செய்திகள்

செய்திகள்

செய்திகள்

“தனிநாடு தருகிறோம் என கூறிய தலைவர்களை ஒதுக்கி விட்டு தமிழ் மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.” ஜனாதிபதி அனுர

“தனிநாடு தருகிறோம் என கூறிய தலைவர்களை ஒதுக்கி விட்டு தமிழ் மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.” ஜனாதிபதி அனுர

 

“தனிநாடு தருகிறோம் என கூறிய தலைவர்களை ஒதுக்கி விட்டு தமிழ் மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.” என ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க குருநாகலில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். யாழ். மக்கள் முதன்முறையாக தெற்கு அரசு மீது, தெற்குத் தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதைக் காணமுடிந்தது. இது மிக முக்கியமாகும். வடக்கில் உள்ள சில தலைவர்கள் தனிநாடு தருகின்றோம் எனக் கூறியபோதும், அப்படி கூறியவர்களின் அரசியல் பரம்பரையில் வந்தவர்கள் இருக்கின்றபோதிலும் மக்கள் எம்மை தேர்வு செய்தனர்.

அவர்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அவற்றை நாம் நிறைவேற்ற வேண்டும். எம்மிடையே மீண்டும் பிரிவினைவாதம், போர், நம்பிக்கையீனம் என்பன இல்லாத, அனைவரும் ஒன்றியைணக்கூடிய நாடொன்றைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்குரிய ஆசிர்வாதம் வடக்கு மக்களிடமிருந்து கிடைத்துள்ளது.

30 வருடகால போர் மற்றும் அரசியல் காரணங்களால் வடக்கு பகுதிக்கு அபிவிருத்திகள் சென்றடையவில்லை. அந்தப் பகுதி மக்களின் பிரச்சினைகளை வேகமாகத் தீர்க்க வேண்டும் என்றார்.

டொனால் ட்ரமின் அதிரடி நடவடிக்கை: சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் !

டொனால் ட்ரமின் அதிரடி நடவடிக்கை: சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் !
சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 18,000 வரையான இந்தியர்களில் 200 பேர் வரை நேற்று விமானத்தில் ஏற்றப்பட்டு செவ்வாய் இரவு இந்தியாவை வந்தடைந்தனர். சி -17 ரக இராணுவ விமானத்தில் இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் குடியேற்றவாசிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து ஆட்சியைக் கைப்பற்றிய டொனால் ட்ரம் ஜனவரி 20இல் பதவியேற்றதுமே தான் வழங்கிய வாக்குறுதிகளுக்காக செயலாக்கக் கட்டளைகளில் கையெழுத்திட்டார். அதன் படி அமெரிக்காவில் பிறந்து பிறப்புரிமையால் வழங்கப்படும் குடியுரிமையையும் நிறுத்தி அவர்களை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
அமெரிக்காவில் 11 மில்லியன் பேர் வரை சட்டவிரோதமாக வாழ்வதாக மதிப்பிடப்படுகின்றது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களை வெளியேற்றிவிட்டு அமெரிக்காவால் இயங்க முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் பொருளாதாரப் போரையும் ஒரே சமயத்தில் டொனால் ட்ரம் ஆரம்பித்துள்ளார். அதன் விளைவாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் உயரவுள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்காவால் வரி மூலம் தண்டிக்கப்பட்ட நாடுகள் வர விதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. கனடா அமெரிக்க பொருட்களுக்கு 25 வீத வரியை விதித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் பொருட்களின் விலைக அதிகரிக்கும். அத்தோடு குறைந்த சம்பளத்துடன் பணியாற்றிய குடியேற்றவாசிகள் திருப்பி அனுப்பப்டுகின்ற போது வேலைக்கான கேள்வி அதிகரிக்கும். உள்ளுரில் உள்ள தொழிலாளர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டிவரும். அதனால் பொருட்கள் இன்னமும் விலையேறும்.
அமெரிக்க ஜனாதிபதியினதும் அவருடைய பணக்கார பசங்களதும் கூட்டு விளையாட்டு அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் அரசியலில் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதே சமயம் இந்த தீவிர வலதுசாரிப் போக்கு ஏனைய மேற்குலக நாடுகளிலும் இதே போன்றதோரு வலதுசாரிப் போக்கைத் தூண்டுவதற்கே வழிவகுக்கும்.
சட்டவிரோதமாகக் குடியேறிய 200 வரையான இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டது, ஏனைய வலதுசாரி அரசியல்வாதிகளுக்கும் முனணுதாரணமாக அமைய உள்ளது. ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் என ஐரோப்பிய நாடுகளில் வலதுசாரித்துவம் மேலோங்கி வருகின்றது. ஓல்ற்ர நேற்றிவ் போர் டொச்லன்ட் என்ற ஏஎப்டி கட்சி வெளிநாட்டவர்களை அவர்கள் ஜேர்மனியில் பிறந்தவர்களாக இருந்தாலும் திருப்பி அனுப்ப வேண்டும் என்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் இலங்கையைச் சேர்ந்த மூவாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சட்டவிரோதமாக வாழ்கின்றனர். இவர்களும் விரைவில் திருப்பி அனுப்பப்படுவதற்கான வாய்ப்புகளே தென்படுகின்றது.

முல்லைத்தீவில் இரண்டு லட்சம் ஏக்கர் காணிகளை சுவீகரிப்பு செய்துள்ள வன இலாகா !

முல்லைத்தீவில் இரண்டு லட்சம் ஏக்கர் காணிகளை சுவீகரிப்பு செய்துள்ள வன இலாகா !

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள படையினர், வன இலாகா, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச கட்டமைப்புக்கள் மக்களுக்குரிய காணிகளை தொடர்ந்தும் அத்துமீறி அபகரிப்புச் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், மக்களின் காணிகளை ஆக்கிரமிப்புச் செய்கின்ற திணைக்களங்களைச் சார்ந்தவர்கள் இவ்வாறான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களுக்கு வருவதில்லை. இந்த அபகரிப்பாளர்கள் இந்த கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறானவர்களின் செயற்பாடுளை மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன். ஏன் எனில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009இற்கு முன்னர் வனவளத் திணைக்களத்திடம் 2,22,006 ஏக்கர், 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் அடாவடித்தனமாக எமது மக்களின் காணிகளுக்கும் எல்லைக்கல்லிட்டு 4,35,000 ஏக்கர் காணிகள் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது. அந்த வகையில் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எமது மக்களின் காணிகளை விடுதலைப் புலிகள் பாதுகாத்தனர். நிலம்தான் எமது உரிமை, நிலம் இல்லையேல் எதுவுமில்லை. அவ்வாறிருக்க எமது மக்களின் காணிகள் அனைத்தையும் அபகரிப்புச்செய்தால்> எமது மக்கள் காணியின்றி தெருவிலா இருப்பது? என்றார்.

இதேவேளை அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மக்களின் காணி தொடர்பான உரிமைகள் மீறப்பட கூடாது என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துமீறி நுழையும் மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்வது ஏற்க முடியாது – பா உ அடைக்கலநாதன் !

அத்துமீறி நுழையும் மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்வது ஏற்க முடியாது – பா உ அடைக்கலநாதன் !

 

அரசாங்கம் வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு இதுவரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என்று செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் விவசாய செய்கையை முன்னெடுத்துள்ள விவசாயிகளின் நெல்லுக்கு உரிய நிர்ணய விலையை தீர்மானிக்க அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் செல்வம். மேலும் தமிழக மீனவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு பற்றியும் கருத்து தெரிவித்த அவர்> இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். ஆனால் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

முன்னதாக இலங்கை கடற்படை, “வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் தென்னிந்திய மீனவர்களின் செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் எமது நிலை மாறப்போவதில்லை, தமிழக மீனவர்கள் மீது திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தப்படவில்லை என அறிக்கை வெளியிட்டிருந்தது.

இதேவேளை நேற்று முன்தினமும் மன்னார் தெற்கு கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களும் அவர்களது படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

ஈஸ்டர் தாக்குதலின் ‘மஹ மொலகரு’ கோட்டாபய ராஜபக்சவா ? – விரைவில் கைது ?

ஈஸ்டர் தாக்குதலின் ‘மஹ மொலகரு’ கோட்டாபய ராஜபக்சவா ? – விரைவில் கைது ?

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் புதிய “மஹ மொலகரு ” – முக்கிய காரணகர்த்தா – ஒருவரை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அசாத் மௌலானாவின் சனல் 4 வீடியோ பற்றி பேசிய உதய கம்மன்பில, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தற்போது பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலை மேற்கொண்டது இலங்கை புலனாய்வுத்துறை என்று சனல் 4 தெரிவித்திருந்தமை அனைவரும் அறிந்ததே.

உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிப்பதாக கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்குவந்தது. இந்த தாக்குதல்களுக்கு பொறுப்புகூற வேண்டியவர்கள் அரசாங்கத்திற்குள்ளேயே உள்ளதனால் பிரதான சூத்திரதாரி என்ற பெயரில் ஒருவரை முன்னிறுத்தி உண்மையான குற்றவாளியை பாதுகாப்பதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அசாத் மௌலானாவை நாட்டிற்கு அழைத்துவந்து அவரிடம் பெறப்படும் வாக்குமூலத்திற்கு அமைய முன்னாள் அரசபுலனாய்வு பிரதானி சுரேஷ் சலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை கைது செய்வதற்கான திட்டம் அரசாங்கத்திடம் காணப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

இம்மாதம் முதல் ‘GovPay’ – டிஜிட்டல் மயமாகும் இலங்கை அரசாங்க சேவைகள் !

