குரல். அதனால் அவர் என்றும் தமிழ் மக்களின் ஒரு செலிபிரேற்றியாகவே வாழ்ந்தார்.

இதனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் நெருக்கமானவராகவும் குடும்ப நண்பராகவும் மாறினார். செய்தி சேகரிப்புக்காகவும் அதற்கு மேலாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளுக்கும் மிகுந்த நட்பானார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை நேர்கண்ட மிகச் சிலரில் பிபிசி ஆனந்தி அக்கா குறிப்பிடத்தக்கவர். அதைவிட இந்தியாவின் ஹிந்து பத்திரிகையின் ஊடகவியலாளர் அனிதா பிரதாப், ஜெகத் கஸ்பர் ஆகியோரும் வே பிரபாகரனை நேர்கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியில் பிபிசி ஆனந்தி அக்கா ஒரு ஊடகவியலாளராக அல்லாமல் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரப் பீரங்கியாகவே மாறினார். துரதிஸ்ட்ட வசமாக பிபிசி தமிழோசையில் இலங்கைத் தமிழர்களின் பாத்திரம் இவரோடு முடிவுக்கு வந்தது. ஆனந்தி அக்கா, விமல் சொக்கநாதன் ஆகியோரின் காலகட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் உள்வாங்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு வளர்த்தெடுக்கப்பட வில்லை. அதனால் பிபிசி தமிழோசையில் இலங்கைத் தமிழர்கள் அதன் பாத்திரத்தை இழந்தனர்.

யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்த ஆனந்தி சூரியப்பிரகாசம் தனது சொந்த வாழ்வில் பல நெருக்கடிகளைச் சந்தித்தவர். உறவை விபத்தில் இழந்தவர். பிற்காலங்களில் முதமையில் தனது கணவரையும் இழந்தவர். இலங்கை வானொலியில் தயாரிப்பாளராக இருந்தவர். அப்போது வானொலி நாடகங்களில் நடித்தவர். அறிவிப்பாளராகப் பணியாற்றியவர். 1970க்களில் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து பகுதிநேர அறிவிப்பாளராக பணியாற்ற ஆரம்பித்து பின் முழுநேர அறிவிப்பாளராக 2005 ஓய்வுபெறும்வரை இருந்தார். 2025 பெப்ரவரி 21இல் அவர் குரல் மௌனமானது.

ஆனந்தி அக்கா முரண்பட்ட கருத்துடையோருடனும் உறவைப் பேணி வருபவர். தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அவர் பற்றுக்கொண்டிருந்த போதும் ஏனைய விடுதலைப் போராட்ட அமைப்புகளுடனும் நல்லுறவைப் பேணி வந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஈபிடிபியினருக்கும் இடையே மோசமான பகைமுரண்பாடு நிலவிய காலகட்டத்திலும், தோழர் டக்ளஸ் தேவானந்தவுடனும் நல்லுறவைப் பேணியவர்.

தமிழ் புலமை மிக்க ஆனந்தி அக்கா தமிழ் இலக்கியத்திலும் மிகுந்த ஆர்வம் மிக்கவர். தொலைபேசி உரையாடல்களில் தமிழ் இலக்கியத்திலிருந்து பாடல்களை எனக்கு பாட்டிக்காட்டியுள்ளார். எப்போதும் ‘டேய்’, ‘என்னடா’ என்று வாஞ்சையோடு அழைக்கும் அவர், ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றுக்கு என்னையும் வற்புறுத்தி அழைத்திருந்தார். அவர் பல நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே என்னை அழைத்திருப்பார் என்பதும் எனக்குத் தெரியும். அப்போது என்னருகில் வந்து சொன்னார், “எப்பிடியும் போய் என்னைத் திட்டித்தான் எழுதப்போகின்றாய்” என்று வாஞ்சையுடன் திட்டிக்கொண்டார். நான் பிரித்தானியாவில் அவரைச் சந்தித்த பின் அவரை ஒரு ஊடகவியலாளராக ஒரு போதும் பார்த்ததில்லை.

இடையிடையே தொலைபேசியல் கதைத்துக் கொள்வார். என்னுடைய தனிப்பட்ட குடும்ப பிரச்சினைகள் உட்பட. ஒரு சகோதரியாக ஒரு நல்ல பண்பாளராக எனக்கு ஆனந்தி அக்கா மீது எப்போதும் ஒரு கௌரவம் உண்டு.

இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை குறித்த பாராளுமன்ற விசாரணை குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு !

இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை குறித்த பாராளுமன்ற விசாரணை குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு !

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாடுகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையே இவ்வாறு சமர்பிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமலி வீரசேகர தலைமையின் கீழ், அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர். மேலும், இந்த அறிக்கை ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழுவிற்கு பரிந்துரைக்கப்படும் என்று சபாநாயகர் மேலும் அறிவித்தார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகள் குறித்து சபாநாயகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவ்வப்போது விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்தாக தெரிவித்த சபாநாயகர், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பதில் காவல்துறை மா அதிபரை கோரியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் – யாழ்.ஊடகவியலாளர்களிடம் பொலிஸார் 06 மணி நேர விசாரணை !

தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் – யாழ்.ஊடகவியலாளர்களிடம் பொலிஸார் 06 மணி நேர விசாரணை !

 

“தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் ” என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார் 06 மணி நேரம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர். அண்மையில் சமூக வலைத்தளங்களில், “தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் …” என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரில் போலி முகநூல்களில் பதிவுகள் பகிரப்பட்டன.

குறித்த பதிவுகள் பகிரப்பட்டு சில மணிநேரங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த பதிவு போலியானது என தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டதுடன், ஊடக சந்திப்பொன்றை நடாத்தி அவை போலியான விளம்பரங்கள் என அறிவித்திருந்தார். எனினும் கடந்த வாரம், “விகாரையை இடிக்க வாரீர் ” என போலி முகநூல்களில் விளம்பரப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பத்திற்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பலாலி பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் அச்சுவேலி பகுதியை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் வாக்கு மூலம் பெறுவதற்காக பலாலி பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பிரிவுக்கு அழைத்த பொலிஸார், ஊடகவியலாளர்களை அங்கிருந்து உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இரண்டு ஊடகவியலாளர்களின் தொலைபேசிகளை பெற்று சோதனையிட்டதுடன், அவர்களிடம் சுமார் 6 மணி நேரம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்ட பின்னர், குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் தாம் அழைக்கும் போது பொலிஸ் நிலையத்திற்கு சமூகம் அளிக்க வேண்டும் எனும் நிபந்தனையுடன் இருவரையும் பொலிஸார் விடுவித்துள்ளனர்.

அதேவேளை தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், நல்லூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் வாசுகி சுதாகரன் உள்ளிட்டோரை பலாலி பொலிஸார் வாக்கு மூலம் வழங்க என நேற்றைய தினம் வியாழக்கிழமை பலாலி பொலிஸ் நிலையத்தின் உப பிரிவுக்கு அழைத்து சுமார் 02 மணி நேரம் காத்திருக்க வைத்த பின்னரே வாக்கு மூலங்களை பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பை வெட்டிவிட்டது தமிழரசுக்கட்சி !

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பை வெட்டிவிட்டது தமிழரசுக்கட்சி !

புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் கூட்டாக செயற்படுவது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த அழைப்பிற்கு உரிய நேரம் வரும்போது இந்த விடயம் பற்றி நாம் கலந்துரையாடலாம் என இலங்கைத் தமிழரசுக் கட்சி பதிலளித்துள்ளது.

தமிழரசின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் அண்மையில் நேரில் சென்று சந்தித்து கூட்டாக செயற்படுவதற்கான அழைப்பு கடிதத்தை வழங்கியிருந்தனர். இந்த அழைப்பிற்கு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவஞானம் வழங்கிய பதில் கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தமிழரசுக் கட்சியை உடைக்கும் திடடம் பலிக்காது என்பதை தேசம்நெற் ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டியிருந்தது. எம் ஏ சுமந்திரனை கட்சியிலிருந்து வெளியேற்றலாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி போடும் கணக்கு பலிப்பதற்கான வாய்ப்பில்லை. மாறாக எம் ஏ சுமந்திரன் மீண்டும் கட்சிக்குள் பலம்பெற்று வருகின்றார்.

சிவஞானம் வழங்கிய பதில் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் தற்போதைய அரசாங்கம் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாலும் அதற்கான முன்வரைவு எதையும் சமர்ப்பிக்காத நிலையிலும், நாம் அரசமைப்பு வரைவு பற்றி இப்போது விவாதிப்பது பொருத்தமானதாகக் காணப்படவில்லை என உணரப்பட்டது.

மேலும் எமது கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து வலியுறுத்தி வரும் தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடு இன்னும் வலுவுள்ளதாகவே பேணப்படும் என்பதும் தெரிவிக்கப்பட்டது. எனினும், அரசாங்கம் அதன் அரசமைப்பு உருவாக்க முன்மொழிவை துரிதமாக முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தி கோருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இவ் விடயம் தொடர்பில் உரிய நேரம் வரும்போது இந்த விடயம் பற்றி நாம் கலந்துரையாடலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அரசியல்வாதிகளே பாதாள உலக குழுக்களை வளர்த்து விட்டார்கள் – அனைவரும் களையெடுக்கப்படுவார்கள் – அமைச்சர் விஜேபால !

அரசியல்வாதிகளே பாதாள உலக குழுக்களை வளர்த்து விட்டார்கள் – அனைவரும் களையெடுக்கப்படுவார்கள் – அமைச்சர் விஜேபால !

