செய்திகள்

செய்திகள்

செய்திகள்

சாமான்யன் முப்படைகளின் தலைவனாக நின்று தேசிய கொடியை ஏற்றிய போது நான் கண்கலங்கிட்டேன் – பிரதியமைச்சர் அருண் நெகிழ்ச்சி !

சாமான்யன் முப்படைகளின் தலைவனாக நின்று தேசிய கொடியை ஏற்றிய போது நான் கண்கலங்கிட்டேன் – பிரதியமைச்சர் அருண் நெகிழ்ச்சி !

 

ஓர் சாமான்ய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஓர் குடிமகன் முப்படைகளின் தலைவராக சுதந்திர தினத்தில் தேசிய கொடியை ஏற்றிய போது அவரின் பின் வரிசையில் நின்ற நான் கண் கலங்கிவிட்டேன் என நெகிழ்ச்சியான பேஸ்புக் பதிவொன்றை திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா பகிர்ந்துள்ளார்.

குறித்த பேஸ்புக் பதிவில், நான் சரியாக அந்த கொடிக் கம்பத்துக்குப் பின்னால் இருந்த தொகுதியில் நின்றிருந்தேன். அவர் தேசியக் கொடியை ஏற்றிய பொழுது என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. காரணம் வேறு ஒன்றும் இல்லை.

ஒரு சாமானியன் இன்று முப்படைகளினதும் தளபதி என்ற அந்தஸ்துடன் ஜனாதிபதியாகத் திகழ்கின்றார். எத்தனையோ சவால்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், படுகொலைகளையும் தாண்டி இன்று அரியாசனம் இருக்க வேண்டிய இடத்தில் சாமான்ய ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். இரவு பகல் பாராது அயராது நாட்டிற்காக உழைக்கின்றார்.

அவரைப் பற்றி மிகவும் நெருக்கமாக அறிந்தவர்களுக்கு மாத்திரமே தெரியும் அவர் எவ்வளவு சாமான்யமானவர் என்று. இன்று அவர் மீது சிலர் கொண்டுள்ள வஞ்சம் ஒரு சாதாரண விடயம் அல்ல. அது ஏழை எளிய அடித்தட்டு வர்க்கத்தின் மீது கொண்டுள்ள வஞ்சம். வர்க்க வஞ்சம். இதனை நாம் சாதாரணமாக கடந்து செல்லவும் முடியாது, கணக்கெடுத்துக் கொண்டு நேரத்தை வீணடிக்கவும் முடியாது. நாம் நமது பயணத்தை மேற்கொள்வோம். இதுவொரு நீண்ட பயணம்.

என்னமோ இதுவரைக்கும் அரிசி இறக்குமதி செய்யாத நாடு போல. உப்பில் தன் நிறைவு கண்ட நாடு போல. எப்படியோ எல்லாம் வசை பாட நினைத்தவர்கள் இன்று இதில் வந்து நிற்பதே யதார்த்தம். அனுபவம் இல்லை என்றார்கள், அனுபவசாலிகள் பதுக்கிய பல விடயங்கள் வெளியே வருகின்றன.

உலக நாடுகள் உதவாது என்றார்கள். நிறுத்தி வைத்த செயல் திட்டங்கள் எல்லாம் மீள ஆரம்பிக்கின்றன. வரிசை யுகம் வரும் என்றார்கள். வரிசையில் உதவ பலர் முன் வருகின்றார்கள்.

 

இந்த சாமானியனின் ஆட்சியில், இந்த நாடு எழும், மக்கள் வெல்வார்கள் என குறிப்பிட்டுள்ளார் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா.

பிரித்தானியாவில் மட்டு அம்பாறை தமிழ்ப் பெண் கடலுணவு ஒவ்வாமையால் திடீர் மரணம் !

பிரித்தானியாவில் மட்டு அம்பாறை தமிழ்ப் பெண் கடலுணவு ஒவ்வாமையால் திடீர் மரணம் !

அம்பாறை மாவட்டம் நற்பிட்டிமுனையை பிறப்பிடமாகவும் பிரித்தானியா லிவர்பூல் (Liverpool) வசிப்படமாக கொண்ட காயத்திரி ஜெயதீசன் என்பவர் கடந்த ஜனவரி 25 இறந்துள்ளார். இவரது திடீர் மரணத்திற்கு உணவு ஒவ்வாமையே காரணம் எனக் கூறப்படுகிறது. இளம் தாயாரான இவர் உட்கொண்ட நண்டுக்கறி விஷமானதால் உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது.

