உள்நாட்டுச் செய்திகள்
உள்நாட்டுச் செய்திகள்
ரியூசன் வாத்திகள் பதிவுசெய்ய வேண்டும் !
ஆசிரியர் கவுன்சில் மூலம் பதிவு எண்கள் வழங்கப்படும் ஆசிரியர்களே தனியார் வகுப்புக்களை நடத்தலாம். அதன்படி அரசாங்கம் தனியார் பயிற்சி வகுப்பு ஆசிரியர்களை பதிவு செய்யும் திட்டம் தொடர்பான முன்மொழிவுகளை அமைச்சரவையில் விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி பதிவு செய்யாத ஆசிரியர்கள் தனியார் வகுப்புக்களை நடத்த முடியாது. இதன் மூலம் தனியார் பயற்சி வகுப்புகளை ஒழுங்குபடுத்த முடியும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
தனியார் கல்வி நிலையங்களை நடாத்தும் ஆசிரியர்கள் கிரிமனல் நடவடிக்கைகளிலும் பாலியல் தூஸ்பிரயோகங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவில் தனியார் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் தற்சுதன் பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்டமை தெரிந்ததே.
வெளிநாடுகளில் கைதாகும் பாதாள உலக குற்றவாளிகள் !
இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்த ‘ரோட்டும்ப அமில’ என்ற அமில சம்பத் ரஷ்யாவில் கைதானார். மிகுந்த அரசியல் செல்வாக்குடைய இக் குற்றவாளி , அநுர அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இவர் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம்.

அதேவேளை பிரான்சில் தலைமறைவாகியிருக்கும் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கொல்லப்பட்ட கணேமுல்லே சஞ்சீவவின் கூட்டாளியான ‘ நேவி தினேஷ்’ மூன்று பொலிஸ் அதிகாரிகளை குடும்பத்துடன் கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். கணேமுல்லே சஞ்சீவவின் இறப்பின் பின்னர் , சஞ்சீவ வழிநடத்திய பாதாள உலகக் குழுவுக்கு தலைமை தாங்கி நேவி தினேஷ் கொலை, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றார். தினேஷ்சின் தந்தை மற்றும் சகோதரர் போதைப்பொருட்களுடன் கம்பஹா பொலிஸார் கைது செய்யதைத் தொடர்ந்தே இவ் கொலை மிரட்டல்கள் தொலைபேசியூடாக விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பொடி லெசி உட்பட வேறும் சிலரும் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டடனர். இலங்கையில் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் உலகின் எந்தப் பாகத்தில் ஒழிந்தாலும் அவர்களை நாடு கடத்துவதற்கு அரச அழுத்தங்களை வழங்கி வருகின்றது.
இதுவரை சிறையில் இருக்க வேண்டியவர்கள் வீதிகளில் சுதந்திரமாக நடமாடினார்கள். இப்போது சிறையிலிருக்க வேண்டியவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டுக் கொண்டுள்ளனர். நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றது.
போராட்டக்காரர்களை விரட்டியடிக்கும் என்பிபியினர் – சஜித் காட்டம்!
வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் சிற்பிகளாக இருந்தவர்கள் இன்று, ஆட்சிக்கு வந்த பிறகு போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார். கல்வியமைச்சின் முன்னால் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அபிவிருத்தி அதிகாரிகள் தாக்கப்பட்டதை குறிப்பிட்ட சஜித் மக்கள் ஜனநாயக உரிமைக்காக குரல் கொடுப்பது குற்றமாகிவிட்டது என்கிறார்.
கேகாலை மாவட்ட உள்ளூராட்ச்சி சபை வேட்பாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மின்வெட்டுக்கு குரங்குகள் காரணம் என்றும் , அரிசித் தட்டுப்பாட்டுக்கு நாய் சோறு சாப்பிடுவது காரணம் என கதைகளை கூறி அரசாங்கம் மக்களை திசை திருப்புவதாகவும் குறிப்பிட்டார். வேலையில்லா பட்டதாரிகள் ஏமாற்றப்பட்டு விட்டனர். வரிச்சுமை அதிகரித்து விட்டது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காட்டுச் சட்டம் நிலவுகிறது. பாதாளக் குழுக்கள், கொலைகாரர்கள் மற்றும் ஊழல்வாதிகளின் செல்வாக்கு சமூகத்தை ஆக்கிரமித்துள்ளது. என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.
