செய்திகள்

செய்திகள்

செய்திகள்

யாழ். குடாவிலிருந்து இடம்பெயர்ந்தோருக்கு வசிக்குமிடத்தில் வாக்களிக்க வசதி

யாழ்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்து கொழும்பு உட்பட அதன் சுற்றுப் புறங்களில் வசிக்கும் வாக்காளர்களுக்கு தாம் தற்காலிகமாக வசிக்கும் பகுதிகளில் வாக்களிக்க வசதி அளிக்க தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

யாழ் தேர்தல் மாவட்ட வாக்காளர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையாளருக்கு விண்ணப்பிக்குமாறு தேர்தல் திணைக்களம் கோரியுள்ளது. யாழ். தேர்தல் மாவட்ட வாக்காளர் இடாப்புக்கள் இன்று (3) முதல் வெள்ளவத்தை தபால் நிலையத்தில் பார்வைக்காக வைக்கப்படவுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

சுற்றுலா பயணிகளைக் காக்க மத்திய மாகாணத்தில் பொலிஸ் நிலையங்கள்!

kandy-city.jpgமத்திய மாகாணத்திற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பொலீஸ் நிலையங்களை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலீஸ் மாஅதிபர் காமினி நவரெத்ன தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் மத்திய மாகாணத்திற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடிவதோடு,  சுற்றுலாப் பயணிகளிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதன்படி இந்தப் பொலீஸ் நிலையங்கள் தம்புள்ள, சீகிரிய மற்றும் கண்டலம ஆகிய பகுதிகளில் அமைக்கப்படவுள்ளன. இதேவேளை நாட்டின் சட்டவிதிகளை மீறும் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராக இந்தப் பொலீஸ் நிலையங்களின் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். பஸ் பயண அலுவலகம்: தேக்கம் காட்டுக்கு மாற்றம்

யாழ்ப்பாண பஸ் பயண அலுவலகம் வவுனியா நகருக்கு அருகாமையில் உள்ள தேக்கம்காடு விளையாட்டு மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. நேற்று முதல் யாழ். பஸ்கள் இங்கிருந்தே புறப்படுகின்றதென வவுனியா செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை காலமும் ஈரற்பெரியகுளம் இராணுவ முகாமிற்கு அருகாமையிலிருந்து யாழ். பஸ்கள் புறப்பட்டன. இது மக்களுக்கு பலத்த அசெளகரியத்தை ஏற்படுத்தி இருந்தது. இதுவரைகாலமும் மக்கள் அனுபவித்த அசெளகரியங்கள் இனி மேலும் இருக்காது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மத்திய மாகாண பாடசாலைகளை 3 தினங்களுக்கு திறக்க ஏற்பாடு

sri-lankan-students.jpgமத்திய மாகாணத்தில் ஏ(எச்1என்1) பரவியமை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் எதிர்வரும் 7, 8, 9 ஆம் திகதிகளில் நிர்வாக நடவடிக்கைகளுக்காக மட்டும் மீண்டும் திறக்கப்படும்.

எதிர்வரும் க.பொ.த. (சா/தர) பரீட்சை மற்றும் புத்தக பட்டியல், சீருடை ஆகியவற்றை வழங்கும் விடயங்கள் இந்த நிர்வாக நடவடிக்கைகளில் அடங்கும்.

நிவாரண கிராமங்களின் சுதந்திர நடமாட்ட அனுமதிக்கு பிரிட்டன் மகிழ்ச்சி; பாராட்டு

வட பகுதியில் உள்ள, நிவாரணக் கிராமங்களில் இருந்த ஆயிரக்கணக்கானோருக்கு நடமாட சுதந்திரம் வழங்கப்பட்டதை பிரிட்டனின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சர் மைக் பொஸ்டர் வரவேற்றுள்ளதாக பிரிட்டிஷ் தூதரகம விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிவிலியன்கள் நிவாரணக் கிராமங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு அவர்களது வீடுகளுக்கு திரும்புவது தொடர்பான தீர்மானத்தை எடுப்பதற்கு அனுமதிக்கப் படவேண்டும் என்று பிரிட்டிஷ் தொடர்ந்து கூறி வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், இப்போது மனிதாபிமான முகவர்கள், மக்கள் செல்லும் அனைத்து இடங்களுக்கும் சென்று அவர்களுக்கு உதவி வந்த தம்மக்களிடம் முடியாததாகிவிட்டதாக கூறினார்.

அத்துடன் கண்ணி வெடி அகற்றும் நிவாரண கிராமங்களுக்கான போக்குவரத்து, மற்றும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் தமது வீடுகளுக்கு திரும்பும் வகையில் அவர்களது வாழ்கையை மீளமைத்துக் கொள்ளவும் பிரிட்டன் தொடர்ந்து உதவும் என்றும் பிரிட்டிஷ் அமைச்சர் கூறியுள்ளாதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வலது குறைந்தோருக்கான சர்வதேச தினம் இன்று!

handicap.jpgவலது குறைந்தோருக்கான சர்வதேச தினம் இன்று (3) கொழும்பில் கொண்டாடப்படுகிறது. சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சு ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறுவதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம விருந்தினராகக் கலந்து கொள்கின்றார்.

இலங்கையில் வலது குறைந்தோருக்கான சர்வதேச தின வைபவமொன்றில் ஜனாதிபதி ஒருவர் கலந்து கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கூட்டங்களுக்கு வரக்கூடாதென ஐ.ரீ.என் – ரூபவாஹினிக்கு ஜே.வி.பி. ஊடகத் தடை

சுயாதீன தொலைக்காட்சி சேவை மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகிய தொலைக்காட்சி சேவைகள் தமது பொது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கூடாது என்று மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அனுர குமார திஸாநாயக்க நேற்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட் டின்போது மேற்படி இரு தொலைக்காட்சி சேவைகளுக்கும் தடைவிதித்தார். அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மக்கள் விடுதலை முன்னணியினர் எப்போதும் ஊடக சுதந்திரம் பற்றி பேசுவதை சுட்டிக்காட்டிய ஊடகவியலாளர்கள் சில குறிப்பிட்ட ஊடக நிறுவனங்கள் நிகழ்ச்சிகளை அறிவிப்பதை அவர்கள் ஏன் நிறுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பியதுடன் மேற்படி தடையை மீள் பரிசீலனை செய்யவேண்டுமென்றும் ஊடகவியலாளர் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த மக்கள் விடுதலை கூட்டணியிடம் கேட்டுக்கொண்டனர்.

எனினும் அந்த வேண்டுகோளை நிறைவேற்றவே முடியாது என்று அநுர குமார திசாநாயக்க அடித்துக் கூறினார். மக்கள் விடுதலை முன்னணியின் நிகழ்ச்சிகளுக்கு ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவைகள் வரக்கூடாது என மீண்டும் கூறினார்.

அதனையடுத்து அநுரகுமார திசாநாயக்க லேக் ஹவுஸ் தலைவர் பந்துல பத்மகுமார, ரூபவாஹினி தலைவர் ஆரியரட்ன அத்துகல, சுயாதீன தொலைக்காட்ச தலைவர் அனுர சிரிவர்தன ஆகியோர் மீது கண்டனம் தெரிவித்தார்.

ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி மீது மக்கள் விடுதலை முன்னணி விதித்த தடை பற்றி கருத்து வெளியிட்ட ரூபவாஹினி தலைவர் அதுகல குறிப்பிடும்போது நாட்டுக்கும் மக்களுக்கும் ஊறுவிளைவிக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத மக்கள் விடுதலை முன்னணி ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஆகிய சேவைகளை மட்டும் தடைசெய்ய தீர்மானித்துள்ளது.  இது ஊடக சுதந்திரத்தை கணக்கில் எடுக்காத ஒரு செயல் என்பது நன்றாகத் தெரிகிறது என்று குறிப்பிட்டார்.

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவர் அனுர சிரிவர்தன இது பற்றி கூறும்போது, ஊடகங்கள் சிலவற்றை தடை செய்யும் மக்கள் விடுதலை முன்னணியின் தீர்மானம் குறுகிய நோக்குடன் கூடிய ஒரு தீய செயல் என்று குறிப்பிட்டார்.

நான்கு வருடங்களில் 73 பாதாள உலக தலைவர்கள் உயிரிழப்பு – பொலிஸ் மாஅதிபர் தகவல்

mahinda_balasooriya.jpgகடந்த நான்கு ஆண்டுகாலப்பகுதியில் பிரபல பாதாள உலகக்குழு தலைவர்கள் 73பேர் பொலிஸாரின் துப்பாக்கிப்பிரயோகத்தில் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுவினர்களின் நடவடிக்கைகளுக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கப்பட மாட்டாது பாதாள உலகக்குழுவினர் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களை கைது செய்வதற்கு விஷேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றச்செயல்களை தடுப்பதற்கு ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமானதாகும். கடந்த யுத்தகாலத்தில் புலிகளின் பல்வேறு செயற்பாடுகளை பொலிஸார் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புலிகளின் மூன்று கப்பல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது:

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூன்று பாரிய கப்பல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக திவயின உட்பட சில சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச பொலிஸ்துறையான இன்டர்போலின் உதவியுடன் சர்வதேச கடற்பரப்பிலிருந்து குறித்த கப்பல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளின் சர்வதேச சொத்துக்களை அரசுடமையாக்கும் திட்டத்தின் முதல் படியாக இந்தக் கப்பல்கள் தருவிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த மூன்று கப்பல்களின் பெறுமதி இதுவரையில் மதிப்பீடு செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மேலும் மூன்று கப்பல்கள் இருக்கக் கூடுமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே புலிகளுக்குச் சொந்தமான 10 கப்பல்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினர் இல்லாதொழித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தற்போது அரசாங்கத்தினால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் குமரன் பத்மநாதன் இந்தக் கப்பல்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றத் தேர்தல் பணிகளும் ஆரம்பம்

vote.jpgஜனாதிபதித் தேர்தலில் சகலரினதும் பார்வை திரும்பியுள்ள அதேசமயம், பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுள்காலம் அடுத்த ஏப்ரலுடன் முடிவடையவுள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழு இந்த நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

வட மாகாணத்தின் ஆசனங்களின் எண்ணிக்கை தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 1987 இல் மேற்கொள்ளப்பட்ட இலங்கை இந்திய உடன்படிக்கையை தொடர்ந்து வடக்கு,கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தன. ஆயினும் 2006 அக்டோபரில் இந்த இணைப்பு சட்டரீதியற்றது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

வடக்கு,கிழக்கு மாகாணங்களின் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை தற்போது 31 ஆகும். புதிய பாராளுமன்றத்திலும் அந்த எண்ணிக்கை இதே விதமானதாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 9 ஆசனங்களும் வன்னி மாவட்டத்துக்கு 5 ஆசனங்களும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 6 ஆசனங்களும் திருகோணமலை மாவட்டத்துக்கு 4 ஆசனங்களும் திகாமடுல்லவுக்கு 7 ஆசனங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.