 

கடந்த இரண்டு, மூன்று தசாப்தங்களாக அரசியல்வாதிகளின் ஆசிர்வாதத்தால் பாதாள உலகம் வளர்க்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, பாதாள உலகத்திற்கு கடந்த காலங்களைப் போல அரசியல் பாதுகாப்பு கிடைக்கவில்லை என்றும் எந்தவொரு தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது அமைச்சரோ பாதாள உலகத்துடன் தொடர்புகளைப் பேணுவதில்லை என்றும் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பாதாள உலகத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக சில நடவடிக்கைகளை வெளியிட முடியாது என்றும் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.

பாதாள உலக குழுக்களின் தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இலங்கையில் எதிர்காலத்தில் நிச்சயமாக பாதாள உலகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல நடவடிக்கையும் எடுக்கப்படும் என முன்னதாக தெரிவித்துள்ளார்.

சாரதியை ‘கழுதை வாடா – பூருவா, வரேன்’ என அழைத்த அனுர தரப்பு எம்.பி – வலுக்கும் கண்டனங்கள் !

சாரதியை ‘கழுதை வாடா – பூருவா, வரேன்’ என அழைத்த அனுர தரப்பு எம்.பி – வலுக்கும் கண்டனங்கள் !

பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தனது சாரதியை கழுதை என அழைத்ததாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டமை பேசுபொருளாகியுள்ளது.

பாதாள உலக குழுவை சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான விடயங்களை ஆராய சுனில் வட்டகல புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்தார். இதன்போது, அவரை சூழ்ந்த ஊடகவியலாளர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் திறன் குறித்து கேள்வி எழுப்பினர்.

இவற்றுக்கு பதிலளிக்க மறுத்த பிரதி அமைச்சர், ‘பூருவா, வரேன்’ (கழுதை, இங்கே வா) என கடும் தொனியில் தனது சாரதியை தொலைபேசி மூலம் அழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுனில் வட்டகல தனது ஓட்டுநரை பூருவா (கழுதை) என்று அழைத்தமை குறித்து அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ வருத்தம் தெரிவித்திருந்ததுடன் குறித்த சந்தர்ப்பத்தில் பிரதியமைச்சர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

கொலைகாரன் லவ் க்ரஷ் மெட்டீரியல் ஆக்கிவிட்டீர்கள். விசாரணை எப்போது…? பாராளுமன்றில் சாமர சம்பத் துப்பாக்கியைக் கொடுத்த பெண் இந்தியாவிலா ?

கொலைகாரன் லவ் க்ரஷ் மெட்டீரியல் ஆக்கிவிட்டீர்கள். விசாரணை எப்போது…? பாராளுமன்றில் சாமர சம்பத் துப்பாக்கியைக் கொடுத்த பெண் இந்தியாவிலா ?

ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள ஒரு குற்றவாளியை இன்று புகைப்படங்களை வெளியிட்டு வீரராக அறிமுகப்படுத்தியமை குறித்து முறையான விசாரணை வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து நாடாளுமன்றில் கேள்வி பதில் நேரத்தில் நேற்று அவர் கருத்து தெரிவிக்கையில், புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டு பிரதான சந்தேக நபரை 8 மணித்தியாலங்களில் கைது செய்தாக பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் கூறினார். பொலிஸ் திணைக்களம் 8 மணித்தியலங்களில் திறமையாக சந்தேக நபரை கைது செய்தமை தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால் மற்றைய சந்தேக நபரான பெண்ணை இதுவரை கைது செய்யவில்லை. அந்தப் பெண் நீர்கொழும்புக்கு சென்று துப்பாக்கிதாரியிடம் இருந்து பிரிந்து தனியாக சென்றுள்ளார். ஆனால் பிரதான துப்பாக்கிதாரி மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் நீங்கள் இவ்வாறு கூறினாலும் ஊடக செய்திகளில் டுபாயில் இருந்து துப்பாக்கிதாரி காட்டிக்கொடுக்கப்பட்டமையினாலேயே துப்பாக்கிதாரியை கைது செய்தாக கூறப்பட்டுள்ளது. அதன்படி இது எமது திறமையால் அன்றி டுபாயில் இருந்து பாதாள கும்பலால் காட்டிக்கொடுத்தமை ஊடாகவே அவர் கைதாகியுள்ளார். இப்படிதான் ஊடகங்கள் கூறுகின்றன.

இதேவேளை சந்தேக நபரின் படங்களை வெளியிட்டு நாட்டுக்கு வீரராக்கியுள்ளீர்கள். இவ்வாறு புகைப்படங்களை பகிர்வதற்கு இடமளிக்க வேண்டாம். அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது பாதுகாப்பு தரப்பினரை பார்த்து சிரித்து, காதல் கொள்வது போல் காணொளிகள், படங்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்கள் எவ்வாறு சமூக வலைத்தளங்களுக்கும், ஊடகங்களுக்கும் வெளியாகின என்பது தொடர்பில் விசாரணை செய்யுங்கள் என்றார் சாமர சம்பத்.

நீதிமன்றத்துக்குள் துப்பாக்கியைக் கடத்தி வந்த பெண் சில சமயங்களில் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகங்களும் தற்போது தெரிவிக்கப்படுகின்றது.