விரைவில் வடமாகாண காணிகள் விடுவிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் – அமைச்சர் பிமல்
“ மன்னார் மறிச்சுக்கட்டி முதல் காங்கேசன்துறை வரை மக்களுக்குச் சொந்தமான காணிகளை படையினர், நிறுவனங்கள் மற்றும் சில தனியார்கள் தமதாக்கிக் கொண்டுள்ளனர். இப்போது இது குறித்து ஆராய்ந்து முடிவு செய்யக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆகவே காணிச் சொந்தக்காரர்களிடமே அவர்களது காணிகளை மீண்டும் ஒப்படைப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து பெருந்தெருக்கள் , துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்யாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த 29 ஆம் திகதி மன்னாரில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் வடக்கில் மூன்று பெரிய கைத்தொழிற்பேட்டைகளை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வில்பத்து ஊடாகச் செல்லும் பாதையை விரைவில் திறப்பதாகவும் வாக்குறுதியளித்துள்ளார். அத்தோடு வடக்கில் தேசியப் பிரச்சினையொன்றுள்ளது என்பதை ஏற்றுக் கொண்ட அவர், மன்னார் மாவட்டத்தில் வாழும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களை ஒருங்கிணைத்து அவர்களுடைய பிரச்சினைகளை தீர்க்கும் வேணவாவுடன் அரசு இருப்பதாகம் தெரிவித்தார்.
என்னதான் போராடினாலும் அரச வேலை தர முடியாது – அமைச்சர் லால் கந்தா !
வேலை இல்லாதவர்களுக்கு அரசே வேலை வழங்கும் என்ற நாட்டின் இதுவரையான கொள்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதேநேரம் அரசு தலையிட்டு வேலைவாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். இதனால் தான் அவர்கள் அரசே வேலை தர வேண்டும் என்று கோரி பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறார்கள். அப்படியே எல்லோரையும் அரச பணியில் சேர்க்க முடியாது என அமைச்சர் கே.டி. லால் காந்தா தெரிவித்துள்ளார்.
நிலைமை இவ்வாறிருக்க யாழ் பல்கலைக்கழகம் உட்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் தங்களுக்கு இலவசக் கல்வியும் வேண்டும் அரச வேலையும் வேண்டும் ஆனால் 5ம் வகுப்பு மாணவர்கள் எழுதக் கூடிய புலமைப்பரிசில் பரீட்சை போட்டிப் பரீட்சையும் இல்லாமல் வேலை தர வேண்டும் என்று கோருகின்றனர்.
புத்தகப்பையின் எடையை குறைக்க கல்வியமைச்சு அறிவுறுத்தல் !
பள்ளிக்கூடங்களுக்கு பிள்ளைகள் எடுத்து வரும் பைகளின் எடையை குறைப்பதற்கான அறிவுறுத்தல்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு கல்வியமைச்சரின் பள்ளி சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துப் பிரிவால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவின் இயக்குனர் கங்கா தில்ஹானியின் கூற்றுப்படி சில பள்ளிகளில் தேவையற்ற புத்தங்களை கொண்டுவரும்படி பிள்ளைகளை வருத்துவதாக தெரியவந்துள்ளது. அத்துடன் இது தொடர்பான புகார்கள் தமக்கு கிடைத்துள்ளதாகவும் கூறுகிறார். மேலும் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களுக்கு கண்காணிப்பு குழுக்களை அனுப்பி விசாரணைகள் நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
அந்தவகையில் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளின்படி, பள்ளிப் புத்தகப்பையின் எடை பதினைந்து முதல் இருபது கிலோகிராம்களுக்கு குறைவாக இருக்க வேண்டும். அதன்படி முதலாம் ஆண்டு பள்ளிப் பிள்ளையின் பையின் எடை 2.6 கிலோகிராமும், இரண்டாம் ஆண்டுப் பிள்ளையின் பையின் எடை 3 கிலோகிராமும், ஐந்தாண்டுப் பிள்ளையின் பையின் எடை 4 கிலோகிராமும் இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. 10 ஆம் ஆண்டுப் பிள்ளையின் பள்ளிப்பையின் எடை சுமார் 7 கிலோகிராமுமாக இருக்க வேண்டும் என்று கல்வியமைச்சின் சுகாதாரப்பிரிவு சுட்டிக்காட்டுகிறது.
போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் இளைஞன் மர்ம மரணம் !
