சாமான்யன் முப்படைகளின் தலைவனாக நின்று தேசிய கொடியை ஏற்றிய போது நான் கண்கலங்கிட்டேன் – பிரதியமைச்சர் அருண் நெகிழ்ச்சி !
ஓர் சாமான்ய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஓர் குடிமகன் முப்படைகளின் தலைவராக சுதந்திர தினத்தில் தேசிய கொடியை ஏற்றிய போது அவரின் பின் வரிசையில் நின்ற நான் கண் கலங்கிவிட்டேன் என நெகிழ்ச்சியான பேஸ்புக் பதிவொன்றை திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா பகிர்ந்துள்ளார்.
குறித்த பேஸ்புக் பதிவில், நான் சரியாக அந்த கொடிக் கம்பத்துக்குப் பின்னால் இருந்த தொகுதியில் நின்றிருந்தேன். அவர் தேசியக் கொடியை ஏற்றிய பொழுது என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. காரணம் வேறு ஒன்றும் இல்லை.
ஒரு சாமானியன் இன்று முப்படைகளினதும் தளபதி என்ற அந்தஸ்துடன் ஜனாதிபதியாகத் திகழ்கின்றார். எத்தனையோ சவால்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், படுகொலைகளையும் தாண்டி இன்று அரியாசனம் இருக்க வேண்டிய இடத்தில் சாமான்ய ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். இரவு பகல் பாராது அயராது நாட்டிற்காக உழைக்கின்றார்.
அவரைப் பற்றி மிகவும் நெருக்கமாக அறிந்தவர்களுக்கு மாத்திரமே தெரியும் அவர் எவ்வளவு சாமான்யமானவர் என்று. இன்று அவர் மீது சிலர் கொண்டுள்ள வஞ்சம் ஒரு சாதாரண விடயம் அல்ல. அது ஏழை எளிய அடித்தட்டு வர்க்கத்தின் மீது கொண்டுள்ள வஞ்சம். வர்க்க வஞ்சம். இதனை நாம் சாதாரணமாக கடந்து செல்லவும் முடியாது, கணக்கெடுத்துக் கொண்டு நேரத்தை வீணடிக்கவும் முடியாது. நாம் நமது பயணத்தை மேற்கொள்வோம். இதுவொரு நீண்ட பயணம்.
என்னமோ இதுவரைக்கும் அரிசி இறக்குமதி செய்யாத நாடு போல. உப்பில் தன் நிறைவு கண்ட நாடு போல. எப்படியோ எல்லாம் வசை பாட நினைத்தவர்கள் இன்று இதில் வந்து நிற்பதே யதார்த்தம். அனுபவம் இல்லை என்றார்கள், அனுபவசாலிகள் பதுக்கிய பல விடயங்கள் வெளியே வருகின்றன.
உலக நாடுகள் உதவாது என்றார்கள். நிறுத்தி வைத்த செயல் திட்டங்கள் எல்லாம் மீள ஆரம்பிக்கின்றன. வரிசை யுகம் வரும் என்றார்கள். வரிசையில் உதவ பலர் முன் வருகின்றார்கள்.
இந்த சாமானியனின் ஆட்சியில், இந்த நாடு எழும், மக்கள் வெல்வார்கள் என குறிப்பிட்டுள்ளார் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா.