செய்திகள்

செய்திகள்

செய்திகள்

தனக்கு அன்பளிப்பாக வழங்கிய நகைகளை ஏழைக்கு வழங்கிய பொலிஸ் அதிகாரி

தென் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் டீ.டபிள்யூ. பிரதாப் சிங்க ஓய்வுபெற்றுச் செல்வதையிட்டு தென் பிராந்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் காலியில் பிரிவுசார நிகழ்வை நடத்தினார்கள்.
38 வருடகாலம் பொலிஸ் சேவையில் அவர் ஆற்றிய பணிகளை பலரும் பாராட்டினார்கள். நிகழ்வின் முடிவில் அவருக்கு 3 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜயந்த குலதிலக அதனை அவருக்கு வழங்கினார்.  இவற்றை பெற்றுக்கொண்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரதாப்சிங்க, அதற்கு நன்றி தெரிவித்ததுடன் அந்தப் பகுதியில் வறுமையில் வாழும் வீடில்லாத ஒரு குடும்பத்துக்கு அவற்றை வழங்குமாறும், அதன்மூலம் அக்குடும்பம் புதிய வீடு ஒன்றை பெற முடியுமென்றும் கூறினார்.

அல்லது நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பொலிஸ் குடும்பத்தினருக்கு அதனை வழங்குமாறும் கூறினார்.  காலி நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

அங்குலானை கொலைச்சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவும் விசாரணை

angulana.jpgஅங்கு லானையில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பான விசேட விசாரணை ஒன்று மனித உரிமை ஆணைக்குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் தொடர்பாக ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களை தொடர்ந்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அங்குலானையில் கொலைசெய்யப்பட்ட இரு இளைஞர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டனரா என்பது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.  இதற்காக சிரேஷ்ட விசாரணை அதிகாரிகள் அங்குலானைக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மடுமாதா உற்சவத்தில் அமைச்சர்கள் உட்பட இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

madhush_2.jpgமடு தேவாலய உற்சவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகி காலை 9 மணிக்கு இடம்பெறும் திருசொரூபபவனியுடன் நிறைவுபெறவுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் வணபிதா விக்டர் சோசை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;  உற்சவம் கொழும்பு புதிய அதிமேற் ராணியார் பேரருள் திரு மல்கம் ரஞ்சித் தலைமையில் நடைபெறவுள்ளது. அவருடன் இணைந்து யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆகியோர் மேற்கொள்ளவுள்ளனர்.

விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேர் நேற்று வெள்ளிக்கிழமை வரை வந்துள்ளனர். இவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 200 குடும்பங்கள் ஆலய விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனையவர்கள் தங்குவதற்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நற்கருணை விழா இளைப்பாறிய கொழும்பு அதிமேற்ராணியார் பேரருள் திரு ஒஸ்வேல்ட் கோமிஸ் தலைமையில் நடைபெற்றது.  இதில் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ பிரதியமைச்சர்களான சரத் குணரட்ன மற்றும் நியோமல் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர் என்றார்.

பாடசாலை மாணவர்களுக்கு சுழல் பந்து வீச்சு பயிற்சி முகாம் நேற்று திருமலையில் ஆரம்பிப்பு – முரளிதரன் பயிற்சி வழங்கினார்

murali.jpgகிழக்கு மாகாணத்தில் திறமைவாய்ந்த புதிய கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் நோக்குடன் மற்றும் சிறப்பாக பந்து வீசுவது தொர்பான யுக்தியை கற்றுக் கொடுக்கும் முகமாக நேற்று திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டரங்கில் உலகப் புகழ்பெற்ற சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனால் சுழற் பந்துவீச்சு பயிற்சி முகாமொன்று நடத்தப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 20 பாடசாலைகளின் 13 வயதுக்கும் 19 வயதுக்கும் உட்பட்ட 150 பாடசாலை மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இதற்கான ஒழுங்கை செலிங்கோ லைஃப் நிறுவனம் சமூக நலத்திட்டங்களில் ஒன்றாக இந்தத்திட்டத்தை நடத்தியது. திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை அணியின் முன்னணி விளையாட்டு வீரர் ஒருவரால் நடத்தப்பட்ட முதலாவது பயிற்சி முகாம் இதுவாகும்.

இந்நிகழ்வில் முரளியின் முதலாவது பயிற்றுவிப்பாளரான சுனில் பெர்னாண்டோ மற்றும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பியால் விஜேதுங்க ஆகியோர் உதவியாகப் பணிபுரிந்தனர். இந்நிகழ்வில் செலிங்கோ லைஃப் பிரதித் தலைவர் ஆர். ரெங்கநாதன், பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சி, நகர சபைத் தலைவர் கெளரி முகுந்தன் மற்றும் ஆயிரக் கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் இதில் கலந்துகொண்டனர்.

பன்றிக் காய்ச்சல் காரணமாக ஹஜ் கடமைக்கு புதிய கட்டுப்பாடு

haji.jpgஉலக நாடுகளில் பன்றிக் காய்ச்சல் பரவி வருவதால் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு வருகை தரும் யாத்திரிகர் தொடர்பில் சவூதி அரேபிய அரசாங்கம் புதிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.

அதன்படி 12 வயதுக்குக் குறைவானவர்களும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் கர்ப்பிணித் தாய்மாரும் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்வது ஏற்றதாகும் என சவூதி அரேபிய அரசாங்கம் அறிவித்துள்ளதாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் வை. எல். எம். நவவி தெரிவித்தார்.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரவிவரும் புதிய இன்புலுவன்சா ஏ (எச்-1, என்-1) வைரஸ் காய்ச்சல் காரணமாகவே சவூதி அரேபிய சுகாதார அமைச்சு புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் இது கட்டுப்பாடோ தடையோ அல்ல எனவும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இது தவிர இருதய நோயாளிகள்,  சிறுநீரக கோளாறு உடையோர், நீரிளிவு நோயாளிகள் போன்றோரும் ஹஜ் கடமையை நிறைவேற்ற வருவதை தவிர்க்குமாறும் சவூதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. சவூதி அரேபிய அரசாங்கத்தின் புதிய அறிவுறுத்தல்கள் குறித்து இலங்கையிலுள்ள சகல ஹஜ் முகவர் நிலையங்களையும் அழைத்து அறிவூட்ட உள்ளதாகவும் நவவி கூறினார்.

இதேவேளை இந்த வருடம் சர்வதேச கடவுச் சீட்டு உள்ளவர்களுக்கு மாத்திரம் ஹஜ் யாத்திரிகை செல்ல அனுமதி வழங்கவும் சவூதி அரேபியா அரசு தீர்மானித்துள்ளது. முன்னர் மத்திய கிழக்கு கடவுச்சீட்டு மற்றும் ஹஜ்ஜுக்கான விசேட கடவுச் சீட்டு உள்ளவர்களுக்கும் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

உலக பட்மிண்டன் காலிறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெறும் முதல் இந்தியப் பெண்

sainaafp222.jpgஉலக பட்மிண்டன் சாம்பியன் போட்டிகளின் கால் இறுதிக்கு தகுதிபெற்றுள்ள முதலாவது இந்தியப் பெண் என்ற பெருமையை சைனா நெஃவால் என்ற வீராங்கனை பெற்றிருக்கிறார்.

19 வயதான இந்த இந்திய யுவதி, வட இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவராவார். பல்கேரிய நாட்டுப் பெண்ணுடன் விளையாடி வெற்றிபெற்ற அவர் கால் இறுதியை எட்டியிருக்கிறார். சீன நாட்டின் வாங் லின்னுடன் இனி அவர் போட்டியிடவுள்ளார்

டெங்கு நுளம்பை அழிக்கும் (B.T. I) பக்ரியாக்கள் – கியூபா நிபுணத்துவ குழுவின் ஆய்வு அறிக்கை நேற்று சுகாதார அமைச்சில் கையளிப்பு

nimal_siripala_de_silva.jpgடெங்கு நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பீ. ரி. ஐ. பக்aரியா நுண்ணங்கிகளை இலங்கை உபயோகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது பற்றி நடத்தப்பட்ட ஆய்வுகளின் அறிக்கை நேற்று சுகாதார அமைச்சுக்கு கையளிக்கப்பட்டது.

கியூபாவிலிருந்து வந்த நிபுணத்துவ குழுவினர் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் இறுதி அறிக்கையை நேற்று சுகாதார அமைச்சில் கையளித்தனர்.

சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதார பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால, சுகாதார அமைச்சின் செயலர் டொக்டர் கஹந்த லியனகேயிடம் நேற்று கையளித்தார்.

சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் விசேட அழைப்பை ஏற்று டெங்கு நுளம்பு ஒழிப்புக்கான கியூபா பீ.ரி.ஐ. (B.T.I)  பக்aரியா நுண்ணங்கிகளை உபயோகிப்பதற்குரிய சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய்வதற்கு கியூபா விலிருந்து இரண்டு நிபுணர்கள் வருகை தந்தி ருந்தனர்.

இவர்கள் இருவரும் மேற்படி நுண்ணங்கிகளை உபயோகிப்பது தொடர்பாக பல இடங்களில் தமது ஆய்வுகளை நடத்தினர். இதன்படி, அம் பாந்தோட்டை, கண்டி, கொழும்பு மாவட்டங் களிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இதனையடுத்து நுண்ணங்கிகளை பயன்படுத் தக்கூடிய சாத்தியக்கூறுகள் மற்றும் சிபாரிசுகள் அடங்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டு நேற்று கையளிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிபாரிசுகள் தொடர்பாக ஆராய்ந்த பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவது என முடிவு செய்யப் பட்டுள்ளது. மேற்படி சிபாரிசுகளடங்கிய அறிக்கை அடுத்த வாரம் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் ஒப்படைக்கப்படும்.

வெளிநாட்டில் நடபெறும் இரண்டு மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எதிர்வரும் 19ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளார். அதன்பின்னரே அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

சாவகச்சேரி நகரசபை மைதானமும் இந்து மயானமும் பொது மக்களின் பாவனைக்காக வெள்ளி முதல் திறப்பு

சாவகச்சேரி, நகர சபைக்குரிய விளையாட்டு மைதானம் மற்றும் இந்து மயானம் என்பன வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து விடப்படுவதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத் தேவைகள் காரணமாக ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டிருந்த ஏற்பாடுகளைப் பொதுமக்கள் நலன்கருதி அகற்றுவது தொடர்பில் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு இணங்க பாதுகாப்பு உயரதிகாரிகளுடன் நடந்த கலந்துரையாடலின் பின்னர் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியும் சாவகச்சேரி நகர சபைக்கு விஜயம் செய்திருந்த போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்.குடாநாட்டின் பல்வேறு துறைகள் சார்ந்த அபிவிருத்தி மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் அமைச்சரும் ஆளுநரும் யாழ்.குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அபிவிருத்தி மேம்பாட்டு நடவடிக்கைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

சிறைச்சாலைகளை பார்வையிட உயர்மட்ட சபை நியமனம்

சிறைச் சாலைகளைப் பார்வையிடுவதற்கான உயர்மட்ட சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி, சட்டமறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொட இந்த சபையை நியமித்துள்ளார்.

முன்னாள் இராஜதந்திரியான நந்தா கோடெகே தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் ராஜன் ஆசீர்வாதம், அர்ஜுன் தெரணியகல, எச். ஜீ. தர்மதாச, இம்தியாஸ் இஸ்மாயில் ஆகியோர் அடங்குகின்றனர்.

நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் உள்ள சிறைச்சாலை திணைக்க ளத்தின் நிர்வாகத்தில் உள்ள 25 சிறைச்சாலைகளின் நிர்வாகம், கைதிகளின் நலன் மற்றும் குறைபாடுகள், பிரச்சினைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காகவே அமைச்சர் மிலிந்த மொரகொடவினால் இந்த சபை நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது. இச்சபை உறுப்பினர்கள் எந்நேரமும் சிறைச்சாலைக்குச் சென்று சுயாதீனமாக கைதிகளை பார்வையிடவும் முறைப்பாட்டு பதிவுப் புத்தகமொன்றையும் ஒவ்வொரு சிறையில் வைத்து அதில் பதியப்படுகின்ற முறைப்பாடுகளை விசாரணை செய்யவும் நீதி சட்ட மறுசீரமைப்பு அமைச்சினால் சகல அதிகாரமும் இச் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இடம்பெயர் மக்களுக்காக ஜப்பான் அரசு 117 மில் நன்கொடை

இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி கிராமங்களில் வாழும் மக்களின் சுகாதார மேம்பாட்டுக்காக ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 117 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.

உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும்; இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் குரியோ ரகஹாசி ஜப்பான் அரசாங்கத்தின் சார்பிலும்; இதற்கான ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர்.

ஜப்பான் அரசாங்கம் நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களின் சுகாதார மற்றும் மலசல கூட வசதிகளை செய்து கொடுக்கவென 117 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது. உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு இத்திட்டத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஆரம்பித்துள்ளதுடன், செப்டெம்பர் மாதம் இறுதிக்குள் நிறைவு செய்யவுள்ளது.