புலம்பெயர் நாடுகளில் கிடைக்கப்பெறும் பெரும்பாலான ஆசிய நாட்டு கடலுணவுகள் இறக்குமதி செய்யப்பட்டவையாகும். குளிர் நாடுகளில் கிடைக்கப்பெறாத நண்டு, இறால், கணவாய் மற்றும் மீன் வகைகள் இலங்கை, இந்தியா, தாய்லாந்து, பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.

கடலுணவு ஒவ்வாமை காரணமாக காயத்திரி ஜெயதீசன் இறந்தமை துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறான இறப்புகள் புலம்பெயர்நாடுகளில் நிகழ்வது அரிதாகவே காணப்படுகின்றது. உணவு ஒவ்வாமை ஏற்படும் போது உடனடியாக செயற்பட்டு தகுந்த சிகிச்சைகளை எடுக்க வேண்டும்.

24 மணிநேர கிழமையில் 7 நாட்கள் துரித கடவுச்சீட்டு விநியோகம் !

24 மணிநேர கிழமையில் 7 நாட்கள் துரித கடவுச்சீட்டு விநியோகம் !

கடவுச்சீட்டுகள் அச்சிடுவதை விரைவுபடுத்தவும், காலதாமதத்தைக் குறைக்கவும் கூடுதல் பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது நிலவும் பாஸ்போர்ட் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை பின்பற்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஓய்வுபெற்ற பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

1.1 மில்லியன் “P” வகை சிப் உட்பொதிக்கப்பட்ட கடவுச்சீட்டு கையேடுகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாஸ்போட் வழங்குவதில் ஏற்படும் தாமதங்களை நீக்கும் வகையில்இ தினசரி 4000 கடவுச்சீட்டுகளை வழங்கும் வகையில் 24/7 செயல்பட குடியகல்வு மற்றும் குடிவரவு திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

“பெப் 04 : தனிநாடுக்கான கரிநாள் பேரணி; பெப் 05 யாழ் நூலகத்தை எரித்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை” – கஜா – சிறிதரன் குழுவினரின் வித்தியாசமான கோரிக்கை !

“பெப் 04 : தனிநாடுக்கான கரிநாள் பேரணி; பெப் 05 யாழ் நூலகத்தை எரித்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை” – கஜா – சிறிதரன் குழுவினரின் வித்தியாசமான கோரிக்கை !
பாராளுமன்ற விவகாரங்கள் உட்பட எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றையதினம் நடைபெற்றது.
பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக இணைந்து செயற்படுவது தொடர்பாக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த கூட்டத்தில் பா.உ க்களான சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டது சர்ச்சையாக மாறியுள்ளது.
பெப்ரவரி 04 ஆம் திகதியை கரிநாளாக கூறி தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அடக்குமுறைக்கு தனித்தேசம் தான் தீர்வு என்ற தோரணையில் பேரணி நடாத்தியிருந்தனர் பா.உக்களான் சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர். அடுத்த நாளே கறுப்பு ஜூலை கலவரங்கள், யாழ்ப்பாண நூலகத்தை எரித்தல் என தமிழர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாரம்பரிய வழி வந்த சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து செயற்பட மந்திராலோசனை நடாத்துகின்றனர் என சமூக வலைத்தளங்களில் காரசாரமாக விவாதங்கள் இடம்பெறுகின்றன.
இதேவேளை எதிர்வரும் உத்தேச உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் என்.பி.பி அரசை எதிர்கொள்ள இணைந்து போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் மும்முரமாக ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

யாழ் சிறையில் இருந்து 17 தமிழ் கைதிகள் விடுதலை !

யாழ் சிறையில் இருந்து 17 தமிழ் கைதிகள் விடுதலை !

சுதந்திர தினமான நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.இந்திரகுமார் தலைமையில் கைதிகள் விடுவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இவர்களில் பெண் ஒருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார் . 77 ஆவது சுதந்திர தினத்தில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் .

கிளி மகா வித்தியாலய காணியை ஆக்கிரமித்துள்ள இராணுவம் – விளக்கம் கோருகிறது மனித உரிமைகள் ஆணைக்குழு !

கிளி மகா வித்தியாலய காணியை ஆக்கிரமித்துள்ள இராணுவம் – விளக்கம் கோருகிறது மனித உரிமைகள் ஆணைக்குழு !

 

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்துக்குச் செல்லும் பாதையினை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளமையால் 50 மீற்றர் தொலைவில் உள்ள மைதானத்துக்கு மாணவர்கள் ஒரு கிலோ மீற்றர் பயணம் செய்கின்றமை தொடர்பில் இலங்கை இராணுவத் தளபதிக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளது.

பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியினை அடிப்படையாக கொண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனராஜ் இக்கடிதத்தை எழுதியுள்ளார்.

கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்கள் 50 மீற்றர் தூரத்தில் உள்ள தங்களுடைய பாடசாலை மைதானத்துக்கு தினமும் ஒரு கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று வருகின்றனர். அதுவொரு ஆபத்தான பயணமாக காணப்படுகிறது என்பதனை சுட்டிக்காட்டிய மனித உரிமைகள் ஆணைக்குழு இது தொடர்பில் இராணுவம் 11.02.2025க்கு முன்னர் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்குமாறும் கோரியுள்ளது.

 

தமிழ் மக்கள் மத்தியில் தேசியக் கொடியும் கறுப்புக் கொடியும் – யாழில் சுதந்திர தின ஊர்வலமும் ! எதிர்ப்பு ஊர்வலமும் !

தமிழ் மக்கள் மத்தியில் தேசியக் கொடியும் கறுப்புக் கொடியும் – யாழில் சுதந்திர தின ஊர்வலமும் ! எதிர்ப்பு ஊர்வலமும் !

யாழில் நேற்று சுதந்திர தினம் எதிரும் புதிருமாக கொண்டாடப்பட்டது. சுதந்திரதினத்தையொட்டி நூற்றுக்கணக்கானவர்கள் தேசியக் கொடியைத் தாங்கியவாறு ஊர்வவலம் சென்றனர். கிளிநொச்சியில் சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்து அதற்கு எதிரான ஊர்வலம் நடைபெற்றது.

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று நடாத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெருமையுடன் ஊர்வலத்தில் தேசியக் கொடியை ஏந்திச் சென்றிருந்தனர்.

ஐக்கிய இளைஞர் இயக்கத்தினால் இந்தப் பேரணி ஒழுங்குசெய்யப்பட்ட இந்தப் பேரணி பண்ணையிலிருந்து யாழ் நகரத்தை நோக்கி முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கின் பல்வேறு இடங்களில் நேற்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழர் மீதான இனப்படுகொலைக்கு நீதி கோரியும், சுயநிர்ணய உரிமை கோரியும், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கருப்புக் கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தி வீதிகளில் இறங்கினர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் ஆரம்பமாகிய போராட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றது. இந்தப்போராட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், முன்னாள், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கரிநாள் ஊர்வலத்தில் கலந்தகொண்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவாக தன்னை வெளிப்படுத்தும் ஒரு தாயார் பா உ அர்ச்சுனா மீது கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தினார்.

 

கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் மட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. செங்கலடி சித்தி விநாயகர் ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பமான பேரணி கொம்மாதுறை பிள்ளையார் ஆலய முன்றலைச் சென்றடைந்து, அங்கு போராட்டம் தொடர்ந்தது. மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினர், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பாராளுமன்றக் குழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்களென பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக்கம்பத்தில் பறந்த இலங்கைத் தேசியக் கொடி பல்கலைக்கழ மாணவர்களால் இறக்கப்பட்டு பின்னர் கறுப்புக் கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களால் பல்கலைக்கழக வளாகத்தின் பல பாகங்களிலும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்ட நிலையில் பிரதான வாயிலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதேவேளை, நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் கறுப்புக்கொடி ஏந்திய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் சிவகுரு ஆதீனத்தில் ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட இளையோர் பங்கேற்றிருந்தனர்.

காலம் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இரா சம்பந்தன் யாழில் வைத்து தேசியக் கொடியை ஏந்திய போது அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்காக இரா சம்பந்தன், எம் ஏ சுமந்திரன் ஆகியோர் துரோகிககளாக்கப்பட்டனர். ஆனால் இன்று யாழ் மக்கள் நூற்றுக் கணக்கில் திரண்டு தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலம் சென்றுள்ளனர். தமிழ் தேசியத்தின் மீது தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை இது வெளிப்படுத்தி நிற்கின்றது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இலவசக் கல்வியயில் கல்வி கற்று சுதந்திர தினத்தை கரிநாளாக கொண்டாடுகின்றனர். பின்னர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதும் அரசாங்க வேலை மட்டும் தான் செய்வோம் என்று போராடுகின்றனர் எனத் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் நித்தியானந்தன் உங்கள் தோழன். இவர்கள் ஏன் கொள்கைக்காக அரச வேலை வேண்டாம் என்று சொல்லலாமே என அவர் தனது முகநூல் பதிவில் ஆலோசணை வழங்கியுள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சுதந்திர தினத்தை கரிநாளாக கொண்டாடுவது பற்றி கருத்து வெளியிட்ட பா உ இராமநாதன் அர்ச்சுனா இவர்கள் வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாக வாழ விரும்புவதையே வெளிப்படுத்துவதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