இம்மாதம் முதல் ‘GovPay’ – டிஜிட்டல் மயமாகும் இலங்கை அரசாங்க சேவைகள் !

அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப கட்டமான ‘GovPay’ 2025 பெப்ரவரி 7ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

“இந்த புதிய முயற்சியானது, பாதுகாப்பான மற்றும் திறனான டிஜிட்டல் தளம் மூலம் தடையற்ற பரிவர்த்தனைகளை செயல்படுத்தும், அரசு நிறுவனங்கள் பணம் செலுத்தும் விதத்தை நெறிப்படுத்தி நவீனப்படுத்தும்” என்று ஜனாதிபதி அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கௌரவம் என்பதொன்று இருந்தால் மரியாதையாக வெளியேறுங்கள் மஹிந்தவுக்கு அரசு எச்சரிக்கை !

கௌரவம் என்பதொன்று இருந்தால் மரியாதையாக வெளியேறுங்கள் மஹிந்தவுக்கு அரசு எச்சரிக்கை !

கௌரவம் என்பதொன்று இருக்குமாயின் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ அரச இல்லத்தில் இருந்து வெளியேற வேண்டும் என இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார். இல்லையேல் நாங்கள் கழுத்தைப் பிடித்து தள்ளி வெளியேற்றுவோம் என்ற பாணியில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மேலும் தெரிவித்ததாவது, நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரச செலவுகள் இயலுமான வகையில் குறைக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, கோட்டபய ராஜபக்ஷ ஆகியோர் நாகரீகமான முறையில் அரச இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார்கள். ஆனால் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இன்றும் அரச இல்லங்களில் தான் உள்ளார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடித்தார் என்பதற்காக அவரை தோளில் சுமந்துக்கொண்டு திரிய முடியாது. அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். தமது பெற்றோரை பிள்ளைகள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவை பார்த்துக் கொள்வதற்கு அவரது மூன்று பிள்ளைகளுக்கும் முடியாவிடின் அவருக்கும் அவரது பாரியாருக்கும் வீடு வழங்கலாம். ஆனால் அவரது மூன்று பிள்ளைகளையும் அரசாங்கத்தால் பராமரிக்க முடியாது என்றார்.

இதேவேளை, அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

யாழில் தொடரும் போதைப்பொருள் பாவனை – அதிகரிக்கும் இளைஞர் மரணங்கள் !

யாழில் தொடரும் போதைப்பொருள் பாவனை – அதிகரிக்கும் இளைஞர் மரணங்கள் !

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவர் அதீத போதை காரணமாக சுகவீனமுற்று யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இளைஞனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீத போதை பாவனை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் சிறு குற்ற செயல்களில் ஈடுபட்ட நிலையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு ஓரிரு நாட்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் நண்பர்களுடன் இணைந்து போதையை நுகர்ந்த நிலையிலையே, அதீத போதை காரணமாக சுகவீனமேற்பட்டுள்ளது என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஆண்கள் பெண்கள் இருவரிடமும் போதைப்பொருள் பாவனை மலிந்து போயுள்ளதை வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் அண்மையில் ஜனாதிபதி அனுர குமார தலைமையில் இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பா.உ இளங்குமரன் போதைப்பொருளை கட்டுப்படுத்துவதில் யாழ்ப்பாண பொலிஸார் அசமந்தமாக காணப்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்ததும் கவனிக்கத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் 2022ஆம் ஆண்டின் பின்னர் ஊசி போதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பதுடன் சுமார் இருபதுக்கும் அதிகமான மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள் – கஜேந்திரகுமார்

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள் – கஜேந்திரகுமார்

இலங்கையின் சுதந்திர நாள் தமிழர் தேசத்தின் கரிநாள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுதந்திரம் கிடைத்த பின்னர் கொண்டு வரப்பட்ட புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் நிராகரித்தே வந்திருக்கின்றனர். அந்த அரசியலமைப்புக்கள் மூன்றும் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதை தமிழ் மக்கள் நிராகரித்திருந்தனர். அதேபோன்று இப்போதும் புதிய அரசியலமைப்பு கொண்டு வரும் நடவடிக்கைகள் தான் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழ் மக்கள் எப்போதும் நிராகரிப்பார்கள். அடிமைசாசனத்தின் அடையாளமாக இருக்கின்ற ஒற்றையாட்சி அடையாளங்களாக இருக்கின்ற தேசிய கீதம், தேசிய கொடியை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழில் தேசிய கீதம் பாடுவதால் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அண்மையில் தேசம் திரை நேர்காணலில் கருத்து தெரிவித்த விடுதலை புலிகள் தலைவரின் நேரடி கண்காணிப்பில் இயங்கிய வேர்கள் புலனாய்வு அமைப்பின் புலனாய்வாளர், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற கட்சியின் தலைவராகவுள்ள கஜேந்திரகுமார் தமிழ்தேசியம் – தனிநாடு என்று பேசுவது வேடிக்கையாக உள்ளது. திலீபன் உண்ணாவிரதம் இருந்த போது வெளிநாட்டு படிப்பு, சுகபோக வாழ்க்கை என இருந்த கஜேந்திரகுமார் உள்ளிட்டோர் இப்போது திலீபனுக்கு பேரணி வேறு செய்கிறார்கள் என தெரிவித்திருந்தார்.

பா.உ இராமநாதன் அர்ச்சுனா தனது முதல் பாராளுமன்ற அமர்வினை தொடர்ந்து தனது பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திடும் உறுதிப்பிரமாணத்தில் இந்த நாட்டிற்குள் இன்னுமொரு நாட்டையோ பிரிவையோ உருவாக்க மாட்டேன் என கையெழுத்திட்டு பாராளுமன்ற அமர்வில் இணையும் தமிழ்தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு தமிழ் மக்களிடம் தனிநாடு பெற்றுத் தருவோம் என பேசுவது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் மக்களிடமும் தமிழ் ஊடகங்களிலும் தேசியக்கொடிக்கும் தேசிய கீதத்துக்கும் எதிராகக் கருத்துத் தெரிவித்த போதும் அதற்குக் கட்டுப்பட்டே பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்கின்றனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மற்றுமொரு சட்டத்தரணி சுகாஸ் தாங்கள் தேசியக் கொடிக்கு அருகிலேயே செல்வதில்லை என்று ஒரு ஊடக நேர்காணலில் தெரிவித்து இருந்தார். அதனால் மக்கள் அவரைப் பாராளுமன்றம் அனுப்பி சங்கடப்படுத்த வேண்டாம் என அவருக்கும் செல்வராஜா கஜேந்திரனுக்கும் வாக்களிக்கவில்லை.

கஜாவின் பாணியில் கரி நாளாக்குவதா ? தேசிய மறுமலர்ச்சிக்காக இணைவதா? இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் !

கஜாவின் பாணியில் கரி நாளாக்குவதா ? தேசிய மறுமலர்ச்சிக்காக இணைவதா? இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் !

தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்றைய சுதந்திரதினத்தை கரிநாளாக அறிவித்திருந்தாலும் இன்றைய சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றிருந்தது. தமிழ் பகுதிகளிலும் சுதந்திர தின நிகழ்வுகள் வழமைக்கு மாறாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது.

“தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்” என்ற மகுட வாசகத்தின் கீழ் 77வது சுதந்திர தினத்தின விழா சுதந்திர சதுக்கம் மற்றும் சுதந்திர பிரதேசத்தை மையமாகக் கொண்டு நடைபெற்றிருந்தது. பொதுமக்கள் உள்ளீர்க்கப்பட்டு எளிமையாகவும் – கடந்த கால செலவுகள் முழுமையாக குறைக்கப்பட்டும் குறித்த விழா முன்னெடுக்கப்பட்டது.

மிக நீண்டகாலமாக தென்னிலங்கை மக்களை மட்டுமே மையப்படுத்திய வகையில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட இலங்கை சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதிநிதிகள் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வுகளின் ஆரம்பத்திலேயே தமிழில் இலங்கை தேசிய கீதம் இசைக்கப்பட்டது பலரின் கவனத்தையும் ஈர்ந்திருந்தது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தகவலின்படி, இந்த ஆண்டு சுதந்திர தின நிகழ்வுகளுக்கான செலவுகள் 80 மில்லியன் ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது என அறிய முடிகிறது. கடந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு 200 மில்லியன் ரூபா செலவாகியிருந்தது என மதிப்பிடப்பட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.

இதேவேளை தேசம் நெட் ஊடகக் குழும இயக்குநர் தேசம் ஜெயபாலன் தனது சுதந்திர தின வாழ்த்து செய்தியில், இனவாதம் மதவாதம் அற்ற ஆரோக்கியமான இலங்கை ஒன்று உருவாகிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. கடந்த கால சுயநல அரசியல் என்ற மாய வலையில் இருந்து விடுபட்டு இலங்கை வாழ் தமிழர்கள் தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஆக்கபூர்வமான வகையில், அரசின் பிரதிநிதிகளுடன் பேசி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இனவாத கருத்துக்களை விதைக்காது அபிவிருத்தி சார்ந்த பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளும் ஆளுமையான சுயநலமற்ற தலைவர்களை ஜனநாயக தேர்தல்களில் தமிழர்கள் தெரிவு செய்ய வேண்டும். அப்போது தான் தேசிய பொருளாதாரத்தில் தமிழர்கள் தங்களை இணைத்து அபிவிருத்தி சார் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இலங்கையர்களாக இணைவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.