மினுவாங்கொட பன்சில்கொடயில் இயங்கிய வந்த தனியார் போதைப் பொருள் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 33 வயதான இளைஞன் சந்தேகத்திற்கிடமான வகையில் மருத்துவமனையில் இறந்துள்ளார். இறந்த இளைஞன் கைகளில் விலங்கும் கால்களில் இரும்புச் சங்கிலியும் அணிவித்து தாக்கியதாக கூறப்படுகிறது. பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
வடக்கிலும் புனர்வாழ்வு மையங்களின் அவசியத்தை யாழ் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவ கலாநிதி பவானந்தராஜா பாராளுமன்றத்தில் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ் ப்பாணத்தில் சிலர் தனிப்பட்ட முறையில் இந்த இல்லங்களை நடத்துகின்றனர். அவர்கள் இவ்விடயங்களில் பயற்சி பெற்றவர்களா என்பதும் கேள்விக்குறியே. மேலும் வடக்கில் போதைப்பொருள் மற்றும் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கான தனிநபர் பிரேரணையை யாழ் பா உ ரஜீவன் கொண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
சீனாவிற்கெதிராக இந்தியாவுடன் பாதுகாப்பு போர் ஒப்பந்தம் பகீர் கிளப்பும் – வசந்த முதலிகே
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஏப்பிரல் 4 ஆம் திகதி இலங்கை விஜயத்தின் போது 26 ஒப்பந்தங்கள் உட்பட சீனாவிற்கு எதிராகவும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இலங்கை கையொப்பம் இட இருப்பதாக இந்தியச் செய்திகளை மேற்கோள் காட்டி மக்கள் போராட்ட முன்னணி உறுப்பினர் வசந்த முதலிகே கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடும் போது ”இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் சீனாவின் வளர்ந்து வரும் இராணுவ செல்வாக்கை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாக கொண்டுள்ளது “ என இந்திய வலைத்தளமான எகனாமிக்ஸ் டைம்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறுகிறார். உலகம் தற்போதிருக்கின்ற போர்ப் பதட்டத்தில் இலங்கையையும் பொறியில் சிக்க வைக்க கூடாது என எச்சரிக்கிறார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கையின் நிலங்கள், மின் நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் தொட்டிகள் என அனைத்தையும் இந்தியாவிற்கு தாரை வார்த்த மாதிரி செய்ய என்பிபி அரசாங்கத்திற்கு மக்கள் அதிகாரம் வழங்கவில்லை என எச்சரிக்கிறார். மோடியின் இலங்கை விஜயத்தின் போது சம்பூர் மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுவார் எனக் கூறப்படுகிறது.
இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் சலுகை வழங்கப்பட விட மாட்டோம் ! தமிழ் மக்கள் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது ! பிரித்தானிய தொழிற்கட்சி சென் கந்தையா
இம்மாதம் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை பற்றிய மீளாய்வு ஐரோப்பிய ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது. “ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை இலங்கைக்கு வழங்க விடாமல் தடுப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். அதற்கான அழுத்தங்களை வழங்குவோம்” என பிரித்தானியாவில் ஆளும் தொழிற்கட்சி அரசின் முக்கியஸ்தர் சென் கந்தையா தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இலங்கையின் இராணுவத் தளபதிகளுக்கு எதிரான தடையுத்தரவை பிரித்தானிய அரசு கொண்டுவருவதற்கு பின்னிருந்து செயற்பட்டவர் சென் கந்தையா மற்றும் அருண் கனநாதன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஜிஎஸ்பி வரிச்சலுகை தடுக்கப்பட்டால் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மட்டமல்ல வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களும் பாதிக்கப்படுவார்களே என்று கேட்ட போது, தமிழ் மக்கள் சில தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றும் சென் கந்தையா தெரிவித்தார்.
தமிழ் கட்சிகள் தேர்தலுக்காக மட்டும் கூட்டுச் சேரும் அதே நேரம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காகவும் கூட்டுச்சேர்ந்து ஒரே அணியில் செயற்பட வேண்டும் என பிரித்தானிய தொழிற்கட்சியின் முக்கிய பிரமுகரான சென் கந்தையா தேசம்நெற்க்கு நேற்று வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார். தமிழ் கட்சிகள் தமிழ் மக்களுக்கு நேர்மையுடன் இல்லாததாலேயே அவர்கள் சிங்கள கட்சிகளுக்கு வாக்களித்திருப்பதாகத் தெரிவித்தார் சென் கந்தையா. தற்போது தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்துள்ளனர் எனத் தெரிவித்த சென் கந்தையா அடுத்த நான்கு ஆண்டுகள் தமிழ் மக்களின் அரசியலில் முக்கியமான காலகட்டம் எனத் தெரிவித்தார். இதனைக் கருத்தில் எடுத்து தமிழ் கட்சிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் சென் கந்தையா கேட்டுக்கொண்டார்.
பிரித்தானிய அரசு, இராணுவத் தளபதிகளுக்கு எதிராகவும் கருணா அம்மானுக்கு எதிராகவும் தடையுத்தரவைக் கொண்டு வரும் விடயம் இலங்கை அரசுக்கு ஜனவரியிலேயே அறிவிக்கப்பட்டு இருந்தாக சென கந்தையா தெரிவித்தார். என்பிபி அரசு ஆட்சிக்கு வந்தபோதும் கடந்த காலங்களில் இருந்து மாற்றங்கள் ஏது இல்லை. இந்தத் தடையுத்தரவு இதனோடு நின்று விடப் போவதில்லை, இன்னும் பலர் இத்தடையுத்தரவுக்கு உள்ளாவார்கள் என்றும் சென் கந்தையா தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அத்தோடு இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவோம், இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான நியாயமான தீர்வை சர்வதேசத்தின் துணையோடு தாங்கள் கொண்டுவருவோம் என்றும் அவர் வலியுறுத்தினார்.