அரச வாகனத்தை சுற்றுலாவுக்கு பயன்படுத்திய பதவி விலகினார் அவுஸ்ரேலிய அமைச்சர் 

அரச வாகனத்தை சுற்றுலாவுக்கு பயன்படுத்திய பதவி விலகினார் அவுஸ்ரேலிய அமைச்சர்

அவுஸ்ரெலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோ ஹெய்லன் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். பொதுமக்களின் வரிப்பணத்தில் நிதியளிக்கும் ஓட்டுநரையும் அமைச்சுக்கு சொந்தமான காரையும் தன்னுடைய தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுகளையடுத்து அவர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

பதவி விலகலை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பொதுமக்களிடம் மன்னிப்புக் கோரியதுடன் குறித்த பயணத்திற்குரிய 750 டொலரையும் திருப்பி செலுத்துவதாக அறிவித்துள்ளார்.

இதேபோன்ற அதிகார துஷ்பிரயோக சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெற்றுள்ளன, ஆனால் பதவி விலகல் அல்லது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது அரிதாகவே காணப்படுகிறது. தேசிய மக்கள் சக்தி இவ்வாறான மாற்ங்களை அரசியல் கலாசாரத்தில் கொண்டுவருவதை நோக்காக கொண்டே கிளீன் சிறீலங்கா திட்டத்தை முன்னெடுக்கின்றது என ஜனாதிபதி தொடர்ந்தும் வலிறுத்தி வருகின்றார்.

நீரிழிவுநோய் செலவீனம் அதிகரிப்பு – உடற்பயிற்சியில் கவனம் எடுக்கவும் – மருத்துவ கலாநிதி நலிந்த

நீரிழிவுநோய் செலவீனம் அதிகரிப்பு – உடற்பயிற்சியில் கவனம் எடுக்கவும் – மருத்துவ கலாநிதி நலிந்த

 

நீரிழிவு நோய் தொடர்பான இன்சுலின் உட்பட்ட மருந்துகளுக்கு கடந்த ஆண்டு 7.3பில்லியன் டொலர்கள் செலவழிக்கப்பட்டுள்ளது என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருத்துவப் பிரிவை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நீரிழிவுநோய்கான மருத்துவ செலவீனங்கள் தொடர்ந்தும் அதிகரித்து செல்வதை சுட்டிக்காட்டிய அமைச்சர், தொடர்ச்சியா மருந்துகளுக்கான செலவீனங்களுக்கு அரச கருவூலத்தை நம்பியிருக்காமல் நீரிழிவுநோயைத் தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுத்தினார்.

சிகிச்சை மற்றும் தடுப்பு ஆகிய இரண்டிலும் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் பங்கை வலியுறுத்தும் வகையில், மருந்துகளுக்கு அப்பால் சுகாதாரப் பாதுகாப்பு நீட்டிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த நூற்றாண்டில் நாம் இழந்த அழகான இலங்கையை மீட்டெடுக்க வாரீர் – ஜனாதிபதி அனுர அழைப்பு !

கடந்த நூற்றாண்டில் நாம் இழந்த அழகான இலங்கையை மீட்டெடுக்க வாரீர் – ஜனாதிபதி அனுர அழைப்பு !

மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் உறுதி மற்றும் நம்பிக்கையுடன் அணிதிரளுமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த வாழ்த்து செய்தியில், நாம் இன்று 77 ஆவது சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரத்திற்கான எதிர்பார்ப்புடன் கொண்டாடுகின்றோம். இலங்கையின் வரலாற்றை தற்போது மாற்றியமைத்து, வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என அனைத்து மக்களாலும் கட்டியெழுப்பப்பட்ட மக்கள் அரசாங்கத்துடன் புதிய பாதையில் பிரவேசித்துள்ளோம்.

கடந்த நூற்றாண்டில் நாம் இழந்த மற்றும் தவறவிட்ட வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சவாலுடன் நாம் அனைவரும் தற்போது ஒன்றாகப் போராடுகின்றோம். எமது எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை புதிய நிலைக்கு உயர்த்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் ஜனாதிபதி அனுர.